Last Updated : 23 Feb, 2017 09:34 AM

 

Published : 23 Feb 2017 09:34 AM
Last Updated : 23 Feb 2017 09:34 AM

மக்களைக் காக்கும் மருத்துவர்களை யார் காப்பது?

சமீபத்தில் மருத்துவக் கல்லூரி ஒன்றில் 40-லிருந்து 65 வயதுக்கு உட்பட்ட 250 மருத்துவர்களிடமும் செவிலியர்களிடமும், ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ஆராய்ச்சி மையம் மேற்கொண்ட ஆய்வில், மருத்துவர்கள் பாதிப் பேருக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாகத் தெரியவந்திருக்கிறது.

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மரணமடைந்த ஒவ்வொரு 20 மருத்துவர்களிலும் 15 பேர் நடுத்தர வயதுள்ளவர்கள் என்பதும், இவர்கள் அனைவரும் மாரடைப்பால் மரணம் அடைந்தவர்கள் என்பதும் இதை நிரூபிக்கிறது. ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வைத் தந்து மக்களைக் காப்பாற்ற வேண்டியவர்கள் மருத்துவர்கள். அவர்களே தங்கள் ஆரோக்கியத்தைக் கெடுத்துக்கொள்கிறார்கள் என்றால், அதைத் தனிப்பட்டவர்களின் பிரச்சினை என்று கடந்துபோக முடியாது.

ஓய்வில்லாத பணி

உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலின்படி, நாட்டில் 1,000 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்க வேண்டும். ஆனால், நம் நாட்டில் 7,000 பேருக்கு ஒருவர்தான் இருக்கிறார். அதேநேரத்தில், நோயாளிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துவருகிறது. இவர் களுக்கு மருத்துவர்களின் தொடர் கவனிப்பு எல்லா நேரங்களிலும் தேவைப்படுகிறது. அதே சமயம், பணி அழுத்தம் காரணமாகப் பல மருத்துவர்களுக்குப் போதிய ஓய்வு கிடைக்காமல் போகிறது. இதனால் மருத்துவர் களில் பலர் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, மன அழுத்தம் என்று பல பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள்.

பல முன்னோடி மருத்துவர்கள் பெருநகரங் களில் பல இடங்களில் தினமும் குறிப்பிட்ட நேரங்களில் நோயாளிகளைக் கவனிக்கின்றனர். அதிலும் மாலை நேரங்களில் சென்னை போன்ற வாகன நெரிசல் அதிகமுள்ள நகரங்களில் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குப் பயணிப்பது பெரும்பாடு. இதனால் அனுதினமும் பல மருத்துவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது.

மற்றொரு பக்கம் கார்ப்பரேட் மருத்துவ மனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் வாராந்திர இலக்கு, மாதாந்திர இலக்கு போன்றவற்றை எட்ட வேண்டிய பணிச் சுமையைச் சந்திக்கின்றனர். கால் நூற் றாண்டுக்கு முன்பு வரை நோயாளிக்குக் கிடைக்கும் சிகிச்சை விஷயத்தில் வெற்றி கிடைத்தாலும், தோல்வியை எட்டினாலும் மருத்துவரின் மீதுள்ள நம்பிக்கை காரணமாக எதையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் மக்களுக்கு இருந்தது. இப்போதோ நிலைமை தலைகீழ். நோயாளிகள் சிகிச்சைக்காகச் செலவிடும் தொகை மிக அதிகம் என்பதால், மருத்துவரிடம் நோயாளிகளின் எதிர்பார்ப்பும் அதிகம். சிகிச்சை தோல்வி என்றால், மருத்துவரைப் பழிப்பதும், சமயங்களில் மருத்துவமனையைத் தாக்குவதும் நிகழ்கிறது. இதனால், பல மருத்துவர்களுக்கு மனச்சுமையும் அதிகரிக்கிறது.

வெளி நோயாளிகளுக்குச் சிகிச்சை கொடுக்கும் மருத்துவர்கள் பெரும்பாலும் உட்கார்ந்த நிலையிலேயே பணி செய்வதால், உடல் இயக்கம் குறைந்து, உடற்பருமனுக்கு வழி விடுகிறது. அத்தோடு, 100-ல் 70 மருத்து வர்கள் தேவையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வதில்லை என்றும் உணவு விஷயத்திலும் அக்கறை கொள்வதில்லை என்றும், 100-ல் 25 பேருக்குப் புகைபிடிக்கும் பழக்கமும் மது அருந்தும் பழக்கமும் இருப்பதாக ஓர் ஆய்வு கூறுகிறது.

மக்களின் ஆரோக்கியம் காக்க ஆண்டுக்கு ஒருமுறை பரிந்துரைக்கப்படும் மாஸ்டர் ஹெல்த் செக்-அப் போன்ற தற்காப்புப் பரிசோதனைகளைப் பெரும்பாலான மருத்துவர்கள் தங்கள் ஓய்வில்லா பணிகளுக்கு இடையில் நேரம் ஒதுக்கமுடியாமல் தவிர்த்து விடுகின்றனர் என்பதையும் அந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. இதன் காரணமாக இவர்களுக்கு ரத்த அழுத்தம் மற்றும் ரத்த கொலஸ்ட்ரால் அதிகரிப்பதும் நீரிழிவுக்கு இடம் கொடுப்பதும் பொதுமக்களைவிட இரண்டு மடங்கு அதிகம் என்கிறது அதே ஆய்வு.

இளம் மருத்துவர்களின் நிலை

இப்போது மருத்துவப் பட்டம் பெறுவதற்குத் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பல கோடி ரூபாய் செலவழிக்கின்றனர். அதன் பிறகு, சுயமாக மருத்துவமனை தொடங்குவதற்கும் பல லட்சங்களில் பணம் செலவாகிறது. பலரும் வங்கிகளில் கடன் வாங்கித்தான் இதைச் சமாளிக்கின்றனர். அந்தக் கடனை அடைப்பதற்குப் பகல், இரவு பாராமல் உழைக்கின்றனர். போட்டிகள் நிரம்பிய மருத்துவத் தொழிலில் மூத்த மருத்துவர் களுடன் இன்றைய இளம் மருத்துவர்களும் போட்டிபோட்டு உழைப்பதால், இவர்களில் பெரும்பாலானோர் உடல் நலனை அலட்சியப் படுத்திவிடுகின்றனர். நேரத்தோடு சாப்பிட முடியாமலும் போதிய உறக்கம் இல்லாமலும் பணிபுரிவதால், மன அழுத்தம் அதிகரித்து இளம் வயதிலேயே இவர்களுக்கு நீரிழிவு வந்துவிடுகிறது; உயர் ரத்த அழுத்தம் சேர்ந்து கொள்கிறது.

என்ன செய்யலாம்?

தமிழகத்தின் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உயர் சிறப்புப் படிப்புகளுக்கான (Super specialty) இடங்களை மக்கள்தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப அதிகரிக்க வேண்டும். எல்லா அரசு மருத்துவமனைகளிலும் எல்லாத் துறைகளிலும் உயர் சிறப்பு மருத்துவர்களைப் பணியில் அமர்த்துவதற்கு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். அந்தந்த உயர் சிறப்பு மருத்துவத் துறைக்கான மருத்துவக் கட்டமைப்புகள், மருத்துவக் கருவிகள், துணை மருத்துவப் பணியாளர்கள் மற்றும் தேவையான நிதி ஒதுக்கீடு போன்றவற்றை வளர்த்தெடுப்பதிலும் அரசு அக்கறை காட்ட வேண்டும். மருத்துவர்களுக்குப் போதிய ஓய்வு கிடைப்பதை உறுதிப்படுத்தும் விதமாகப் பணி செய்யும் காலம் அமைய வேண்டியது முக்கியம்.

அறம் சார்ந்த கடமை

இந்திய மருத்துவச் சங்கத்தின் ஒவ்வொரு கிளை சார்பிலும் மருத்துவர்களுக்கு காலாண்டு செக்-அப், ஆண்டுக்கு ஒருமுறை மாஸ்டர் ஹெல்த் செக்-அப் போன்ற முன்பரிசோத னைகள் செய்யப்படுவதைக் கட்டாயமாக்க வேண்டும். கார்ப்பரேட் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களின் ஆரோக்கியம் சீராக உள்ளது எனும் சான்றிதழை அந்தந்த மருத்துவமனைகள் ஆண்டுதோறும் பெற வேண்டும் என்ற விதி அமைக்கப்பட வேண்டும்.

சமச்சீரான உணவை உண்பது, உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்குவது, வாரம் ஒரு நாள் முழுமையாக ஓய்வெடுப்பது, மன அழுத்தத்துக்கு இடம் கொடுக்காமல் இருப்பது போன்ற வாழ்வியல் விதிகளை மேற்கொண்டு ஆரோக்கியம் காக்க வேண்டிய கடமை பொதுமக்களுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு மருத்துவருக்கும் உண்டு. இப்படி ஆரோக்கியம் காப்பதன் மூலம் தங்களைக் காத்துக்கொள்வது மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மக்கள் சமுதாயத்தையும் காக்க வேண்டிய அறம் சார்ந்த கடமை எல்லா மருத்துவர்களுக்கும் உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

- கு.கணேசன்,
பொதுநல மருத்துவர்,
தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x