Last Updated : 04 Jul, 2017 09:07 AM

 

Published : 04 Jul 2017 09:07 AM
Last Updated : 04 Jul 2017 09:07 AM

மறுக்க முடியாத புதிய ஆதாரங்கள்!

ஆரியர் - திராவிடர் ஒரு விவாதம்

பேராசிரியர் ரிச்சர்டின் குழு நடத்திய ஆய்வின் மையப்புள்ளிகளில் ஒருவர்தான் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியோடு இணைந்த மரபணு ஆராய்ச்சித் துறையைச் சேர்ந்த விஞ்ஞானியாகிய பீட்டர் அண்டர்ஹில்.

மூன்று ஆண்டுகளுக்கு முன் அவர் தலைமையிலான 32 விஞ்ஞானிகள் கொண்ட குழு, ‘ஆர்1ஏ குழு’வின் இணைத் தொடர்புகள் மற்றும் பரவல் குறித்த ஆய்வுகளை நடத்தியது. யுரேஷியப் பகுதிகளில் வாழும் 126 மக்கள் குழுவினரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 16,244 ஆண்களை வைத்துதான் இவர்களின் ஆய்வு நடந்தது. ‘ஆர்1ஏ குழு’ இரண்டு உப ஹாப்லோ குழுக்களாக இருப்பதை இவர்கள் கண்டறிந்தனர். இதில் ஒரு உப குழு பெரும்பாலும் ஐரோப்பாவிலும் மற்றொரு உப குழு மத்திய மற்றும் தெற்காசியப் பகுதிகளுக்குள் அடங்கியதாகவும் இருந்தது. ஐரோப்பாவிலிருந்து எடுக்கப்பட்ட ‘ஆர்1ஏ’ மாதிரிகளில் 96% ‘இஸட் 282’ எனப்படும் உப ஹாப்லோ குழுவைச் சேர்ந்தவை. மத்திய மற்றும் தெற்காசியப் பகுதியிலிருந்த ‘ஆர்1ஏ’ மாதிரிகளில் 98.4% ‘இஸட் 93’ எனப்படும் உப ஹாப்லோ குழுவைச் சேர்ந்தவை. இந்த இரு உப குழுக்களும் வேறு திசைகளில் பிரிந்து சென்று 5,800 ஆண்டுகளே ஆகின்றன. இந்தியாவில் பெரும்பான்மையாக இருக்கும் ‘இஸட் 93’ உப குழு மேலும் பல சிறு கிளைகளாகப் பிரிந்தன என்று அண்டர்ஹில்லின் ஆராய்ச்சி காட்டுகிறது. ஒரு ‘நட்சத்திரம் போலப் பிரிந்து சென்ற’ இந்நிகழ்வு, அந்தக் குழு வெகு விரைவாக வளர்ந்து பரவியதையே காட்டுகிறது என்று அண்டர்ஹில்லின் ஆய்வுக் கட்டுரை கூறுகிறது. இந்தோ-ஐரோப்பிய மொழி பேசும் மக்கள் தோராயமாக எந்தக் காலகட்டத்தில் இந்தியாவுக்கு வந்து விரைவாகப் பரவினார்கள் என்று உங்களுக்குத் தெரிய வேண்டுமென்றால், இந்த ‘இஸட் 93’ உப ஹாப்லோ குழு எப்போது உடைந்து சிதறி பல்வேறு சிறிய உப குழுக்களாகவோ அல்லது வம்சாவழியினராகவோ உருவானார்கள் என்பதைக் கண்டறிய வேண்டும்.

சுருக்கமாகச் சொன்னால்: ‘ஆர்1ஏ ஹாப்லோ குழு’ ஐரோப்பா, மத்திய ஆசியா, மற்றும் தெற்காசியா முழுவதிலும் பரவலாக இருக்கிறது. அதன் உப குழுவான ‘இஸட் 282’ ஐரோப்பாவில் மட்டும் பரவியிருக்கிறது. மற்றொரு உப குழுவான ‘இஸட் 93’ மத்திய மற்றும் தெற்காசியப் பகுதிகளில் மட்டும் இருக்கிறது. ‘இஸட் 93’ உப குழுவிலிருந்து உருவான முக்கியமான மூன்று உப குழுக்கள் இந்தியா, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் மற்றும் இமாலயப் பகுதிகளில் பரவியிருக்கின்றன. இந்த ‘ஆர்1ஏ ஹாப்லோ’ குழு, இந்தியாவில் தோன்றி பின்னர் வெளியே பரவியது என்கிற பழைய கருத்தாக்கத்தை ‘ஆர்1ஏ குழு’வைப் பற்றி இப்போது உருவாகியிருக்கும் தெளிவான வரைபடம் மறுதலிக்கிறது. இந்தியாவில் இருக்கும் ‘ஆர்1ஏ ஹாப்லோ’ குழு மற்ற பிரதேசங்களிலுள்ள குழுக்களை விட அதிக வேறுபாடுகளைக் கொண்டுள்ளதென்றும், அதனால் அக்குழு இந்தியாவிலேயே உருவாகி, பின்னர் வெளியே பரவியிருக்கக்கூடும் என்கிற பழைய கருத்தாக்கத்தை இந்த வரைபடம் உடைத்தெறிகிறது. “பெரும்பாலும் தெளிவற்ற நுண்ணிய செயற்கைக்கோள் விவரங்களை அடிப்படையாகக் கொண்டு ‘ஆர்1ஏ குழு’ அதிக வேறுபாடுகளைக் கொண்டது என்று எடுக்கப்பட்ட முடிவு இப்போது குழிதோண்டிப் புதைக்கப்பட்டுவிட்டது” என்கிறார் பேராசிரியர் ரிச்சர்ட்ஸ். ஒய் குரோமோசோம் மரபணுக்கள் குறித்து இப்போது கிடைத்துள்ள ஏராளமான விவரங்களினால்தான் இது சாத்தியமானது என்கிறார் அவர்.

வெண்கல யுகத்தில் மத்திய ஆசியாவிலிருந்து குறிப்பிடத்தக்க அளவு மரபணுக்கள் இந்தியாவுக்குள் வந்தன என்று நிரூபிக்கப்பட்டுவிட்டதால், ‘இஸட் 93’ உப குழுவிலிருந்து எப்போது சிறிய உப குழுக்கள் தோன்றின என்று நம்மால் துல்லியமாகக் கணக்கிட முடியுமா? ‘ஆம்’ என்கிறது, ஏப்ரல் 2016-ல் பிரசுரிக்கப்பட்ட ஓர் ஆய்வுக் கட்டுரை. (உலகம் முழுவதிலுமிருந்து எடுக்கப்பட்ட 1,244 ஒய் குரோமோசோம் வரிசைகளின் ஆய்வின் அடிப்படையில் எழுதப்பட்டது இக்கட்டுரை) ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் டேவிட் போஸ்னிக் தலைமையில், பேராசிரியர் அண்டர்ஹில் உட்பட 42 பேர் சேர்ந்து எழுதிய இந்தக் கட்டுரை ஒய் குரோமோசோம்களைக் கொண்ட ஹாப்லோ குழுக்கள் ஐந்து கண்டங்களில் எப்படிப் பெருமளவில் பரவின என்று விவரிக்கிறது. “ ‘இஸட் 93’ உப குழுவின் மிகவும் குறிப்பிடத்தக்க விரிவாக்கம் தோராயமாக 4,000 - 5,000 ஆண்டுகளுக்கு முன் நடந்தது’ என்று இந்த ஆய்வுக் கட்டுரை கூறுகிறது. இது மிக முக்கியமான முடிவு. ஏனெனில், ஏறக்குறைய 4,000 ஆண்டுகளுக்கு முன்தான் சிந்துச் சமவெளி நாகரிகம் வீழ்ச்சி அடையத் தொடங்கியது. (எனினும், புலம்பெயர்தலினால் சிந்துச் சமவெளி நாகரிகம் வீழ்ச்சியுற்றதென்றோ அல்லது சிந்துச் சமவெளி நாகரிக வீழ்ச்சியினால் புலம்பெயர்தல் நிகழ்ந்ததென்றோ சொல்வதற்கான அகழ்வாராய்ச்சி உட்பட எந்த ஆதாரமும் இல்லை; இரண்டும் ஒருசேர நிகழ்ந்திருக்கக்கூட வாய்ப்பிருக்கிறது).

வெண்கல யுகத்தில் புலம்பெயர்ந்த நிகழ்வு குறித்துச் சந்தேகம் கொண்டிருந்த அல்லது நடுநிலை வகித்திருந்த பல விஞ்ஞானிகள்கூட பனிச் சரிவுபோல் வந்து விழுந்திருக்கும் புது விவரங்களைக் கண்ட பின், தங்களுடைய கருத்துகளை மாற்றிக்கொண்டனர். இப்படிக் கருத்தை மாற்றிக்கொண்டவர்களுள் பேராசிரியர் அண்டர்ஹில்லும் ஒருவர். கடந்த 5,000 - 6,000 வருடங்களில் “கிழக்கு ஐரோப்பாவிலிருந்து ஆண் வம்சாவழி மரபணுக்களின் பெரு ஓட்டம் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளை நோக்கி நடைபெற்றது” என்ற கருத்துக்கு எதிரான ஆதாரம் இருப்பதாக 2010-ல் எழுதிய கட்டுரையில்கூட அண்டர்ஹில் குறிப்பிடுகிறார். ஆனால், 2010-ம் ஆண்டுடன் ஒப்பிடக்கூட முடியாத அளவு இன்று ஆதாரங் கள் வெளிவந்திருக்கின்றன என்று அவரே கூறுகிறார். “சிறிய டார்ச் லைட்டை வைத்துக்கொண்டு, ஒரு சாவித் துவாரத்தின் வழியே இருண்ட அறைக்குள் நோக்குவது போன்றுதான் அன்றைய நிலை இருந்தது. அந்த அறையின் சில மூலைகளைத்தான் காண முடிந்தது; முழு அறையையும் முழுமையா கப் பார்க்க முடியவில்லை. மரபணு வரிசைப்படுத்தலுக்குப் பிறகு நாம் இப்போது முழு அறையையும் அதிகத் தெளிவான வெளிச் சத்தில் காண முடிகிறது” என்கிறார் அவர்.

(தொடரும்...)

தமிழில்: ஆர்.விஜயசங்கர், ஆசிரியர், ஃபிரண்ட் லைன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x