Last Updated : 03 Jul, 2017 09:23 AM

 

Published : 03 Jul 2017 09:23 AM
Last Updated : 03 Jul 2017 09:23 AM

உங்கள் ‘சர்நேம்’ என்ன?

குர்கானில் (இப்போது குருகிராம்) வேலை பார்த்துக்கொண்டிருந்த சமயத்தில், அலுவலக உதவியாளர் என்னிடம் “உங்கள் ‘சர்நேம்’ (surname - சாதிப் பெயர்) என்ன சார்?” என்று கேட்டார். எனக்குச் சட்டென்று பதில் சொல்லத் தெரியவில்லை.

“ஏன் கேட்கிறாய் விக்ரம்?” என்றேன்.

“சும்மாதான்… கூப்பிட வசதியாக இருக்குமே” என்றார், தேநீர்க் கோப்பையை என் மேஜையில் வைத்துக்கொண்டே. விக்ரம் உத்தர பிரதேசத்துக்காரர். தனது சாதிப் பெயருடன் சேர்த்தே அறியப்படுபவர். அவர் அப்படிக் கேட்டதில் ஆச்சரியமும் இல்லை. உண்மையில், அவர் அதைச் சாமர்த்தியமாகத் தெரிந்துகொள்ளும் குதர்க்கம் கொண்டவரும் இல்லை.

கனக்கும் நிழல்

அங்கே அது வெகு சாதாரணமான விஷயம். வட இந்தியக் கிராமங்களில் சாதியின் கண்காணிப்பிலிருந்து அத்தனை எளிதாகத் தப்பித்துவிட முடியாது. நகரங்களுக்கு இடம்பெயர்ந்தாலும் சாமான்களுடன் சாதியையும் சுமந்தே செல்ல வேண்டும். கட்சி வித்தியாசம் இல்லாமல், வட இந்திய அரசியல் தலைவர்களின் சிந்தனையில் சாதியின் ஆதிக்கம் அதிகம் உண்டு. தேசம் முழுமைக்கும் பொதுவான தலைவரான காந்தியை ‘சதுர் பனியா’ என்று சாதிச் சிறைக்குள் அடைத்துப் பேசுவதை அதன் நீட்சியாகவே நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

வெளி நாடுகளில், குறிப்பாக மத்தியக் காலங்களில் ஐரோப்பிய நாடுகளிலும், அதன் தொடர்ச்சியாக அமெரிக்காவிலும் பெயர்க் குழப்பத்தைத் தவிர்க்க குடும்பப் பெயர்கள், கடைசிப் பெயர்கள் (Last Names) பயன்படுத்தப்பட்டன. நீண்டகால சாதிய வரலாறு கொண்ட இந்தியாவில், கடைசிப் பெயர்கள் என்பவை சந்தேகமில்லாமல் சாதிப் பெயர்கள்தான். வட இந்தியாவில், சாதிக் கட்டுப்பாட்டை வலியுறுத்தும் காப் பஞ்சாயத்துகள் இழைக்கும் கொடுமைகளை விமர்சிக்கின்ற யோகேந்திர யாதவ் போன்றோர்கூட, தங்கள் பெயருடன் சாதிப் பெயரைச் சேர்ப்பதைத் தவிர்த்துவிடவில்லை. முற்போக்கான கருத்துகள் கொண்ட தலைவர்களில் அர்விந்த் கேஜ்ரிவால், மம்தா பானர்ஜி என்று சாதிப் பெயருடன் இயங்குபவர்களின் பட்டியல் மிகப் பெரியது. அவ்வளவு தூரம் போவானேன்..

கேரளத்தின் இடதுசாரித் தலைவர்கள்கூட சாதிப் பெயரைச் சேர்த்துக்கொள்வதை இன்னமும் கைவிடவில்லை. பெரியார் படம் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டபோது, படத்தின் பெயர் ‘பெரியார் ராமஸ்வாமி நாயக்கர்’ என்று மாற்றப்பட்ட விசித்திரத்தையெல்லாம் பார்த்திருக்கிறோம். நம் தமிழகத்தில்தான் இந்தப் புரட்சி எனலாம். பல்வேறு விண்ணப்பப் படிவங்களில் முதல் பெயர், இடைப் பெயர், கடைசிப் பெயர் என்று இருக்கும் கட்டங்களில் நம்மவர்களில் பெரும்பாலானோர் தங்கள் பெயரை இரண்டு பகுதிகளாகவும், சிலர் தங்கள் தந்தை பெயருடன் சேர்த்து எழுதுவதும்தான் வழக்கம்.

தகரும் நம்பிக்கைகள்

நான் விக்ரமிடம் “எங்கள் மாநிலத்தில் ஒருவர் தன் பெயருடன் சாதிப் பெயரைப் போட்டுக்கொள்ளும் பழக்கம் இல்லை. பெயர் என்றால் வெறும் பெயர்தான்!” என்றேன் பெருமிதத்துடன். சாதிப் பெயரைத் தவிர்ப்பதை யல்பான விஷயமாக ஆக்கிவிட்டது திராவிட இயக்கத்தின் மிகப் பெரிய வெற்றிகளில் ஒன்று என்று அவரிடம் சொன்னேன். பெரியார் பற்றிச் சில வார்த்தைகள் சொன்னேன். உத்தர பிரதேசத்துக் கிராமத்திலிருந்து வந்தவருக்கு அதெல்லாம் ஆச்சரியமாகத்தான் இருந்திருக்கும். அதற்குப் பிறகு, அங்கு வேலை செய்த இரண்டு வருடங்களுக்கு அவர் சாதிப் பெயர் பற்றிப் பேசவேயில்லை.

இந்தியா முழுமைக்குமே சாதி அழிபடாத ஒரு அரக்கனாகத் தடித்து நின்றாலும், ஒப்பீட்டளவில் தமிழகத்தில் அதன் தாக்கம் குறைவு என்ற பெருமிதம் எனக்கு உண்டு. நாளுக்கு நாள் அதை மேலும் அடித்து நொறுக்கும் பாதையில் நாம் செல்ல வேண்டும் என்ற கனவும் செல்ல முடியும் என்ற நம்பிக்கையும் நிறைய உண்டு. ஆனால், தமிழகம் திரும்பிய பிறகான கடந்த சில ஆண்டுகளாக அந்த நம்பிக்கையில் நாளுக்கு நாள் விரிசல் விழுந்தபடியே இருக்கிறது. விரிசல்கள் அதிகரிக்கின்றனவே அன்றி குறைந்தபாடில்லை.

இங்கே விக்ரம் கேட்டதுபோல், “உங்கள் சாதிப் பெயர் என்ன?” என்று யாரும் வெளிப்படையாகக் கேட்பதில்லை. ஆனால், அன்றாட உரையாடலின் ஏதோ ஒரு புள்ளியில் சாதி குறித்த விசாரணையை எதிர்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. இருக்கும். “எந்த ஊருப்பா?” என்ற கேள்வியில் தொடங்கி “நம்மவுகளா?” என்பது வரை கிராமப்புறங்களில் வெளிப்படும் சாதி விசாரணைக்கான உத்திகள் உண்டு. நகர்ப்புறத்தில் அது மேலும் பல வடிவங்களை எடுத்தபடி இருக்கிறது.

சமூக ஊடகங்கள் சாதி தொடர்பான நம்முடைய கூச்சங்களை, சாதிய உணர்வு தொடர்பாக இதுநாள் வரை இருந்த கொஞ்சநஞ்ச குற்றவுணர்வைத் துடைத்தெறிய வழிவகுத்திருக்கின்றன. சாதியாக நம்மை உணர வைக்காத ஒரு நாளை எதிர்பார்க்க வேண்டியிருக்கிறது. பள்ளி மாணவர்களில் பலர் இப்போதெல்லாம், இடஒதுக்கீட்டை இழிவாக உணரும் - பேசும் சூழலுக்கு ஆட்பட்டிருப்பது சாதிய மேலாதிக்கம் எப்படியெல்லாம் நுட்பமாகத் தன் விஷத்தை இறக்குகிறது என்பதற்கு ஓர் உதாரணம்.

இளமையில் சாதி

தங்கள் பெயருக்குப் பின்னால் சாதியைச் சேர்த்துக்கொள்ளும் பழக்கத்தை கிராமங்களில் பிளெக்ஸ் பேனர்களில் சாதாரணமாகப் பார்க்க முடிகிறது. குறிப்பாக, தென் மாவட்டங்களில். திருமணம், காதுகுத்து போன்ற விசேஷ நிகழ்ச்சிகளுக்கு வாழ்த்து சொல்லும் பதின்ம வயதுச் சிறுவர்கள்கூட இதில் தீவிரமாக இறங்கியிருக்கிறார்கள். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தின்போது, ‘இன்ன சமூகத்தினரின் வீர விளையாட்டாம் ஜல்லிக்கட்டு’ எனும் போஸ்டர்களைப் பார்க்க முடிந்தது. ஃபேஸ்புக்கில் ‘இன்ன பாய்ஸ் ஒன்லி பார்ட் டூ’, ‘இன்ன சாதில நாங்க’, ‘இன்ன வம்சம்டா’ என்றெல்லாம் பெயர்களில், சாதிக் குழுக்களில் இயங்குபவர்களின் சராசரி வயதைக் கணக்கிட்டால் நிச்சயம் அது 20-ஐத் தாண்டாது. பெயருக்கு முன்னாலோ பின்னாலோ சாதிப் பெயர்களைச் சேர்த்துக்கொண்டு, புரொபைல் படத்தில் மீசையை முறுக்கிக்கொண்டு நிற்பவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள்தான். பள்ளிகளில் கைகளில் சாதிப் பட்டை அணியும் பழக்கம் வேரூன்றிவிட்டது. இந்த விஷயங்களெல்லாம் முன்பு இலைமறை காயாக நடந்தன. இன்றைக்குப் பகிரங்கமாக, எந்தக் குற்றவுணர்வும் இல்லாமல் இந்தப் போக்குகள் முன்னெடுக்கப்படுகின்றன, அதுவும் இளைய சமுதாயத்திடம் என்பதுதான் மிகுந்த கவலையளிக்கும் விஷயம். சாதிக் கட்சித் தலைவர்கள்கூட தங்கள் சாதிப் பெயரைக் குறிப்பிடாத அளவுக்கு ஒரு போக்கை உருவாக்கிய திராவிட இயக்க அரசியல் மண்ணில்தான் இது நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

தேர்தல் அரசியலில் சாதிரீதியான அணிதிரட்டல்கள், சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டின் காரணமாகத் தகுதியற்றவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது எனும் மனநிலை என்று பல்வேறு மட்டங்களில் சாதியின் தாக்கம் இதற்கு முன்னர் இருந்தது உண்மைதான். ஆனால், இன்றைக்கு இருக்கும் அளவுக்கு சாதிய உணர்வும், சாதிப் பெருமிதமும் இதற்கு முன்னர் இருந்ததில்லை. சாதிப் படிநிலையை ஊக்குவிக்கும் மத அடிப்படைவாதம் அரசியல்ரீதியாகவும் சமூக ரீதியாகவும் முன்னெடுக்கப்படும் இந்தக் காலகட்டத்தில், சாதிய உணர்வு அதிகரிப்பதில் வியப்பில்லை. ஆனால், அதன் ஆபத்துகளைத் தமிழகம் உணர்ந்துகொள்ளாமல் இருப்பதுதான் ஆயாசம் தருகிறது. இனி ஒரு முறை விக்ரம் போல ஒரு வட நாட்டுக்காரர், பட்டப் பெயர் தொடர்பாக என்னிடம் கேட்டால் முன்னைப் போல், பெருமிதத்துடன் பேச முடியாது என்பது மட்டும் நிஜம்!

- வெ.சந்திரமோகன் தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x