Last Updated : 26 Jul, 2017 08:32 AM

 

Published : 26 Jul 2017 08:32 AM
Last Updated : 26 Jul 2017 08:32 AM

பழங்குடியினர் குழந்தைகள் மீது ஏனிந்த பாரபட்சம்?

பழங்குடியினர் வாழ்விடம்தான் உயரத்தில் உள்ளதே தவிர, அவர்களின் வாழ்க்கைத் தரமோ அதலபாதாளத்தில் கிடக்கிறது. கல்விதான் சமூக மாற்றத்தின் திறவுகோல். பல சமூகங்கள் கல்வியின் உதவியால், உயரவும் செய்திருக்கின்றன. ஆனால், பழங்குடியினருக்குக் கல்வி இன்னமும் எட்டாக் கனியாகவே இருக்கிறது. மற்ற கிராமங்களைப் போல, மலைவாழ் மக்களுக்கு வாழ்விடத்தில் கல்வி பயிலும் வாய்ப்பு இல்லை. இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் கூறியுள்ள, மூன்று கி.மீ.க்குள் தொடக்கப்பள்ளி என்பதெல்லாம் இவர்களுக்குப் பெருங்கனவே.

வனச் சட்டங்களால் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கிற இம்மக்கள், பிழைப்பு தேடி சமவெளிப் பகுதிக்குப் படையெடுக்கிறார்கள். கரும்பு வெட்டுதல், மூங்கில் வெட்டுதல், செங்கல் சூளை போன்ற வேலைகளுக்குச் செல்லும்போது, குழந்தைகளைப் பராமரிக்க ஆளில்லாததால் அவர்களையும் உடன் அழைத்துச் சென்றுவிடுகின்றனர்.

இதனால், குழந்தைகளின் படிப்பு தடைபடுவதுடன், அவர்கள் குழந்தைத் தொழிலாளர்களாக மாறும் வாய்ப்பும் ஏற்படுகிறது. இச்சூழலைக் கருத்தில் கொண்டு இம்மாணவர்களின் பள்ளி இடைநிற்றலைத் தடுத்திடவும், தங்கிப் பயிலவும் வாய்ப்பாக பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டன. இவ்வாறு தமிழகத்தில் 314 அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகள் இயங்கிவருகின்றன.

அதில் சுமார் 30,000 மாணவர்கள் படிக்கிறார்கள். இந்தப் புள்ளிவிவரங்கள் கேட்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆனால், இப்பள்ளிகளின் செயல்பாடும், அடிப்படை வசதிகளும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.

ஆசிரியர் பற்றாக்குறை

ஈரோடு மாவட்டத்தில் மட்டும் ஐந்துக்கும் மேற்பட்ட பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாகவே இருக்கின்றன. தாளவாடி வட்டாரத்தில் உள்ள ஆசனூர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 மொழிப் பாடங்களுக்கு 30 ஆண்டுகளாக ஆசிரியர் பணியிடங்களே உருவாக்கப்படவில்லை. ஆக, இன்று வரையில் பிற பாடங்களை நடத்தும் ஆசிரியர்களே இவ்விரு பாடங்களையும் நடத்துகின்றனர்.

இவ்விஷயம் குறித்து தேசியக் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் 2010-ல் புகார் தெரிவித்து, ஆணையமும் கடும் கண்டனத்தைத் தெரிவித்து, உடனடியாகக் குறைகளைக் களைய உத்தரவிட்டது. ஆனாலும், இந்த அவலம் இன்னமும் நீடிக்கிறது. இப்பள்ளியில் மேல்நிலை வகுப்புகளுக்கு மொத்தமே இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். நான்கு பணியிடங்கள் காலியாக உள்ளன.

இதேபோல பர்கூரில் மேல்நிலை வகுப்பு பயிலும் 125 மாணவர்களுக்கு வெறுமனே ஓராசிரியர்தான் இருக்கிறார். இந்த ஆண்டு முதல் 11 மற்றும் 12 என்று இரண்டு ஆண்டுகளுக்கும் அரசு பொதுத் தேர்வு. ஆனால், ஆசிரியர் மட்டும் ஒருவரே. 125 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளார்.

ஆனால், இங்கிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஓசூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை 135 மாணவர்களுக்கு எட்டு ஆசிரியர்கள் உள்ளனர். காரணம், அது பள்ளிக்கல்வித் துறையின் கீழ் உள்ள பள்ளி. ஆனால், பர்கூர் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில், ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை 253 மாணவர்களுக்கு நான்கு ஆசிரியர்களே இருக்கிறார்கள். ஏன் இந்தப் பாகுபாடு?

பாதிக்கப்படும் கல்வித் தரம்

தற்போது பள்ளிக்கல்வித் துறை ரூ.7,500 ஊதியத்தில் 250 தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க உத்தரவிட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் மட்டும் இந்த உத்தரவின் பேரில் 44 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆசனூர் மற்றும் பர்கூர் பழங்குடியினர் மேல்நிலைப் பள்ளிகள் மட்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. காரணம், இந்த உத்தரவு பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்கிறார்கள்.

தமிழகத்தில் ஓராசிரியர் பள்ளிகளாகச் செயல்படுகிற பழங்குடியினர் பள்ளிகளின் மிகப்பெரிய பிரச்சினை, ஆசிரியர் அலுவல் பணி நிமித்தமாக வாரத்தில் இரண்டு, மூன்று நாட்கள் ஈரோடு செல்வது. அப்போது பள்ளிக்கு அறிவிக்கப்படாத விடுமுறைதான். இன்னும் பல பள்ளிகளில் பதிலி ஆசிரியர்கள் எனப்படும் உள்ளூர் நபர்களோ, சமையலர்களோதான் மாணவர்களைக் கவனிக்க வேண்டியிருக்கிறது.

பேருந்து வசதி இல்லாததைக் காரணம் காட்டி, தாமதமாகப் பணிக்கு வந்து சீக்கிரமே வீட்டுக்குப் புறப்படும் ஆசிரியர்கள், விடுதியில் தங்காத விடுதிக் காப்பாளர்கள் போன்ற புகார்களும் ஏராளம். இதனால் பழங்குடி மாணவர்களின் கல்வித்தரம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, சமவெளிப் பகுதி மாணவர்களோடு ஒப்பிடும்போது மலைப் பகுதி மாணவர்கள் மிகவும் பின்தங்கியுள்ளனர். இதில் இந்தக் குளறுபடிகள் வேறு.

கட்டிடம் இல்லாத உறைவிடப் பள்ளிகள்

இன்னும் அதிர்ச்சியான விஷயம் ஒன்றிருக்கிறது, விடுதிக் கட்டிடம் கட்டப்படாமலேயே உண்டு உறைவிடப் பள்ளி என்ற பெயரில் சில பள்ளிகள் செயல்படுகின்றன. இங்கு படிக்கும் குழந்தைகள் மாலை 4.30 மணிக்கே உணவினை உண்டுவிட்டு, தங்களது வீட்டுக்குச் சென்றுவிடுவார்கள். மறுநாள் பள்ளிக்குத் திரும்புவார்கள். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தின் அனைத்து உண்டு உறைவிடப் பள்ளிகளுக்கும் தலா ஆறு லட்சம் செலவில் நீராவி சமையல் அடுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

பெரும்பாலான பள்ளிகளில் இவை பயன்படுத்தப்படாமல் பத்திரமாக இருக்கின்றன. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி அமைக்கப்படும் பள்ளி மேலாண்மைக் குழு எனும் கண்காணிப்புக் குழுவும் இங்கே செயல்படுவதில்லை. இவ்வாறாக பழங்குடிக் குழந்தைகளுக்குச் சிறப்புக் கவனத்துடன் கல்வி வழங்கிடும் நோக்கில் தொடங்கப்பட்ட இந்தப் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகள் பிரச்சினைகளின் குவிமையங்களாக இருப்பதற்கு, அரசின் அலட்சியமும் கண்காணிப்பின்மையுமே காரணமாகும்.

இந்த ஒட்டுமொத்தச் சீர்குலைவுகளுக்கும் காரணம், கல்வித் துறைக்கு எவ்விதச் சம்பந்தமும் இல்லாத, வருவாய்த் துறை அதிகாரிகளின் கண்காணிப்பில் இப்பள்ளிகள் இருப்பதுதான். ஆக, உடனடியாக பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகள் அனைத்தையும், தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் கொண்டு வர வேண்டும்.

மலைவாழ் மக்களின் வாழ்வியலை நன்கு அறிந்த, இவர்களின் நலனில் அக்கறை உள்ள, அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர்களைத் தேர்வுசெய்து அமர்த்துதலே முதன்மையான சீர்திருத்தமாகும். விடுதிக் காப்பாளர் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் விடுதிகளில் தங்குவதை உறுதிசெய்ய வேண்டும். உரிய நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொண்டால் மட்டுமே கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் வலியுறுத்துகிற தரமான கல்வி பழங்குடிக் குழந்தைகளைச் சென்றடையும்.

- தொடர்புக்கு: sudarinfo@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x