Published : 07 Jun 2017 09:43 AM
Last Updated : 07 Jun 2017 09:43 AM

தண்ணீர் வளத்தைத் தனியார்மயமாக்க வேண்டுமா?

தனியார்மயமாக்க வேண்டிய அவசியமே இல்லை





தண்ணீர் வளத்தைத் தனியார்மயமாக்குவது தேவையற்றது, நியாயமற்றது, அங்கீகரிக்கவும் கூடாது. தண்ணீர் வளத்தைப் பாதிக்கும் உண்மையான பிரச்சினை குறித்து நாம் இன்னும் சரியாக விவாதிக்கவில்லை. நகர்ப்புறத் தண்ணீர் வள நிர்வாகத்தில் ஏற்பட்ட குறைபாடுகளால்தான் தனியார்மயம் தேவை என்ற கோரிக்கை எழுகிறது. தண்ணீர் இழப்பு, தண்ணீர் வளத்தைப் பராமரிப்பதில் திறமைக்குறைவு, நம்பகத்தன்மையற்ற மேலாண்மை, ஊழல், தரமற்ற நீர்த்தன்மை, முறைகேடான நிர்வாகம் என்று எல்லா அம்சங்களும் இந்தக் ‘குறைபாடு’ என்ற பொதுப் பொருளில் அடங்கிவிடுகிறது. இவையெல்லாம் அறிகுறிகள்தான், உண்மை என்னவென்றால் ஜனநாயகமயப்பட்ட நீர் மேலாண்மை இல்லை.

தண்ணீரைத் தனியார்மயமாக்கிய உலகின் பல்வேறு நாடுகளின் அனுபவத்தைப் பார்த்தால், எந்த நாட்டிலும் அது நீண்ட காலத்துக்குப் பிரச்சினையைத் தீர்க்கவில்லை என்று தெரிகிறது. சிறு பகுதிகளில் மட்டும் - அதுவும் தண்ணீர் விநியோகம் மட்டும் - தனியாரிடம் விடப்பட்டிருக்கிறது. பிற பிரச்சினைகளையெல்லாம் பொதுவெளியில் தீர்வுக்கு விட்டுவிட்டுள்ளனர்.

தண்ணீர் என்பது விற்பனைப் பண்டமல்ல. நகர்ப்புறத் தண்ணீர் வழங்கல், நகரங்களில் வாழ்கிறவர்களுக்குக் குடிக்கத் தண்ணீர் வழங்குவதோடு நிற்பதல்ல. நகர்ப்புறத் தண்ணீர் வளத்துக்குப் பல அடுக்குகள் இருக்கின்றன. தண்ணீர் கிடைப்பதற்கான மூல ஆதாரம், அதைப் பெறுவதில் எது சிறந்த வழி என்று தேர்வுசெய்வது, பெரிய அடித்தளக் கட்டமைப்புகளை உருவாக்கித் தண்ணீரைக் குடிப்பதற்கு ஏற்ப சுத்தப்படுத்துதல், சாக்கடைகள் வழியாக வெளியேறும் கழிவு நீரை, அழுக்குகள் ரசாயனங்கள் போன்றவற்றை நீக்கி மறு பயன்பாட்டுக்குச் சுத்தப்படுத்துதல் என்பவையே அந்த அடுக்குகள்.

வெவ்வேறு நிலைகளில் தண்ணீருக்கான அடித்தளக் கட்டமைப்புகளை உருவாக்கி இயற்கை வளங்களோடு பராமரிப்பதுடன், தொடர்ச்சியாகவும் - போதுமான அளவுக்கும் தண்ணீரைப் பெற்று வழங்குவதும் நோக்கமாக இருக்க வேண்டும்.

ஏரிகள், குளங்கள், குட்டைகள், சதுப்புநிலங்கள், காடுகள், நிலத்தடி நீர்சேமிப்பிடங்கள் போன்றவற்றில் மழை நீரை எப்படிச் சரியான அளவில் சேமித்துப் பயன்படுத்துகிறோம்? இவற்றையெல்லாம் எப்படிப் பராமரிக்கிறோம்? கழிவுநீரை எப்படிச் சுத்தப்படுத்துகிறோம்? மொத்த நீராதாரக் கட்டமைப்புகளையும் எப்படி ஒருங்கிணைத்துப் பயன்படுத்துகிறோம்? நகர்ப்புற நீர்வளத்தையும் நீர்த் தேவையையும் எல்லா வழிகளிலும் ஒருங்கிணைத்துச் செயல்பட்டால்தான் நீர் மேலாண்மையை நல்லவிதமாக நிர்வகிக்க முடியும். நகர்ப்புறங்களில் தண்ணீருக்கான தேவை அதிகரித்துவரும் வேளையில் தண்ணீர் இருப்பு, சேமிப்பு போன்றவை குறைவதால் இந்த மேலாண்மை முக்கியத்துவம் பெறுகிறது. பருவநிலை மாறுதல்களால் மழைப் பொழிவும் குறைந்துவருகிறது. இதனால், நேரடியாகவும் ஆறு, வாய்க்கால்கள் வழியாகவும் நகரங்களுக்குக் கிடைக்கும் தண்ணீரின் அளவு குறைந்துவருகிறது. தண்ணீரைச் சேமித்து வைக்கும் ஏரி, குளம், குட்டைகள், ஆறுகள், வாய்க்கால்கள் போன்றவை பராமரிக்கப்படாததாலும் சேதப்படுத் தப்படுவதாலும் ஆக்கிரமிக்கப்படுவதாலும் பிரச்சினைகள் தீவிரமாகின்றன.

தண்ணீர் வெறும் பண்டம் மட்டுமல்ல

பொதுப் பயன்பாட்டில் தண்ணீர் இருக்கும் துறைகளிலும் கூட, தற்காலிகமாகத் தனியாரிடம் கொடுக்கப்படும் தண்ணீர் நிர்வாகம், பிறகு நகராட்சிகளால் திரும்ப எடுத்துக்கொள்ளப்படுவதையும் காண்கிறோம். தனியார் துறைக்கு ஒரே நோக்கம்தான் - லாபத்தை அதிகப்படுத்துவது. தண்ணீர் மேலாண்மை என்பது தேவைப்படுவோருக்கு அதைப் பெறுவதில் உள்ள சட்டப்படியான உரிமை பற்றியது. தண்ணீர் என்பது இயற்கையாகவே அனைவருக்கும் கிடைக்க வேண்டிய அடிப்படை ஜீவாதாரம். இதை நீதித் துறையும் அங்கீகரித்திருக்கிறது. தண்ணீர் என்பது சுற்றுச்சூழலுடன் இரண்டறக் கலந்தது. எனவே, தண்ணீரை மட்டும் தனித்துப் பிரித்து, அதையும் ஒரு நுகர்வுப் பண்டமாகப் பார்ப்பது பல்வகை சீர்கேடான முடிவுகளுக்கே இட்டுச் செல்லும்.

டெல்லி மாநில அரசு ஏழைகளுக்கு இலவசமாகத் தண்ணீரைத் தருவதுடன், தண்ணீர் வழங்கலை மேலும் பல பகுதிகளுக்கும் விரிவுபடுத்தியிருக்கிறது, அத்துடன் நல்ல நிர்வாக முறைகளால் இழப்பையும் குறைத்திருக்கிறது. தண்ணீர் மேலாண்மையைத் திறமையாக மேற்கொள்வதும் மேம்படுத்துவதும் சாத்தியம் மட்டுமல்ல அவசியமும்கூட. இந்த வழி மட்டும்தான் நம்மை முன்னேற்றும்.

- இமான்ஷுதாக்கர், தெற்காசிய மக்கள், ஆறுகள், அணைகள் இணைந்த வலையமைப்பின் ஒருங்கிணைப்பாளர், 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தண்ணீர் மற்றும் சுற்றுச்சூழல் துறையுடன் தொடர்புள்ளவர். தொகுப்பு: அனுராதா ராமன்



வாக்குறுதி தந்தபடி அரசு தண்ணீர் தருகிறதா?





தண்ணீர் என்பது சமூகத்துக்குச் சொந்தமானது. அதை அரசு சொந்தம் கொண்டாட முடியாது. தனியார் துறை நிச்சயமாகத் தண்ணீரைத் தனதாக்கிக்கொள்ளக் கூடாது. தான் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுக்காகத் தண்ணீரைக் காப்பாற்ற வேண்டிய காவலன்தான் அரசு. தண்ணீர் வளத்தைக் காப்பாற்றி, முறையாகப் பயன்படுத்த உதவ வேண்டிய ‘அறக்கட்டளை நிர்வாகி’ என்ற கடமையை அரசு திறமையாகவும் பொறுப்போடும் நிறைவேற்றியிருக்கிறதா? விடை நிச்சயமாக ‘இல்லை’ என்பதுதான்.

இவ்வாறு 50% தண்ணீர், வருவாய் பெற்றுத் தரமுடியாததாக (சுத்தப்படுத்தப்பட்ட கழிவுநீர்) இருக்கிறது. தண்ணீர் வழங்கலில் முறையான கால அட்டவணை கிடையாது. சில பகுதிகளுக்கு மணிக்கணக்கில் தாமதமாகவும், சில பகுதிகளுக்கு வாரத்துக்கு ஒரு நாளும், சில ஊர்களுக்கு 2 வாரங்களுக்கு ஒரு முறையும் குடிநீர் வழங்கப்படுகிறது.

குழாய்கள் மூலம் 60% வீடுகளுக்குக் குடிநீர் வழங்கப்படுகிறது. ஆனால், 4% வீடுகளுக்கான குழாய்களில் மட்டுமே கட்டணத்தை அளவிடும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. எனவே, பெரும்பகுதி தண்ணீர் வீணாகிறது. அதற்கு யாரும் பொறுப்பேற்கும் நிலையும் இல்லை. அன்றாடம் 3,800 கோடி லிட்டர் சுத்தப்படுத்தப்படாத கழிவுநீர் ஆறுகள், ஏரிகளில் கலக்க விடப்படுகிறது.

தனியார் திறமையைக் காக்க வேண்டும்

அறிவிக்கப்பட்டுள்ள 100 பொலிவுறு நகரங்களில் 84-ல் ஒரு நபருக்கு 135 லிட்டர் என்ற அளவில் குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. இந்த அரிய நீராதாரத்தை மேலாண்மை செய்யத்தான் தவறிவிடுகிறோம். வாக்களித்தபடி எல்லோருக்கும் பாதுகாக்கப்பட்ட, சுகாதாரமான குடிநீரை அரசு வழங்கும் என்று காத்திருக்க வேண்டுமா? அல்லது அரசுத் துறை தனியார் துறை கூட்டுச் செயல்பாடு நிர்வாக முறைக்கு மாற வேண்டுமா? இதில் தனியார் துறையின் திறமையான நிர்வாகம் இருக்கும். அரசுத் துறையின் பொறுப்பேற்பும் உடன் வரும். இதனால் தொடர் வளர்ச்சி சாத்தியமாகுமா?

பொதுத் துறை - தனியார் துறை மட்டும் சேர்ந்தால் போதாது, மக்களும் இதில் பங்கேற்பாளராக இருக்க வேண்டும். தனியார் துறையை இதில் ஈடுபடுத்தும்போது அவர்கள் தண்ணீர் மேலாண்மை, விநியோகம் போன்றவற்றுக்குத் தேவைப்படும் மூலதனத்தைக் கொண்டுவருவார்கள்.

இதை ஒரு உதாரணம் கொண்டு விளக்குகிறேன். நாகபுரியில் அரசுத் துறை, தனியார் துறை கூட்டுச் செயல்பாடு தொடங்கி 5 ஆண்டுகள் ஆகின்றன. யாருக்குத் தண்ணீர் வழங்குவது, யாருக்கு வழங்குவதை நிறுத்துவது என்பதைத் தீர்மானிக்கும் உரிமை மாநகராட்சியுடையது. தண்ணீர் பயன்பாட்டுக்கான கட்டணத்தைத் தீர்மானிப்பதும் மாநகராட்சிதான். எனவே, கட்டணமும் விலையும் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டுவிட்டது. இந்த ஏற்பாட்டால் நகரில் இருக்கும் ஏழைகளின் குடியிருப்புகள், அடுக்ககங்கள், பணக்காரர் களின் மாளிகைகள் என்று எல்லாவற்றுக்குமே 24 மணி நேரமும் குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. குழாய்களுடன் தண்ணீர் அளவைக் கணக்கிடும் கருவியும் பொருத்தப் பட்டுவிடுகிறது. இதில் அதிகப் பலன் அடைகிறவர்கள் குடிசைப் பகுதி மக்கள்தான். அவர்கள் தினமும் 6 மணி முதல் 8 மணி நேரம் பக்கெட் தண்ணீருக்காகக் காத்திருக்க வேண்டியதில்லை.

நாகபுரி தரும் பாடம்

நாகபுரியில் வாரம் முழுக்க 24 மணி நேரமும் குழாய்களில் தண்ணீர் வருகிறது. தனியார் நிர்வகிக்கும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அன்றாடம் 20 கோடி லிட்டர் கழிவுநீர் கிடைக்கிறது. நாகபுரியில் உள்ள அனல் மின்நிலையத்தின் தண்ணீரையும் இப்படிச் சுத்திகரித்துப் பயன்படுத்தினால், அடுத்த 30 ஆண்டுகளுக்குத் தண்ணீர் வழங்கலுக்கென்று அரசுக்கு மூலதனச் செலவு, நடைமுறைச் செலவு என்ற இரண்டுமே இருக்காது. கழிவுநீரால் ஆறு, ஏரிகளில் தண்ணீர் கெட்டுப்போவது நின்றுவிடும். அனல் மின்நிலையத்தின் 20 கோடி லிட்டர் தண்ணீர், நகரப் பயன்பாட்டுக்குக் கிடைக்கும். இது 18 லட்சம் மக்களின் புழக்கத்துக்குப் போதுமானதாகும். அதாவது, அடுத்த 20 அல்லது 25 ஆண்டுகளுக்கு 18 லட்சம் பேரின் தண்ணீர் தேவை தொடர்ந்து பூர்த்திசெய்யப்படும்.

- அருண் லக்கானி, விஸ்வராஜ் அடித்தளக் கட்டமைப்பின் தலைவர், மேலாண் இயக்குநராகப் பதவிவகிப்பவர். நாகபுரி மாநகராட்சியுடன் இணைந்து மக்களுக்குக் குடிநீர் வழங்குவதுடன் கழிவுநீரைச் சுத்தப்படுத்தி மறு பயன்பாட்டுக்குத் தந்துவருகிறது இந்த அமைப்பு.

பொது அறங்காவலர் கொள்கையே தீர்வு

தண்ணீர் வளத்தைத் தனியார்மயமாக்கலாமா என்று கேள்வி கேட்கும்போது, இதுவரையில் இல்லை என்ற எண்ணத்திலேயே அப்படிக் கேட்கிறோம். உண்மையிலேயே அப்படித்தானா? இந்தியாவின் தண்ணீர் ஆதாரம் அதிகம் எடுக்கப்படுவது நிலத்தடியிலிருந்துதான். நம்முடைய கிராமப்புற, நகர்ப்புறக் குடிநீர் தேவையில் 80% நிலத்தடி நீர் சேமிப்பிலிருந்துதான் எடுக்கப்படுகிறது. தொழில்துறைக்கான தண்ணீர், விவசாயத்துக்குத் தேவைப்படும் தண்ணீரில் மூன்றில் இரண்டு மடங்கு என்று எல்லாமே நிலத்தடி நீர் மூலம்தான் பூர்த்தியாகிறது.

இந்தியாவில் உள்ள நிலத்தடி நீர், 19-வது நூற்றாண்டில் பிரிட்டிஷ் அரசு இயற்றிய சட்டத்தின்படிதான் நிர்வகிக்கப்படுகிறது. நிலம் வைத்திருக்கும் அனைவரும் அவரவர் நிலத்தடியில் கிடைக்கும் தண்ணீரை வரம்பில்லாமல் எடுத்துப் பயன்படுத்திக்கொள்ள உரிமை பெற்றவர்கள் என்கிறது அச்சட்டம். எனவே, தனியாருக்குச் சொந்தமான நில உடைமை என்பது அந்த நிலத்தில் கிடைக்கும் தண்ணீர் மீதான முழு உரிமை என்றாகிறது. இப்படி பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தின் சீதனமாக நாம் பெற்றிருக்கும் சட்டத்தால், இந்தியாவின் பெரும்பகுதி நீராதாரம் தனியார்வசம்தான் உள்ளது, பிரச்சினையும் அதனால்தான்.

நிலத்தடி நீர்மட்டப் பிரச்சினை

இந்தியாவின் மூன்றில் இரண்டு பங்கு நிலப் பகுதிக்குக் கீழே கடினமான பாறைகள்தான் இருக்கின்றன. பாறைக்கு அடியில் கிடைக்கும் தண்ணீரை ஆழ்துளைக் கிணறுகள் மூலம் வெளியே எடுத்துவிட்டால், மழை நீரைச் சேமித்தால்கூட அது பழைய அளவுக்கு நீரை அங்கே நிரப்பிவிடுவதில்லை. பழைய அளவுக்கு நீர் இருப்பு உயர அனேக ஆண்டுகள் பிடிக்கும்.

1970-களுக்குப் பிறகு நிலத்தடி நீரை ஆழ்துளைக் கிணறுகள் மூலம் உறிஞ்சத் தொடங்கினோம். போட்டிபோட்டு ஆழ்துளைக் கிணறுகளைத் தோண்டியதால் நிலத்தடி நீர்மட்டம் வேகமாகச் சரிந்தது. இப்போது எத்தனை அடி ஆழம் தோண்டினாலும் தண்ணீர் மிகக் குறைவாக மட்டுமே கிடைக்கிறது. அந்தத் தண்ணீரும் குடிப்பதற்கேற்ற நல்ல தரத்தில் இருப்பதில்லை. பஞ்சாபியர்கள் யுரேனியம் கலந்த தண்ணீரை நிலத்தடியிலிருந்து எடுத்துக் குடிக்கிறார்கள்.

வங்காளிகள் ஆர்சனிக் கலந்த தண்ணீரைக் குடிக்கிறார்கள். நிலத்தடி நீரைத் தனியார் சொத்து என்று கருதுவதால் போட்டி தொடர்கிறது. கேரளத்தின் பிளாச்சி மடாவில் மிகப் பெரிய குளிர்பான நிறுவனம் அதிக ஆழத்துக்குக் குழாய்களை இறக்கி நிலத்தடி நீரை உறிஞ்சியதால், ஊர் மக்கள் திரண்டு போராட்டம் நடத்தியதுடன் நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்துள்ளனர்.

ஆந்திரம் காட்டும் வழி

தண்ணீர் வளம் தனியாரிடம் இருப்பதால் ஏற்பட்டுள்ள இந்தப் போட்டியைத் தடுத்து நீர்வளத்தைக் காப்பாற்ற என்னதான் வழி? அனைத்துக் கிணறுகளையும் தேசியமயமாக்கிவிடலாமா? கிணறு தோண்ட உரிமம், பர்மிட் அவசியம் என்று நிபந்தனை விதிக்கலாமா? நாடு முழுக்க மூன்று கோடிக்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் இருக்கும் என்று தெரிகிறது. இந்தக் கிணறுகள் அனைத்தையும் கண்காணிப்பது இயலாத காரியம். தண்ணீர் என்பது அனைவருக்கும் பொதுவான இயற்கை வளம் என்பதை உணரச் செய்து, அளவோடு அதைப் பயன்படுத்துவதுதான் ஒரே வழி.

ஆந்திரத்தின் கடினமான பாறைப் பகுதிகளில் வசிக்கும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் நாட்டுக்கே இதில் வழிகாட்டிகளாக இருக்கின்றனர். நிலத்தடி நீர் என்பது உறிஞ்சப்பட்டால் மீண்டும் ஊறாது, மழை நீர் சேகரிப்பிலும் இருப்பு கணிசமாக உயர்ந்துவிடாது, நாளடைவில் குடிநீருக்கே பஞ்சம் வரும் என்பதை உணர்ந்துகொண்டனர். நிலத்தடி நீர்ப் பயன்பாட்டைக் குறைக்க அனைவரும் கூடித் திட்டமிட்டனர்.

அதிகத் தண்ணீர் தேவைப்படாத பயிர் வகைகளை மட்டுமே சாகுபடி செய்யும் பயிர்வாரி முறைக்கு மாறியுள்ளனர். மரம் வளர்ப்பு, மழை நீர் சேகரிப்பு போன்றவற்றையும் தீவிரமாகத் தொடங்கியுள்ளனர்.

பொது அறக்கட்டளையில் தண்ணீர்

சமீபத்தில் தேசியத் தண்ணீர் கட்டமைப்புச் சட்டகத்துக்கு வரைவு வாசகம் தயாரிக்கப்பட்டுள்ளது. “இந்திய மக்களின் பொதுப் பாரம்பரியம் தண்ணீர். இந்த மண்ணுடனும், சமூகத்துடனும் வரலாற்றுடனும் கலாச்சாரத்துடனும் தண்ணீருக்கு இருக்கும் தொடர்பைப் பிரித்துவிட முடியாது. பல கலாச்சாரங்களில் தண்ணீர் புனிதமாகப் பார்க்கப்படுகிறது. அதில் தெய்வீகத்தைக் காண்கிறார்கள். அத்தகைய தண்ணீரைத் தனியார்மயமாக்கக் கூடாது. மக்களின் பயன்பாட்டுக்காகத்தான் தண்ணீரை அரசு ஒரு அறக்கட்டளை நிர்வாகி போல மேலாண்மை செய்கிறது. அனைவரின் பயன்பாட்டுக்காகத் தண்ணீரைக் காப்பாற்ற வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. ஒருவர் பெறும் தண்ணீர், இன்னொருவரின் அடிப்படை உரிமையைப் பறிப்பதாக இருக்கக் கூடாது. தண்ணீர் மேலாண்மையில் ஒரு தனியார் முகமையை ஈடுபடுத்துவது, அவர்களுடைய தனி உடமையாக ஆக்குவதாகிவிடாது” என்கிறது வரைவு வாசகம்.

தண்ணீரை அனைவருமே பொது அறக்கட்டளைதாரராக நிர்வகிப்பதுதான் தீர்வே தவிர, தனியார் வசம் ஒப்படைப்பதோ, தேசிய உடமையாக்குவதோ அல்ல.

- மிஹிர் ஷா, சமாஜ் பிரகதி சஹயோக் என்ற அமைப்பின் செயலர்.

(இமான்ஷு தாக்கர், அருண் லக்கானி இருவரும் அனுராதா ராமனுக்குப் பேட்டியளித்தனர்)

சுருக்கமாகத் தமிழில்: சாரி © ‘தி இந்து’ ஆங்கிலம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x