Published : 21 Jul 2017 09:12 AM
Last Updated : 21 Jul 2017 09:12 AM

இளம் கன்றுகளும் பயமும்!

மீபத்தில் ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டின் முதல் பக்கத்தில் வெளியான ஒரு புகைப்படம் அசரடித்தது. அசாம் மாநிலத்தின் மோரிகான் மாவட்டத்தின் வெள்ளம் பெருக்கெடுத்தோடும் சாலையினூடே ஒரு சிறுவன் துணிச்சலோடு மிதவையில் அமர்ந்து துடுப்புப் போட்டுக்கொண்டிருக்கிறான். தன் தோழர்களையும் அதிலேற்றி பாதுகாப்பான இடத்தை நோக்கிப் போகிறான். வாழ்க்கைப் பயணத்தின் இடர்ப்பாடுகளை எதிர்கொள்ளும் நெஞ்சுரமும், அடுத்து எடுத்து வைக்க வேண்டிய அடிகள் பற்றிய தெளிவும், உளத் திண்மையும் ஒரு சேரத் தீட்டப்பட்ட ஓவியம் போலிருந்தது அந்தப் புகைப்படம்.

 

குழந்தைகளுக்கான அசாமி கதை ஒன்றில் வரும் சிறுமி, தந்தையை இழந்தவள், அம்மா தேயிலை பறிக்கப் போயிருந்த நேரத்தில், அண்ணனுக்கு இன்னும் பள்ளிக்கூடம் முடிந்திராததால் தான் மட்டும் முன்னதாக வீடு திரும்புகிறாள். அப்போது தாங்கள் ஆசையோடு வீட்டு முகப்பில் பயிரிட்டிருந்த கரும்புகளை நோக்கி வேகமாக வரும் யானையைப் பார்த்து விடுகிறாள். ‘நெருப்பைக் கண்டால் விலங்குகள் பின்வாங்கிவிடும்’ என்று எப்போதோ தனது மாமன் சொல்லியிருந்த செய்தி பொறிதட்ட, கம்பு ஒன்றில் பழந்துணி சுற்றி... மண்ணெண்ணெயில் தோய்த்து, எட்டிக் குதித்து ஏறப்பிலிருந்து தீப்பெட்டி எடுத்து உரசிக் கொளுத்தி பயமின்றி யானையை நெருங்குகிறாள். “எங்கள் அன்பு ஆனைத் தாத்தாவே, கணேசரே... இந்தக் கரும்பு எங்கள் குடும்பத்துக்கு... திருநாளில் வெட்டிச் சுவைப்பதற்கு... உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன்... திரும்பிப் போ... திரும்பிப் போய்விடேன்...” என்று தாளம் பிசகாமல் தட்டியவாறு பாடிக்கொண்டே அந்தத் தீப்பந்தத்தை யானையை நோக்கிக் காட்டியபடி முன்னேறுகிறாள். யானையும் அஞ்சிப் பின்வாங்கிச் சென்றுவிடுகிறது.

அவளின் தீரத்தைக் கண்குளிரப் பார்த்தபடி ஓடிவரும் தாயும், அண்ணனும் அப்படியே கட்டிக்கொள்கிறார்கள். மறுநாள் காலை கரும்பை வெட்டிய கையோடு, காட்டு எல்லையில் ஒரு பெரிய கரும்புத் துண்டத்தை ஆனைக்காக வைக்கவும் செய்கிறான் அண்ணன். மகிழ்ச்சியோடு அந்த வெகுமதியை ஏற்றுக்கொண்ட யானையின் பிளிறல் சத்தத்தோடு முடிகிறது கதை. கதையில் வரும் குட்டிப்பெண் மொய்னாவும், அவளது குட்டி அண்ணன் மோராவும் இந்தப் புகைப்படத்தைப் பார்த்த மாத்திரத்தில் நினைவுக்கு வந்துபோனார்கள்.

ஆனால், அதே நாளிதழின் உள்ளே வந்திருந்த இன்னொரு புகைப்படம், நாக்பூர் ஏரியொன்றில் உல்லாசப் படகுச் சவாரி சென்ற இளைஞர்கள் ஒரு கொண்டாட்ட மனநிலையில் சற்றும் எச்சரிக்கையின்றி செல்ஃபி எடுத்துக்கொள்ளப் போய், படகு கவிழ்ந்துபோன துயரத்தைக் காட்டியது. நீரில் மூழ்கி அவர்கள் இறந்தும்விட்டார்கள். எத்தனை முறை கேள்விப்பட்டாலும், இத்தகைய தவறுகளைத் தொடர்ந்து யாரேனும் ஏதேனும் ஓரிடத்தில் செய்துகொண்டே இருப்பது வேதனை அளிக்கிறது.

ஒரு புகைப்படம் தீரமிக்க சிறுவனை எண்ணிப் பூரிப்படைய வைத்தது. அடுத்த ஒன்றோ, உளைச்சலில் உறைய வைத்துவிட்டது. இரண்டு புகைப்படங்கள், இரண்டும் எதிரெதிர் உணர்வுகள்.

- எஸ்.வி.வேணுகோபாலன்

தொடர்புக்கு: sv.venu@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x