Last Updated : 15 Mar, 2017 09:18 AM

 

Published : 15 Mar 2017 09:18 AM
Last Updated : 15 Mar 2017 09:18 AM

சிரியாவில் கருகும் தளிர்கள்!

சிரியாவில் போரினால் ஏற்படும் அச்சம், எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையின்மை, மோசமான சூழலில் கடினமான வேலைகளைச் செய்தாக வேண்டிய நிலை, பெரியவர்களின் கடுகடுப்பு, பசி தாகம் உடல் வலி ஆகியவற்றுக்கு இடையிலும் வேலை செய்தாக வேண்டிய கட்டாயம், தண்டனைக்கு ஆளாகுதல், பட்டினி கிடக்க நேர்தல் என்று பலவித துயரங்களுக்கும் ஆளாகிறார்கள் குழந்தைகள்!

நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரில் பங்கேற்கும் சிறார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உடல் உறுப்புகளை இழந்து முடமாவோர் எண்ணிக்கையும், இறப்போர் எண்ணிக்கையும்கூட அதிகரித்து வருகிறது. ஏழு வயது நிரம்பிய சிறுவன்கூட போர் நடக்கும் களத்தின் முன் வரிசைக்கு அனுப்பப்படுகிறான். சிறைக் காவலாளியாக, பிடிபடும் எதிரிகளை அருகிலிருந்து கொல்பவனாக, தற்கொலைப்படை வீரனாக, உடலில் வெடிகுண்டுகளைக் கட்டிக்கொண்டு எதிரிகளை நோக்கிப் பாய்பவனாகப் பயன்படுத்தப்படுகிறான்.

2011-ல் தொடங்கிய சிறார்களைப் போரில் ஈடுபடுத்தும் போக்கு உச்சத்தை எட்டிக் கொண்டிருக்கிறது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் அங்கமான ‘யுனிசெஃப்’ இது தொடர்பான அறிக்கையைத் தயாரித்திருக்கிறது. இந்த அறிக்கை, ஆதாரபூர்வமாகக் கிடைக்கும் ஆவணங்களின் அடிப்படையில் மட்டும்தான் எண்ணிக்கைகளைச் சேர்த்துக்கொள்கிறது. இந்த அறிக்கையில் உள்ளதைப் போல பல மடங்கு எண்ணிக்கையில் சிறார்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

2016-ல் மட்டும் 652 குழந்தைகள் போரில் கொல்லப்பட்டுள்ளனர். இது அதற்கு முந்தைய ஆண்டைவிட 20% அதிகம். 2016-ல் போரில் ஈடுபட 850 சிறார்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதற்கு முந்தைய ஆண்டு 331 பேர் தேர்வுசெய்யப்பட்டனர்.

சிறார்களின் அவல நிலை

“சிரியாவில் சிறார்களின் நிலைமை படுமோசமாகிக் கொண்டிருக்கிறது. எல்லைச் சாவடிகளைக் காவல் காப்பது, கனரகத் துப்பாக்கி போன்ற ஆயுதங்களைக் கையாள்வது, கைதிகளைக் காவல் காக்க சிறை வளாகத்தில் வேலை செய்வது என்று பலவற்றுக்கும் சிறார்கள்தான் பயன்படுத்தப்படுகின்றனர். பதின்ம வயதை எட்டிய சிறுவர்கள், தங்களைவிட வயது குறைந்த சிறுமிகளைப் பாலியல்ரீதியாகத் துன்புறுத்துகின்றனர்” என்கிறார் யுனிசெஃப் அமைப்பின் பிராந்திய ஊடகத் தொடர்பாளர் ஜூலியட் தவ்மா. குழந்தைகளும், குழந்தை களைக் கொண்ட குடும்பத்தினரும் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

‘குழந்தைகளைக் காப்பாற்றுங்கள்’ என்ற அமைப்பினர் ஏராளமான சிறார்களை அணுகிப் பேட்டி கண்டனர். சிறார்களில் 70% பேர் உளவியல்ரீதியாக நெருக்கடிகளுக்கு உள்ளாகியிருக்கின்றனர். போரினால் ஏற்படும் அச்சம், எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையின்மை, மோசமான சூழலில் கடினமான வேலைகளைச் செய்தாக வேண்டிய நிலை, பெரியவர்களின் கடுகடுப்பு, பசி தாகம் உடல் வலி ஆகியவற்றுக்கு இடையிலும் வேலை செய்தாக வேண்டிய கட்டாயம், விளையாட்டு, பொழுதுபோக்கு ஆகியவற்றுக்கு இடம் இல்லாமை, பெரியவர் களால் தாக்கப்படுதல், தண்டனைக்கு ஆளாகுதல், பட்டினி கிடக்க நேர்தல் என்று பலவித துயரங்களுக்கும் ஆளாகின்றனர். இவை போக, போரில் ஏற்படும் காயம், நோய் காரணமாக உடலில் ஏற்படும் பாதிப்பும் சேர்ந்துகொள்கிறது.

இத்தகைய குழந்தைகள் இரவில் படுக்கையிலேயே சிறுநீர் கழிப்பது, பேசும் சக்தியை இழப்பது, திடீரென்று கோபப்பட்டு வன்முறையில் இறங்குவது, வசைபாடுவது ஆகியவற்றில் ஈடுபடுகின்றனர். போரில் சிறு குழந்தைகளும் விடலைகளும் ஈடுபடுத்தப்படுவது சிரியாவின் 59% பெரியவர் களுக்குத் தெரியும். காவல் சாவடிகளிலும் போர்ப் பாசறைகளிலும் சிறுவர்கள் வேலை செய்கிறார்கள் என்பதும் தெரியும்.

60 லட்சம் பேர் காத்திருப்பு

இப்போது 60 லட்சம் சிரிய சிறார்கள் மனிதாபிமான உதவிக்காகக் காத்திருக் கிறார்கள். 2012-ல் இருந்ததைவிட இது 12 மடங்கு அதிகம். 28 லட்சம் குழந்தைகள் மீட்பு நிவாரணக் குழுக்களால்கூட நெருங்க முடியாத தொலைதூரங்களில் வசிக்கின்றனர். 3 லட்சம் குழந்தைகள் போரில் முற்றுகையிடப்பட்ட பகுதிகளிலேயே வாழ்கின்றனர். 23 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் துருக்கி, லெபனான், ஜோர்டான், எகிப்து, இராக் நாடுகளில் அகதி முகாம்களில் தங்கியிருக்கின்றனர்.

சிரியாவில் இருந்தாலும் வெளிநாடுகளில் இருந்தாலும் பெற்றோரால் வேலைக்குப் போக முடியவில்லை என்பதால், சிறார்கள்தான் வேலைக்குச் செல்கின்றனர். குப்பை பொறுக்குவது, வாகனங்களைத் துடைத்துச் சுத்தம் செய்து தருவது, மரவேலை செய்வோருக்கு உதவுவது, சிகை திருத்தும் நிலையங்களில் வேலை செய்வது, ஹோட்டல்களில் உபசரிப்பு வேலையில் ஈடுபடுவது என்று ஊதியம் குறைந்த, ஆனால் கால வரம்பே இல்லாத வேலைகளில் ஈடுபடுகின்றனர். லெபனானில் இத்தகைய சிறுவர்கள் அன்றாடம் 10 மணி நேரம் வேலை செய்கின்றனர். சிலர் பிச்சை எடுக்கின்றனர்.

சிரியாவில் சுமார் 20 லட்சம் சிறார்கள் பள்ளிக்கூடத்துக்குப் போவதில்லை. பள்ளிக் கூடங்களில் மூன்றில் ஒரு பங்கு, மாணவர்கள் செல்லும் நிலையில் இல்லை.

சிரியாவுக்கு அருகில் உள்ள நாடுகளில் அகதிகளாகத் தங்கியிருக்கும் 5 லட்சம் அகதிக் குழந்தைகளும் பள்ளிக்கூடத்துக்குப் போக முடியவில்லை. ஆனால், அவர்களுக்குப் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருக்கிறது. அரபி, ஆங்கிலம், கணித பாடங்களைப் போர் நடக்கும் இத்லிப் மாகாணத்தில் உள்ள நிலத்தடி சுரங்க அறைகளில் படிக்கிறவர்களும் இருக்கின்றனர். சுமார் 12,000 பேர் கடுமையான போர்ச் சூழலிலும் ஆண்டுத் தேர்வு எழுதினர். குழந்தைகளின் பெற்றோருக்கு ரொக்கமாகப் பணம் கொடுத்தால், அவர்கள் சிறார்களை வேலைக்கும் அனுப்ப மாட்டார்கள், சிறு வயதிலேயே திருமணமும் செய்துதராமல் படிக்க வைப்பார்கள் என்கிறார் தவ்மா.

4 வயதுத் தொழிலாளி

லெபனானில் ஃபரேஸ் என்ற இளம் தொழிலாளிக்கு வயது 4. “எனக்கு எழுதவோ படிக்கவோ தெரியாது. நீல வானம், கடல், சூரியன் ஆகிய மூன்றையும் படமாக வரைவேன். இங்குள்ள ஹோட்டலில் சர்வராக இருக்கிறேன். வாடிக்கையாளர்கள் கேட்டால் பட்டாணி, சோளக்கதிர், ஹூக்கா, உருளைக்கிழங்கு, காய்கறி போன்றவற்றை எடுத்துவந்து தருவேன். கடையைப் பெருக்கிச் சுத்தம் செய்வேன். எனக்கு வீட்டிலிருக்கப் பிடிக்கவில்லை. அது சிறை மாதிரி இருக்கிறது. இங்கே எனக்குப் பொழுதுபோகிறது” என்கிறான் ஃபரேஸ்.

“நான் அறுவை சிகிச்சை செய்யும் டாக்டராக விரும்புகிறேன். சிரியாவில் போரில் காயம் அடைந்தவர்களுக்கும் நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்க விரும்புகிறேன். சிரியாவில் போர் முடிந்து அமைதி திரும்ப வேண்டும். நாங்கள் மீண்டும் தாய்நாடு திரும்ப வேண்டும் என்றே கனவு காண்கிறேன். போர் இல்லாத உலகம் வேண்டும் என்ற கனவும் எனக்குள் இருக்கிறது” என்கிறாள் 12 வயது டார்சி.

இத்தகைய குழந்தைகளின் நலன் காக்கப்பட சிரியாவில் விரைவில் அரசியல் தீர்வு காண வேண்டும், போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று யுனிசெஃப் அழைப்பு விடுக்கிறது. போரினால்தான் தாங்கள் அகதிகளாகவும் சிறார் தொழிலாளர்களாகவும் வேலைசெய்ய நேர்கிறது என்று குழந்தைகள் அறிந்திருக்கிறார்கள்.

சிரியாவிலும் பிற நாடுகளிலும் அகதிகளா கவும் தொழிலாளர்களாகவும் உள்ள சிறார்கள் மீண்டும் நாடு திரும்பவும், பள்ளிக்கூடம் சென்று படிப்பைத் தொடரவும் உலக நாடுகள் அக்கறை காட்ட வேண்டும் என்கிறார் தவ்மா. உலகம் கவனிக்கிறதா?

சுருக்கமாகத் தமிழில்: சாரி

© ‘தி கார்டியன்’

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x