Published : 06 Jul 2017 01:07 PM
Last Updated : 06 Jul 2017 01:07 PM

இலங்கை தமிழ் தேசியவாத அரசியலின் தோல்வி!

லங்கை வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் மீது, வடக்கு மாகாண சபையின் ஒரு பிரிவினர் கொண்டுவந்திருக்கும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் இலங்கைத் தமிழ்த் தேசியவாத அரசியலில் ஆழமான பிளவை ஏற்படுத்தியிருக்கிறது. சமீபத்தில், ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இரண்டு அமைச்சர்களை ராஜினாமா செய்யச் சொல்லி முதல்வர் விக்னேஸ்வரன் கோரியிருந்தார். மேலும், இருவரைக் கட்டாய விடுப்பில் செல்லுமாறும் அவர் தெரிவித்திருந்தார். இதையடுத்துதான் இந்தச் சிக்கல் எழுந்திருக்கிறது. இதற்கிடையே தமிழ்த் தேசியவாதக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, விக்னேஸ்வரன் தொடர்ந்து பதவியில் நீடிக்க வழிவகுக்கப்பட்டிருக்கிறது.

இலங்கைத் தமிழர் அரசியலில் ஏற்பட்டிருக்கும் கொந்தளிப்பின் வெளிப்பாடாகவே இந்த சர்ச்சை பார்க்கப்படுகிறது. இலங்கையில் 2015 ஜனவரியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதிலிருந்தே வடக்கு மாகாண சபைக்குள் பதற்றம் தொடங்கிவிட்டது. இலங்கையில் புதிய அரசு அமைந்த பின் இலங்கை அரசுடனான அணுகுமுறையைத் தமிழ்த் தேசியவாதக் கூட்டமைப்பின் தலைமை மாற்றிக்கொண்டது. அதேசமயம், வடக்கு மாகாணத்துக்கு உள்ளும் புறமும் விலக்கிவைக்கும் அரசியல் போக்கை, மற்ற தலைவர்களுடன் சேர்ந்து விக்னேஸ்வரன் கடைப்பிடிக்கிறார்.

புறக்கணிக்கிறது இலங்கை

2015 நாடாளுமன்றத் தேர்தலில் இந்த விரிசல் வெளிப்படையாகவே தெரிந்தது. அந்தத் தேர்தலில், தீவிரப் போக்கு கொண்ட தமிழ்த் தேசியவாதத்துக்கான மக்கள் முன்னணியை ஆதரித்தார் விக்னேஸ்வரன். அந்தக் கட்சி பெரும் தோல்வியடைந்தது. அந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியவாதக் கூட்டணியின் மாபெரும் வெற்றி, முதல்வரை மாற்றுவதற்கு ஒரு சரியான வாய்ப்பாக இருந்தது. ஆனால், சம்பந்தன் உறுதியாக முடிவெடுக்காத சூழலில் அப்படி ஏதும் நடக்கவில்லை.

வடக்கு மாகாண கவுன்சிலில் நடந்துவரும் விஷயங்கள், இலங்கைத் தமிழர் அரசியல் கலாச்சாரத்தில் ஏற்பட்டு இருக்கும் கவலைதரும் போக்குகளைப் பிரதிபலிக்கின்றன. விடுதலைப் புலிகள் இயக்கமும் சரி, பின்னாட்களில் ராஜபக்ச அரசும் சரி, மக்களின் போராட்டங்களைக் குறைத்தே மதிப்பிட்டன. எனினும், 2015-க்குப் பிறகு நிலம், மீன்பிடி உரிமை, போர்க் காலத்தில் பலர் காணாமல் ஆக்கப்பட்டது, ராணுவமயம் ஆகியவற்றுக்கு எதிராகத் தமிழர்கள் குரல் எழுப்பினர். போரால் பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டங்களின் மூலம் தங்கள் கவலையை வெளிப்படுத்தினாலும் இலங்கை அரசு இவ்விஷயத்தில் கவனம்செலுத்தாமலேயே புறக்கணித்துவருகிறது.

முட்டுக்கட்டை போடும் விக்னேஸ்வரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலும் சரி, இலங்கை அரசிலும் சரி, சரியான சிந்தனை கொண்ட தலைமை மூலம் தீர்வு காண்பது என்பது இல்லாதது, விக்னேஸ்வரனுக்கு ஆதரவான தலைவர்கள் தான்தோன்றித்தனமான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட வழிவகுத்திருக்கிறது. விடுதலைப் புலிகள் பாணியிலேயே இன அடிப்படையில் ஒதுக்கிவைக்கும் போக்கை இவர்கள் மேற்கொள்கிறார்கள். முஸ்லிம் விரோத மனப்பான்மையும் அவ்வப்போது வெளிப்படுகிறது. வீர மரணத்தையும், பாதிக்கப்பட்டவர்களின் துயரத்தையும் பெருமைப்படுத்திப் பேசும் இவர்கள், எல்லாவற்றுக்கும் இலங்கையின் தென் பகுதியைச் சேர்ந்தவர்கள் தான் காரணம் என்றும் குற்றம்சாட்டுகிறார்கள். மேலும், தாங்கள் மேற்கத்திய நாடுகளிடம் ஆதரவு திரட்டி, இப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக்கூடிய தேசியவாதிகள் என்றும் சொல்லிக்கொள்கிறார்கள்.

இலங்கையில் குறிப்பிடத்தக்க அதிகாரப் பகிர்வு இன்ன மும் வழங்கப்படவில்லை என்பது உண்மைதான். ஆனால், இலங்கை அரசு கொண்டுவரும் வளர்ச்சித் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுவதில் தொடர்ந்து ஈடுபட்டிருக்கிறார் விக்னேஸ்வரன். இதற்கிடையே, மதரீதியாகவும் கலாச்சாரரீதியாகவும் விக்னேஸ்வரன் மீதான பிம்பத்தைக் கட்டமைப்பதில் சில உள்ளுர்த் தமிழ் ஊடகங்கள் ஈடுபட்டிருக்கின்றன.

அரசியல் அச்சுறுத்தல்

இலங்கை தமிழ்ச் சமூகத்துக்குத் தமிழினத் தீவிரப்போக்காளர்கள் அச்சுறுத்தலாக இல்லைதான். அதேசமயம், சமூக, பொருளாதார, அரசியல் நிறுவனங்கள் மறுகட்டமைப்பு செய்யப்படுவதை அவர்கள் தடுப்பது என்பது தமிழ்ச் சமூகத்தை மேலும் வலுவிழக்கவே செய்யும். விடுதலைப் புலிகள் தனி நாடு கோரும் தங்கள் ராணுவத் திட்டத்துக்காக, அர்ப்பணிப்பு கொண்ட தமிழ் சமூக, அரசியல் தலைவர்களை ஒழித்துக்கட்டினார்கள் என்றால், தற்போதைய சந்தர்ப்பவாத தலைவர்கள், மிச்சமிருக்கும் முற்போக்குத் தமிழ்ச் சமூகத்துக்கும் அதன் நிறுவனங்களுக்கும் ஒரு அரசியல் அச்சுறுத்தலாக இருக்கிறார்கள்.

வடக்கு மாகாண கவுன்சிலுக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், மிச்சமிருக்கும் நாட்களில் நாடகத்தனமான தீவிர தேசியவாதிகள் தமிழ் மக்களைக் கொந்தளிப்பான நிலையிலேயே வைத்திருப்பார்கள். இந்தச் சூழலில், வடக்கு மாகாணக் கவுன்சிலைக் கலைத்துவிட்டு முன்கூட்டியே தேர்தல் நடத்துவது என்பது ஒரு வழி. வடக்கு மாகாண மக்கள், மாகாண நிர்வாகத்தில் மாற்றம் வேண்டும் என்று கோரி போராட்டங்கள் நடத்துவது இன்னொரு வழி. இலங்கை அரசும் தன் பங்குக்குப் பெரும் குறைபாடுகள் கொண்ட மறுகட்டமைப்புத் திட்டங்கள் மூலம் தமிழ்ச் சமூகத்தின் நிலையை மேலும் மோசமாக்கியிருக்கிறது. அரசு சாத்தியங்கள் கொண்ட முதலீடுகளைச் செய்வதில்லை, வேலைவாய்ப்புகளையும் உருவாக்குவது இல்லை.

சுயபரிசோதனைக்குத் தயாரில்லை

இலங்கையின் கூட்டணி அரசு தடுமாறிக்கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், சிங்கள - புத்த மதப் பேரினவாத சக்திகளும் வளர்ந்துவரும் நிலையில், ஏற்கெனவே ஒப்புக்கொள்ளப்பட்டதற்கு மாறாக, அதிகாரப் பகிர்வின் விரிவாக்கத்துக்கு வழிகோலும் அரசியல் சட்ட சீர்திருத்தத்துக்கான பணிகள் நிறுத்திவைக்கப்பட்டிருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. ஆட்சியில் இரண்டரை ஆண்டுகளை வீணடித்து இருக்கும் இலங்கை அதிபரும் பிரதமரும் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு தீர்வைக் காண்பதற்கான நம்பிக்கையைப் பெரிய அளவில் வெளிப்படுத்தவில்லை. தமிழ்த் தேசியவாத அரசியலைப் பொறுத்தவரை, அது தமிழ்த் தேசியவாதக் கூட்டமைப்பின் தலைமையாக இருந்தாலும் சரி, அதன் எதிர்ப்பாளர்களாக இருந்தாலும் சரி, அவர்களிடம் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. விடுதலைப் புலிகளும் ஒருவகையில் சமீபத்திய தலைவர்களும் தற்போதைய இந்த மோசமான சூழலுக்குத் தமிழ்ச் சமூகத்தைக் கொண்டுசென்றிருப்பது தொடர்பாகத் தமிழ்த் தேசியவாதத் தலைவர்கள் சுயபரிசோதனை செய்துகொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரியவில்லை.

விக்னேஸ்வரனின் அரசியல் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது. இலங்கையின் தெற்குப் பகுதியுடனான உறவை அவர் துண்டித்துக்கொண்டிருக்கிறார். மேலும், தமிழர் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண மேற்கத்திய நாடுகளின் ஆதரவைப் பெறுவதற்கு முயற்சி செய்வதாக அவர் சொல்லிக்கொண்டாலும், அந்நாடுகளின் தலைவர்களே அவரைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள். அதேபோல், சம்பந்தனின் அரசியல் ஸ்திரத்தன்மையின்மை, தமிழ் மக்களைத் திரட்டுவதில் அவர் அடைந்திருக்கும் தோல்வி ஆகியவற்றின் காரணமாக மூத்த தலைவர் எனும் வகையில் அவர் மீது பலர் வைத்திருந்த நம்பிக்கையும் குறைந்துவருகிறது.

இந்தச் சூழலில், ஒதுக்கிவைக்கும் போக்கை மையமாகக் கொண்டு இயங்குகின்ற, அரசியல் இணக்கம் இல்லாமல் அரசியல் சட்ட மாற்றங்களைக் கோரும் போக்குடன் செயல்படுகின்ற தமிழ்த் தேசியவாத அரசியல் தலைவர்கள் தங்களை மறுபரிசீலனை செய்துகொள்ள வேண்டும். பிற சிறுபான்மையினரையும் முற்போக்கு சிங்களவர்களையும் இணைத்துக்கொள்வதில் தமிழ்த் தேசியவாத அரசியல் ஒருபோதும் முயற்சி எடுக்கவில்லை.

பரந்த ஜனநாயகமயமாக்கல், பொருளாதார நீதி ஆகியவற்றை இணைத்து அதிகாரப் பகிர்வை எட்டும் முயற்சிகளையும் அது கருத்தில் கொள்ளவில்லை. தமிழ்ச் சமூகத்துக்குள்ளேயே இருக்கும் சாதி, பாலின, வர்க்க, பிராந்திய முரண்களைக் கையாள்வதில் தமிழ்த் தேசியவாத அரசியல் தோல்வியடைந்திருப்பதுடன், யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட மேல்தட்டு வர்க்கத்தின் ஆதரவை மட்டுமே நம்பிச் செயல்படுவதுதான் இன்னும் மோசம்.

தமிழ்த் தேசியவாதத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு செயல்படக்கூடிய ஒரு தலைமுறை அரசியல் மாற்றத்தால் மட்டும்தான், இக்கட்டான நிலைமையிலிருந்து தமிழ்ச் சமூகத்தை மீட்டெடுக்க முடியும்!

- அகிலன் கதிர்காமர்,

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அரசியல் பொருளாதார நிபுணர்.

© ‘தி இந்து’ ஆங்கிலம், தமிழில்: வெ.சந்திரமோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x