Last Updated : 10 Jan, 2017 10:45 AM

 

Published : 10 Jan 2017 10:45 AM
Last Updated : 10 Jan 2017 10:45 AM

காயமே இது பொய்யடா!

நமது முன்னோர்கள் - சித்தர்கள், இலக்கியவாதிகள், ஆன்மிகவாதிகள் எல்லோரும் மகா தீர்க்கதரிசிகள் என்பதில் துளியும் சந்தேகமில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன் அவர்கள் சொன்னதையும் எழுதியதையும் நான் உள்வாங்கிக்கொள்ளாமல் போனதுதான், இன்றைய எனது திகைப்புக்கும் ஆதங்கத்துக்கும் காரணமாக இருக்க வேண்டும். வேறு எந்தப் புத்தாண்டு தினத்தன்றும் எனக்கு ஏற்பட்டிராத நிராசையும் கூச்சமும் அச்சமும் இந்த 2017- ம் விடியலில் எனக்கு ஏற்பட்டதற்கு எனது பேதமையே காரணம்.

'உலகமே ஒரு நாடக மேடை; எல்லோரும் நடிகர்கள்' என்றார் ஷேக்ஸ்பியர் நானூறு ஆண்டுகளுக்கு முன் - எல்லாமே மாயை என்று நமது சித்தர்கள் சொன்னதுபோல. எனக்குத் தத்துவம் தேவையில்லை. நான் நிகழ்காலத்தில் வாழ்பவள். என்னைச் சுற்றியிருக்கும் விஷயங்கள், மனிதர்கள், அரசியல் ஆகியவற்றால் பாதிக்கப்படுபவள். யதார்த்தம் என்பது எனக்கு நிதர்சனமான உண்மை. இன்று என்னுள் பீதி நிறைந்திருக்கிறது. என்னைச் சுற்றி நடப்பவை ஒரு சர்ரியலிச மௌனப் படம்போல இருக்கிறது. நிர்வாணமாக வலம் வந்த அரசனை திகைப்புடன் பார்த்து மௌனமாக நின்ற கூட்டம், நாடு முழுவதையும் ஆக்கிரமித்துவிட்டதாகத் திகில் ஏற்படுகிறது. என்ன நடந்தாலும் எல்லோரும் மௌனமாக நிற்கிறார்கள். தன்மானம் உள்ளவன் தமிழன் என்று யார் சொன்னது?ஆட்சிக்கு வந்தவர்களின் முதுகெலும்பு காணாமல் போய்விட்டது. இல்லை, அவர்களாகவே சந்தோஷமாகக் கழற்றி வைத்துவிட்டார்கள். நேற்று வரை வாய் பேசாமல், ஒரு சக்திவாய்ந்த நபருக்கு உதவியாளராக மட்டுமே இருந்ததாகச் சொல்லப்பட்டவர் காலில், ஒரு மாநில முதல்வர் விழுகிறார். முன்னதாக எல்லா அமைச்சர்களும் விழுந்தார்கள். நீங்களே எங்கள் தலைவி என்றார்கள். கட்சிக்காரர்கள் புதிய தலைவியின் போஸ்டருக்குப் பால் அபிஷேகம் செய்ததை நான் தொலைக்காட்சியில் கண்டு அதிர்ந்துபோனேன். கதைக்குள் கதை இருப்பதுபோல் அல்லவா இருக்கிறது?

புதிய பிம்பம்

அம்மா இல்லாவிட்டால் என்ன? அவர்களால் புதிதாக சின்னம்மாவை உருவாக்க முடியும். (சற்றுக் கவனியுங்கள் - அம்மா மாதிரியே அவர் நிதானமாக நடப்பதை; கழுத்து மூடிய ரவிக்கை அணிவதை; முடியை வலைக்குள் கட்டுவதை) இன்னும் நான்கரை ஆண்டுகள் ஆட்சி நடத்த வேண்டுமே சாமி! இதுவரை ஒரு வார்த்தை பேசாதிருந்த சசிகலா, கட்சிப் பொதுச் செயலாளராகப் பதவி ஏற்றவுடனேயே மிகக் கவனமாகத் தயாரிக்கப்பட்ட சொற்பொழிவைச் செம்மையாக ஆற்றி, அவரை நம்பி வந்த அமைச்சர்களின் நெஞ்சைக் குளிரவைக்கிறார். அவருக்கு எதையும் சொல்லித்தரத் தேவையில்லை, இனி. அதிகாரிகள் அதிகார மையத்தின் பக்கம் சாய்ந்து பழக்கப்பட்டுப்போனவர்கள். அது செய்வதெல்லாம் சரி என்று சொல்லத் தெரிந்துகொண்டவர்கள். அதுவே புத்திசாலித்தனம்.

மாற்றுக்கருத்தும் தேசத்துரோகமும்

டெல்லியில் நடக்கும் நாடகங்கள் சென்னையைக் காட்டிலும் மகா சாமர்த்தியத்துடன் நடப்பவை. 'உண்மைக்குப் பிறகு'என்கிற சொற்றொடர் இப்போது டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க அதிபதி ஆன பிறகு, அமெரிக்காவில் வலம் வருகிறது. அதாவது, வெற்றிகரமான அரசியல் வாதங்கள் உண்மையின் அடிப்படையில் வர வேண்டியதில்லை. சமூக வலைதளங்கள், சுட்டுரைகள் ஆகியவற்றில் அபிமானிகள் உண்மை சொல்ல வேண்டிய கட்டுப்பாடில்லாமல் அரசியல் யுத்தம் நடத்துகிறார்கள். நமது மோடி சர்க்காருக்கும் அது பொருந்தும். ஒரே வீச்சில் 86% கரன்ஸியைச் செல்லாததாக்கிய செயலுக்கு ஒரு தேசியப் போர்வையைப் போர்த்திவிட்டார்கள். அதை ஏற்காதவர்கள் எல்லாம் தேச விரோதிகள், எதிரி பாகிஸ்தானியர்களைப் போன்றவர்கள் என்றார்கள். உங்களது சிரமங்கள் தற்காலிகமானவை என்று காதில் பூச்சுற்றினார்கள். நாடாளுமன்றத்தில் விவாதத்துக்குப் பதில் சொல்லத் தயங்கிய பிரதமர், பொது மேடையில், காசு கிடைக்காமல் ஏடிஎம் வாசலில் தவம்கிடக்கும் பாமரனைக் கண்டு தான் பெருமிதம் கொள்வதாகச் சிலாகித்தார். என்னே உங்கள் தேச பக்தி என்றார் கண்ணில் நீர் மல்க. வரிசையில் நின்று 80 பேர் செத்துப்போனார்களா.. என்னே அவர்களது தியாகம்?!

எது நல்ல காலம்?

இந்த மாபெரும் வேள்வியில் இத்தகைய சோகங்கள் நடப்பது இயல்பு என்றார் கட்சிப் பிரமுகர் ஒருவர், தொலைக்காட்சி விவாதத்தில். சரியான செயல்திட்டம் வகுக்காததால் சிறு தொழில் நசித்துப்போகும், கையில் வாங்கும் காசை நம்பி இருக்கும் தினக்கூலிக்காரர்கள் - அமைப்பு சாரா துறையில் வேலையில் இருக்கும் 93% மாளாத அவதிக்குள்ளாவது அநியாயம் என்ற எதிர்கட்சிகளின் வாதங்கள் அவர்கள் செவிகளில் விழவில்லை. “ஆனாலும், ஒரு எதிர்ப்புக் குரல் வந்ததா, கறுப்புப் பணத்துக்கு எதிரான எங்கள் செயலைக் கேள்விகேட்க யார் துணிவார்கள்?” என்று ஆட்சியில் இருப்பவர்கள் கெக்கலிக்கிறார்கள்.

ஹார்வர்டு பொருளாதார நிபுணர்கள் அவர்களின் செயல்பாட்டைக் கடுமையாக விமர்சித்தால் அவர்களுக்குக் கவலையில்லை. விஷயம் அறிந்தவர்கள் எச்சரிப்பது தேசத் துரோகம் என்றானது. பிரதமர் ஒரு புனிதர் என்கிற பிம்பம் திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. ஒத்து ஊத ஒரு கூட்டம் எப்போதும் இருக்கிறது. பிரதமரின் மகத்தான சாதனை இது! பொதுமேடையில் மோடி கைகளை அகட்டி விரித்து நின்று பேச ஆரம்பித்தால், கூட்டம் மயங்குகிறது. நாவன்மை சக்தி வாய்ந்தது. அதுவே வெற்றிக்குத் தேவை!

நல்ல காலம் பிறந்துவிட்டது என்கிறது மோடி அரசு. தமிழ்நாட்டில் அமைச்சர்கள் நிம்மதியாக மூச்சுவிடுகிறார்கள். அவர்கள் விழுவதற்குப் பிரச்சினை இல்லாமல் புதிய கால்கள் கிடைத்துவிட்டன. நல்ல காலம் பிறந்துவிட்டது. அரசனைப் பார்த்த மாத்திரத்தில் எல்லோர் முன்பும் கைக்கொட்டிச் சிரித்தானே, அந்தச் சிறுவனை நான் தேடிக்கொண்டிருக்கிறேன்!

- வாஸந்தி,மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர், தொடர்புக்கு: vaasanthi.sundaram@gmail.com













FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x