Published : 26 Jul 2017 08:31 AM
Last Updated : 26 Jul 2017 08:31 AM

சமூக விலக்க அநீதிக்கு முற்றுப்புள்ளி!

வட இந்தியாவில் கிராமங்களை ஆதிக்கத்தில் வைத்திருக் கும் ‘காப் பஞ்சாயத்து’ எனும் சாதி பஞ்சாயத்துகள் தனி நபர்களையோ, ஒரு குடும்பத்தையோ, ஒரு சமூகத்தையோ சமூகப் புறக்கணிப்பு செய்வதைத் தடை செய்திருக்கிறது மகாராஷ்டிர அரசு. ‘சமூகப் புறக்கணிப்பிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் (தடுப்பு, தடை மற்றும் குறைதீர்) சட்டம்-2016’ குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுவிட்டது.

சமூகப் புறக்கணிப்பு என்பது குற்றச் செயலாகக் கருதப்படும் என்று கூறும் இச்சட்டம், பன்னிரண்டுக்கும் மேற்பட்ட செயல்களைப் பட்டியலிடுகிறது. சமூகப் புறக்கணிப்புக்கு உத்தரவிடுவோருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ரூ.1 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். வரவேற்புக்குரிய சட்டம் இது.

ஒரு சமூகத்தின் அல்லது மதத்தின் மரபான செயலைத் தடுப்பது, இறுதிச் சடங்கு அல்லது திருமணங்களை நடத்தவிடாமல் தடுப்பது போன்றவை சமூகப் புறக்கணிப்பாகக் கருதப்படும். எந்த ஒரு காரணத்துக்காகவும் யாரையும் ஊரிலிருந்தோ, எல்லையிலிருந்தோ, சமூகத்திலிருந்தோ விலக்குவதும் சமூகப் புறக்கணிப்புக் குற்றமாகும். சாதி அடிப்படையிலான நம் நாட்டில் சமூகப் புறக்கணிப்பு என்பது தனிமனித உரிமைகளைப் பாதிக்கிறது என்பதை இச்சட்டம் கவனத்தில் கொண்டிருக்கிறது.

இன்னின்ன சமூகத்தார் இன்னின்ன வகைகளில்தான் ஆடை அணிய வேண்டும், தாங்கள் குறிப்பிடும் வகையில்தான் அடக்கமாக உரையாட வேண்டும், பொது இடங்களுக்கு இப்படித்தான் வர வேண்டும் என்றெல்லாம் நிர்ப்பந்திப்பதும் இனி இச்சட்டப்படி குற்றச் செயலாகவே கருதப்படும்.

சமூகப் புறக்கணிப்புகளைக் களைவதில் இது முதல் சட்டம் அல்ல. 1949-லேயே அன்றைய பம்பாய் மாகாண அரசு இத்தகைய சமூகப் புறக்கணிப்புகள் செல்லாது என்று சட்டமியற்றியது. இச்சட்டம் அரசியல் சட்டம் அளித்த உரிமைகளை மறுக்கிறது என்று தாவூதி போரா சமூகத்தினர் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வேறு சிலரின் உரிமைகளிலும் தலையிடுவதால் அச்சட்டம் செல்லாது என்று 1962-ல் ரத்து செய்துவிட்டது. இப்போது இயற்றப்பட்டுள்ள சட்டத்துக்கும் அப்படி ஒரு ஆபத்து வராது என்று நம்புவோம்.

தீண்டாமை எந்த விதத்தில் கடைப்பிடிக்கப்பட்டாலும் அது சட்டவிரோதம் என்று இந்திய அரசியல் சட்டத்தின் 17-வது கூறும் மனித உரிமைகள் காப்புச் சட்டமும் அறிவிக்கின்றன. சாதிப் பஞ்சாயத்தினர் தாங்களாகவே தங்களுக்குள் ஒரு ஒழுங்கமைதி இருப்பதாகவும் மற்றவர்களுக்கு அப்படி எதுவும் இல்லை என்றும் கருதிக்கொள்கின்றனர். தங்களுடைய தார்மிக விழுமியங்கள், நன்னடத்தை நெறிகள், சமூக ஒழுக்கம் என்று சிலவற்றைத் தாங்களாகவே கற்பித்துக்கொண்டு மற்றவர்கள் அவற்றைப் புறக்கணிப்பதாகக் கூறி தண்டனைகளை விதிக்கின்றனர்.

மனிதர்களின் தனி உரிமைகளையும் கண்ணியத்தையும் ஒடுக்கும் இத்தகைய பிற்போக்கான செயல்களைத் தடுத்து நிறுத்த சட்டம் இயற்ற வேண்டிய நிலையிலேயே நாடு இன்னும் இருப்பதில் பெருமைகொள்ள ஏதுமில்லை. சட்டங்களை இயற்றினால் மட்டும் போதாது; அக்கறை செயலிலும் வெளிப்பட வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x