Last Updated : 18 Jul, 2017 09:39 AM

 

Published : 18 Jul 2017 09:39 AM
Last Updated : 18 Jul 2017 09:39 AM

விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டங்களா?குறை கேட்புக் கூட்டங்களா?

மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மாதந்தோறும் விதிவிலக்கான சில சந்தர்ப்பங்களைத் தவிர, பெரும்பாலும் மூன்றாம் வெள்ளிக்கிழமைகளில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. வேளாண்மை, நீர்ப்பாசனம், கால்நடை, கூட்டுறவு, மின்சாரம், வேளாண்மை பொறியியல் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தோட்டக்கலைத் துறை போன்ற விவசாயம் தொடர்புள்ள கருத்துகளை மட்டும் சுருக்கமாகத் தெரிவிக்குமாறு இக்கூட்டங்களுக்கு விவசாயிகள் அழைக்கப்படுகின்றனர்.

இக்கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் தபால் மூலமும் செய்தித்தாள்கள் மூலமும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கருத்துகளைக் கூற விரும்புவோர் தங்கள் பெயர், ஊர் மற்றும் வட்டாரத்தை காலை 9 மணி முதல் 10 மணி வரையில் கணினியில் பதிவு செய்துகொள்ள வேண்டும். விவசாயிகள் தங்கள் குறைகளைத் தெரிவிக்க இந்த வாய்ப்பு வரவேற்கத்தக்கதுதான்.

வெற்று ஆரவாரம்

குறை கேட்கும் நாள் என்று கூறாமல், குறை தீர்க்கும் நாள் என்று அழைப்பது கவர்ச்சியான பதப் பிரயோகம். சுமார் 35 ஆண்டுகளாக நாங்கள் இக்கூட்டங்களில் ஆஜராகிப் பேசுவதை முதலில் பக்தியாகக் கருதினோம். எனினும், காலப்போக்கில் இது வெற்று ஆரவாரமாகிவிட்டது.

ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் இருந்தன. எல்லா இடங்களிலிருந்தும் விவசாயிகள் திரள்வர். பிற்பகலில் இக்கூட்டங்கள் அறிவிக்கப்படும். அந்தி நேரமான பிறகும்கூட இக்கூட்டம் தொடரும். துறைவாரியான அதிகாரிகள் ஓரிடத்தில் அமர்த்தப்படுவார்கள். திரை அரங்குகளில் நெரிசலில் முந்துபவர்களுக்கு டிக்கெட் கிடைப்பதுபோல இக்கூட்டங்களிலும் முந்தி பெயர் பதிவிடுபவர்களுக்குத்தான் பேச வாய்ப்பு கிடைக்கும். அவர்கள் பேசுவதற்கான சில நிமிடத்துளிகள் அதிகாரிகளால் வரையறுக்கப்பட்டிருக்கும். சில கோரிக்கைகளுக்குத் தீர்வும் கிடைக்கும். அதிகாரிகளை நேரில் சந்திப்பது, எழுத்து மூலமாக முறையீடுகளுக்கு ரசீது பெறுதல் என்று விவசாயிகளுக்குத் திருப்தி தரும் சில நடைமுறைகளும் உண்டு.

எளிய பிரச்சினைகளுக்குத் தீர்வுகள்

தனிநபர்களின் விவசாயப் பிரச்சினைகள் - உதாரணமாக ஆழ்குழாய் பாசன மின்இணைப்பு, வேளாண் கடன் உள்ளிட்ட முறையீடுகளுக்கு இக்கூட்டம் ஒரு வாய்ப்பாகும். அதேபோல் ஒட்டுமொத்தமாக சாகுபடிக்குத் தண்ணீர் கோருதல் விவசாயக் கடன்களை வலியுறுத்தல், ஏரிகள், குளங்கள் நீர்நிலைகள் தூர்வாருதல், நெல் கொள்முதல் நிலையங்கள் என பொதுவான கோரிக்கைகளை வலியுறுத்தவும் இக்கூட்டங்கள் விவசாயிகளுக்குப் பயன்படுகின்றன. எனினும் தலைமை தாங்கும் மாவட்ட ஆட்சியரின் மனோபாவத்தை பொறுத்தே கூட்டங்கள் வெற்றியடைகின்றன. நீர்ப்பாசனத்துறையில் இறுதி முடிவெடுக்கும் தலைமை அதிகாரிகள் வந்தால் அக்கோரிக்கை குறித்து அவர்கள் அங்கேயே முடிவு அறிவிப்பார்கள். இல்லாவிடில் வரும் அதிகாரிகள் இங்கிருந்து தங்கள் துறை குறித்த தபால்களைப் பெற்று சுமந்து செல்வர். முடிவு எடுக்கும் அதிகாரம் அவர்களுக்கு இருக்காது.

கூட்டங்களைத் தவிர்க்கும் அதிகாரி

காவிரி கோட்டம், வெண்ணாறு கோட்டம், கல்லணைக் கால்வாய் போலவே தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆற்று நீர் பாதுகாப்புக் கோட்டம் என்று ஒரு பிரிவு உண்டு. இதன் அலுவலகம் திருச்சியில் உள்ளது. உய்யக்குண்டான், கட்டளை மேட்டு வாய்க்கால் ஆகிய வாய்க்கால்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஏரிகள் இதில் அடங்கும். அதன் தலைமை அதிகாரி நிர்வாகப் பொறியாளர் ஆவார். 100 கூட்டங்கள் தஞ்சையில் நடந்தால், அவர் கலந்துகொள்ளும் விகிதாச்சாரம் 100:1 என்றே அமைகிறது. அவர் தமக்குக் கீழ் பணிபுரியும் பொறியாளர்களைத்தான் இக்கூட்டங்களுக்கு அனுப்புகிறார். நிர்வாகப் பொறியாளர்களை இக்கூட்டங்களுக்கு வரவழைப்பதே விவசாயிகளுக்கு சவாலாக இருக்கிறது.

இக்கூட்டங்களில் குறைகள் ஓரளவு கேட்கப்படுகின்றனவே தவிர, நிரந்தரத் தீர்வுகள் அநேகமாகக் கிடைப்பதில்லை. உதாரணத்துக்கு, தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுக்காவில் உள்ள அல்லூர் ஏரியால் 1,000 ஏக்கருக்கு மேலான நிலம் பாசனம் பெறுகிறது. மன்னர்கள் காலத்தில் வெட்டப்பட்ட இந்த ஏரி பல ஆண்டுகளாகத் தூர்வாரப்படாமல் உள்ளது. அதை தூர்வாரித் தர வேண்டும் என்று பொதுப் பணித்துறையைக் கேட்டோம். இதில் 1,44,222 கன மீட்டர் அடிக்கு மண்ணை விவசாயிகள் பயன்பாட்டுக்கு இலவசமாக எடுத்து ஏரியை ஆழப்படுத்துங்கள் என க. எண் 131M/கோ 206A/2017/வ.பி/நாள் 22-06-2017-ல் பொதுப்பணித் துறையிலிருந்து ஒரு பதில் அனுப்பினர். இவ்வாறு ஒரு பதில் கிடைத்தாலே கங்கையை வென்று, கடாரம் கொண்டதுபோல் எங்கள் முகத்தில் பெருமை வந்துவிடும். ஏனெனில், பெரும்பாலும் இவர்கள் எங்கள் முறையீட்டை சட்டைசெய்வதே இல்லை என்பதுதான். இக்கூட்டங்கள் ஆக்கபூர்வமான பதில் காண்பவையாக, நிரந்தரத் தீர்வு தருபவையாக அமையாததால் கோஷம் எழுப்பும் மைதானங்களாக தற்போது மாறிவருகின்றன. விவசாயிகளின் ஒரு பிரிவினர் அரை நிர்வாணமாக வந்து உரத்த குரல் எழுப்பிக்கொண்டே உள்ளனர். இடையில், மாவட்ட ஆட்சியர்கள் விவசாயம் குறித்த செய்முறை ஆவண குறும்படங்கள் காட்டி கூட்டத்தை மடை மாற்றம் செய்வதும் உண்டு. சில தடவை, இந்தக் கூட்டங்களை மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் அலுவலகத்தில் நடத்தாமல் வேளாண் தோட்டங்களில் நடத்தியதும் உண்டு.

இக்கூட்டங்கள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவோ அல்லது கொள்முதல் விலைக்கான எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையை அமலாக்க உத்தரவிடவோ முடியாதவைதான். கரும்புக்கு குவிண்டால் விலையையும் தேங்காய் கொப்பரை கொள்முதலையும் தீர்த்து வைக்க சக்தி இல்லாதவைதான். எனினும், இவற்றால் விவசாயிகளின் சில தற்காலிகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு தர முடியும். பாசனக் கட்டமைப்பையோ தடுப்பணைகளையோ வேளாண் கடன்களின் ஜப்தி கெடுபிடிகளையோ தீர்த்துவைக்க முடியும். மிகச் சிறிய அளவில் இந்தக் கூட்டங்கள் இத்தகைய தீர்வுகளை அளிப்பதில் வெற்றியும் பெற்றுள்ளன. எனினும் பெரும்பான்மையான கூட்டங்கள் இவற்றை செய்யும் திறனில்லாதவை. முதல் கூட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அடுத்த கூட்டத்தில் பதில் வாசிப்பது இல்லை. அதைவிடுத்து இப்போது என்ன வேண்டும் என்று கேட்பது என்ற தந்திரத்தைக் கடைப்பிடிக்கின்றனர்.

இந்தக் கூட்டங்களுக்காக 25 ஆண்டுகளுக்கு முன் ஏங்கியது உண்டு. இப்போதோ அவலச்சுவை நிறைந்த திரைப்பட கேளிக்கைகளாகக் கூட்டங்கள் மாறிவிட்டன. முன்னம் ஒரு காலத்தில் இக்கூட்டங்களில் பங்கேற்கும் விவசாயிகளுக்கு பெஞ்ச், நாற்காலி வசதிகள் இருந்தன. பிறகு மேசை, நாற்காலிகளில் அமர்த்தப்பட்டனர். இப்போது கூட்ட அரங்குகளிலும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. பௌதிக வசதிகளில் மாற்றம் இருக்கலாம். கூட்டத்தின் இரசாயனமோ விவசாயிகளின் குமுறலாக மாறிவிட்டது.

- வெ.ஜீவகுமார், வழக்கறிஞர், விவசாயிகள்

உரிமைகளுக்கான செயல்பாட்டாளர்.

தொடர்புக்கு: vjeeva63@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x