Last Updated : 24 Jul, 2017 09:09 AM

 

Published : 24 Jul 2017 09:09 AM
Last Updated : 24 Jul 2017 09:09 AM

வீட்டு வேலை செய்பவர்களுக்கு அங்கீகாரம் தேவை!

“வீ

ட்டு வேலைக்கு ஆள் வைத்துக்கொள்கிறீர்களா? காவல் துறை உதவியுடன் சரிபார்த்துவிட்டு வேலைக்குச் சேருங்கள்; முழு விவரங்கள் அறியாமல் வேலைக்கு வைத்துக்கொள்வது உங்களுடைய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகிவிடும்” என்று விளம்பரம் செய்யப்படுகிறது. அதில் ஆதிவாசியைப் போன்ற தோற்றமுள்ள இளம் பெண், வேலைக்கு ஆள்தேடும் வசதியான வீட்டு முதிய பெண், ஒரு போலீஸ்காரர் ஆகியோர் இடம் பெறுகின்றனர். வேலைக்கு வைத்துக்கொள்ளப்போகும் வசதியான வீட்டுப் பெண்ணும் காவலரும் அமர்ந்திருக்க, இளம்பெண் நின்றுகொண்டிருப்பார்.

இத்தகைய விளம்பரங்கள் தொழிற்சங்க நிர்வாகிகள், வீட்டு வேலை செய்யும் பெண்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோருக்கு மிகுந்த வருத்தத்தையும் கோபத்தையும் ஏற்படுத்துகின்றன. ஏழைகளை சந்தேகப்படவும், இழிவாகக் கருதவுமே இந்த விளம்பரங்கள் வழி செய்கின்றன.

வீட்டு வேலைக்கு வரும் பெண்களை கொடுமைக்கார வீட்டு எஜமானி கையில் கிடைத்ததை எடுத்து அடிப்பதையும் சூடு போடுவதையும் கழிவறையில் அடைத்து வைத்து சரியாகச் சாப்பாடு கொடுக்காமல் நாள் கணக்கில் பட்டினி போடுவதையும் வீட்டில் பெண்கள் இல்லாத சமயத்தில் மது போதையிலோ காமவெறியிலோ ஆண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்துவதையும் செய்திகளில் பலமுறை வாசித்துக் கொண்டிருக்கிறோம். வீட்டு வேலைக்குச் செல்லும் பெண்கள் இவர்களிடம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆனால் விளம்பரம் எப்போதோ நடக்கும் திருட்டு, கொலைக்காக வீட்டு வேலை செய்யும் அனைவரையும் குற்றவாளிகளாக்குகிறது.

டெல்லியில் குடியிருப்போர் சங்கங்களுக்குக் காவல் துறை சார்பில் வீட்டு வேலை செய்வோரை அடையாளம் காண உதவும் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. வீட்டு வேலை செய்வோரே அதைப் பூர்த்தி செய்து அருகில் உள்ள காவல் நிலையங்களில் அளிக்க வேண்டும். வீட்டு வேலை செய்வோர் அடிக்கடிப் பயன்படுத்தும் வார்த்தைகள் என்ன, அவர்களுடைய உடலமைப்பு எப்படி, அவர்களுடைய நிறம் என்ன என்று அதில் குறிப்பிட வேண்டும். கையெழுத்து எப்படி இருக்கும் என்று தெரிவிக்க மாதிரிக்கு சில வரிகள் எழுதிக் காட்ட வேண்டும். அத்துடன் அவர்களுடைய தலைமுடி, கண்கள், பச்சை குத்திய அடையாளங்கள் விவரிக்கப்பட வேண்டும். இரு கைகளிலும் எல்லா விரல்களின் ரேகைகளும் பதிவு செய்யப்பட வேண்டும். வீட்டு வேலைக்கு வைத்துக்கொள்ளும் எஜமானர்கள் பற்றிய எந்தத் தகவலும் இந்த விண்ணப்பத்தில் கேட்கப்படுவதே இல்லை.

அரசின் அலட்சியம்

வீட்டு வேலை செய்வோரை தொழிலாளர்களாக இரண்டு சட்டங்கள் ஒருவழியாக அங்கீகரிக்கின்றன! ‘அமைப்புரீதியாகத் திரட்டப்படாத தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு சட்டம்-2008’. இது சமூக நலத் திட்டம். அடுத்து, ‘பணிபுரியும் இடத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் மகளிர் (பாதுகாப்பு, தடுப்பு, குறைதீர்த்தல்) நலச் சட்டம்-2013’. இது பணிபுரியும் மகளிருக்கான பொதுவான சட்டம். இவ்விரண்டுமே வீட்டு வேலை செய்யும் பெண்களை உரிமையுள்ள தொழிலாளர்களாக அங்கீகரிக்கவில்லை என்பதும் உண்மை.மாநில அரசு இத்தொழிலில் இருப்பவர்களைக் காக்க வேண்டும் என்றால் அவர்களைத் தொழிலாளர்களாக அங்கீகரிப்பது அவசியம். ‘வீட்டு வேலைத் தொழிலாளர் களுக்கான தேசியக் கொள்கை’ என்பது வரைவு அறிக்கையாக மட்டுமே இருக்கிறது. வீட்டு வேலை என்பது சட்டபூர்வமாக தொழிலாளர் சந்தை சார் நடவடிக்கை என்ற விழிப்புணர்வு பரவலாக்கப்பட வேண்டும் என்பது இந்தக் கொள்கையின் நோக்கம். பிற தொழிலாளர் களுக்குள்ள அனைத்து சட்டபூர்வ உரிமைகளும் வீட்டு வேலை செய்வோருக்கும் கிடைக்க இப்போதுள்ள தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தப்பட வேண்டும் என்று இந்தக் கொள்கை பரிந்துரைக்கிறது. இதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று அரசு நினைப்பது அதன் அணுகுமுறையிலிருந்து தெரிகிறது.

2011-ல் எடுக்கப்பட்ட தேசிய மாதிரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பும் கூட உத்தேசமாக, 39 லட்சம் பேரை வீட்டு வேலை செய்வோர் என்று குறிப்பிட்டிருக்கிறது. ஆனால் இந்த எண்ணிக்கை ஒரு கோடிக்கும் மேல் இருக்கும் என்கின்றன தொழிற்சங்க வட்டாரங்கள். ஆதிவாசிகள், பட்டியல் இனத்தவர், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள், சிறுபான்மையோர்தான் இப்படி வீட்டு வேலையாட்களாகின்றனர். அதிகம் பேர் பெண்கள். 2008-க்குப் பிறகு இது ஏறுமுகமாகவே இருக்கிறது. அதே போல நடுத்தர, உயர் நடுத்தர குடும்பங்களின் எண்ணிக்கையும், கணவன் –மனைவி இருவரும் வேலைக்குப் போகும் குடும்பங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் வீட்டு வேலை செய்வோருக்கான தேவையும் அதிகரித்துவருகிறது. வீட்டு வேலை செய்வோர் அந்தக் குடும்பங்களுக்குப் பொருளாதார ரீதியாக பலன் அளிக்கின்றனர். ஆனால் அரசும் சந்தையும் தங்களுக்குள் கூட்டணி அமைத்து இத்துறை எந்தவிதப் பொருளாதார கட்டுப்பாடுகளுக்கும் வந்துவிடாமல் பார்த்துக்கொள்கின்றன. பேறுகால விடுப்பு உள்ளிட்ட பயன்களும் குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின் பாதுகாப்பும் வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்களுக்குக் கிடையாது. உயிரிழப்பு அல்லது ஊனம் போன்றவற்றுக்குக்கூட காப்புறுதி போன்ற பொருளாதாரப் பாதுகாப்பு இல்லை. வீட்டு வேலை செய்பவர்களை வீட்டுக்காரர்கள் நினைத்தால் வேலைக்கு வைத்துக் கொள்ளலாம், பிடிக்காவிட்டால் எந்தவித முன்னறிவிப்பும் பண இழப்பீடும் தராமல் வீட்டுக்கு அனுப்பிவிடலாம் என்ற நிலைதான் நிலவுகிறது. வேலைக்காரர்களைப் பொருத்தவரை வீட்டுக்காரர் களுக்கு சட்டப்பூர்வக் கடமை எதுவுமே கிடையாது.

ஒழுங்கமைப்பு தேவை

வேலைசெய்வது தனியார் வீடுகள் என்பதால் அதில் அரசு தலையிடக்கூடாது என்று சிலர் நியாயப்படுத்துகின்றனர். பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிரான சட்டத்தில் வீட்டு வேலை செய்யும் பெண்கள் சேர்க்கப்பட்டிருப்பதால், தனியார் வீடுகளாக இருந்தாலும் அதுவும் வேலை செய்யும் இடம்தான் என்பதை சட்டமே அங்கீகரித்துள்ளது. மேலும் வீட்டு வேலையை ஒழுங்கு படுத்தும் சட்டத்துக்கான வரைவை அரசு தயாரித்து வைத்துள்ளது.

வீட்டு வேலை செய்வோருக்கான தேசிய மேடை என்ற அமைப்பும் 2016-ல் ஒரு வரைவு மசோதாவைத் தயாரித்திருக்கிறது. அதில் ஒழுங்கமைப்புடன் சமூக பாதுகாப்பு அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. மத்திய, மாநில அரசுகளின் நல்வாழ்வு நடவடிக்கைகளின் பலன்களை வீட்டு வேலை செய்வோருக்கும் வழங்க வேண்டும் என்று கோரும் அந்த அமைப்பு, மாவட்ட நிர்வாகத்திடம் வீட்டு வேலை செய்வோரும், வேலைக்கு அமர்த்துவோரும் பதிவுசெய்து கொள்வதையும் கட்டாயமாக்க வேண்டும் என்கிறது. வீட்டு வேலை செய்வோருக்கான நல நிதிக்குத் தேவைப்படும் கூடுதல் வரியை (செஸ்) வேலைக்கு அமர்த்துவோரிடமிருந்து வசூலிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. வீட்டு வேலை செய்வோருக்கு அரசு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் அதில் முக்கியம்.

இந்த அடையாள அட்டையானது காவல் துறை மூலம் அடையாளத்தைச் சரிபார்ப்பது என்ற இழிவைத் தடுக்கும். அதே வேளையில் உரிமைகளைக் கோரும் அதிகாரம் பெற்றத் தொழிலாளர்களாக அங்கீகாரம் அளிக்கும். சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளின் பலன்களையும் கொண்டுசேர்க்கும். வீட்டு வேலை செய்வோரைப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகப் பார்ப்பது அவர்களுக்குத் தொழிலாளர் அந்தஸ்தைத் தர மறுக்கும் செயல். வீட்டு வேலை செய்வோர் பற்றிய கண்ணோட்டம் அரசு அதிகாரிகளுக்கும் ஆள்வோருக்கும் சமூகத்துக்கும் மாற வேண்டும். இதைத் தொடங்குவதற்கான ஆரம்பம், ‘வீட்டு வேலை செய்வோர் பணி ஒழுங்கமைவு மற்றும் சமூகப் பாதுகாப்பு சட்டம்’ என்பதாகத்தான் இருக்க முடியும்.

தமிழில்: சாரி

© தி இந்து ஆங்கிலம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x