Last Updated : 14 Jul, 2017 10:25 AM

 

Published : 14 Jul 2017 10:25 AM
Last Updated : 14 Jul 2017 10:25 AM

காமராஜர்: தனியொரு தலைவர்!

ஜூலை 15: காமராஜர் பிறந்தநாள்

நீட் தேர்வு தொடர்பாகக் கல்வியாளர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, இன்றைய சூழலில் காமராஜர் முதல்வராக இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் என்று கேட்டேன். “படிச்சு முடிச்சப்புறம்தானே போட்டி? படிக்கப்போறதுக்கு முன்னாடியே எதுக்குப் போட்டின்னேன். நம்ம பசங்க படிக்கிறதுக்கு இத்தனை தடை எதுக்குன்னேன். உடனே டெல்லிக்கு ஃபோனைப் போடு” என்று சொல்லியிருப்பார் என்றார் அவர். மக்களுக்குப் பயன்படத்தான் சட்டம்; சட்டத்துக்காக மக்கள் அல்ல என்ற கொள்கையுடன் இயங்கிய காமராஜர் நிச்சயம் அதைத்தான் செய்திருப்பார்.

நேருவின் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஐந்தாண்டுத் திட்டங்களை முழுமையாகப் பயன்படுத்தித் தமிழகத்துக்கு வளம் சேர்த்தது காமராஜரின் சாதனைகளில் ஒன்று. நெய்வேலி பழுப்பு நிலக்கரிச் சுரங்க நிறுவனம் தொடங்கப்பட்டதில் அவரது பங்கும், அதற்கு மத்திய அரசுக்கு அவர் கொடுத்த அழுத்தமும் இன்றைய தலைவர்கள் பின்பற்ற வேண்டிய விஷயங்கள். நூற்றுக்கணக்கானோர் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்று தொடர்ந்து வலியுறுத்திப் பிரதமர் நேருவைச் சம்மதிக்கச் செய்தார் காமராஜர்.

இன்றைக்கு உத்தர பிரதேசம் தொடங்கிப் பல்வேறு மாநிலங்களில் தேர்தல் வாக்குறுதிகளில் ‘20 மணி நேரம் மின்சாரம்’ போன்ற வாசகங்கள் இடம்பெறுகின்றன. ஆனால், தமிழகத்தில் 1960-களிலேயே நகரங்களில் மட்டுமல்ல கிராமங்களிலும் மின்சார வசதி பரவலாக வந்துவிட்டது. கிராமப்புறங்களை மின்மயமாக்குவதில் அவர் காட்டிய அக்கறையின் வெற்றி அது. அதேபோல் உட்கட்டமைப்பு, தொழில் மேம்பாடு என்று ஒரு மாநில வளர்ச்சிக்குத் தேவையான அத்தனை விஷயங்களிலும் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டார்.

நம் மண்ணை மட்டுமல்ல, வேர்களையும் நன்கு புரிந்துகொண்டவர் அவர். அதனால்தான், அதிகாரிகள் தரும் அறிக்கைகளை மட்டும் நம்பியிருக்காமல் கிராமப்புறப் பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று கள ஆய்வுகளை நடத்தினார். ஒரு வளர்ச்சித் திட்டத்துக்கு மத்திய அரசின் அனுமதி வேண்டும் என்ற நிலையிலும், அதற்காகக் காத்திருக்காமல் செயலில் இறங்குவதுதான் அவரது பாணி. “டெல்லியிடம் நான் பேசிக்கொள்வேன்’ என்று அதிகாரிகளுக்கு நம்பிக்கை கொடுப்பார். நலத்திட்டமோ, நிவாரண உதவிகளோ சிவப்பு நாடா நடைமுறைச் சிக்கல்களால் தாமதம் ஆவதை அவர் ஒருபோதும் விரும்பியதில்லை.

கிண்டி இந்துஸ்தான் டெலிபிரிண்டர் தொழிற்சாலை, பெரம்பூர் ரயில் பெட்டித் தயாரிப்புத் தொழிற்சாலை, மணிமுத்தாறு திட்டம், கீழ்பவானி திட்டம், மேட்டுர் கால்வாய்த் திட்டம், அமராவதி திட்டம், ஆரணியாறு திட்டம், வைகை திட்டம், புதிய கட்டளைத் திட்டம் என்று அவரது ஆட்சியின் சாதனைகளின் பட்டியல் மிக நீண்டது. கல்வி விஷயத்தில் அவர் தனிப்பட்ட முறையில் காட்டிய அக்கறை கடந்த சில தலைமுறைகளின் எதிர்காலத்தையே மாற்றியமைத்தது.

கல்வித் துறை இயக்குநராகப் பணியாற்றி பல திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றிய நெ.து. சுந்தரவடிவேலுவையும் கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியத்தையும் ஓராண்டுக்கு அனுப்பிவைக்குமாறு மத்திய அரசே கேட்டுக்கொள்ளும் அளவுக்கு அந்தத் துறையின் வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு அளித்தார் காமராஜர். சத்துணவுத் திட்டத்தைக் கொண்டுவருவதில் அவர் காட்டிய முனைப்பின் பின்னால் எவ்வளவு கருணை இருந்திருக்கும்? அதிகாரிகளும் அரசியல் தலைவர்களும் சூழ்ந்த பரபரப்பான வாழ்க்கையில், அவரது மனம் ஏழைகளின் மீதே அக்கறை கொண்டிருந்தது.

கல்வி வளர்ச்சி ஏற்பட்டால் சாதி வித்தியாசம் தன்னாலேயே அழிந்துவிடும் என்று நம்பியவர் அவர். இன்றைக்கு தேசியக் கட்சிகளின் தலைவர்களுக்கும், மாநிலத் தலைவர்களுக்கும் இடையிலான உறவில் ஒரு படிநிலை தென்படுவதைப் பார்க்க முடியும். நேரு தொடங்கி இந்திரா காந்தி வரை காங்கிரஸ் தலைவர்களுடனான காமராஜரின் அணுகுமுறை இன்றைய தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.

மக்களிடம் அவருக்கு இருந்த செல்வாக்கும், பெருமதிப்பும் வேறு தலைவர்களுக்கு இருந்ததில்லை. “பள்ளி மாணவராக இருந்த காலத்தில் அவருக்காக வாக்கு சேகரிக்கச் சென்றிருக்கிறேன். ‘எங்க அப்புச்சிக்கு ஓட்டு போட மாட்டோமா’ என்று கிராமத்து மக்கள் எங்களை வாஞ்சையுடன் வரவேற்பார்கள்” என்று பேராசிரியர் தங்க. ஜெயராமன் குறிப்பிடுவார்.

“பெருந்தலைவர் எனும் பட்டம் அத்தனை பொருத்தமானது அவருக்கு. சத்தியமூர்த்தியிடம் அரசியல் பயின்றவர். கட்சியின் அனைத்து மட்டத்தினருடனும் நெருக்கமான உறவைக் கொண்டிருந்தவர். அந்த அடிப்படையில் அவர் தேர்வுசெய்யும் அமைச்சர்கள், அதிகாரிகள் வரை யாரும் சோடைபோனதில்லை” என்கிறார் அவர்.

“ஒரு விழாவுக்காக அவரை அழைக்கச் சென்றிருந்தோம். அப்போது அவரது எளிமையை நேரில் கண்டேன். சில வேஷ்டி, சட்டைகள். நிறைய புத்தகங்கள் அவரது அறையில் இருந்தன. பிரதமர் இந்திரா காந்தி செலாவணி மாற்று மதிப்புக் குறைப்பு நடவடிக்கை எடுத்த சமயம் அது. அதுதொடர்பாக எங்களிடம் ஆழமாக விவாதித்தபோது அவரது பொருளாதார அறிவைக் கண்டு வியந்துநின்றோம்” என்றும் தங்க. ஜெயராமன் நினைவுகூர்கிறார்.

1975-ல் நெருக்கடி நிலையை இந்திரா காந்தி கொண்டுவந்தது அவருக்கு மிகுந்த மனஉளைச்சலைக் கொடுத்தது. பல்வேறு தலைவர்களுடன் இணைந்து அதை எதிர்ப்பதற்குத் திட்டமிட்டுக்கொண்டிருந்தார். எனினும் அவரது மறைவு அதைச் சாத்தியமில்லாமல் செய்துவிட்டது. அவர் இன்னும் சில காலம் இருந்திருந்தால் இந்திய அரசியலின் போக்கை நிச்சயம் மாற்றியமைத்திருப்பார். இன்றைய அரசியல் சூழலில் அவர் போன்ற ஒரு தலைவர் நம்மிடையே இல்லாதது நமது துரதிர்ஷ்டம்தான்!

-வெ. சந்திரமோகன்,
தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x