Last Updated : 20 Jul, 2017 09:53 AM

 

Published : 20 Jul 2017 09:53 AM
Last Updated : 20 Jul 2017 09:53 AM

ரொக்கப் பயன்பாடு பாவச் செயலா?

ரொக்கம் கொடுத்துப் பொருட்களை வாங்குவதற்கு எதிராக பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) இப்போது பிரச்சார யுத்தத்தைத் தொடங்கியிருக்கிறது. பணமதிப்பு நீக்கத்தால்தான் கடன் அட்டை, பண அட்டை உள்ளிட்ட டிஜிட்டல் பரிமாற்றங்கள் அதிகரித்துள்ளன, இல்லையென்றால் இவை இந்த அளவுக்கு வளர்ச்சி அடைய மேலும் மூன்று ஆண்டுகள் பிடித்திருக்கும் என்று அது கூறுகிறது.

ஏதோ மக்கள் மூடத்தனத்தால் ரொக்கத்தைக் கட்டிக்கொண்டு அழுவதைப் போலவும், வங்கி நிர்வாகிகள் அவர்களுடைய அறியாமையை நீக்கி அவர்களுக்கு அட்டைகளின் மகிமைகளை உணர்த்தி, தடுத்தாட்கொள்ளப் புறப்பட்டுவிட்டதைப் போலவும் பிரச்சாரம் இருக்கிறது. இதை உணர்த்த, பணமதிப்பு நீக்கம் போன்ற கொடுமையான அதிர்ச்சி நடவடிக்கைகள் அவசியம் என்றுகூட அது சிலாகிக்கிறது.

ரொக்கமில்லாப் பரிமாற்றம் சில நன்மைகளை அளிக்கிறது என்பதை எல்லா நிபுணர்களும் ஒப்புக்கொள்கிறார்கள். பரிமாற்றங்கள் கணினி மூலம் டிஜிட்டலாக நடக்கும்போது எல்லாமே பதிவாகிறது. எனவே, வரி ஏய்ப்பு குறைய வாய்ப்பிருக்கிறது. அரசுக்கு வரி வருவாயும் அதிகரிக்கிறது. குற்ற நடவடிக்கைகளுக்குப் பெருமளவு பணம் பயன்படுத்தப்படுவதையும் தடுக்கிறது.

அதே சமயம், டிஜிட்டலாகத்தான் இனி பரிமாற்றங்கள் இருக்க வேண்டும், ரொக்கமே கூடாது என்று கட்டாயப்படுத்தும்போது சமுதாயத்துக்கு, பொருளாதார ரீதியாக இழப்பு ஏற்படுகிறது. மூட நம்பிக்கையால் அல்ல, நல்ல பொருளாதாரக் காரணத்துக்காகவே மக்கள் கையில் கொஞ்சம் ரொக்கத்தை வைத்துக்கொண்டு செலவு செய்கிறார்கள்.

குறைந்த மதிப்பு செலவுகள்

முதலாவதாக, கிராமப்புறங்களில் தலைச்சுமையாகவும் வேறு வகையிலும் விற்கப்படும் பண்டங்களை வாங்க ரொக்கம்தான் வசதி. அட்டை மூலமான பரிமாற்றங்களுக்கு கமிஷனும் சேவைக் கட்டணமும் வசூலிப்பதால் தேவையற்ற கூடுதல் செலவு நுகர்வோருக்கு ஏற்படுகிறது. இந்தச் செலவுகள் அறவே இல்லாவிட்டால் அல்லது மிகமிகக் குறைவுதான் என்ற நிலை வந்தால் நுகர்வோரும் சிறு வியாபாரிகளும் டிஜிட்டலுக்கு மாறுவார்கள். புதிய தொழில்நுட்பத்துக்கு மாறுவதைக் கட்டாயப்படுத்தினால் சில நுகர்வுகளையேகூட புறக்கணிக்கும் முடிவுக்கு அவர்கள் வரலாம். இது லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரத்தையே பாதித்துவிடும்.

இரண்டாவதாக, ரொக்கத்தைக் கொண்டு செய்யப்படும் பரிமாற்றங்கள் அனைத்துமே சட்டவிரோதம் அல்லது முறைகேடானவை என்று முத்திரை குத்துவது சரியல்ல. ரொக்கம் இல்லாவிட்டால் சிறு வியாபாரம், சிறு தொழில்கள், வீதிகளில் கூவி விற்போர் பொருளாதார நடவடிக்கைகள் அனைத்தும் படுத்துவிடும். சட்டத்தை எவ்வளவு கடுமையாக இயற்றினாலும் சட்டவிரோதச் செயல்களைச் செய்பவர்கள் மாற்று வழியைக் கண்டுபிடித்து அதைச் செய்துகொண்டே இருப்பார்கள். ரொக்கத்தைப் பயன்பாட்டிலிருந்து நீக்குவது சரியான வழியாகாது.

ரொக்கத்தை மக்கள் கையிருப்பில் வைத்திருப்பதால், அரசின் செயல்கள் பணவீக்கத்தை அதிகப்படுத்த முயன்றாலும் கட்டுக்குள் வைக்கப்படுகிறது. ரொக்கத்தை வங்கிகளில் செலுத்தினால் வட்டியே கிடையாது (பூஜ்ய வட்டி), அல்லது டெபாசிட்தாரர் வங்கிக்குச் சிறிது கட்டணம் செலுத்த வேண்டும் என்ற அளவுக்குப் பொருளாதாரம் வீழ்ந்துவிடாமல், மக்கள் கையில் இருக்கும் ரொக்கம்தான் உதவுகிறது. இதை அமெரிக்கப் பொருளாதார நிபுணர் கென்னத் ரோகாஃப் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். வங்கியில் சேமிக்கும் பணத்துக்கு டெபாசிட்தாரர்தான் பணம் செலுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தால் வங்கிகளில் ஒரு பைசாகூட இல்லாமல் துடைத்து எடுத்துவிடுவார்கள். அதன் பிறகு வங்கித் துறை பெரிய சரிவைச் சந்திக்கும். ஆகவே, ரொக்கப் பயன்பாடு பாவச் செயல் அல்ல என்பதை வங்கிகள் முதலில் உணர வேண்டும்.

தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x