Last Updated : 10 Jul, 2017 09:15 AM

 

Published : 10 Jul 2017 09:15 AM
Last Updated : 10 Jul 2017 09:15 AM

வானத்தைப் பார்க்க ஒரு வாசஸ்தலம்!

கடைசியாக எப்போது இரவு வானத்தைப் பார்த்தீர்கள்? பார்ப்பது என்றால் போகிற போக்கில் அண்ணாந்து பார்ப்பது இல்லை. தெரிந்த கோள்கள், நட்சத்திரக் கூட்டங்களை சரியாகக் கண்டுபிடித்து ரசிப்பது.

மின்தடை நேரத்தில் நாம் மொட்டை மாடியில் மல்லாந்து படுத்துக்கொண்டு வானத்தை வேடிக்கை பார்த்ததுபோல, ஆதிச் சமூகம் தினந்தோறும் வானத்தைப் பார்த்திருக்கிறது. தொடர் கண்காணிப்பின் விளைவாக, சில பிரகாசமான நட்சத்திரங்களையும், கோள்களையும் அவர்களால் தனித்து அடையாளம் காண முடிந்தது. அதை வைத்து ஒவ்வொன்றுக்கும் அவர்கள் பெயர் சூட்டியிருக்கிறார்கள். மூன்று நட்சத்திரங்கள் ‘ஃ’ வடிவத்தில் இருந்தால் அது பரணி. காலண்டரும், வானியல் முன்னறிவிப்புகளும் இல்லாத காலங்களில், வானத்தை உற்றுப்பார்த்துத்தான் விவசாயம் தொடங்கி, விழாக்கள் வரையில் அவர்கள் நாள் குறித்திருக்கிறார்கள்.

ஆனால், நவீன அறிவியல் குழந்தைகளான நமக்கு வானியல் சார்ந்த படிப்பறிவே அதிகம். அனுபவ அறிவு வெகு குறைவு. வானத்தை வெறும் கண்ணால் பார்த்து, கிரகத்தையோ நட்சத்திரத்தையோ அடையாளம் காட்டத் தெரியாது நமக்கு.

நகரங்களில் மொட்டை மாடிக்கு வந்தாலும் சரியாக வானத்தைப் பார்க்க முடியாத அளவுக்கு ஒளிமாசு ஏற்பட்டிருக்கிறது. எந்நேரமும் ஒளிரும் விளக்குகள் பிரகாசமான நட்சத்திரங்களைக்கூட மங்கலாகக் காட்டுகின்றன. மங்கலான நட்சத்திரங்களோ மறைந்தேவிடுகின்றன. இந்தச் சூழலில், ஒளிமாசு இல்லாத ஓரிடத்தில் வானத்தை வேடிக்கை பார்ப்பதற்கென்றே ஒரு ‘ரிஸாட்’ திறந்திருக்கிறார்கள் ராஜஸ்தான் மாநிலத்தில். அங்குள்ள ஆள்வார் மாவட்டத்தில் ஆரவல்லி மலைத்தொடரின் மீது அமைந்துள்ள ‘அஸ்ட்ரோபோர்ட் சரிஷ்கா’வுக்குச் சென்றால், ‘லைப் ஆப் பை’ படத்தில் நடுக்கடலில் படகில் மிதந்துகொண்டே வானத்தைப் பார்த்துப் பிரமிப்பானே நாயகன், அந்த அனுபவம் நமக்குக் கிடைக்கிறது. டெல்லியிலிருந்து 5 மணி நேரப் பயண தூரத்தில் அமைந்திருப்பதும், அருகிலேயே தெக்லா கோட்டை உள்ளிட்ட சுற்றுலாத்தலங்கள் அமைந்திருப்பதும் கூடுதல் சிறப்பு.

அவ்வளவு தூரம் போக முடியாதவர்கள், தமிழ்நாட்டின் தூங்காநகரங்களிலிருந்து வெளியேறி குக்கிராமத்தில் உள்ள நம் உறவினர்களின் வீட்டு மொட்டை மாடிக்குப் போகலாம். குழந்தைகள் இரவு வானத்தைப் பார்க்க வேண்டும் என்பதே முக்கியம். மாவட்டந்தோறும் அறிவியல் மையங்களை அமைப்பதுடன், முக்கியமான சுற்றுலாத் தலங்களுக்கு அருகில் இதைப் போன்ற வானத்தை வேடிக்கை பார்க்கும் இடங்களையும் உருவாக்க வேண்டிய பொறுப்பு, நமது அரசுக்கு உண்டு.

கே.கே.மகேஷ்,

தொடர்புக்கு: magesh.kk@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x