Published : 11 Jul 2017 09:07 AM
Last Updated : 11 Jul 2017 09:07 AM

எல்லை தாண்டும் மதவாதம்!

இலங்கையில், 2013 முதல் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவச் சிறுபான்மையினர் மீது தீவிர சிங்கள–புத்த மதக் குழுக்கள் நடத்தும் தாக்குதல்கள் அதிகரித்துவருகின்றன. இறைச்சி உணவுக்கு ஹலால் சான்றிதழ் வழங்குவதற்கு எதிராகப் புத்த மதக் குழு தொடங்கிய பிரச்சாரம் இந்தப் போக்கைத் தொடங்கிவைத்தது. அதைத் தொடர்ந்து மசூதிகள் மீதும், முஸ்லிம்கள் நடத்தும் கடைகள்மீதும் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஓராண்டுக்குள்ளேயே, தெற்குக் கடற்கரை நகரமான அளுத்கமையில் இனவாத மோதல் சம்பவங்கள் நடந்தன. இதில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்

.அப்போது ஆட்சியில் இருந்த மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு இவ்விஷயத்தில் அமைதியாகவே இருந்தது. இதையடுத்து, இந்தத் தாக்குதலுடன் தொடர்புடைய தீவிர சிங்கள தேசியவாத அமைப்பான ‘போது பால சேனா’ (பி.பி.எஸ்.) என்று அழைக்கப்படும் பெளத்த வலிமைப் படைக்கு ராஜபக்ச அரசு ஆதரவு தருகிறது என்று பலர் கருதினார்கள். 2015 ஜனவரியில் நடந்த தேர்தலில் ராஜபக்ச அரசு தோல்வியடைந்த பிறகு, நிலைமை மாறும் என்று பலர் எதிர்பார்த்தார்கள்.


ஆனால், இந்த ஆண்டு மட்டும், கடந்த ஏப்ரல் மாதம் வரை, மசூதிகள் மீதும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான நிறுவனங்கள் மீது 25-க்கும் மேற்பட்ட தாக்குதல் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இலங்கையில் மத அடிப்படையிலான சகிப்பின்மைக்கு இடம் இல்லை என்று அதிபர் மைத்ரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பகிரங்கமாக அறிக்கை விடுத்தனர். சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் குறித்து விசாரிக்க காவல் துறைக்கு சிறிசேன உத்தரவிட்டார். மறுபுறம், மதரீதியான வெறுப்புக் குற்றங்களுக்கு எதிராகக் கடுமையான சட்டங்கள் கொண்டுவருவதாக விக்கிரமசிங்க சூளுரைத்தார்.

இருப்பினும், பி.பி.எஸ். அமைப்பைச் சேர்ந்த பெளத்தத் துறவியும், வெறுப்பைத் தூண்டும் பேச்சுகளுக்குச் சொந்தக்காரரும், அளுத்கமை கலவரத்தைத் தூண்டியவர் என்று கருதப்படுபவருமான காலகோடா அத்தே ஞான ஸராதேராவின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஒரு மாதமாகத் தலைமறைவாக இருந்ததாகச் சொல்லப்பட்ட அவர், ஜூன் இறுதியில் நீதிமன்றத்தில் சரணடைந்தார். ஆனால், அன்றைக்கே அவருக்குப் பிணை வழங்கப்பட்டது.

இந்தியாவிலும் சரி இலங்கையிலும் சரி, வெறுப்பின் அடிப்படையிலான தாக்குதல்களுக்கு வழிவகுக்கும் சகிப்பின்மைக்கும், இரு நாடுகளிலும் தற்போது ஆட்சியில் இருக்கும் அரசியல் கட்சிகளின் மதரீதியான தேசியத் திட்டங்களுக்கும் தொடர்பில்லாமல் இல்லை. இரு நாட்டு அரசுகளில் அங்கம் வகிக்கும் சக்திகள், வெறுப்பைத் தூண்டும் சித்தாந்தத்தை வெளிப்படுத்திவிட்டு சாமர்த்தியமாகத் தப்பித்துக்கொள்கின்றன. தீவிரப் போக்கு கொண்ட கீழ் நிலைக் குழுக்கள் கொடூரமான வன்முறைச் சம்பவங்களில் நேரடியாகப் பங்கேற்கின்றன.

மதவாத வலைப்பின்னல்

மேலும், இரு நாடுகளிலும் உள்ள மத அடிப்படைவாத வலதுசாரிக் குழுக்கள் பல இயல்பாகவே ஒன்றுக்கொன்று தொடர்பில் இருக்கின்றன. சித்தாந்தங்களில் இருக்கும் ஒற்றுமையைத் தாண்டி, தங்களுக்குள் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வதில் தீவிரமாக இறங்கியிருக்கின்றன.

2013-ல் இலங்கையில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் நடந்தபோது, “இலங்கையில் பி.பி.எஸ். அமைப்பினரால் சுட்டிக்காட்டப்படும் விவகாரம், தீவிரமாகக் கருத்தில் கொள்ளப்பட வேண்டியது” என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்த ராம் மாதவ் ஆர்.எஸ்.எஸ். இதழான ‘சம்வவாதா’வில் எழுதினார். 2014-ல், இந்தப் பிராந்தியத்தில் வளர்ந்துவரும் தீவிர இஸ்லாமிய அச்சுறுத்தலை எதிர்கொள்ள ‘பெளத்த – இந்து’ அமைதிப் பிராந்தியத்தை உருவாக்குவது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் பெரிய அளவில் ஆலோசனை நடத்திவருவதாக காலகோடா அத்தே ஞான ஸராதேரா கூறினார்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த சில முக்கியமான தலைவர்களுடன் மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நடந்துவருவதாக, சமீபத்தில் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழின் செய்தியாளர்களிடம் தெரிவித்த பி.பி.எஸ். அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி திலாந்தே விதானகே, “பாஜகவுடனும் ஆர்.எஸ்.எஸ்.ஸுடனும் நாங்கள் இணைந்து செயல்படுவதற்கான சரியான தருணம் இது” என்று குறிப்பிட்டார். மியான்மரில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்களுடன் தொடர்புடைய பெளத்த போராளிக் குழுவான ‘969’ இயக்கத்துடனும் பி.பி.எஸ். அமைப்பு கூட்டணி அமைத்திருக்கிறது.

2014 நவம்பரில் டெல்லியில் விஷ்வ இந்து பரிஷத் நடத்திய ‘உலக இந்து மாநா’ட்டில் பேசிய விக்னேஸ்வரன், “இலங்கையின் இந்து சமூகம் எதிர்கொண்டுவந்த சிரமங்கள், போருக்குப் பின்னர் முடிவடைந்துவிடவில்லை” என்று குறிப்பிட்டார். வடக்கு மாகாணத்தில் பிற சமூகத்தினரும் போரால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்து மக்களின் பிரச்சினைகளை மட்டும் அவர் முன்னிறுத்தியது பலருக்கு ஆச்சரியம் அளித்தது. 2016 அக்டோபரில் தமிழர்கள் பெரும்பான்மை யினராக வசிக்கும் வடக்கு மாகாணத்தில், இந்துக்கள் சிலர் ‘சிவ சேனை’ எனும் அமைப்பைத் தொடங்கினர். ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ இந்து பரிஷத், மற்றும் பாஜக ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கு முழு ஆதரவு வழங்குவதாக அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் ‘தி இந்து’விடம் தெரிவித்தார். இலங்கைக் காவல் துறையினர் காலகோடா அத்தே ஞான ஸராதேராவைத் தேடிவந்த நிலையில், அவருக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று இந்தியாவைச் சேர்ந்த ‘இந்து மஹாசபா லோக்தந்த்ரீக்’ எனும் கட்சி இந்திய உள்துறை அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதியது. இதுபோன்ற உதிரிக் குழுக்கள் ஒன்றையொன்று எந்த அளவுக்கு பலப்படுத்திக்கொள்கின்றன என்பதையும், எப்போது வேண்டுமானாலும் இணைந்து செயல்படத் தயாராக இருக்கின்றன என்பதையும் கவனிக்க வேண்டும்.

எதிர்ப்பின் ஒற்றுமையின்மை

ஒரு பக்கம், இப்பகுதியில் மதரீதியான வலதுசாரி அமைப்புகள் தங்களுக்குள் வலைப்பின்னலை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் நிலையில், பிற்போக்கான இந்த சக்திகளை எதிர்கொள்ள வேண்டிய சக்திகள் பிரிந்தே கிடக்கின்றன. தெற்காசியாவின் அறிவுஜீவிகள், செயற்பாட்டாளர்களைப் பொறுத்தவரை அவர்களது செயல்பாடுகள் கருத்தரங்குகள், அவ்வப்போது சில போராட்டங்கள் எனும் வட்டத்துக்குள்ளேயே முடங்கிவிட்டதாகத் தெரிகிறது. ஈழத் தமிழர்கள் மீதான அனுதாபக் குரல்கள் தமிழ்நாட்டிலிருந்து ஒலிப்பதைத் தாண்டி, கடந்த பத்தாண்டுகளில் இந்தியா, இலங்கைக்கு இடையே ஒருமித்த குரல்கள் அரிதாகத்தான் ஒலிக்கின்றன. தங்கள் சொந்தப் பிரச்சினைகளை எதிர்கொள்வதிலேயே மூழ்கியிருக்கும் இடதுசாரிகள், சுதந்திர சிவில் சமூகத்தினர், அறிவுஜீவிகள் போன்றோர் அண்டை நாட்டில் நடக்கும் வன்முறைச் சம்பவங்கள், அடக்குமுறைகளுக்கு எதிராக எப்போதாவதுதான் பேசுகிறார்கள்.

பிராந்தியம் முழுவதும் பிரிவினைவாத, வெறுப்பூட்டும் அரசியல் பரவிவரும் சூழல் இது. முற்போக்குக் குரல்கள், தங்களுக்குள் இருக்கும் வேற்றுமைகளைக் களைந்து ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம். இத்தகைய விரிவான ஒரு இயக்கம், எல்லைகளைக் கடந்து செயல்படுவது மட்டுமல்லாமல், பெரும்பான்மை மக்களிடம் பிற்போக்கு சக்திகள் தங்கள் கொள்கைகளைப் புகுத்திவரும் நிலையில் அம்மக்களின் முக்கியப் பிரச்சினைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். வெறுப்பரசியலை எதிர்கொள்ளும் அதே நேரத்தில், கோடிக் கணக்கான மக்கள் எதிர்கொண்டிருக்கும் பொருளாதாரப் பாதுகாப்பின்மையையைப் பற்றியும் அந்த இயக்கம் பேச வேண்டும். இல்லையென்றால், மக்கள் பிரச்சினைகள் தொடர்பான விவாதங்களைக் கைப்பற்றுவதற்காகக் கண்கொத்திப் பாம்பாகக் காத்திருக்கும் வலதுசாரி சக்திகள் அதைப் பயன்படுத்திக்கொள்ளும். எதிர்ப்பை உரக்கத் தெரிவிப்பது மட்டுமல்ல; விரிவான, ஆழமான, உறுதியான கருத்துகளின் அடிப்படையிலான எதிர்ப்புதான் மிகவும் முக்கியம்!

- © ‘தி இந்து’ ஆங்கிலம்

தமிழில் சுருக்கமாக: வெ.சந்திரமோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x