Last Updated : 12 Jul, 2017 10:06 AM

 

Published : 12 Jul 2017 10:06 AM
Last Updated : 12 Jul 2017 10:06 AM

காஷ்மீரில் ஒரு வாரம்: மாற்று உண்மைகள்

கறுப்பாக இருப்பவர்கள் தங்களை விடக் கீழானவர்கள் என்று கருதுவது வட இந்தியாவில் காலம் காலமாக இருந்துவருகிறது. காஷ்மீரிலும் இந்த வண்ண வேற்றுமை மிகவும் பரவலாகக் கடைபிடிக்கப்பட்டுவருகிறது. நான் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது அவரே சொன்னார். "நான் நிஜமாகவே காஷ்மீரி. கறுப்பாக இருக்கிறேன் என்பதால் இந்தியன் என்று நினைத்துவிடாதீர்கள்."

இந்தியாவின் ஏழை மக்கள், கறுப்பானவர்கள் - ஜார்கண்ட், ராஜஸ்தானிலிருந்து வந்தவர்கள் - இங்கு கூலி வேலை செய்து பிழைக்கிறார்கள். அவர்கள் 'ஏ ராஜஸ்தானி, ஏ பிஹாரி' என்றே அழைக்கப்படுகிறார்கள். ஒரே ஒரு இடத்தில் செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவரை 'சாசா' (மாமா) என்று அழைப்பதைக் கேட்க காதுக்கு இதமாக இருந்தது.

இங்கு மத்திய ரிசர்வ் போலீஸ், எல்லைப்புறக் காவல்படை, ராணுவம் போன்ற அமைப்புகளில் பணி செய்யும் வீரர்கள் சிவப்பானவர்கள் அல்ல. உயரமானவர்கள் அல்ல. காஷ்மீரப் போலீஸில் வேலை செய்பவர்கள் கறுப்பாக இல்லை. ஆனால் அவர்களில் பலர் நமது போலீஸ்காரர்களைப் போலவே குண்டாக, தொந்தி தள்ளியபடி இருக்கிறார்கள். எல்லோர் கையிலும் ஆயுதம் இருக்கிறது. இதுவே காஷ்மீர இளைஞர்கள் பலருக்கு எரிச்சலை வரவழைக்கிறது. இந்த எரிச்சல் இனம் சார்ந்தது என்று சொல்வதைவிட இயலாமையில் பிறந்தது என்று சொல்வது சரியாக இருக்கும். இந்த இயலாமை பல வடிவுகள் எடுக்கிறது. என்னிடம் பேசிக்கொண்டிருந்த ஓட்டல் தொழிலாளி ஒருவர், “எனக்கு மாதம் பத்தாயிரம் ரூபாய் இத்தனை வருடங்கள் வேலை பார்த்த பிறகு கிடைக்கிறது. ஆனால், இந்திய போர் வீரருக்கு முதல் வருஷமே மாதம் ஒரு லட்ச ரூபாய் கிடைக்கிறது” என்றார். இது உண்மையல்ல என்று நான் விளக்கினாலும் அவரை நம்ப வைத்திருக்க முடியாது.

உண்மையில் நமது வீரர்களின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத இடத்தில் தன்னந்தனியாகக் கையில் துப்பாக்கியைப் பிடித்துக்கொண்டு மணிக்கணக்கில் நிற்க வேண்டிய கட்டாயம். நான் சென்றபோது அமர்நாத் யாத்திரைக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்துகொண்டிருந்தன. வழியெங்கும் காவல்பணிபுரிபவர்களின் கூடாரங்கள். ஆங்கிலத்தில் ‘சிட்டிங் டக்’ (உட்கார்ந்து இருக்கும் வாத்து) என்று சொல்வார்கள். அந்தச் சொல்லாக்கம்தான் நினைவுக்கு வந்தது. வேலிக்கு அருகே அமைக்கப்பட்ட கூடாரங்கள். நான் கையை நீட்டிக் கூடாரத்தில் உறங்கிக்கொண்டிருப்பவரை எழுப்பிவிட முடியும் என்று தோன்றியது.

“எங்களுக்கும் யாத்திரைக்கு வந்திருப்பவர்களுக்கும் எந்தப் பகையும் இல்லை. நாங்கள் அவர்களுக்கோ, ஏற்பாடுகள் செய்துகொண்டிருப்பவர்களுக்கோ எந்தத் தொல்லையும் கொடுக்க மாட்டோம்” என்று எனது காரோட்டி சொன்னார். மிகவும் அழகான, கூர்மையான காஷ்மீரிகளுக்கே உரித்தான மூக்கை உடைய, இளைஞர். மலைப்பாதையில் காரை உயிரைப் பணயம் வைத்து (எங்கள் உயிர்களையும் சேர்த்துதான்) ஓட்டினார்.

‘பாகிஸ்தான் ஒரு நாடே அல்ல. நேற்றுகூட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் முட்டாள்தனமாக பெட்ரோல் எடுக்கக் கிளம்பி இறந்திருக்கிறார்கள். அங்கு மனித உயிருக்கு மதிப்பே கிடையாது” என்றார் அவர்.

“இங்கு இருக்கிறதா?’ என்று கேட்டேன்.

‘இங்கும் இல்லை. ஆனால், பாகிஸ்தான் அளவுக்கு மோசம் இல்லை. நாங்கள் பாகிஸ்தானோடு இணைய ஒருபோதும் விரும்பவில்லை. எங்களுக்கு வேண்டியது தனிநாடு” என்றார்.

நாங்கள் சந்தன்வாரிக்குச் சென்றுகொண்டிருந்தோம். அமர்நாத் யாத்திரை அங்கிருந்துதான் ஆண்டுதோறும் துவங்குகிறது. வழியில் தடுப்பு ஒன்றில் காஷ்மீர் போலீஸ்காரர் ஒருவர் வண்டியைச் சோதனை செய்ய நிறுத்தினார்.

“அடையாள அட்டையைக் காட்டுங்கள்” என்று கேட்டார்.

“வீட்டில் இருக்கிறது. கொண்டுவர மறந்துவிட்டேன்” என்றார் காரோட்டி.

‘ட்ரைவிங் லைசன்ஸ்?”

காரோட்டி சிறிது இங்கும் அங்கும் துழாவினார். “அதையும் மறந்துவிட்டேன்.’

போலீஸ்காரர் எங்களைப் பார்த்தார். பிறகு காஷ்மீர மொழியில் அவரிடம் மிகுந்த கோபத்தோடு பேசினார். நாங்கள் திரும்பிச் செல்லச் சொல்கிறார் என்று நினைத்தோம். ஆனால், தடுப்பை விலக்கி வண்டியைச் செல்ல விட்டார்.

“என்ன சொன்னார்?”

“ராணுவத்தினரிடம் மாட்டிக்கொண்டிருந்தால் பின்னியெடுத்திருப்பார்கள் என்று சொன்னார். இவர்களுக்காக உன்னை விடுகிறேன் என்று சொன்னார்.”

“அடையாள அட்டை, லைசன்ஸ் இரண்டையும் ஏன் கொண்டுவரவில்லை?”

“கொண்டுவரவில்லை என்று யார் சொன்னது? இரண்டும் இருக்கின்றன. இவரிடம் ஏன் காட்ட வேண்டும்? இது எங்கள் இடம். இங்கு எல்லோருக்கும் என்னைத் தெரியும்.”

“அவருக்குத் தெரியாதே?”

“ஆனால், அவர் இங்கு ஏன் வந்து வழியை அடைக்கிறார்?” சிறிது நேரம் கழித்துச் சொன்னார். “எங்கள் வரிப்பணத்தில்தான் யாத்திரை நடக்கிறது. ஆனால், எங்களுக்கு வழி மறுக்கப்படுகிறது.”

அந்நியப்படுதல் என்பது எவ்வளவு எளிதாக நடந்துவிடுகிறது!

எங்களுடன் பயணம் முழுவதும் கூடவே வந்த இன்னொரு காரோட்டி பர்வேஸ் எல்லா உண்மைகளுக்கும் மாற்று உண்மைகள் வைத்திருந்தார். நான் சென்ற அன்று ஸ்ரீநகர் ஜும்மா மசூதிக்கு முன்னால் துணைக் கண்காணிப்பாளர் ஒருவர் கொடூரமாகக் கூட்டத்தால் அடித்துக் கொல்லப்பட்டார். எல்லாப் பத்திரிகைகளும் – உள்ளூர்ப் பத்திரிகைகள் உட்பட – சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்திருந்தன. ஆனால், பர்வேஸ் “கொல்லப்பட்டவர் வீடியோ படம் எடுத்துக்கொண்டிருந்தார். அதை மக்கள் கண்டித்ததால் துப்பாக்கியை எடுத்துச் சுட்டார். கூட்டத்தில் பத்து பேராவது இறந்திருப்பார்கள். வேறு வழியின்றி அவரைத் தாக்க நேர்ந்தது” என்றார்.

“யாரும் அவர் சுட்டுச் செத்ததாகப் பத்திரிகைகளில் வரவில்லையே?”

“அதை மறைத்துவிட்டார்கள். எங்களுக்குத் தெரியும்.” பர்வேஸ் மட்டுமல்ல, எல்லோரும் இது போன்ற பல மாற்று உண்மைகளைச் சொல்கிறார்கள். இந்தியாவுக்கு எதிரான உண்மைகள். ராணுவம் ரத்த வெறி பிடித்து அலைகிறது என்பதை நிறுவ முயற்சிக்கும் உண்மைகள். நான் ஸ்ரீநகரில் தங்கியிருந்த ஓட்டலின் மேற்பார்வையாளர் – படித்தவர் – சொன்னார்:

“தினமும் எங்கள் பெண்கள் பாலியல் வன்முறைக்குப் பலியாகிறார்கள். எங்கள் இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். ஆனால், கையாலாகாத மாநில அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. புர்கான் வானியின் உயிர்த் தியாகம்தான் திருப்புமுனை. அதற்குப் பிறகு இந்தியாவுடன் சேர்ந்து இருப்போம் என்ற பேச்சுக்கே இடமில்லை.”

மெஹ்பூபா முஃப்தி இன்று தேர்தலில் நின்றால் பத்து ஓட்டுகள்கூட வாங்க முடியாது என்றுதான் தோன்றுகிறது. அவருடைய தந்தையின் மீது மக்கள் மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறார்கள். ஒமர் அப்துல்லா ஆட்சியின் மீது கூட அதிக வெறுப்பு இல்லை. ஆனால், பாஜகவுடன் கூட்டு வைத்துக்கொண்டிருப்பதை மக்கள் சிறிதும் விரும்பவில்லை. மிகுந்த கோபத்துடன் இருக்கிறார்கள். வெறுப்புக்கு மற்றொரு காரணம் ஊழல். என் கண்கூடாகவே சுங்கச் சாவடிகளில் இருபது ரூபாய் வாங்கிக்கொண்டு எந்தச் சோதனையும் இல்லாமல் வண்டிகளை விடுவதைப் பார்த்தேன். பாஜகவின் அன்ட்ராபியிடம் இதைப் பற்றிச் சொன்னேன். அவர் எங்குதான் ஊழல் இல்லை என்று பதிலளித்தார். “காஷ்மீரை மற்ற இடங்களைப் போல எடுத்துக்கொள்ள முடியாது. இங்கு மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு மேலாகவே அரசு செயல்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது,” என்றேன்.

அன்ட்ராபி பதில் ஏதும் சொல்லாமல் சிரித்தார்.

- பி.ஏ. கிருஷ்ணன், ‘புலிநகக் கொன்றை’, ‘இந்தியாவும் உலகமும்’ முதலான நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: tigerclaw@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x