Published : 11 Jul 2017 09:14 AM
Last Updated : 11 Jul 2017 09:14 AM

துப்பு துலக்கிய இந்திய வானியல் அறிஞர்

திடீரென்று வானில் கோடி கோடி சூரியன்களின் பிரகாசத்தில் ஒளிர்ந்து மூன்று நாட்களில் மங்கி மறைந்து போன விண்பொருள் ஒன்றின் உண்மை முகத்தைக் கண்டுபிடித்ததன் மூலம், வானியல் மர்மம் ஒன்றுக்கும் விடை கண்டுபிடித்து அசத்தியிருக்கிறார்கள் மும்பை ஐஐடியின் வருண் பாலேராவும் அவரது சகாக்களும்.

இரண்டு ராட்சசக் கருந்துளைகள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து இரண்டும் ஒன்றாகிய நிகழ்வை இந்த ஆண்டின் ஜனவரி 4-ம் தேதி அன்று லிகோ எனும் ஈர்ப்பு அலைகள் இனம்காணும் சாதனம் கண்டுபிடித்தது. ஜி.டபிள்யு. 170104 என்று அழைக்கப்பட்ட இந்த நிகழ்வின்போது சுமார் 300 கோடி ஒளியாண்டு கள் தொலைவில் சூரியனைப் போல 19.4 மடங்கு நிறை கொண்ட ஒரு கருந்துளையும் 31.2 மடங்கு நிறை கொண்ட வேறொரு கருந்துளையும் மோதிப் பிணைந்து சூரியனைப் போல் 48.7 மடங்கு நிறை கொண்ட புதிய கருந்துளை பிறந்தது. இதில் எஞ்சிய இரண்டு மடங்கு சூரிய நிறை, ஆற்றலாக மாறிப் பெரும் சக்தி வாய்ந்த ஈர்ப்பு அலைகளை ஏற்படுத்தியது.

இந்தக் கருந்துளைகள் இரண்டும் பிணைந்து புதிய ராட்சசக் கருந்துளை உருவான அதே வான் இடத்திலிருந்து வானில் கோடி கோடி சூரியனின் பிரகாசத்தில் திடீர் என ஒரு விண்பொருள் ஒளிர்ந்த அதிசய நிகழ்வை ஹவாய் தீவுகளில் இருக்கும் அட்லஸ் எனும் வானியல் ஆய்வு குழுமம் ஜி.டபிள்யு. 170104 நிகழ்ந்த பின்னர் இருபது மணி நேரத்துக்குப் பின் இனம் கண்டது. மூன்று நாட்கள் வரை பிரகாசமாக ஜொலித்த அட்லஸ் 17 ஏ.ஈ.யூ. எனும் பெயரிடப்பட்ட இந்த விண்பொருள் பின்னர் மெல்லமெல்ல மங்கி மறைந்தது. ஒளியைத் தவிர காமா கதிர்கள் உள்ளிட்ட பல கதிர்களையும் வெளியிட்டது இந்த விண்பொருள்.

மூன்றாவது முறையாக...

இரண்டு கருந்துளைகள் இணைந்து புதிய ராட்சசக் கருந்துளை உருவாகும் நிகழ்வு இனம் காணப்படுவது இது மூன்றாவது தடவை. ஆயினும் இதுவரை நேரடியாக இந்த நிகழ்வை யாரும் கண்டதில்லை. அவை வெளிப்படுத்தும் ஈர்ப்பு அலைகளை மட்டுமே நம்மால் இனம்காண முடிந்துள்ளது. உள்ளபடியே அட்லஸ் 17 ஏ.ஈ.யூ-தான் ஜி.டபிள்யு. 170104 என்றால் இதுவே இரண்டு கருந்துளைகள் பிணைந்து உருவான நிகழ்வைக் கண்ட முதல் நிகழ்வாக அமையும். அட்லஸ் வானியல் குழுமம், தாம் கண்டுபிடித்த அட்லஸ் 17 ஏ.ஈ.யூ. விண்பொருள்தான் உள்ளபடியே ஜி.டபிள்யு. 170104 என்று உறுதிபடக் கூறியிருக்கிறார்கள். தொலைக்காட்சிப் பெட்டியை அணைத்த பின்னரும் சிறிது நேரம் ஒளிர்ந்து மறைவதுபோல இரண்டு கருந்துளைகள் பிணைந்தபோது ஏற்பட்ட பின்ஒளிர்வு தான் இது என அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

மலைப்பான இந்தச் செய்தி மும்பையில் இருந்த வருண் பாலேராவின் காதை எட்டியது. அவருக்கு மூளையில் பொறி பறந்தது. “இதே நிகழ்வை வானில் வட்டமிடும் இந்திய வானியல் செயற்கைக்கோளான அஸ்ட்ரோசாட் இனம்கண்டிருக்க வேண்டுமே! உள்ளபடியே, உலகில் உள்ள மிகச் சிறந்த காமா கதிர் உணர்மானி இந்த விண்கலத்தில்தானே இருக்கிறது" என்ற எண்ண ஓட்டம் அவருக்கு ஏற்பட்டது.

தனது மாணவர் சுஜயை உடனே தொடர்பு கொண்டார். அஸ்ட்ரோசாட் விண்வெளியின் தொலைநோக்கியில் இருந்த சி.இஸட்.டி.ஐ. எனும் காமா கதிர் தொலைநோக்கி திரட்டிய தகவல்களையெல்லாம் தேடியெடுத்து அதில் இந்த நிகழ்வு குறித்த பதிவு எதுவும் இருக்கிறதா என்று தேடிப் பார்க்கும்படி சுஜெயிடம் வருண் கேட்டுக்கொண்டார். இதற்கிடையில் அவரது மாணவி விதுஷி, வானில் அதே திசையிலிருந்து காமா கதிர்களைக் கூடுதலாக வெளியிட்ட ஜி.ஆர்.பி 170105ஏ எனும் சம்பவத்தை இனம்கண்டு தெரிவித்தார்.

கருந்துளையின் ‘வீல்... வீல்...’

சூரியனைப் போல இருபது மடங்குக்கும் மேற்பட்ட நிறை கொண்ட விண்மீன்கள் அவற்றின் இறுதிக் கட்டத்தில் வெடித்துக் கருந்துளையாக மாறும். அவ்வாறு மாறும்போது, அணையும் விளக்கு சற்று நேரம் பிரகாசமாக ஒளிர்வதுபோல, கோடி கோடி விண்மீன்களின் பிரகாசத்தோடு ஜொலிக்கும். பிறக்கும் குழந்தை ‘வீல்... வீல்...’ என்று கத்துவதிலிருந்து குழந்தை பிறந்ததை அறிந்துகொள்ளலாம் அல்லவா! அதுபோல, புதிதாகக் கருந்துளை பிறக்கும்போது குறிப்பிட்ட பாங்கில் காமா கதிர்கள் வெளிப்படும்.

நொடியின் பகுதி அளவில் ஏற்படும் கதிர்வீச்சு மாற்றங்களைக்கூட இனம்காணும் திறன் படைத்த அஸ்ட்ரோசாட் காமா கதிர் தொலைநோக்கி அந்த நிகழ்வு கருந்துளை பிறக்கும் நிகழ்வா இல்லையா என்று சரியாக இனம்கண்டு கூறும் திறன் கொண்டது. அஸ்ட்ரோசாட் தரவுகளை வைத்துப் பார்த்தபோது ஜி.ஆர்.பி 170105ஏ என்பது புதிய கருந்துளைப் பிறப்பின் வெளிப்பாடே என்று தெளிவாகப் புலனாகியது.

காமா கதிர்வீச்சுகளைப் பதிவு செய்து வைத்திருந்த அஸ்ட்ரோசாட் தரவைத் துருவித் துருவி ஆராய்ந்தபோது வருணுக்குப் புதிய தெளிவு பிறந்தது. கருந்துளை இணைந்த நிகழ்வான ஜி.டபிள்யு. 170104-க்கு இருபது மணி நேரத்துக்குப் பின்னர்தான், 2017 ஜனவரி 5 அன்று, வானில் அதே திசையில் ஜி.ஆர்.பி. 170105 ஏ தோன்றியது.

எனவே, ஜி.டபிள்யு. 170104-ம் ஜி.ஆர்.பி. 170105 ஏ-வும் ஒரே நிகழ்வின் தொடர்ச்சியாக இருக்க முடியாது. உள்ளபடியே ஏதோ விண் மீன் மடிந்துபோய் அதன் சாம்பலிலிருந்து ஜி.ஆர்.பி. 170105ஏ என்ற புதிய கருந்துளை பிறந்துள்ளது; தற்செயலாக இந்த நிகழ்வு ஜி.டபிள்யு. 170104 ஏற்பட்ட அதே திசையில் சற்றேறக்குறைய அதே சமயத்தில் நிகழ்ந்துவிட இரண்டையும் ஒன்று என குழப்பிக்கொண்டுவிட்டோம் என்கிறார் வருண்.

கொலை செய்தவன் வில்லன்; ஆனால் தற்செயலாக அறைக்கு உள்ளே வந்த நாயகன் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தியைக் கையில் எடுக்க அதே நேரத்தில் தற்செயலாக போலீஸ் வர, நாயகன்மீது கொலையாளி என்ற பழி விழுந்துவிடுவதுபோல இரண்டு கருந்துளைகள் இணைந்த ஜி.டபிள்யு 170104 என்ற நிகழ்வு நடந்த அதே திசையில் ஆச்சரியமாக, கோடி கோடி விண்மீன்களின் பிரகாசத்தோடு ஜொலித்த ஜி.ஆர்.பி. 170105ஏ கருந்துளைப் பிறப்பு நடைபெற, இரண்டையும் போட்டு ஹவாய் வானியலாளர்கள் குழப்பிக்கொண்டுவிட்டனர் என நிறுவி விண்வெளி புதிர் ஒன்றை விடுவித்துள்ளார் வருண்.

- த.வி. வெங்கடேஸ்வரன்,

மத்திய அரசின் அறிவியல்

தொழில்நுட்ப அமைச்சகத்தின்

‘விஞ்ஞான் பிரசார்’ என்ற

தன்னாட்சி அமைப்பில் முதுநிலை விஞ்ஞானி;

தொடர்புக்கு: tvv123@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x