Last Updated : 27 Jul, 2017 09:28 AM

 

Published : 27 Jul 2017 09:28 AM
Last Updated : 27 Jul 2017 09:28 AM

ஆன்டிபயாடிக்குகளை முழுமையாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டுமா?

ஆங்கில மருத்துவத்தில் கடந்த காலத்தில் எதையெல்லாம் பின்பற்றச் சொன்னார்களோ அதையெல்லாம் இப்போது மாற்றிக்கொள்ளுமாறு கூறுவது ஒரு வழக்கமாகிவருகிறது. அந்த வகையில் இப்போது சேர்ந்திருப்பது, “ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக்கொண்டால், ஒரு முழு கோர்ஸ் - அதாவது 5 நாட்கள் அல்லது 10 நாட்கள் - என்று தொடர்ந்து சாப்பிட்டால்தான் அது சரியான பதில் தரும்; அல்லது பாதிப்புகளை உண்டாக்கும்” என்ற கருத்தாக்கம்.

குறிப்பிட்ட நோய்க்கான அறிகுறிகளைப் பார்த்து அளிக்கப்படும் மருந்துகளில் ஆன்டிபயாடிக் மருந்து வேலை செய்து, நோய் நீங்கிய அறிகுறி ஏற்பட்டால் – அதாவது ஆரோக்கியம் திரும்பிவிட்டால் – தொடர்ந்து அந்த மாத்திரைகளைச் சாப்பிட வேண்டியதில்லை என்று இப்போது தெரிவிக்கிறது பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் இதழில் வெளியாகியிருக்கும் மருத்துவ ஆய்வுக் கட்டுரை.

முன்னதாக மருத்துவர்கள் என்ன சொல்வார்கள் என்றால், ‘இப்படி அறிகுறிகள் மறைந்து உடல் தேறியதைப் போலத் தெரிந்தாலும் நோயை ஏற்படுத் தும் கிருமிகள் உடலுக்குள் மறைந்து செயலற்ற நிலையில் சும்மா இருக்கும். ஆகையால், மருந்துகளை நிறுத்தக்கூடாது. நிறுத்திவிட்டால் அவை முன்னைவிட பலமாக தாக்கும், நோய் தீவிரமடையும். அப்போது வழக்கமான நோயெதிர்ப்பு மருந்துகளால் அவற்றைக் கட்டுப்படுத்த முடியாது’ என்று சொல்வார்கள். இதனால், உடல்நிலை சரியானதும் மாத்திரைகளைச் சாப்பிடுவதை நிறுத்துவதுடன் மீண்டும் டாக்டரைப் பார்த்து சரியாகிவிட்டது என்று சொல்வது அவசியமில்லை என்று கருதியே பலர் வீட்டோடு இருப்பது வழக்கம். இப்போதைய ஆய்வு, அப்படி இருப்பதுதான் சரி என்கிறது. அதாவது, முன்னதாக நம்பப்பட்டுவந்த கருத்தாக்கத்தை உறுதியாக எடுத்துக்கொள்ள நிரூபணம் ஏதும் இல்லை என்கிறது. அதேசமயம் காசநோய், எலும்பில் ஏற்படும் ஒரு வகை தொற்றுநோய் உட்பட சில நோய்களுக்கு விடாமல் தொடர்ந்து மருந்து எடுத்துக்கொள்வது அவசியம் என்றும் அந்த ஆய்வுக் கட்டுரை தெரிவிக்கிறது.

ஆக, நோயாளிகள் இதை இப்படி எடுத்துக்கொள்ளலாம். எது எப்படியாக இருந்தாலும், நோய்க்காக மருந்து தந்த மருத்துவரிடம் ஆலோசனை கலக்காமல் மருந்துகளை நாமாகவே நிறுத்துவதும், தொடர்வதும், அதிகப்படுத்துவதும் கூடவே கூடாது - அதேசமயம் ஆன்டிபயாடிக் பயன்பாடு தொடர்பாக மருத்துவர்களிடம் நாம் கலந்தாலோசிக்கலாம். நோயிலிருந்து மீண்ட பிறகும் ஆன்டிபயாடிக் மருந்துகளைத் தொடர்ந்து பயன்படுத்துவது தேவைதானா; அதற்கான அவசியம் இருக்கிறதா என்று மருத்துவர்களிடம் விவாதித்துத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம். எப்படியும் மருந்துகள் பயன்பாட்டை எவ்வளவுக்கு எவ்வளவு குறைத்துக்கொள்கிறோமோ, மருந்தே தேவைப்படாத சூழலில் இருந்துகொள்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x