Last Updated : 04 Jul, 2017 08:54 AM

 

Published : 04 Jul 2017 08:54 AM
Last Updated : 04 Jul 2017 08:54 AM

உரிமைப் பறிப்புக்கு எதிரான போராட்டத்தின் தொடக்கம் ஆகட்டும் நீட் விவகாரம்!

நீட் பொது நுழைவுத் தேர்வு அரசியல் நாடகத்தின் உச்சக் காட்சி இன்று அரங்கேறுகிறது. நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழக மாணவி ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று (ஜூலை 4) விசாரணைக்கு வருகிறது. பொதுவாக, மாநிலக் கல்வி வாரியத்தின் மீது அதீத நம்பிக்கையின்மையும் மத்தியக் கல்வி வாரியத்தின் மீது அதீத நம்பிக்கையும் இன்று பொது சமூகத்தில் உருவாக்கப் பட்டிருக்கின்றன. ஆனால், நீட், ஐஐடி, ஜேஇஇ என்று நுழைவுத் தேர்வுகளை நடத்தும் சிபிஎஸ்இ எத்தனை தூரம் நம்பகமானது என்று சந்தேகப்படும் அளவுக்குப் பல விஷயங்கள் தொடர்ந்து நடக்கின்றன. இந்த ஆண்டு சிபிஎஸ்இ +2 முடிவுகள் வெளிவந்தவுடன், தாங்கள் எழுதிய அளவுக்கான மதிப்பெண்கள் பல பாடங்களில் வரவில்லையே என சந்தேகப்பட்ட பல மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தனர். அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சிலர் எடுத்திருந்த 60 மதிப்பெண், மறுகூட்டலுக்குப் பின்னர் 90 ஆக உயர்ந்தது, 50 மதிப்பெண் 80 ஆக மாறியது. மறுகூட்டலுக்கே இவ்வளவு குளறுபடி என்றால், இன்னும் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? +2 தேர்விலேயே இப்படியென்றால், நீட் தேர்வை மட்டும் சிபிஎஸ்இ எப்படிச் சரியாக நடத்தியிருக்கும்?

இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் யாரும் முக்கியத்துவம் கொடுப்பதாகத் தெரியவில்லை. மேலும், நீட் தேர்வில் தமிழில் மட்டும் கேள்விகள் வேறு மாதிரி இருந்தன என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மாணவி ஒருவர் வழக்கு தொடர்ந்தபோது, மிகப் பெரிய இன்னொரு உண்மை தெரியவந்தது. பொது நுழைவுத்தேர்வு என்ற பெயரில் நடத்தப்பட்ட நீட் தேர்வுக்கு ஒவ்வொரு மொழிக்கும் வெவ்வேறு கேள்வித்தாள் கொடுக்கப்பட்டது என்பதுதான் அது. நாடு முழுவதும் நடக்கும் ஒரு பொது நுழைவுத் தேர்வில் வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு வினாத்தாள்களைக் கொண்டு எப்படி மதிப்பிட முடியும் என்று கேட்டு, தேர்வு முடிவை வெளியிட உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. ஆனால், சிபிஎஸ்இ நேரே உச்ச நீதிமன்றத்தை அணுகி, தேர்வு முடிவுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு ரத்து வாங்கிக்கொண்டது.

ஆனால், வெவ்வேறு மொழிகளுக்கு ஏன் வெவ்வேறு வினாத்தாள் என்பதற்கு நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ கொடுத்த விளக்கம் இந்த விவகாரத்தில் எப்படியான கோளாறுகள் எல்லாம் நடக்கின்றன என்பதை மேலும் துலக்கமாக்கியது. கொஞ்சம் பேர் எழுதும் மாநில மொழி வினாத்தாள் ஒருவேளை தப்பித் தவறிக் கசிந்தாலும்கூட, ஆங்கிலத்திலும் இந்தியிலும் அதிகமானோர் எழுதும் தேர்வுகளை அது பாதித்துவிடக் கூடாது என்றெண்ணியே இந்த முடிவை எடுத்ததாகச் சொன்னது சிபிஎஸ்இ! அப்படியென்றால், யாருடைய தேர்வில் பிரதான கவனம் இருக்கிறது? நீட் தேர்வின் முடிவு அது செல்லும் திசையை நமக்குச் சுட்டிக்காட்டுகிறது. ஆம், நாம் பயந்ததுபோலவே தேர்வில் முதல் 25 இடங்களில் வந்தவர்களில் இந்தி மாணவர்களின் ஆதிக்கமே கொடி கட்டிப் பறக்கிறது. தமிழகத்திலிருந்து இதில் ஒருவர்கூட இடம்பெறவில்லை!

தமிழக அரசின் மெத்தனம்

ஒட்டுமொத்தமாக இந்தியா முழுவதும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் +2 தேர்வு எழுதுபவர்கள் சுமார் 10 லட்சம் பேர். ஆனால், தமிழகத்தில் மட்டுமே மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் படித்து, தேர்வு எழுதும் மாணவர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட இந்த அளவை நெருங்குகிறது. இன்னும், மகாராஷ்டிரம், ஆந்திரம், கர்நாடகம், கேரளம், ஒடிசா, வங்கம் என்று நாடு முழுவதும் உள்ள 33 மாநிலப் பாட வாரியங்களையும் கணக்கில் எடுத்தால், ஒரு கோடிக்கும் மேற்பட்ட மாணவர்கள் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் படிப்பவர்கள் இருப்பார்கள். எனவே, மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் படிப்பவர்கள் மீது சிபிஎஸ்இ பாடத்திட்ட அடிப்படையிலான தேர்வைத் திணிப்பது என்பது ஒரு அப்பட்டமான தாக்குதல்.

ஆனால், மோடி அரசு நடத்திக்கொண்டிருக்கும் இந்தக் குளறுபடிகளை அரசியல்ரீதியாக எதிர்க்கச் சரியான ஆட்கள் இல்லாத சூழலில், பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு மாற்றத் தொடங்கினார்கள். அதில் பல பள்ளிகள் நீட் கோச்சிங் எனத் தனியாக வசூலிக்க ஆரம்பித்தன. ஏற்கெனவே, ஐஐடி, ஜெஇஇ நுழைவுத் தேர்வுகள் ஆங்கில - இந்தி ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் நிலையில், மருத்துவப் படிப்புகளும் இப்படிப் போனால், எதிர்காலத்தில் இது எப்படியான பாதிப்புகளை உண்டாக்கும் என்பதை எவரும் உணரவில்லை. தமிழக அரசு தமிழக மக்களை ஆறுதல்படுத்தும் கடைசி முயற்சியாக, “மத்திய ஒதுக்கீட்டுக்கான 15% இடங்களைத் தவிர, ஏனைய 85% மருத்துவ இடங்களை மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கே வழங்குவோம்” என்று அறிவித்தது. இப்போது இந்த அறிவிப்பை எதிர்த்தும் சிலர் நீதிமன்றப் படியேறியிருக்கிறார்கள்.

தவறான முடிவு

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, மருத்துவம் போன்ற செய்முறை முக்கியத்துவம் மிக்க ஒரு படிப்புக்கு முழுக்க முழுக்க நுழைவுத் தேர்வு மதிப்பெண்களை மட்டுமே வைத்து மாணவர்களைத் தேர்வுசெய்வது சரியா என்கிற கேள்வியை யாரும் கேட்டுக்கொண்டதாகத் தெரியவில்லை. மாநிலப் பாடத்திட்டத் தேர்வுகளில் எழுத்துத் தேர்விலும், செய்முறைத் தேர்விலும் 200-க்கு 200 எடுத்தால்கூட அதைச் சட்டை செய்யாமல், நீட் மதிப்பெண்களை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ள முடிவுசெய்யப்பட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது. கட்டிடக்கலை பட்டப்படிப்பில் சேர என்.ஏ.டி.ஏ. என்கிற நுழைவுத் தேர்வைக் கண்டிப்பாக எழுத வேண்டும். ஆனால், மாணவர் சேர்க்கையைப் பொறுத்தவரை என்.ஏ.டி.ஏ. மதிப்பெண்களுக்கு 50%, +2 மதிப்பெண்களுக்கு 50% என ‘வெயிட்டேஜ்’ கொடுத்தே மாணவர்களைத் தேர்வுசெய்கிறது அண்ணா பல்கலைக்கழகம். மருத்துவத்துக்கும் அதே முறைதான் பொருத்தமாக இருக்கும். பிளஸ் 1, பிளஸ் 2 பாடங்களில் நடத்தப்படும் செய்முறைப் பயிற்சிகள், அவற்றின் அடிப்படையிலான மருத்துவப் படிப்புக்கு அடித்தளமாக இருக்கும்போது, அவற்றை எப்படிப் புறக்கணிக்க முடியும்? இப்படி ஒரு சூழலில், இனி பள்ளிகளில் பாடம் நடக்காது, நீட் தேர்வுக்கான வகுப்பு மட்டும்தானே நடக்கும் என்று எழும் கேள்விகள் புறக்கணிக்கவே முடியாதவை.

வாய்ப்பு யாருக்கு?

தமிழகத்துக்கு நீட் தேவையில்லை என மீண்டும் ஒரு மாணவி உச்ச நீதிமன்றத்தை அணுகியிருக்கும் சூழ்நிலையில், தீர்ப்பு தமிழக மாணவர்களுக்குச் சாதகமாகத்தான் இருக்கும் என்று அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை. கல்வி பொதுப்பட்டியலில் இருக்கும் வரை இப்படி அநீதி இழைக்கப்படுவதை சட்டரீதியாகத் தடுக்க முடியாது. நெருக்கடிநிலைக் காலத்தில் மாநிலங்களின் ஒப்புதலின்றி மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியைப் பொதுப் பட்டியலுக்கு மாற்றினார்கள். அதை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவருவதே இன்று உருவாகியிருக்கும் சிக்கல்களுக்குச் சரியான தீர்வாக இருக்கும். அதற்கு, இந்தப் பிரச்சினைக்கான தீர்வு நீதிமன்றத்தில் அல்ல; அரசியல் மன்றத்தில் - மக்கள் மன்றத்தில்தான் இருக்கிறது என்ற தெளிவு நமக்கு வேண்டும். மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படுவதற்கு எதிரான போராட்டத்தின் தொடக்கமாக நீட் விவகாரம் மாற்றப்பட வேண்டும்!

- ரமேஷ் பிரபா, கல்வியாளர், ஊடகவியலாளர்.
தொடர்புக்கு: galaxypraba@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x