Last Updated : 05 Jul, 2017 02:30 PM

 

Published : 05 Jul 2017 02:30 PM
Last Updated : 05 Jul 2017 02:30 PM

விவசாயிகளுக்கு மறுக்கப்படும் இரண்டாவது வாய்ப்பு

விவசாயிகளுக்கு மாற்று வேலைவாய்ப்பையும் வருமானத்தையும் அளித்துவரும் பால் பண்ணைத் தொழில், விவசாயத்துக்கு இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியாலும் கால்நடைகள் விற்பனைக்கு மத்திய அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகளாலும் திணறுகிறது. கால்நடைத் துறையை மத்திய அரசின் நெருக்கடிகள் முடக்கிவிடும் என்று இத்துறை நிபுணர்களும் விவசாயிகளும் அஞ்சுகின்றனர்.

2015-16-ம் ஆண்டில் இந்தியா 15.55 கோடி டன் பால் உற்பத்தி செய்து உலகிலேயே முதலிடம் பிடித்தது. மாடுகளை வளர்ப்பது என்பது விவசாயிகளுக்கு விவசாயத்துடன் சேர்ந்த வேலை; இரண்டும் ஒன்றுக்கொன்று அனுசரணையானது. பயிர் பொய்த்துப் போனாலோ, விளைச்சல் குறைந்தாலோ, விலை சரிந்தாலோ விவசாயிகளுக்கு அறவே வருவாய் வற்றிவிடாமல் கை கொடுப்பது மாடு வளர்ப்புதான். இதற்காகவே ஒவ்வொரு விவசாயியும் வீட்டில் பசு, எருமை மாடுகளைப் பாலுக்காக வளர்க்கிறார்கள்.

பயிர்கள் விளைந்து மகசூலால் நல்ல வருவாய் கிடைக்கும்போது பால் விற்பனை மூலம் கிடைக்கும் பணம் கூடுதல் செலவுகளைச் சரிக்கட்ட உதவும். இந்த வருமானத்தைக் குறைக்கும் வகையில் அரசு நடவடிக்கைகளை எடுத்தால் விவசாயிகளின் எதிர்காலம் இருண்டுவிடும் என்று அஞ்சுகிறார்கள் விவசாயிகள்.

கால்நடைச் சந்தைகளில் பிராணிகளை விற்கக்கூடாது, விவசாயி அல்லாதவர்களுக்கு விற்கக் கூடாது என்று புதிய விதிகள் கூறுகின்றன. பால் மரத்த மாடு அல்லது வயது மூத்த மாடுகளை விற்பதன் மூலம் விவசாயிகளுக்குக் கிடைத்துவந்த வருவாய் இதனால் முழுதாகத் தடைபடும். பால் தராத மாட்டையும் வயதான மாட்டையும் இன்னொரு விவசாயி வாங்கமாட்டார். அவற்றால் அவருக்குப் பலன் இல்லை. விலைபோகாத மாடுகளை வீட்டில் கட்டி வைத்துத் தீனி போடுவதும் பராமரிப்பதும் விவசாயிகளுக்குப் பெரிய நிதிச்சுமையை ஏற்படுத்திவிடும். ஏற்கெனவே வருவாய் குறைந்து அவதிப்படும் விவசாயிகள் மேலும் கடனில் ஆழ்ந்துவிட நேரிடும்.

ஒரு கோடிப் பேருக்கு வேலை

மாடு வளர்ப்புத் தொழிலில் மட்டும் நாடு முழுக்க ஒரு கோடி விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர் என்று தேசிய பால்பண்ணை வளர்ச்சி வாரியம் தெரிவிக்கிறது. 2000-வது ஆண்டிலிருந்து இந்தியாவில் பால் உற்பத்தி ஆண்டுக்கு 4% என்ற அளவில் அதிகரித்துவருகிறது. 2017-ல் இது 16 கோடி டன்னை எட்டும் என்று அமெரிக்காவின் வேளாண்துறை கூறுகிறது.

விவசாயம் நெருக்கடியில் சிக்கினாலும் பால் விற்பனை மூலம் வரும் வருமானம் பட்டினியில்லாமல் சாப்பிட உதவுகிறது. அரசு அதைக் கவனத்தில் கொண்டு சரிசெய்யாவிட்டால் இந்த வாய்ப்பும் இல்லாமல் போய்விடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். முதலாவதாக, பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட வேண்டும். இப்போது லிட்டருக்கு ரூ.21 முதல் ரூ.24 வரை வழங்கப்படுகிறது. கால்நடைகளின் தீவன விலை அதிகரித்துவருகிறது. கொள்முதல் விலை கட்டுப்படியாகாமல் இருப்பதால் மாடு வளர்க்கும் சிறு விவசாயிகள் கடன் வாங்குகிறார்கள்.

எல்லா கூட்டுறவுகளும் பால் உற்பத்தியாளர்களுக்கு உரிய நேரத்தில் பணம் தந்துவிடுவதில்லை. பெரிய பண்ணைகள் பத்து நாட்களுக்கு ஒரு முறை பணம் தருகின்றன. இந்த சிறு தொகையைத்தான் விவசாயிகள் தீவனம் வாங்கப் பயன்படுத்துகின்றனர். இது தடைப்பட்டால் அவர்களுக்கு பெருத்த நிதி நெருக்கடி ஏற்பட்டுவிடும். பால் கூட்டுறவுச் சங்கங்கள் பல மாநிலங்களில் வெற்றிகரமாகச் செயல்பட்டாலும், பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்குப் பிறகு இந்தத் தொழிலில் தனியாரும், பெருநிறுவனங்களும் புகுந்ததால் நெருக்கடிகள் அதிகமாகிவருகின்றன.

கூட்டுறவுச் சங்கங்களின் நிர்வாகக் கோளாறுகளும் பிரச்சினையைக் கூட்டுகின்றன. புதியவர்கள் பாலாடைக்கட்டி, இனிப்புத் தயிர், நறுமணப் பால் போன்றவற்றை விற்கத் தொடங்கியதால் நகர்ப்புற, கிராமப்புற மேல்தட்டு மக்கள் அவற்றை வாங்க ஆரம்பித்துவிட்டனர். பெரிய பால் நிறுவனங்கள் தங்களுடைய பொருட்களை சில்லறை விற்பனையகங்கள் மூலம் விற்கின்றன. இவர்களுடன் வியாபாரரீதியாகப் போட்டியிட முடியாவிட்டால் கூட்டுறவு பால் பண்ணைகள் இனி வெறும் பால் சேகரிப்பு நிலையங்களாக மட்டுமே இருக்க முடியும்.

பால் நுகர்வு அதிகரிப்பு

அமெரிக்காவில் தனி நபரின் பால் நுகர்வு 285 லிட்டர். இந்தியாவில் 97 லிட்டர். இந்தியாவில் ஆண்டுக்கு 4.5% என்ற அளவில் நுகர்வு அதிகரிக்கிறது. அமெரிக்காவில் இது வெறும் 1.5%தான். இந்தியாவில் பாலுக்கான சந்தை பெரியது என்பதால் அரசு இதை ஊக்குவித்தால் மேலும் பல லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுவர்.

பால் தொழிலை ஊக்குவிக்க அடுக்கடுக்கான திட்டங்களை அரசு அறிமுகம் செய்துவருகிறது. அதிக பால் கொடுக்கும் பசுக்களை வாங்கவும் தொழுவத்தை வளர்க்கவும் கடனுதவி வழங்கப்படுகிறது. கால்நடைகளுக்கு நல்ல தீவனத்தையும் ஊட்டச்சத்தையும் வழங்க அறிவுறுத்தப்படுகிறது. ஆனால், அதிக அளவில் பாலைப் பெற எவ்வளவு தொகையைச் செலவழித்தாலும் அதற்கு ஈடாக வருமானம் கிடைக்காமல் பல விவசாயிகள் கடன்படுகின்றனர்.

ராஷ்ட்ரீய கோகுல் திட்டம் என்பதை பாஜக கூட்டணி அரசு 2014-ல் அறிமுகப்படுத்தியது. உள்நாட்டு மாடுகளின் மரபியல் ஆற்றல்களை மேம்படுத்திப் பால் சுரப்பை அதிகப்படுத்துவது இதன் நோக்கம். உள்நாட்டுப் பசு அன்றாடம் 2.5 கிலோ, எருமை 5.2 கிலோ பால் தருகிறது. கலப்பினத்திடம் சராசரியாக 7.2 கிலோ கிடைக்கிறது. கலப்பினங்களைப் பராமரிக்கும் செலவு அதிகம். எனவே, நாட்டு மாடுகளின் இனங்களைப் பெருக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்கிறார் கால்நடைத் துறை நிபுணர்.

தேசிய பால்பண்ணை மேம்பாட்டு வாரியம் 18 மாநிலங்களில் முதல் கட்ட திட்டங்களைத் தொடங்கியுள்ளது. 2011-12-ல் தொடங்கிய இது 2018-19 வரை தொடரும். பால் உற்பத்தியையும் மாடுகளின் உற்பத்தித் திறனையும் கூட்டுவது இதன் நோக்கம். கிராம அளவில் பாலை சோதிப்பது, எடையிட்டு வாங்குவது, சேகரிப்பது, குளிர்விப்பது போன்ற பணிகளையும் இத்திட்டத்தின் கீழ் செய்கின்றனர். கூட்டுறவு பால் உற்பத்தி திட்டம் கிராம நிலை, மாவட்ட நிலை, மாநில நிலை என்று மூன்று கட்டங்களில் செயல்படுகிறது. பால் உற்பத்தியாளர்களுக்கும் நுகர்வோருக்கும் நியாயமான விலை கிடைப்பதை இது உறுதிசெய்கிறது. இந்தியாவில் 96,000 உள்ளூர் பால் கூட்டுறவு சங்கங்களும் 170 பால் உற்பத்தியாளர் ஒன்றியங்களும் 15 மாநில கூட்டுறவு இணையங்களும் உள்ளன.

1970-ல் ஆரம்பிக்கப்பட்ட வெண்மைப் புரட்சியானது, பால் பற்றாக்குறை நாடு என்ற நிலையிலிருந்து பால் உபரி நாடு என்ற நிலைக்கு இந்தியாவை உயர்த்தியது. உலகிலேயே மிகப் பெரிய பால் உற்பத்தித் திட்டம் இந்தியாவுடையது. சராசரியாக தனிநபர் அருந்தும் பாலின் அளவை இரட்டிப்பாக்க நமக்கு 30 ஆண்டுகள் பிடித்தன. பால் பண்ணைத் தொழிலானது தற்சார்பானது, கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை அள்ளி வழங்குவது. பெருமளவில் பால் உற்பத்தி மட்டும் நோக்கமல்ல, பெருமளவு உற்பத்தியாளர்களால் உற்பத்தி செய்வதும் அதன் நோக்கம். பால்பண்ணைத் தொழிலின் பிரச்சினைகள் மீது உரிய கவனம் செலுத்தாவிட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும். பல ஆண்டுகள் உழைப்பில் வளர்ந்த துறை, சில ஆண்டுகளிலேயே நாசமாகிவிடும்.

© ஃபிரண்ட்லைன், சுருக்கமாகத் தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x