Last Updated : 12 Jun, 2017 08:24 AM

 

Published : 12 Jun 2017 08:24 AM
Last Updated : 12 Jun 2017 08:24 AM

பிரிட்டன் தேர்தல் முடிவு ஏற்படுத்தியிருக்கும் குழப்பங்கள்!

ஜூன் 8-ல் நடந்த பிரிட்டன் பொதுத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பிரெக்ஸிட் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களால் ஏற்கெனவே குழப்பத்தில் இருக்கும் வாக்காளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் அதன் தலைவர்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது இந்தத் தேர்தல் முடிவு. பிரிட்டன் பிரதமரும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவருமான தெரசா மேவுக்குத்தான் மிகப் பெரிய சிக்கல். தன் கரங்களை வலுப்படுத்த வேண்டி மக்களின் ஆதரவை எதிர்பார்த்து முன்கூட்டியே தேர்தல் நடத்தக் கோரியவர் அவர்தான்.

இன்றைக்கு ஆட்சியைத் தொடர, கூட்டணியை அமைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டது. கன்சர்வேட்டிவ் கட்சிக்குக் கிடைத்திருப்பது 317 இடங்கள்தான். பெரும்பான்மைக்கு 326 இடங்கள் தேவை. ஜனநாயக ஒன்றியக் கட்சியின் ஆதரவுடன் தெரசா மேயின் தலைமையில் ஆட்சி தொடர்வது உறுதியாகிவிட்டாலும், அவர் மேல் கன்சர்வேடிவ் கட்சியினர் கடும் கோபத்தில் இருக்கின்றனர். கட்சியின் நாடாளுமன்ற பலம் குறைந்துவிட்டதுதான் காரணம். அடுத்த இரு ஆண்டுகளில் பிரெக்ஸிட் பேச்சுவார்த்தைகள் முன்வைக்கப்படும்போது, கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர்கள் ஒருமித்த கருத்தில் செயல்படுவார்களா என்பது சந்தேகம்தான்!

பிரெக்ஸிட் விஷயத்தைப் பொறுத்தவரை, பிரிட்டனின் மக்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வசிப்பதும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் மக்கள் பிரிட்டனில் வசிப்பதும் சிக்கலுக்குரிய விஷயங்களாகிவிட்டன. இப்பிரச்சினைகள் தொடர்பாக, கொள்கைத் தடுமாற்றம் ஏற்படும்போது, பிரிட்டன் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடுமையான போக்கை எடுக்கும் என்பதில் ஆச்சரியமில்லை.

தெரசா மேக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் ஜனநாயக ஒன்றியக் கட்சிக்கு தற்போது நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 10. இதன் தலைவர் ஆர்லின் ஃபோஸ்டர் தெரசா மேயுடன் சமீபமாக நல்லுறவு கொண்டிருந்தது இன்று இந்த கூட்டணிக்கு முதுகெலும்பாக இருக்கும் என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.

அதேபோல், ஸ்காட்லாந்து தேசியக் கட்சியின் எண்ணிக்கை 2015 தேர்தலில் 56 ஆக இருந்தது, இன்று 35 ஆகக் குறைந்திருக்கிறது. இதன் மூலம், ஸ்காட்லாந்தின் விடுதலைக்காக இரண்டாவது பொதுக் கணிப்புப் பற்றிய கோரிக்கைக்கு அழுத்தம் கொடுக்கும் பலத்தை அக்கட்சி இழந்திருக்கிறது. இதனால் சற்று நிம்மதி அடைந்திருக்கிறார் தெரசா மே. இதன் காரணமாக ஸ்காட்லாந்து தேசியக் கட்சியின் தலைவரும் ஸ்லாட்லாந்தின் முதல் அமைச்சருமான நிக்கோலஸ் ஸ்டர்ஜனுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி ஆட்சி அமைக்க முடியாமல் போனதும் நிக்கோலஸ் ஸ்டர்ஜனுக்குப் பின்னடைவுதான். தொழிலாளர் கட்சியை எளிதாக அணுகுவதுபோல், கன்சர்வேடிவ் கட்சியை அணுக முடியாது!

இது ஸ்காட்லாந்தின் விடுதலைக் கனவுக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவு.

இதனால், ஸ்காட்லாந்தின் மூத்த குடிமக்களின் மனம் இந்தத் தேர்தலின் முடிவினைக் கொண்டாடும் என்றுதான் தோன்றுகிறது. காரணம், கடந்த பொது வாக்கெடுப்பின்போது ஸ்காட்லாந்து விடுதலைக்கு அதிகம் ஆதரவு காட்டியவர்கள் ஸ்காட்லாந்தின் இளைய சமுதாயத்தினர்தான். இதனால்தான் ஸ்காட்லாந்தின் விடுதலைக்குப் போரிட்டவர்களில் ஒருவரான வில்லியம் வேலஸின் 700-வது பிறந்த நாளை மிக எச்சரிக்கையுடன் கொண்டாடினர் ஸ்காட்லாந்தின் மூத்த குடிமக்கள். ஜனநாயக ஒன்றியக் கட்சியின் கூட்டணியால் எரிச்சலடையப்போவது அயர்லாந்தின் சின் பின் கட்சிதான். அயர்லாந்து நாட்டுடன் வடக்கு அயர்லாந்து ஒருங்கிணைய வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படும் கட்சி இது.

கோர்பினின் பலம்?

முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி கடந்த 2015 தேர்தலில் இருந்ததைவிடக் கூடுதலாக 33 இடங்களைப் பெற்று 262 இடங்களுடன் பலமான கட்சியாகியிருக்கிறது. உண்மையில், ஜெரிமி கோர்பின் தலைமையேற்ற பின்பு தொழிலாளர் கட்சி கொள்கைரீதியாகப் பிரிந்து கிடக்கிறது. கோர்பின் தீவிர இடதுசாரிக் கொள்கையில் நம்பிக்கையுடையவர் என்பதுதான் இதற்குக் காரணம். எதிர்காலத்தில் தொழிலாளர் கட்சி கோர்பின் தலைமையில் ஆட்சியைக் கைப்பற்ற இயலுமா என்ற விவாதத்தையும் இந்தத் தேர்தல் எழுப்பியிருக்கிறது. ஆனால், முன்னாள் பிரதமரும் தொழிலாளர் கட்சியின் முன்னாள் தலைவருமான டோனி பிளேரின் ஆதரவாளர்கள் கை கொடுப்பார்கள் என்பது கேள்விக்குறிதான்.“கோர்பின் தலைமையில் தொழிலாளர் கட்சியால் ஒருபோதும் ஆட்சியைக் கைப்பற்ற முடியாது” என்று டோனி பிளேர் கடந்த ஆண்டு செய்தியாளர்களிடம் கூறியது குறிப்பிடத்தக்கது. வரும் நாட்களில் கார்பனின் தலைமைக்குச் சவால்கள் எழுவது என்பது அவர் தெரசா மேயின் அரசின் முக்கிய நடவடிக்கைகளை, குறிப்பாக பிரெக்ஸிட் பேச்சுவார்த்தை மற்றும் தீவிரவாத அச்சுறுத்தலைத் தடுக்கும் முயற்சிகளை எப்படி எதிர்கொள்கிறார் என்பதைப் பொறுத்தது.

பொருளாதாரப் பாதிப்புகள்

அரசியல் உறுதியற்ற சூழ்நிலைகள் பொருளாதாரரீதியான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. பிரிட்டனில் தொங்கு நாடாளுமன்றம் என்ற சூழ்நிலையால் அந்நாட்டின் நாணயமான பவுண்டு வெகுவாகப் பாதிப்புக்கு உள்ளாக இருப்பதைக் காண முடிகிறது.

பெரும்பான்மை இல்லாத நாடாளுமன்றம் என்ற செய்தி, உலக நாணயச் சந்தைக்கு மட்டுமல்லாமல் உலகப் பங்குச் சந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். பிரிட்டன் நாணய மற்றும் பங்குச்சந்தையில் ஏற்படும் மாற்றங்கள் உலக அளவில் உள்ள மற்ற சந்தைகளில் உடனே பாதிப்பை ஏற்படுத்தும் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால், இது தொடர்பாக பிரிட்டன் நிதியமைச்சரிடமிருந்து இதுவரை எந்தத் தகவலும் தரப்படவில்லை என்று ஐரோப்பாவின் பிற நாடுகளின் பொருளாதார அமைப்புகள் கவலை தெரிவித்திருக்கின்றன. ஐரோப்பாவின் பொருளாதார முன்னேற்றத்தில் பிரிட்டனின் பங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரெக்ஸிட் முடிவுக்குப் பின்பு, இந்தியாவுடனான பிரிட்டனின் பொருளாதார உறவு பலம் பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்புக்கும் இந்தத் தேர்தல் பின்னடைவைத் தந்திருக்கிறது. இந்திய மாணவர்கள் உயர் கல்விக்காக பிரிட்டன் செல்வது கணிசமாகக் குறைந்துள்ள நிலையில், இந்தச் சூழல் கவலையுடன் பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் பிரிட்டனில் மட்டுமல்லாமல், பிற நாடுகளிலும் தாக்கம் செலுத்தியிருக்கிறது இந்தத் தேர்தல் முடிவு. இந்த பிரச்சினைகளையெல்லாம் தெரசா மே எப்படிச் சமாளிப்பார் என்பதுதான் இப்போதைய ‘மில்லியன் பவுண்டு கேள்வி’!

- ஆண்டனி க்ளெமண்ட், மூத்த ஆசிரியர் (ஆசியா பசிபிக்), மாடர்ன் டிப்ளமஸி இணைய இதழ்.

தொடர்புக்கு: casvvigilious@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x