Last Updated : 07 Jul, 2017 10:52 AM

 

Published : 07 Jul 2017 10:52 AM
Last Updated : 07 Jul 2017 10:52 AM

நாம் அனைவருமே புலம்பெயர்ந்து வந்தவர்கள்தான்

இந்த ஆதாரங்கள் அனைத்தையும் பார்க்கும்போது இரண்டு கூடுதலான அம்சங்களை நினைவில் கொள்ள வேண்டியிருக்கிறது. வெவ்வேறு துறைகளினால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆய்வுகள் ஒரு குறிப்பிட்ட காலகட்டம் (கி.மு. 2000) இந்திய வரலாற்றின் முக்கியமான சுட்டியாக இருக்கிறதென்ற முடிவுக்கு வந்தன என்பது முதலாவது அம்சம். இந்தக் காலகட்டத்தில்தான் பெரிய அளவில் மக்கள் திரள்களின் கலப்பு நடந்திருக்கிறதென்றும், இந்தப் போக்கு இந்திய உபகண்டத்தின் ஏறக்குறைய எந்த மக்கள் குழுவையும் விட்டுவைக்கவில்லை என்றும் பிரியா மூர்ஜானி தலைமையிலான குழு மேற்கொண்ட ஆய்வு கூறுகிறது.



நமக்குத் தெரிந்தவரை இந்தக் கொந்தளிப்பான மாற்றங்களால் எவ்விதத்திலும் பாதிக்கப்படாத ஒரே மக்கள் பிரிவு அந்தமான் நிக்கோபார் தீவுகளில் வாழும் ஓங்கே பழங்குடியினர் மட்டும்தான். டேவிட் போஸ்னிக் முதலானோர் 2016-ல் நடத்திய ஒய் குரோமோசோம் ஆய்வின்படி, கி.மு. 2000-ல்தான் இந்தியாவில் பிரதானமாக இருந்த இஸட் 93 எனப்படும் ஆர்1ஏ உபகுழு “மிகவும் குறிப்பிடத்தக்க வகையில்” சிதறுண்டது; அதாவது “வேகமாகப் பெருகிப் பரவியது” என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது. கடைசியாக, கி.மு. 2000 ஆண்டு வாக்கில்தான் சிந்து சமவெளி நாகரிகம் வீழ்ச்சியடையத் தொடங்கியது என்று வெகு காலம் முன்னரே நிரூபிக்கப்பட்டுவிட்ட அகழ்வாராய்ச்சி ஆய்வுகளிலிருந்து நமக்குத் தெரிகிறது. புதிதாக இப்படி வரும் விவரங்களை விருப்புவெறுப்பின்றிக் காண்பவர் எவரும் இந்திய வரலாறு என்கிற புதிர்விளையாட்டுக் கட்டத்தின் இதுவரை கிடைக்காத கூறுகள் சரியான இடங்களில் வந்து விழத் தொடங்கிவிட்டன என்பதை உணராமல் இருக்க முடியாது.

இரண்டாவதாக நினைவில் கொள்ள வேண்டியது, இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்படும் ஆய்வுகள் உலகளாவிய மாதிரிகளை வைத்து நடத்தப்பட்டவை. உலக அளவில் ஆய்வாளர்கள் எழுப்பிய கேள்விகளை உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்வு முறைக்கு உட்படுத்தியவை. ஆர்1ஏ இஸட் 93 மரபணு வம்சாவழி 4,000 – 4,500 ஆண்டுகளுக்கு முன் சிதறியது என்ற முடிவுக்கு வந்த போன்ஸிக் முதலானோர் நடத்திய ஆய்வு ஒய் டிஎன்ஏ பாரம்பரியம் இந்தியாவில் எப்படி விரிவடைந்தது என்று மட்டும் பார்க்கவில்லை; பிற நான்கு கண்டங்களில் இருக்கும் மக்கள் திரள்களையும் ஆய்வுக்குட்படுத்தியது. அமெரிக்கக் கண்டத்தில் கியூ1ஏ-எம்3 எனப்படும் ஹாப்லோ குழு 15,000 ஆண்டுகளுக்கு முன் பரவியது என்று நிறுவியது. இந்தக் காலகட்டத்தில்தான் அமெரிக்கக் கண்டத்தில் ஆரம்பகால மனிதக் குடியேற்றம் நடைபெற்றது என ஏற்கெனவே அறியப்பட்ட முடிவுடன் இது ஒத்துப்போகிறது. எனவே, வரலாற்றுப் புதிரின் கூறுகள் சரியான இடத்தில் வந்து விழுவது இந்தியாவில் மட்டும் நடக்கவில்லை; உலகம் முழுவதிலும் இது நடக்கிறது. உலகளாவிய புலப்பெயர்வு குறித்த சித்திரம் முழுமை அடைய அடைய, உலகத்தில் பல பகுதிகளில் மக்கள் குழுக்கள் வளர்ந்ததைக் குறித்து உருவாகிவரும் ஒருமித்த கருத்தைத் தலைகீழாகத் திருப்பிப் போடுவது கடினமாகிவருகிறது.

தற்போது என்ன நடக்கிறது என்பதை ரெய்க்கை விட யாரும் தெளிவாக விளக்கிட முடியாது. அவர் கூறுகிறார்: “கடந்த சில ஆண்டுகளில் மனித குல வரலாற்றைக் குறித்து பழைய மற்றும் நவீன மரபணு அடிப்படையிலான ஆய்வுகள் விரைவாகவும், வியக்கத் தக்க வகையிலும், சக்தி வாய்ந்ததாகவும் வெடித்துக் கிளம்பியிருக்கின்றன. மரபணு ஆராய்ச்சியின் நவீன மற்றும் பழைய தொழில்நுட்பங்களினால்தான் இது சாத்தியமாகியிருக்கிறது. அடிப்படையில் இது தங்க வேட்டை போன்றது; எங்கெல்லாம் இந்தத் தொழில்நுட்பங்களைப் பிரயோகிக்க முடியுமோ அங்கெல்லாம் பிரயோகிக்கப்படுகின்றன. இங்கு தரைக்கு அருகில் தொங்கிக்கொண்டிருக்கும் கனிகள் விரைவாகப் பறிக்கப்படுகின்றன; தரை முழுவதும் சிதறிக் கிடக்கும் தங்கத் துண்டுகளும் வெகு விரைவில் பொறுக்கி எடுக்கப்படுகின்றன.”

இதுவரை நாம் மிக அதிகமாக பேசப்படும், விவாதிக்கப்படும் வரலாற்று நிகழ்வான இந்தோ-ஐரோப்பிய மொழிகள் பேசுவோரின் புலப்பெயர்வைப் பற்றி மட்டும்தான் பேசியிருக்கிறோம். ஆனால் பெரிய சித்திரத்தை நாம் மறந்துவிடக் கூடாது. இந்திய ஆண் பாரம்பரியத்தில் 17.5 சதவீதம்தான் ஆர்1ஏ வம்சாவழியில் வந்தது; அதை விடக் குறைவானது பெண் பாரம்பரியம். இந்தியர்களில் பெரும்பான்மையோர் புலம் பெயர்ந்த வேறு மூதாதையர் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள் – 55,000 முதல் 60,000 ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள்; கி.மு. 10,000 ஆண்டுக்குப் பிறகு பல அலைகளாக மேற்கு ஆசியாவிலிருந்து விவசாயத் தொடர்புடையதாகப் புலம்பெயர்ந்தவர்கள்; முண்டா போன்ற இனங்களைச் சேர்ந்த சேர்ந்த ஆஸ்டிரோ-ஆசிய மொழி பேசும் கிழக்கு ஆசியாவிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் (இவர்கள் புலம்பெயர்ந்த காலம் இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை); திபெத்தோ-பர்மன் மொழி பேசும் கிழக்கு ஆசியாவிலிருந்து புலம்பெயர்ந்த காரோ போன்ற இனத்தவர்கள் (இவர்கள் புலம்பெயர்ந்த காலம் இன்னும் நிர்ணயிக்கப் படவில்லை).

ஆனால், ஒன்று மட்டும் மிகத் தெளிவானது. நாம் அனைவருமே பல்வேறு நாகரிகங்களை மூலமாகக் கொண்டவர்கள்; ஒரு நாகரிகமல்ல. அதாவது பல தரப்பட்ட பாரம்பரியங்களிலிருந்தும் புலம்பெயர் வரலாறுகளிலிருந்தும் கலாச்சார உந்துதல்களையும், பாரம்பரியங்களையும், நடைமுறைகளையும் வரித்துக்கொண்டவர்கள். ஆப்பிரிக்காவிலிருந்து கிளம்பி இந்த நிலப்பரப்பைக் கண்டறிய அச்சமற்ற பயணத்தை மேற்கொண்டு, இங்கு குடியேறி இன்று இந்திய மக்கள் திரளின் அஸ்திவாரக் கல்லான பாரம்பரியத்துக்குச் சொந்தமானவர்கள்; இதற்குப் பிந்தைய காலத்தில் புலம்பெயர்ந்து வந்த, விவசாயத் தொழில்நுட்பங்களைத் தாங்கி, சிந்து சமவெளி நாகரிகத்தைக் கட்டமைத்து இன்றும் நம் பாரம்பரியங்களை செழுமைப்படுத்திக்கொண்டிருக்கும் கலாச்சார சிந்தனைகளையும் நடைமுறைகளையும் கொண்டவர்கள்; அரிசிச் சாகுபடி முறைகளையும் அது தொடர்பான விஷயங்களையும் கொண்டுவந்திருக்கலாம் என்று நம்பப்படும் கிழக்கு ஆசியர்கள்; இவர்களுக்குப் பின்னர் சமஸ்கிருதம் என்றழைக்கப்படும் மொழியையும் அது தொடர்பான நம்பிக்கைகளையும் நடைமுறைகளையும் தாங்கி வந்து நம் சமுதாயத்தை அடிப்படையில் மாற்றியமைத்தவர்கள்; அதற்குப் பின்னர் வணிகத்துக்காகவோ அல்லது படையெடுத்துவந்து வெல்வதற்காகவோ புலம்பெயர்ந்து இங்கேயே தங்கிவிட்டவர்கள் – இவர்கள் அனைவரும் கலந்து பங்களித்துதான் இந்திய நாகரிகம் என்று நாம் அழைக்கும் ஒன்றை உருவாக்கினார்கள். நாம் அனைவருமே புலம்பெயர்ந்தவர்கள் தாம்!

(நிறைவுற்றது)

- டோனி ஜோசப்

எழுத்தாளர்; பிசினஸ்வேர்ல்ட்

பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர்

தமிழில்: ஆர்.விஜயசங்கர், ஆசிரியர், ஃபிரண்ட்லைன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x