Published : 28 Jul 2017 09:14 AM
Last Updated : 28 Jul 2017 09:14 AM

சுகாதாரக் கேடுகளின் உறைவிடமா ரயில்?

ந்தியாவில் ரயிலுக்கு இணையான பொதுப் போக்குவரத்துச் சாதனம் வேறெதுவும் இல்லை. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த, பிரம்மாண்டமான ரயில்வே துறை எந்த அளவுக்கு முடைநாற்றம் வீசுகிறது என்பதை நாட்டின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் சமீபத்திய அறிக்கை நமக்கு உணர்த்துகிறது.

நாள்தோறும் லட்சக்கணக்கானவர்கள் விரைவு ரயில், அதிவிரைவு ரயில்களில் பயணிக்கிறார்கள். புறநகர் மின்சார ரயில்களைக் கோடிக்கணக்கானோர் பயன்படுத்துகின்றனர். இருப்பினும், நிதிப் பற்றாக்குறையாலும் போதிய ஊழியர்கள் இல்லாததாலும் ரயில் பெட்டிகளின் பராமரிப்பு நல்ல தரத்தில் இல்லை. ரயில் நிலையங்களிலும் ரயில் பெட்டிகளிலும் பயணிகளுக்குத் தரப்படும் காபி, தேநீர் உள்ளிட்ட பானங்கள், சிற்றுண்டிகள், உணவு ஆகியவற்றின் தரம், சுவை, அளவு போன்றவை அவற்றுக்கு வாங்கப்படும் பணத்துக்கு ஈடாக இருப்பதே இல்லை.

ரயில்வேயின் பல துறைகளில் திறமையின்மையும் அக்கறையின்மையும் போட்டி போட்டு வெளிப்படுகின்றன. அவற்றின் விளைவுகளைப் பயணிகள்தான் அனுபவிக்கின்றனர். அதற்காக ரயில்வேயின் பெரும் பகுதிப் பணிகளையோ அல்லது சேவைகளையோ தனியாரிடம் ஒப்படைப்பது மாற்றாக அமைய முடியாது. பல ஆண்டுகளாகப் பல்வேறு நாடாளுமன்ற ஆலோசனைக் குழுக்களும் கணக்குத் தணிக்கையாளர் குழுக்களும் ஆய்வுசெய்து, தவறுகளையும் குறைகளையும் சுட்டிக்காட்டியும் அவற்றைத் திருத்திக்கொள்ள முடியாத நிலையிலேயே ரயில்வே நிர்வாகம் தொடர்வது வருத்தத்துக்குரியது. இந்த நிலையில் ஜப்பான், சீனாவுக்கு இணையாக புல்லட் ரயில் விடும் ஆசை மட்டும் அடிக்கடி தலைகாட்டுகிறது.

ரயில் பயணிகளுக்குத் தரப்படும் உணவுப் பண்டங்களில் சில முந்தைய நாள் தயாரிக்கப்பட்டு விற்பனையாகாமல் மீண்டும் சூடுபடுத்தப்பட்டு விற்கப்படுகின்றன. தயாரித்துப் பல மணி நேரங்கள் ஆனதால் சூடு ஆறிய நிலையிலும் விற்கப்படுகின்றன. ரயில்களில் உள்ள சமையலறைகள் சுத்தமாக பராமரிக்கப்படாததால் அங்கே எலிகள், கரப்பான்பூச்சிகள் தாராளமாக நடமாடுகின்றன. மூன்று ஆண்டுகளுக்கு முன், கொல்கத்தா ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில், ஒரு சாப்பாட்டில் கரப்பான்பூச்சி இருந்ததற்காக ஒப்பந்ததாரருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டும் நிலைமை மாறவே இல்லை.

ரயில்வே துறையை லாபகரமான நிறுவனமாக நடத்துவதா, லாபநோக்கமற்ற சேவை நிறுவனமாக நடத்துவதா என்பதில் உள்ள குழப்பம் அதன் உணவு, சிற்றுண்டி வழங்கலில் அப்பட்டமாகத் தெரிகிறது. பயணிகளுக்குச் சுகாதாரமான முறையில் உணவு வழங்க ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும். பயணக் கட்டணத்தை உயர்த்தி வசூலிப்பதற்குப் பல்வேறு வழிகளில் யோசிக்கும் ரயில்வே நிர்வாகம், பயணிகளின் பாதுகாப்பு, சுகாதாரம் ஆகியவற்றையும் யோசிக்க வேண்டும். உணவு தூய்மையாகவும் தரமாகவும் இருக்க வேண்டும் என்பதை ஒப்பந்ததாரர்களுக்கு வலியுறுத்த வேண்டும். தன் மக்களுக்குக் கண்ணியமான பயண அனுபவத்தை வழங்க வேண்டியது ஒரு மக்கள் நல அரசின் கடமைகளுள் ஒன்று என்பதை மத்திய அரசு உணர்ந்து தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x