Published : 06 Jul 2017 10:23 AM
Last Updated : 06 Jul 2017 10:23 AM

இப்படிக்கு இவர்கள்: வளமான எதிர்காலம் நோக்கி...

அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் புதிய பாடத்திட்டத்துக்கான குழு அமைத்திருப்பது வரவேற்கத்தக்கது. ஏற்கெனவே, பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்களையும், புதுமைகளையும் ஏற்படுத்திவரும் அமைச்சர் செங்கோட்டையன், கல்வித் துறைச் செயலர் உதயசந்திரன் ஆகியோரின் நற்பணிகளின் தொடர்ச்சியே இது. சவால் நிறைந்த காலகட்டத்தில் நிற்கிற தமிழக மாணவர்களை அனந்த கிருஷ்ணன் தலைமையிலான குழு நல்ல எதிர்காலத்தை நோக்கி வழிகாட்டும் என்று நம்புவோம்.

-பாபநாசம் நடராஜன், தஞ்சாவூர்.



வரியும் வீழ்ச்சியும்!

‘மக்களிடமிருந்து பெறப்படும் வரி, வண்டு பூவிலிருந்து தேனை உறிஞ்சுவதுபோல மென்மையாக இருப்பதுடன், அந்தச் செடிக்கே பயன்தருவதுபோல மக்கள் பயன்பெற வேண்டும்’ என்று மூதறிஞர் ராஜாஜி கூறியுள்ளார். ஜிஎஸ்டி இரட்டை வரி முறைகளைத் தவிர்க்கிறது என்றாலும், இரு மடங்காக இருப்பது களையப்பட வேண்டும். ஜிஎஸ்டியில் உள்ள பாகுபாடுகளை அரசு விரைந்து சரிசெய்யாவிட்டால், மென்மேலும் பொருளாதாரச் சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

- எம்.விக்னேஷ், மதுரை.



தடுத்து நிறுத்துவோம்!

இன்றைய தமிழ்ச் சமூகம் சந்தித்துவரும் மிகச் சிக்கலான பிரச்சினையைப் பேசுகிறது, ‘உங்கள் சர்நேம் என்ன?’ (ஜூலை - 3) கட்டுரை. சாதியைத் தூக்கிப் பிடிக்காத பண்பாட்டு நிலையிலிருந்து தமிழகம் சரிந்துவருவதற்கு இன்றைய அரசியல்வாதிகளின் சுய நலமிக்க செயல்பாடுகளே முக்கிய காரணம். தங்களுக்கென்று ஒரு ஓட்டு வங்கியை உருவாக்கும் நோக்கோடு சாதிக் கட்டமைப்பைக் கட்டிக்காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் அரசியல்வாதிகள். கடந்த தேர்தல் சமயத்தில், தமிழகத்தில் உள்ள சாதிச் சங்கங்களை ஒருங்கிணைக்க முயன்றதும் அத்தகைய நோக்கத்தின் வெளிப்பாடே! இதில் மிக ஆபத்தான விஷயம், இவர்கள் இளைஞர்களின் மனதில் சாதி என்னும் நஞ்சை ஊட்டி வளர்ப்பதுதான். இப்போக்கைத் தடுத்து நிறுத்துவதில் நடுநிலையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்குப் பெரும்பங்கு உள்ளது.

- ப.சரவணன், கோயம்புத்தூர்.



தங்கத்துக்கு வரி தேவையா?

ஜிஎஸ்டி தலையங்கம் ‘புதிய வரிவிதிப்பு முறைக்கு மட்டும் அல்ல; புதிய அரசியல் கலாச்சாரத்துக்கும் இந்தியா தயாராக வேண்டும்!’ ஜூலை - 3) படித்தேன். விமர்சகர்கள் குரலுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும் என தலையங்கத்தில் தெரிவித்துள்ளது நியாயமானது. ஏழைகளின் சேமிப்பான, தங்கத்தின் மீது 3% வரி விதிக்கப்பட்டிருக்கிறது. இன்றைய நிலவரப்படி செய்கூலி, சேதாரம் இல்லாமல் ஜிஎஸ்டியால் மட்டுமே பவுனுக்கு ரூ.600 செலுத்த வேண்டிய நிலை வந்துள்ளது. நம்முடைய கலாச்சாரத்தோடு பின்னிப் பிணைந்த தங்கத்தின் மீதான வரியைக் குறைக்க வேண்டும். வணிக நோக்கோடு இதை அணுகாமல் பண்பாட்டு நெறிசார்ந்த பொருளாகக் கருத வேண்டும்.

- கூத்தப்பாடி மா.கோவிந்தசாமி, தருமபுரி.



நாங்களும் தொடர்வோம்...

ஜூன் 29 அன்று வெளியான, ‘வன்முறையாளர்களைப் ‘பாதுகாவலர்கள்’ என்றல்ல; குண்டர்கள் என்றே குறிப்பிடுவோம்!’ என்ற தலைப்பில் சரியான நேரத்தில் மிகவும் யோசித்து எழுதப்பட்ட தலையங்கம் பாராட்டுக்குரியது. தங்களின் இந்த முடிவு வன்முறைக்கு எதிரான முயற்சிக்குப் பத்திரிகை உலகின் முதல்படியாக மட்டுமல்ல, இதனை ஆதரிப்பவர்களுக்கு எதிரான முதல் அடியாகவும் இருக்கும். முடிவினை அறிவித்த அன்றே நடுப் பக்க மொழிபெயர்ப்புக் கட்டுரையிலும் ‘பசு குண்டர்கள்’ என்ற வார்த்தைப் பிரயோகத்தை துவக்கி வைத்தது பாராட்டுக்குரியது.

- வீ.சக்திவேல், தே.கல்லுப்பட்டி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x