Last Updated : 18 Jul, 2017 09:32 AM

 

Published : 18 Jul 2017 09:32 AM
Last Updated : 18 Jul 2017 09:32 AM

ஒரு நிமிடக் கட்டுரை: ரன்களையும் ஆண்களுக்கு அர்ப்பணிக்க வேண்டுமா?

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்டில், அரை இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது இந்திய அணி. இதுதொடர்பாக எழுத்தாளர் அசதாவின் முகநூல் பதிவு ஒன்றை கண்டேன். “அன்பான மார்ட்டின்களே, கஸ்பரீக்ஸ்களே, சர்மாக்களே, பாண்டேகளே, எங்களின் பெண்களை கிரிக்கெட் ஸ்கோர் கார்டுகளிலும் பின் தொடராதீர்கள்” என்று கேட்டுக்கொண்டிருந்தார் அவர்.

பொதுவாக, ஆண்கள் கிரிக்கெட்டுக்கும், மகளிர் கிரிக்கெட்டுக்கும் சட்டெனத் தெரிகிற வித்தியாசம், பவுன்டரி எல்லை பக்கத்தில் இருப்பதும், ரசிகர்கள் கூட்டம் குறைவாக இருப்பதும். ஆட்ட விதிகளைக் கூர்ந்து கவனித்தால், பிட்ச் நீளம், மட்டை, பந்து எடை குறைவு போன்ற வித்தியாசங்களையும் கண்டுபிடிக்கலாம்.

கிரிக்கெட் போட்டியை டிவியில் கொஞ்சம் கூடுதல் நேரம் பார்த்தவர்கள், எழுத்தாளர் அசதாவைப் போல முக்கியமான முரண்பாட்டையும் கவனித்திருப்பார்கள். கேப்டன் மிதாலி சதமடித்து ஆட்டமிழக்காமல் இருந்தால், ஸ்கோர் போர்டோ எம்.ராஜ் 100 ‘நாட் அவுட்’ என்று காட்டும். நம் வீராங்கனை ஹர்மன்பிரீத்தை நியூசிலாந்து வீராங்கனை லியா ‘காட் அன்ட் போல்ட்’ செய்தால், ஸ்கோர் போர்டோ எச்.கவுரை, எல்.கெஸ்பிரீக் ‘அவுட்’ செய்ததாகச் சொல்லும். “அவுக எப்ப கிரௌண்டுக்கு வந்தாக?” என்று அப்பாவியாகக் கேட்கத் தோன்றும்.

“இதென்னங்க பேச்சு... நம்மூர் ஊராட்சித் தலைவி தனலட்சுமி, அப்பா அல்லது கணவர் பெயரைச் சேர்த்துக்கொண்டு கல்வெட்டுக்களில் தனலட்சுமி பாண்டியன் என்று எழுதுவதில்லையா?” என்று கேட்கலாம். அங்கேயாவது தனலட்சுமிக்குப் பதிலாக பாண்டியன் ஊராட்சித் தலைவர் ‘வேலை’களைப் பார்க்கிறார். கிரிக்கெட்டில், அவர்களது கணவர்கள் என்ன செய்தார்கள்? அவர்களோடு மைதானத்துக்கு வந்தார்களா? பந்து பொறுக்கிப் போட்டார்களா, டீ காபி கொடுத்தார்களா, கீழே விழுந்து சுளுக்கினால் தைலம் தடவிவிட்டார்களா?

தமிழ்நாட்டில் பல ஆண்களுக்கு டென்னிஸ், பேட்மிட்டன் போன்ற விளையாட்டுக்களைப் பற்றியோ, அதன் விதிகளைப் பற்றியோ முழுமையாக ஒன்றும் தெரியாது. ஆனாலும், பெண்கள் விளையாடும்போது அந்த விளையாட்டுக்களை ஆர்வமாகப் பார்ப்பார்கள். அந்த அதிர்ஷ்டம் மகளிர் கிரிக்கெட்டுக்கு இல்லை. இந்திய கிரிக்கெட் வாரியம் மட்டுமல்ல ரசிகர்கள், ஊடகங்களும்கூட ஆண்கள் கிரிக்கெட்டுக்குத் தருகிற முக்கியத்துவத்தில் ஆயிரத்தில் ஒரு பங்குகூட மகளிர் கிரிக்கெட்டுக்குத் தருவதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. சம்பளமும் குறைவு. ஆகவே, கஷ்டப்பட்டு அடித்த ரன்களையாவது அந்த வீராங்கனைகளே வைத்துக் கொள்ளட்டுமே, அதையும் தந்தைக்கோ கணவனுக்கோ அர்ப்பணிக்க வேண்டுமா?

- கே.கே.மகேஷ்,

தொடர்புக்கு: magesh.kk@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x