Last Updated : 12 Jul, 2017 10:03 AM

 

Published : 12 Jul 2017 10:03 AM
Last Updated : 12 Jul 2017 10:03 AM

கதிராமங்கலத்தில் நடப்பது என்ன?

கதிராமங்கலம் போராட்டம் தொடர்பாக தொடர்ந்து ஒரு கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. ஏற்கெனவே எண்ணெய் எடுக்கப்பட்டுவரும் இடம், அங்கு ஆழ்குழாய் பதிப்பதைத் தடுப்பதற்கு மக்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்? இந்தக் கேள்விக்கான பதில் தெரியாமல் மக்களின் அச்சத்தைப் புரிந்துகொள்ள முடியாது. தஞ்சாவூர் மாவட்டத்தின் வடகிழக்கு எல்லையில் உள்ள கதிராமங்கலத்தின் மக்கள்தொகை 7,000. திருப்பனந்தாள் ஒன்றியத்திலேயே அதிக மக்கள்தொகை கொண்ட ஊர். கடந்த 2002-ல் இப்பகுதியில் எண்ணெய் வளம் இருப்பதை ஓஎன்ஜிசி நிறுவனம் கண்டறிந்தது. இதற்காக இக்கிராமத்தில் மூன்று இடங்களில் எண்ணெய்க் கிணறு அமைத்தது. நருவெளியில் அமைக்கப்பட்ட எண்ணெய்க் கிணறு, சில ஆண்டுகளுக்கு முன் அங்கு எண்ணெய் வளம் இல்லை எனக் கூறி மூடப்பட்டது. கடைவீதியில் உள்ள 7-ம் எண் எண்ணெய்க் கிணறும், பந்தநல்லூர் சாலையில் உள்ள 35-ம் எண் எண்ணெய்க் கிணறும் தற்போது செயல்பட்டுவருகின்றன. பூமிக்கடியிலிருந்து உறிஞ்சப்படும் கச்சா எண்ணெய், ஆறு அடி ஆழத்தில் பதிக்கப்பட்டுள்ள இரும்புக் குழாய்கள் மூலம் குத்தாலத்தில் உள்ள சுத்தகரிப்பு நிலையத்துக்கு அனுப்பப்படுகிறது.

புதிய ஆய்வா?

கதிராமங்கலத்தில் 2004 முதல் கச்சா எண்ணெய் உறிஞ்சப்பட்டுவருகிறது. ஆரம்பத்தில் எந்தச் சிக்கலும் இல்லை. ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன் கதிராமங்கலத்தில் உள்ள குடிநீர்க் குழாய்களில் நீர் மஞ்சள்காவி நிறத்துக்கு மாற ஆரம்பித்தது. இந்நிலையில் கடந்த மே 17-ல் கடைவீதியில் உள்ள 7-ம் எண் எண்ணெய்க் கிணற்றுக்குத் தளவாடச் சாமான்களைக் கொண்டுவந்து குவித்தது ஓஎன்ஜிசி நிறுவனம். இரவு பகலாக பெரிய பெரிய கிரேன்களும், வேலை ஆட்கள் தங்குவதற்கான கேபின்களும் வந்தபோதுதான் ஊர் மக்கள் என்ன ஏதுவென விசாரிக்க ஆரம்பித்தனர். ஏற்கெனவே ஊரில் தண்ணீர் வராமல் ஆழ்துளைக் கிணறுகளில் மஞ்சள் காவியாகத் தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், ஓஎன்ஜிசி 600 அடியிலிருந்து 1,000 அடிக்குக் குழாய் இறக்கப் போகிறார்கள், நிச்சயமாக இது ஷேல் மீத்தேனுக்கான ஆய்வுப் பணிதான் என்று என்று கதிராமங்கலம் கொதிப்படையத் தொடங்கியது.

மே 19-ல் கதிராமங்கலம் மக்கள் ஒன்றுதிரண்டு ஓஎன்ஜிசி நிறுவனம் இங்கு என்ன செய்யப்போகிறது என்று கேட்டுப் போராட்டத்தில் இறங்கினார்கள். மக்களுக்கு ஆதரவாக மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த. ஜெயராமன் கேள்வியெழுப்பினார். வருவாய்த் துறையினரும், காவல் துறை யினரும் பொதுமக்களை சமாதானம் செய்ய முயற்சித்தனர். ஓஎன்ஜிசி அதிகாரிகளோ நாங்கள் வழக்கமான பராமரிப்புப் பணிகளைத்தான் செய்கிறோம் என்றார்கள். ஆனால், கதிராமங்கலம் மக்கள் சமாதானம் ஆகவில்லை. மே 25 அன்று கும்பகோணம் உதவி ஆட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது ஓஎன்ஜிசி நிர்வாகம், மீத்தேன் எடுக்கவில்லை, பூமியிலிருந்து கச்சா எண்ணெய் எடுக்கும் குழாயில் கசிவு ஏற்பட்டதால் குழாய்களை மாற்றவுள்ளோம். வேறு எந்தப் பணியிலும் ஈடுபடவில்லை என உத்தரவாதம் கொடுத்தது.

இந்த நிலையில் ஜூன் 1 அன்று நள்ளிரவு கதிராமங்கலம் முழுவதும் நூற்றுக்கணக்கான காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். அறிவிக்கப்படாத ஊரடங்கு நிலை அங்கு நிலவியது. மக்கள் தெருவுக்கு வந்தால், கைதுசெய்யச் சொல்லி மேல் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாகக் காரணம் சொல்லப்பட்டது. அறிவிப்பை மீறி, தெருவுக்கு வந்த பெண்களும், இளைஞர்களும் கைதுசெய்யப்பட்டனர். இதையடுத்து கதிராமங்கலத்தைச் சேர்ந்த மக்கள் மறுநாள் ஆர்ப்பாட்டம், கடையடைப்பு என்று போராடத் தொடங்கினார்கள். அப்போராட்டத்தில்தான் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரைக் காவல்துறை கைதுசெய்து கும்பகோணம் கிளைச் சிறையில் அடைத்தது.

அதன் பிறகு, மக்கள் ஊருக்கு வெளியே ஓடத்தோப்பு என்ற இடத்தில் ஒன்றுகூடினார்கள். கும்பகோணம் உதவி ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி, பாதிப்பு ஏதும் இல்லை என்று வாக்குறுதியை வழங்கிய பின்னரே அவர்கள் ஊருக்குத் திரும்பினார்கள். ஜூன் 5 வரை கதிராமங்கலம் தனித் தீவானது. யாரும் அந்த பகுதிக்குச் செல்ல முடியவில்லை. அவ்வூரைச் சுற்றி 21 இடங்களில் காவல்துறை அரண்களை அமைத்திருந்தது. யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. பெ.மணியரசன், பி.ஆர்.பாண்டியன் ஆகியோர் கதிராமங்கலத்தின் நிலையறியச் சென்றபோது கும்பகோணத்திலேயே கைதுசெய்யப்பட்டனர்.

மீண்டும் போராட்டம்

காவல் துறையின் பாதுகாப்போடு ஓஎன்ஜிசி பராமரிப்புப் பணிகள் மூன்றே நாட்களில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே கைதுசெய்யப்பட்ட 10 பேரும் பிணையில் வெளியே வந்தனர். இயல்பு நிலை திரும்பிக்கொண்டிருந்த நிலையில் ஜூன் 30, அதிகாலை பந்தநல்லூர் சாலையில் உள்ள 35-வது எண்ணெய்க் கிணற்றிலிருந்து சில அடி தொலைவில் கச்சா எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது. கச்சா எண்ணெயின் நெடியால் மக்கள் அச்சமடைந்தனர். அங்கு வந்த வருவாய்த் துறை யினரும் காவல்துறையினரும் கசிவு நடந்த இடத்துக்குப் பொதுமக்களை அனுமதிக்கவில்லை. மக்களின் அச்சத்தைப் பேராசிரியர் த.ஜெயராமனும், தொகுதி எம்.எல்.ஏ. கோவி. செழியனும் அதிகாரிகளிடம் எடுத்துக் கூறினார்கள். காலை 7 மணியிலிருந்து தொடங்கிய பரபரப்பு மாலை 5.30 மணி வரை முடிவுக்கு வரவில்லை. அப்போதுதான் அருகிலிருந்த முட்செடிகள் பற்றி எரியத் தொடங்கின. அதைத் தொடர்ந்து மக்களின்மீது தடியடி நடத்தியது காவல்துறை. முட்செடிகளைக் கொளுத்தியது காவல் துறையா, பொதுமக்களா என்பதில் இன்னும் விடை கிடைக்கவில்லை.

மக்களை விரட்டியடித்த காவல் துறை கதிராமங்கலத்தையே தன்னுடைய கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்துவிட்டது. இந்த முறையும் பேராசிரியர் த. ஜெயராமன் உட்பட 10 பேர் கைதுசெய்யப்பட்டனர். வெகுண்டெழுந்த மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். கைதுசெய்யப்பட்டு சிறையில் உள்ள அனைவரையும் எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், ஓஎன்ஜிசி பணிகளை நிறுத்த வேண்டும், பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்க வேண்டும் ஆகியவைதான் மக்களின் கோரிக்கை. இதை வலியுறுத்திதான் கடந்த 10 நாட்களுக்கும் மேலாகக் கடையடைப்பு, உண்ணாவிரதம் முதலான அறவழிப் போராட்டங்களில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டுவருகின்றனர். கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாக, தஞ்சை மாவட்டத்தின் பல ஊர்களிலும் விவசாயிகள் ஆர்ப்பாட்டங்களை நடத்திவருகின்றனர். ஆனால், விவசாயிகள் நெடுஞ்சாலைகளிலும் பேருந்து நிறுத்தங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்குக் காவல் துறை தொடர்ந்து அனுமதி மறுத்துவருகிறது.

அச்சத்திற்கான காரணம்

கடந்த அக்டோபர் 14, 2013 அன்று, ஷேல் மீத்தேன் எனப்படும் வண்டல் மண் படுகையின் கீழிருக்கும் மீத்தேனை எடுப்பதற்கான கொள்கை முடிவை மத்திய அரசு அறிவித்தது. ஏற்கெனவே எண்ணெய் எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு, அதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் ஷேல் மீத்தேன் ஆய்வு செய்வதற்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஓஎன்ஜிசி அமைக்கும் இந்த ஆய்வுக் குழாய்கள் வழக்கமான ஆய்வுக் குழாய்கள்போல, தரையில் செங்குத்தாகவே பதிக்கப்படும். இந்த ஆய்வுக் குழாய்ச் சோதனையில் ஷேல் மீத்தேன் இருப்பது கண்டறியப்பட்டால், அதைத் தொடர்ந்து 3 கி.மீ. ஆழத்துக்குச் செங்குத்தாகக் குழாய்கள் இறக்கப்பட்டு, அங்கிருந்து பக்கவாட்டில் குழாய்கள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். அதன் பிறகு நீரியல் விரிசல் முறையில் மணல், நீர், ரசாயனக் கலவைகளைப் பயன்படுத்தி ஷேல் மீத்தேன் எடுக்கும் பணிகள் தொடங்கும்.

காவிரி நிலப் படுகையில் எண்ணெய் எடுக்கும் ஓஎன்ஜிசி நிறுவனம்தான் ஷேல் மீத்தேன் எடுப்பதற்கான ஆய்வுப் பணிகளையும் மேற்கொண்டிருக்கிறது. ஷேல் மீத்தேன் எடுக்கும் திட்டமானது, நிலக்கரி மீத்தேன் எடுக்கும் திட்டத்தைக் காட்டிலும் அபாயகரமானது. 3 கிலோ மீட்டர் ஆழத்தில் பக்கவாட்டில் குழாய்களைப் பதித்து, ஷேல் மீத்தேன் எடுப்பதால் நிலத்தடி நீர்வளம் அழியும், பாறைகளை உடைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ரசாயனப் பொருட்கள் முழுமையாக அகற்றப்படாவிட்டால் மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் அழிந்து விவசாயம் பாதிக்கப்படும். ஓஎன்ஜிசி ஆழ்குழாய்கள் பதிக்கும் திட்டத்துக்கு மக்களிடம் ஏற்பட்டுள்ள அச்சத்துக்கு இதுதான் காரணம். ஏற்கெனவே, மயிலாடுதுறை அடியாமங்கலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்கள் 2015 அக்டோபர் 8-ல் அகர்த்தலாவிலிருந்தும் அகமதாபாதிலிருந்தும் கொண்டுவரப்பட்ட ஆழ்குழாய் பதிப்பதற்கான கருவிகளையும் இதே அச்சத்தின் காரணமாகத்தான் தடுத்து நிறுத்தினார்கள்.

மக்களின் அச்சத்தைப் போக்காமல், அவர்களின் நியாயமான கேள்விகளுக்கு உரியமுறையில் பதில் சொல்லாமல் எந்தவொரு போராட்டத்தையும் முடிவுக்குக் கொண்டுவர முடியாது. நிலக்கரி மீத்தேன் திட்டத்துக்கு அனுமதியில்லை என்று காலம் தாழ்ந்தேனும் தமிழக அரசு உறுதியான ஒரு முடிவை அறிவித்தது. ஷேல் மீத்தேன் தொடர்பாகவும் அப்படியொரு அறிவிப்பைத்தான் தஞ்சை விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

- வி. சுந்தர்ராஜ்,

தொடர்புக்கு: sundarraj.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x