Last Updated : 05 Jul, 2017 02:29 PM

 

Published : 05 Jul 2017 02:29 PM
Last Updated : 05 Jul 2017 02:29 PM

களைகட்டியது நெய்வேலி புத்தகத் திருவிழா!

கல்வி, நிதி, சுகாதாரம், தோட்டக்கலை, மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுடன் தனி அரசாங்கமாகவே இயங்குகிற நெய்வேலி நகரியத்துக்குள், அந்த நகருக்கே உரிய நேர்த்தியோடு நடைபெற்றுவருகிறது நெய்வேலி புத்தகக் காட்சி. நகரியத்துக்குள் நடந்தாலும், கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் என்று பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களுக்கான அறிவுத்திருவிழா இது.

வண்ணத்துப்பூச்சி பூங்காவுக்குள் நுழைந்ததைப் போல, பசுமையும், பல வண்ணப் பூச்சிகளும் நிறைந்த வளாகம் அது. புராதன காலக் கோட்டைச்சுவர், நடுவில் திருவாரூர் தேர், தேருக்குள் திருவள்ளுவர் என்று முகப்புத் தோற்றமே பிரமிக்க வைக்கிறது. “திருவாரூர் தேரில் நான்கு குதிரைகள் இருக்கும் இங்கே ஒன்று குறைகிறதே?” என்று கேட்டால், “நான்கு குதிரைகள் என்பது நான்கு வேதங்களைக் குறிப்பது, இந்த மூன்று குதிரையோ முப்பால், மூன்று தமிழுக்கான குறியீடு” என்று புன்னகைக்கிறார் ஒருங்கிணைப்பாளர் எம்.கார்த்திகேயன்.

காற்றோட்டத்திலும் இடவசதியிலும் நெய்வேலி புத்தக அரங்குகள் மற்ற ஊர் புத்தகக் காட்சிகளுக்கு முன்னோடி. இந்த ஆண்டு அதை மேலும் மேம்படுத்தியிருக்கிறார்கள். நேரே சென்று திடீரென கொண்டை ஊசி வளைவில் திரும்பி வருகிற பழைய முறையை மாற்றி, அகலமான ‘ப’ வடிவத்துக்கு மாறியிருக்கின்றன அரங்குகள்.

வட தமிழ்நாட்டின் வாசிப்புக் கலாச்சாரத்துக்கு வளம் சேர்க்கும் இவ்விழா, இந்த ஆண்டு 192 அரங்குகளுடன் புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது. ஈரோடு புத்தகக் காட்சிக்குச் சவால் விடுக்குமளவுக்குப் பள்ளிக் குழந்தைகளின் கூட்டம் அலைமோதுகிறது. கடலூர் மட்டுமின்றி சுற்றியுள்ள ஐந்து மாவட்டங்களில் உள்ள பள்ளிகளை நேரில் சென்று அழைத்ததன் பலன் இது. ஐந்து நாட்களுக்குள் 50 ஆயிரத்துக்கும் அதிகமான பள்ளிக் குழந்தைகள் வந்து போயிருக்கிறார்கள். சுவரொட்டிகள், பதாகைகள் போன்றவற்றோடு மட்டுமல்லாமல் வேனில் சென்று ஒலிபெருக்கி மூலம் அறிவித்ததாலும் பொதுமக்கள் கூட்டத்துக்குக் குறைவில்லை. குளிரூட்டப்பட்ட உள்ளரங்கில் நடைபெறும் சுவாரசியமான நிகழ்ச்சிகளும் மக்களைப் புத்தகக் காட்சியின் பக்கம் ஈர்க்கின்றன.

நெய்வேலியின் 11-வது வட்டத்தில் உள்ள லிக்னைட் ஹாலில் நடைபெறும் இந்தப் புத்தகக் காட்சியைத் தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை பார்வையிடலாம். சனி, ஞாயிறு போன்ற வார விடுமுறை நாட்களில் காலை 10 மணிக்கே கண்காட்சி தொடங்கிவிடுகிறது. அனைத்துப் புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி உண்டு. சில பதிப்பகத்தார் 50% வரையில் தள்ளுபடி தருகின்றனர்.

ஜூன் 30ம்-தேதி தொடங்கிய இந்தக் கண்காட்சி, வருகிற 9-ம் தேதியுடன் நிறைவடைகிறது. “தமிழக காவல்துறைத் தலைவராக இருந்த ராஜேந்திரன் ஐபிஎஸ், பஞ்சாப கேசவன் ஐபிஎஸ் போன்றோர் நெய்வேலியின் தலைமைக் கண்காணிப்பு அதிகாரிகளாக இருந்தபோது, உதித்த திட்டம் இது. பரந்துவிரிந்த இந்த நகரியத்துக்குள் கூண்டுக்கிளியைப் போல வாழ்கிற தொழிலாளர்களுக்கும், நிலத்தை நிலக்கரி நிறுவனத்துக்குத் தந்துவிட்டு, இன்னமும் வெளியுலகம் தெரியாத வாழ்க்கை நடத்துவோருக்காகவும் இந்தப் புத்தகக் காட்சியைத் தொடங்கினார்கள்.

1998-ல் அதாவது, கார்ப்பரேட் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டம் கட்டாயமாக்கப்படும் முன்பே, இந்தப் புத்தகக் காட்சியை ஒரு சமுதாயத் திட்டமாகச் செயல்படுத்திவருகிறோம். ஓராண்டுகூட இடைநிறுத்தலின்றி, உச்சத்தை எட்டியிருக்கும் புத்தகக் காட்சிக்கு இது 20-வது ஆண்டு.

இந்த ஆண்டு மட்டும் புத்தகக் காட்சிக்கு 42 லட்ச ரூபாய் செலவிட்டிருக்கிறோம். இம்முறை அனைத்து அரங்குகளையும் நிரந்தர அரங்குகளாக மாற்றிவிட்டதால், வரும் ஆண்டுகளில் அரங்குக்கான செலவு குறையும். அந்த நிதியைக் கொண்டு வேறு விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்தலாம். அடுத்த ஆண்டு முதல் ஈரோடு புத்தகக் காட்சியில் வழங்கப்படுவது போல அனைத்து மாணவர்களுக்கும் உண்டியல் வழங்கும் திட்டமும் இருக்கிறது” என்றார் கண்காட்சியின் செயலர் என்.முத்து.

கல்யாண விருந்து!

தமிழகத்தில் புத்தகக்காட்சி சிற்றுண்டிச் சாலை என்றாலே வாசகர்கள் பதறிச்சிதறுவது வாடிக்கை. மிளகாய் பஜ்ஜி, டெல்லி அப்பளம், காலிபிளவர் பக்கோடா, சில்லி பரோட்டா வகையறாக்கள், கொள்ளை விலையில் விற்கப்படுவதே அதற்குக் காரணம். நெய்வேலி உணவுக்கூடமோ, கல்யாண விருந்து நடக்குமிடம் போல இருக்கிறது. மொத்தம் 15 கடைகள். இட்லி, தோசையில் 4 வகை, ஊத்தாப்பத்தில் இரு வகை, இடியாப்பம், அடை, தக்காளி சாதம், சுண்டல், பட்டானி, பயறு வகைகள், மெதுவடை, கீரை வடை, மசால் வடை, ரச வடை, தயிர் வடை என்று 30 வகை தென்னிந்திய உணவுகள் கிடைக்கின்றன.

பரோட்டா, சப்பாத்தி,நான், சோலா பூரி, பானி பூரி என்று வட இந்திய உணவுகளின் பட்டியலும் நீள்கிறது. முக்கியமான விஷயம், மலிவு விலை. டீ, காபி, பாதம்பால் வரிசையில மதுரை ஸ்பெஷல் ஜிகர்தண்டாவும் கிடைக்கிறது. அதனால்தானோ என்னவோ, புத்தக வியாபாரத்தைவிட இங்கே சாப்பாடு சக்கை போடு போடுகிறது!



மாணவர்களுக்கு ராஜ உபசாரம்!

சிறகு முளைத்த தேவதைகளைப் போல இரு கைகளிலும் புத்தகங்களை அள்ளிக்கொண்டு ஓடுகிறார்கள் குழந்தைகள். அவர்களை வரவேற்பதற்கென்றே ஒரு குழு காத்திருக்கிறது. நுழைவுக் கட்டணமின்றி அவர்களை அழைத்துச் செல்லும் குழுவினர், ஒவ்வொரு குழந்தைக்கும் பிஸ்கெட் பாக்கெட், குளிர்பானம், தண்ணீர் போத்தல் கொடுத்து அரங்குகளுக்கு வழிநடத்துகிறர்கள். அரங்குகளுக்கு மத்தியில் அமைந்திருக்கிறது குழந்தைகளுக்கான குதூகலத் திடல். பாம்பு ரயில், ரங்க ராட்டினம், கம் அன்ட் சீசர், டோரா டோரா என்று அவர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான். அதன் பலனாக, இந்த ஆண்டு விற்பனையில் முதலிடத்தில் இருக்கிறது குழந்தைகளுக்கான புத்தகங்கள்!



‘தி இந்து’ அரங்கில் என்ன சிறப்பு?

புத்தகக் காட்சியில் ‘தி இந்து’ சார்பிலும் அரங்கு (எண்: 94) அமைக்கப்பட்டுள்ளது. ‘ஸ்ரீ ராமானுஜர் 1000’, ‘எம்ஜிஆர் 100’, ‘ஆங்கிலம் அறிவோமே-2’, ‘இந்தியாவும் உலகமும்’, ‘சித்திரை மலர்’, ‘ஸ்ரீவாரி பிரமோத்சவம்’, ‘குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணா’ போன்ற நூல்கள் 60% தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. ‘மகாத்மா காந்தி கடைசி 200 நாட்கள்’ ஆங்கிலப் புத்தகம் 50% தள்ளுபடியிலும், ‘இந்தியா 500 டெஸ்ட்’, ‘காற்றில் கலந்த இசை’ போன்றவை 40% தள்ளுபடியிலும் விற்கப்படுகின்றன. மேலும் 38 தமிழ், ஆங்கிலத் தலைப்புகளிலான புத்தகங்களை 20 முதல் 35% கழிவில் வாங்கலாம்.



அடடே அண்ணாமலை பல்கலை!

ஒவ்வொரு ஊரிலும் நடைபெறுகிற புத்தகக் காட்சிகளில் அந்தந்த வட்டாரப் புத்தகங்கள் அதிகம் கிடைப்பதை வாசகர்கள் அதிகமாக விரும்புகிறார்கள். அந்த வகையில் புதுச்சேரியில் உள்ளூர் பதிப்பகங்களுடன், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகமும் அரங்கு அமைத்திருப்பது பாராட்டுக்குரியது. ஆனால், திருவருட்பா மூலமும் உரையும் (5 தொகுதி), கம்பராமாயணம் (16 தொகுதி), மொழியியல் சார்ந்த நூல்கள், மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் என்று வெறுமனே 25 நூல்களை மட்டுமே காட்சிப்படுத்தியிருந்தனர் பல்கலைக்கழகத்தினர். அங்கு வழங்கப்பட்ட விலைப்பட்டியலில் இடம்பெற்றுள்ள எஞ்சிய புத்தகங்கள் என்னவாயின, செம்மொழி மாநாட்டிற்குப் பிறகு ஒரு நூல் கூட புதிதாக அச்சிடப்படவில்லையா போன்ற கேள்விகள் எழுகின்றன. பல்கலைக்கழகங்களில் பதிப்புத்துறை புத்துயிர் பெற வேண்டிய அவசியத்தை இந்த அரங்கம் உணர்த்துகிறது.



இதையும் கொஞ்சம் கவனியுங்கள்!

நெய்வேலி நகரியத்தின் எல்லாச் சாலைகளும் ஒரே மாதிரி இருக்கின்றன. எனவே, புத்தகக் காட்சிக்கு வரும் வெளியூர் வாசகர்களின் வசதிக்காக வழிகாட்டிப் பலகைகள் வைக்கலாம் என்று கடந்த ஆண்டு யோசனை கூறியிருந்தோம். அந்தக் குறை இந்த ஆண்டும் தொடர்கிறது. சில அரங்குகளும், பல வாசகர்களும் இன்னமும் பணமில்லா பரிவர்த்தனைக்கு மாறவில்லை. எனவே, நடமாடும் ஏடிஎம் ஒன்றை புத்தகக்காட்சி வளாகத்தில் நிறுத்தி வைக்கலாம். புத்தகக் காட்சிக்கு நெய்வேலி ஆர்ச் கேட், மந்தாரக்குப்பம் போன்ற பகுதிகளிலிருந்து முன்பு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. மீண்டும் அந்த வசதியை ஏற்படுத்தினால், வாசகர்கள் ஆட்டோவுக்குச் செலவிடும் தேவை குறையும்.



நீட் மோகம்!

புத்தகக் காட்சிகளில் ஒவ்வொரு ஆண்டும் சில புத்தகங்களை மக்கள் கும்பல் மனோபாவத்துடன் வாங்கிச் செல்வார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக அப்துல் கலாம் என்றால், இந்த ஆண்டு நீட் உள்ளிட்ட மத்திய நுழைவுத் தேர்வு தொடர்பான புத்தகங்களே அதிகமான மாணவர்களின் கைகளையும் கண்களையும் ஆக்கிரமித்திருந்தன. விலையும் அதிகம், சுமையும் அதிகம். பாவம் மாணவர்கள்!



நெய்வேலி நூலகம்

புத்தகக் காட்சிக்கு வரும் அத்தனை பேரும் மறக்காமல் போக வேண்டிய இடம், எதிரே உள்ள நெய்வேலி நூலகம். ஒரு நூலகத்தை எப்படி நடத்த வேண்டும், எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று இலக்கிய ஆர்வலர்களுக்கும், வாசகர்களுக்கும் கற்றுத்தருகிற பல்கலைக்கழகம் என்று இதைச் சொல்லலாம். தீபாவளி, பொங்கல் உள்பட வருடத்தின் 365 நாட்களும் விடுமுறையின்றி, உணவு இடைவேளைகூட இல்லாமல் செயல்படுகிற தமிழகத்தின் ஒரே நூலகம் இது. காலை 7 மணி முதல் இரவு 9 மணி வாசகர்கள் பயன்படுத்தலாம் என்றாலும், காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இரண்டு ஷிப்ட்களாகப் பணியாளர்கள் வேலை செய்கிறார்கள். ஆகவே, வாசகர்கள் சேட்டை செய்துவிட்டுப் போனாலும், மறுநாளும் புத்தகங்கள் சரியான இடத்தில் இருக்கின்றன. தேடிய புத்தகம் இல்லை என்றால், ஒரு நோட்டில் எழுதி வைத்தால் போதும் புதிதாக வாங்கி வைத்துவிடுகிறார்கள் நூலக அதிகாரிகள். இந்தப் புத்தகக் காட்சியில் மட்டும் இவர்கள் வாங்கிய புத்தகத்தின் மதிப்பு 3.5 லட்ச ரூபாய்!

ஒரு விற்பனையாளர்- ஒரு வாசகர்

‘கௌதம்’ பதிப்பகம் சந்திரசேகரன்:

பதிப்பகத்தார், விற்பனையாளர்களுக்குப் புத்தகக் காட்சி ஏற்பாட்டாளர்களே 10 நாட்களுக்கும் தங்கும் அறையும் உணவும் தந்துவிடுகிறார்கள். மதிய, இரவு உணவுகளுக்கான டோக்கன்கள் அரங்கைத் தேடிவந்துவிடுகின்றன. நிரந்தர அரங்கு என்பதால், பாதுகாப்பான உணர்வு ஏற்படுகிறது. 24 இடங்களில் கண்காணிப்பு கேமிரா வைத்திருக்கிறார்கள். வெளியேறும் இடத்தில் பில்லையும் புத்தகத்தையும் சரிபார்ப்பதற்கு ஒரு குழு இருக்கிறது. விற்பனையும் கடந்த ஆண்டைவிட நன்றாக இருக்கிறது.

வாசகர் வேலப்பன், சிதம்பரம்:

எங்களுக்குக் கிடைத்த வரம் இந்தப் புத்தகக் காட்சி. இங்கே இல்லாத புத்தகமே இல்லை என்று சொல்லத் தோன்றுகிறது. நன்கொடையாளர்களை நம்பி புத்தகக் காட்சி நடத்துவோரே கட்டணம் வசூலிப்பவதில்லை. ஆனால், இவ்வளவு பணம் செலவிட்டுப் புத்தகக் காட்சி நடத்துவோர், நுழைவுக்கட்டணமாக ரூ. 5 வசூலிப்பது ஏனென்று தெரியவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x