Published : 24 Apr 2017 09:08 AM
Last Updated : 24 Apr 2017 09:08 AM

சத்தமின்றிச் செயலாக்கப்படும் தேசிய நிகழ்ச்சி நிரல்!

இந்தியின் மாபெரும் எழுத்தாளர் முன்ஷி பிரேம்சந்த்தின் நூற்றாண்டு விழாவையொட்டி 1980-ல், டெல்லி மாவ்லன்கர் ஹாலில் ஒரு கருத்தரங்கு நடந்தது. ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக இந்தி மொழிப் பேராசிரியர் நம்வார் சிங் தலைமை. நானும் பேச அழைக்கப்பட்டிருந்தேன்.

நம்வார் சிங் இடதுசாரிச் சிந்தனையாளர். அவர் சோவியத் யூனியன் (அப்போது அது உடையவில்லை) மரபின்படி, ஒரு ‘பிரஸீடி’யும் (உட்குழு) அமைத்து, என்னையும் உறுப்பினராக்கினார். அவர் என்னைப் பேச அழைத்தார். நான் ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தேன். உடனே, ‘இந்தி மே போலோ’(இந்தியில் பேசு) என்ற ஆரவாரம் கிளம்பியது. அங்கு குழுமியிருந்தவர்களில் பெரும்பான்மையோர், கல்லுரி ஆசிரியர்கள், எழுத்தாளர்கள்.

‘எனக்கு இந்தியில் பேச வராது. ஆனால், பிரேம்சந்த் எழுத்தைப் பற்றி ஓரளவு நன்கு அறிவேன். என் கருத்துக்களை நான் தமிழில் பகிர்ந்துகொள்ளலாம். ஆனால், இங்கு எத்தனை பேருக்குத் தமிழ் தெரியும் என்பது எனக்குத் தெரியாது. ஆகவே, ஆங்கிலத்தில் பேசுகிறேன்’என்றேன்.

‘தமில் மே போலோ, நை ஆங்கிரஸி’என்ற கூக்குரல் மேலோங்கியது.

‘இங்கு எத்தனை பேருக்குத் தமிழ் தெரியும்?’ என்று கேட்டேன்

இரண்டு பேர் கை தூக்கினார்கள்.’

‘இங்கு கூட்டத்தில் நூறு பேர் இருக்கலாம். நான் இரண்டு பேருக்காக மட்டும் தமிழில் பேச வேண்டுமா?’ என்றேன்.

‘தமிழ் எங்களுக்கு ஓரளவுதான் தெரியும். நாங்கள் கேரளக்காரர்கள்’ என்றார் அவர்களில் ஒருவர்.

லேசாகச் சிரிப்பு அலை.

நாம்வார் சிங் சொன்னார்: ‘முன்ஷிஜி இந்தியாவில் மற்றைய மொழிக்காரர்களால் எப்படி எதிர்கொள்ளப்பட்டிருக்கிறார் என்ப தை அறிவதற்காகவும் இங்கு நாம் கூடியிருக்கிறோம். மொழி இங்கு ஒரு பிரச்னை யாக இருந்துவிடக் கூடாது. இவரை நான் ஆங்கிலத்தில் பேச அனுமதிக்கிறேன்’.

அவ்வளவுதான்! ஒரே கூச்சல், அமளி. ‘இந்தி மே போலோ’என்ற கோஷம்.நான் கூட்டத்தை விட்டு அமைதியாக வெளி யேறினேன். இப்போது, இந்தி ஆட்சி மொழி யாகவும் பேச்சு மொழியாகவும் கட்டாய மாக்கப்பட்டுவரும் சூழ்நிலையில், எதிர் காலத்தில் நிகழப்போவதை, என் அனுபவத்தைப் பின்புலமாகக் கொண்டு சிந்தித்துப் பாருங்கள்.

நான் டெல்லி பல்கலைக்கழகத்தில் இருந்தபோது, இந்தி மொழியை முதுகலைப் பட்டத்துக்காகப் படிக்கிறவர்கள், இன்னொரு மொழியாக, இந்திய மொழிகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற ஒரு திட்டம் கொண்டுவந்தார்கள். அப்போதுதான் இதற்காகவே என்று டெல்லி பல்கலைக்கழகத்தில் நவீன இந்திய மொழிகள் துறை ஆரம்பித்தார்கள். ஆனால், அதே சமயத்தில், இவ்வாறு தேர்ந்தெடுத்துப் படிப்பதும் மாணவர் விருப்பத்தைப் பொறுத்ததாக இருந்தது. பன்னிரண்டு பேப்பர்களில், நான்கு பேப்பர் இந்தி அல்லாத வேறொரு மொழிக்கென்று ஒதுக்கியிருந் தார்கள். பன்னிரண்டு பேப்பர்களையும் இந்தி மொழிப் பாடத்துக்கென்று தேர்ந்தெடுக்கவும் முடியும். அப்போது இன்னொரு மொழி படிக்க வேண்டுமென்ற அவசியமில்லை.

ஆகவே, மிகக் குறைவான மாணவர்களே இந்தி அல்லாத வேறொரு மொழியைத் தேர்ந் தெடுத்தார்கள். அவர்களில் பெரும் பான்மையோர் லிபி ஒற்றுமையின் காரண மாக, தேவநாகிரி லிபி சார்ந்த மொழிகளாகிய, மராத்தி, குஜராத்தி, பெங்காலி, போன்ற மொழிகளைத் தேர்ந்தெடுத்தார்கள். தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில், மொழி அமைப்பில், இந்தி மொழி ஓசைகள் பெரும்பான்மையாக இருந்ததால், அவற்றில் ஒன்றைப் படிக்கச் சிலர் முன்வந்தார்கள்.

தமிழின் தனித்துவத்தின் காரணமாக, இம்மொழியைப் படிக்க விரும்பியவர்கள் மிகக் குறைவு. நடைமுறையில், பன்னிரண்டு பேப்பர்களும் இந்தி மொழிப் படிப்புக்கென்றே தேர்ந்தெடுத்தவர்களுக்குத்தான் எளி தாக வேலை கிடைத்தது. இதனால், இத்திட்டத்தின் கீழ் படிப்பவர்களும் படிப் படியாய்க் குறைந்து, சில ஆண்டுகளில், இத்திட்டமே கைவிடப்பட்டது. இந்தி ஆட்சி மொழியாகவும், முதன்மை மொழியாகவும் ஆகிவிட்டால் ஏற்படப்போகும் எதிர்காலச் சூழ்நிலை இதுதான்.

காலனி ஆட்சியினால் நமக்குக் கிடைத்த லாபங்கள் இரண்டு. ஒன்று, இந்தியா என்ற ஓர் அரசியல் அமைப்பு. இரண்டு, ஆங்கிலக் கல்வி. உணர்ச்சிவயப்பட்ட கோஷங் களுக்காக நாம் இவை இரண்டையும் எக் காரணம் கொண்டும் இழந்துவிடக் கூடாது.

இந்தி மொழி இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்க இயலாது என்பதை நன்கு உணர்ந்தும், சுதந்திரத்துக்குப் பிறகு பல ஆண்டுகள் ஆட்சி புரிந்த காங்கிரஸ் கட்சி, பாசாங்குத்தனமாகச் சில நடைமுறைகளைப் பின்பற்றியது. இந்திரா காந்திக்கு அவர் கட்சியினராலேயோ அல்லது எதிர்க் கட்சியினராலேயோ இடைஞ்சல்கள் வந்தால், பார்லிமெண்டரி துணைக்குழு அமைத்து அங்கத்தினர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிவிடுவது வழக்கம். அவற்றில் ஒன்று, ‘எந்த அளவுக்கு, இந்தி ஆட்சி மொழி என்ற திட்டம், நம் இந்திய வெளிநாட்டுத் தூதரகங்களில் செயல்படுத்தப்பட்டுவருகிறது என்பதை ஆராயும் கமிட்டி. அக்கமிட்டியில், இந்தியை எதிர்க்கும் தமிழ்நாட்டுக் கட்சிகளைச் சார்ந்தவர்களும் உறுப்பினர்களாக இருந்தார்கள் என்பதுதான் வியப்புக்குரிய செய்தி. பாசாங்குத்தனம் என்பது ஆளும் கட்சியின் உரிமை மட்டுமன்று.

ஆனால், லால்பகதூர் சாஸ்திரியும், குல்சாரிலால் நந்தாவும் அரசியல் சட்டத்தைச் செயல்படுத்துவதாகக் கூறி, இந்தியை அரியணையில் ஏற்ற முயன்றது, பாசாங்குத் தனம் இல்லை. அவர்கள் தாங்கள் செய்ய முயன்றதில் உண்மையாகவே நம்பிக்கை வைத்திருந்தார்கள்.

அப்போது தமிழகத்தில் வெடித்த பூகம்பமும் கண்மூடி வித்தையில்லை. பொங்கியெழுந்த படித்த இளைஞர்களின் போர்க் குரல் அது. தமிழ் உணர்வு மட்டுமின்றி, ஆங்கிலத்தை இழந்துவிடக் கூடாது என்ற உரிமைக் குரல். சாஸ்திரியும், நந்தாவும் எளிய மனிதர்கள். இவ்வாறு ஒரு மொழி ஆட்சி ஏற்பட்டால்தான் சர்வாதிகார ஆட்சி சாத்தியம் என்ற சிந்தனை அவர்களுக்கு இருந்திருக்காது என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். எதிர்ப்பு எழுந்ததும் பின்வாங்கிவிட்டார்கள்.

ஆனால், ஆட்சி மொழியாகவும், கல்வித்திட்ட முதன்மை மொழியாகவும், இந்தியைக் கொண்டுவர முயலும் இன்றைய அரசியல் சூழ்நிலையே வேறு. ஒரு கட்சி, ஒரு மொழி, ஒரு சமயம் என்று கத்தியின்றி, ரத்தமின்றி, சாகசச் செயல்முறைகள் மூலம், ஒரு ‘தேசிய’ நிகழ்ச்சி நிரல் படிப்படியாய்ச் செயல்பட்டுவருகிறது. இதை நாம் தெளிவாக உணர வேண்டும். மக்கள் விழித்திருந்தால், மக்கள் பலத்தை எதிர்த்து ஒன்றும் செய்துவிட முடியாது.

- இந்திரா பார்த்தசாரதி, நாவலாசிரியர், நாடக ஆசிரியர்.

தொடர்புக்கு: parthasarathyindira@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x