Published : 19 Jul 2017 09:38 AM
Last Updated : 19 Jul 2017 09:38 AM

பணவீக்க விகிதம் குறைவு: குழப்பநிலை தீர வேண்டும்!

சமீபத்திய நுகர்வோர் விலைக் குறியீட்டெண் தரும் தகவல் எளிதில் விளங்கிக்கொள்ள முடியாத புதிராக இருக்கிறது. சில்லறை விலை பணவீக்க விகிதம் ஜூன் மாதத்தில் 1.54% ஆக இருந்தது. இதுவரை இந்த அளவுக்குப் பணவீக்கம் குறைந்ததில்லை. மொத்தவிலை நுகர்வோர் குறியீட்டெண் குறைந்தபட்சம் 2% ஆக இருக்கலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி நிர்ணயித்திருந்ததைவிடவும் இது குறைவு. இதையடுத்து, பொருளாதார வளர்ச்சியை முடுக்கிவிட ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தை உடனடியாகக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் மத்திய அரசுத் தரப்பிலிருந்தும் தொழில் - வணிக வட்டாரங்களிலிருந்தும் எழத் தொடங்கிவிட்டன. பணவீக்க விகிதம் மிகவும் குறைந்தால் பொருளாதாரச் செயல்பாடு வேகம் குறைகிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். ஏற்கெனவே ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி விகிதம், புதிய வேலைவாய்ப்புகள் போன்ற பொருளாதார வளர்ச்சிக் குறியீடுகள் இதையே உணர்த்திக்கொண்டிருக்கின்றன. விலைவாசி உயரக் கூடாது என்பதற்காக வட்டி வீதத்தைக் குறைக்காமல் இருக்கும் ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கைக் குழுவின் முடிவு சரியில்லை என்று அரசின் முதன்மைப் பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன் கூறிவிட்டார்.

விலைவாசி அடிக்கடி உயரும் உணவுப் பொருட்கள், எரிபொருள் ஆகியவற்றைத் தவிர்த்து, இதர பண்டங்களின் சில்லறை விற்பனை விலையைக் கணக்கிட்டால் பணவீக்க விகிதம் 4%-க்கும் குறைவாக இருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இப்படிச் சரிவது இதுவே முதல் முறை. உற்பத்திக்குப் பயன்படும் மூல இயந்திர சாதனங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளும், நீடித்த பயன்பாடு கொண்ட நுகர்பொருட்களுக்கான தொழிற்சாலைகளும் உற்பத்தி, விற்பனை இரண்டிலும் மந்த நிலையை அடைந்துள்ளன. எனவே, முதலீட்டையும் நுகர்வோரின் தேவையையும் அதிகப்படுத்த வட்டி விகிதத்தைக் குறைத்து பணப் புழக்கத்தை அதிகப்படுத்த வேண்டும். ஆகஸ்ட் மாதத்தில் ரிசர்வ் வங்கியின் உயர் நிலைக் குழு கூடும்போது வட்டி விகிதத்தைக் குறைத்தாக வேண்டும் என்ற கோரிக்கை இனி உரத்து எழப்போவது நிச்சயம்.

ஜூலை 1 முதல் பொதுச் சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வந்திருப்பதால் விலைவாசி உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைத்த படிகள் உயர்வும் அமலுக்கு வரவிருக்கிறது. இதனால், நுகர்பொருட்களுக்குத் தேவை அதிகரிக்கும். இதற்கிடையே வாராக் கடன்களால் வங்கித் துறையின் நிலையைச் சீர்படுத்தும் நடவடிக்கைகள் இன்னும் முழுமை அடையவில்லை. எனவே, இதையெல்லாம் கணக்கில் கொண்டுதான் ரிசர்வ் வங்கி முடிவெடுக்க வேண்டும். அவசரப்பட்டு தவறான முடிவை எடுத்துவிடக் கூடாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x