Published : 09 Dec 2013 12:00 AM
Last Updated : 09 Dec 2013 12:00 AM

தப்புக் கணக்கா? தப்பாத கணக்கா?

ஒவ்வொரு தேர்தல் சமயத்திலும் கருத்துக் கணிப்புகளைத் தடைசெய்ய வேண்டும் என்ற குரலை ஏதேனும் ஒரு கட்சியாவது எழுப்புவது வழக்கம். இப்போதைய ஐந்து மாநிலச் சட்டமன்றத் தேர்தல்கள் சமயத்தில், கருத்துக் கணிப்புத் தடைபற்றி தேர்தல் ஆணையமே தீவிரமாக ஆலோசிக்க ஆரம்பித்தது. சில தடைகளையும் விதித்தது. கருத்துக் கணிப்புகளைத் தடைசெய்ய சட்டத்தில் இடமுண்டா என்பது வேறு விஷயம். ஆனால், ஏன் தடைசெய்யச் சொல்கிறார்கள்? கருத்துக் கணிப்புகள் அந்த அளவுக்கு மக்கள் கருத்தைச் சலனப்படுத்தி மாற்றும் வல்லமையுடையனவா என்பதெல்லாம் ஆராய்ச்சிக்குரிய விஷயங்கள்.

தங்களுக்குச் சாதகமாக இருக்கும்போது கருத்துக் கணிப்புகளுக்கு ஆதரவாகப் பேசுவது, பாதகமாக இருக்கும்போது அவற்றை முற்றாக நம்ப முடியாது என்று சொல்வது அரசியல் கட்சிகளின் வழக்கம். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல்களில் இதுவரை முடிவுகள் தெரிந்துள்ள நான்கு சட்டமன்றத் தேர்தல்களிலும் எந்த அளவு கருத்துக் கணிப்புகள் சரியாக இருந்தன என்று பார்க்கலாம்.

டெல்லி :

மூன்று முறை இங்கே அடுத்தடுத்து தேர்தல்களில் வென்று முதலமைச்சராக இருந்துவந்த காங்கிரஸின் ஷீலா தீட்சித்துக்கு எதிராகத் தனிப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் எதுவும் இருக்கவில்லை. 78 வயதான ஷீலா, மக்கள் மத்தியில் கணிசமான செல்வாக்குடனே இருப்பதாகவே தேர்தல் சமயத்தில் எடுக்கப்பட்ட கணிப்புகள் தெரிவித்தன. மக்கள் விரும்பும் முதலமைச்சர் யார் என்ற கேள்விக்கான கணிப்பில் ஷீலாவுக்கு 42 சதவிகித ஆதரவு இருந்தது. ஆனால், முதல்முறையாகத் தேர்தல் களத்தில் இறங்கிய ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் ஷீலா தீட்சித்தை இப்போது தோற்கடித்துவிட்டார்.

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் எதிர்ப்பு ஓட்டுகளை முழுக்க பா.ஜ.க-வுக்குப் போக விடாமல் பிரிப்பதால், காங்கிரஸ் தப்பிக்கும் வாய்ப்பு இருப்பதாகக் கருதப்பட்டது. அப்படியே காங்கிரஸ் சரிந்தாலும் தொங்கு சட்டமன்றம் உருவாகலாம் என்றும் கணிக்கப்பட்டது. ஆனால், ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் எதிர்ப்பு ஓட்டை மட்டுமல்ல, காங்கிரஸ் ஆதரவு ஒட்டையும் தன் பக்கம் ஈர்த்திருப்பதால் நிலைமை மாறியது. கருத்துக் கணிப்பில் காங்கிரஸுக்கு 25 இடங்கள், பா.ஜ.க-வுக்கு 32 இடங்கள், ஆம் ஆத்மிக்கு 10 இடங்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டது. வாக்குப்பதிவு முடிந்ததும் எடுத்த கணிப்புகள் பா.ஜ.க-வுக்கு 31 முதல் 37 இடங்கள், காங்கிரஸுக்கு 15 இடங்கள், ஆம் ஆத்மிக்கு 16 முதல் 20 இடங்கள் என்று கூறின. ஆனால், கடைசியில் நடந்தது என்ன? பா.ஜ.க-வுக்கு எத்தனை இடம் என்ற கணிப்பு ஓரளவு சரியாக அமைந்தது. 32 இடங்கள். ஆனால், காங்கிரஸ் பற்றியும் ஆம் ஆத்மி பற்றியுமான கணிப்புகள் தவறிவிட்டன. காங்கிரஸுக்கு வெறும் 8 இடங்கள்தான். ஆம் ஆத்மி 28 இடங்களில் வென்று எல்லாக் கணிப்புகளையும் தவறாக்கிவிட்டது.

சத்தீஸ்கர்:

இங்கே இரண்டு முறை முதலமைச்சராக இருந்திருக்கும் ரமண் சிங் இந்த முறையும் ஆட்சியைப் பிடிப்பார் என்றே பொதுவாகக் கருதப்பட்டது. அவருக்கு எதிராக காங்கிரஸின் பலம் என்பது காங்கிரஸில் இருக்கும் முக்கியமான பழங்குடித் தலைவரான அஜீத் ஜோகியை நம்பியே இருந்தது. கட்சிக்கும் ஜோகிக்கும் இடையே சிக்கல்கள் இருந்தன. வி.சி. சுக்லா போன்ற சில காங்கிரஸ் தலைவர்கள் நக்சல்பாரிகளால் கொல்லப்பட்டதால், அந்த அனுதாபம் காங்கிரஸுக்குச் செல்லலாம் என்ற கருத்தும் இருந்தது. எனினும் கருத்துக் கணிப்புகள் இங்கே மறுபடியும் பா.ஜ.க. ஆட்சி அமையும் என்றே தெரிவித்தன. வெற்றி பெறும் தொகுதிகளின் எண்ணிக்கையில்தான் வேறுபாடு காணப்பட்டது.

முந்தைய சட்டமன்றத்தில் பா.ஜ.க-வின் இடங்கள் 50. காங்கிரஸுடையவை 38. கருத்துக் கணிப்பின்படி 60, 27 ஆக மாறும் என்று சொல்லப்பட்டது. வாக்குக் கணிப்புகள் பா.ஜ.க-வுக்கு 44 முதல் 51 இடங்கள் கிடைக்கும் என்றும் காங்கிரஸுக்கு 30 முதல் 41 இடங்கள் கிடைக்கும் என்றும் கூறின. ஆனால், கடைசியில் பா.ஜ.க. 49 இடங்களையும் காங்கிரஸ் 39 இடங்களையும் பிடித்தன. கணிப்புகள் ஓரளவு சரியென்றே சொல்லலாம்.

ராஜஸ்தான்

ராஜஸ்தானில் காங்கிரஸ், பா.ஜ.க. இரண்டு கட்சிகளும் மிகவும் இழுபறிப் போட்டியில் இருந்தவை. வாக்கு வித்தியாசம் இரண்டே சதவிகிதம்தான். (36.8, 34.3). அடுத்த இடத்தில் இருக்கும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 7.6% ஓட்டுகள் இருக்கின்றன. மக்களின் விசுவாசமும் மாறக்கூடியது. தமிழ்நாடு, கேரளத்தில் எல்லாம் ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்சி மாற்றம் செய்வதுபோல இங்கேயும் பா.ஜ.க., காங்கிரஸ் என்று மாற்றிமாற்றி மக்கள் தேர்ந்தெடுத்துவந்தனர். அதன்படி இது பா.ஜ.க-வின் முறை. தேர்தல் முடிவு இதையே வலியுறுத்துகிறது.

யாருக்கு எத்தனை இடங்கள் என்பதில் கருத்துக் கணிப்புகள் சரியாக இருந்தனவா என்று பார்க்கலாம். பா.ஜ.க-வுக்கு 97 இடமும் காங்கிரஸுக்கு 79 இடமும் கிடைக்கலாம் என்றது தேர்தலுக்கு முந்தைய கணிப்பு. வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கணிப்புகளோ, பா.ஜ.க-வுக்கு 110 முதல் 161 வரை கிடைக்கும் என்றன. காங்கிரஸுக்கு 39 முதல் 62 வரை அளித்தன. இறுதி நிலவரப்படி பி.ஜே.பி-க்கு 162-ம் காங்கிரஸுக்கு 21-ம்

கிடைத்துள்ளன. இதற்கு முன்னர் பா.ஜ.க. ஆட்சி அமைத்தபோது பெற்றதையெல்லாம்விட இது அதிகம். சென்ற முறை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் வைத்திருந்ததுகூட 102-தான்.

மத்தியப் பிரதேசம்:

இங்கே ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க-வின் சௌகான், மோடிக்குப் பதில் பிரதமர் வேட்பாளரே ஆகியிருக்கக்கூடியவர். இன்னும் சொல்லப்போனால், கட்சிக்கு அப்பாற்பட்டு அவருக்கு இங்கே இருக்கும் பிம்பமும் செல்வாக்கும் கட்சிக்கு உதவுபவை என்றே கருதப்பட்டது. இந்த முறை அவருக்கு எதிராக காங்கிரஸ் தரப்பிலிருந்து ஜோதிர் ஆதித்யா என்ற இளம் தலைவரின் கடுமையான பிரச்சாரமும் உழைப்பும் அவரை எந்த அளவு பாதிக்கும் என்பதே மிகவும் கூர்மையாக எதிர்பார்க்கப்பட்ட விஷயம். பழைய சட்டப்பேரவையில் பா.ஜ.க-வுக்கு 143 இடங்களும் காங்கிரஸுக்கு 71 இடங்களும் இருந்தன.

கருத்துக் கணிப்புகளின்படி இது 155, 65ஆக மாற வேண்டும். ஆச்சரியம் என்னவென்றால், தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் ஓரளவு பொருந்திவந்த கணிப்பு இங்கே மட்டும்தான். பா.ஜ.க-வுக்கு 163-ம் காங்கிரஸுக்கு 58-ம் கிடைத்துள்ளன. வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கணிப்புகள் பா.ஜ.க-வுக்கு 128 முதல் 161 வரை அளித்தன. காங்கிரஸுக்கு 62 முதல் 80 வரை கொடுத்தன. ஆனால், தேர்தலுக்கு முந்தைய கணிப்பே மத்தியப் பிரதேசத்தில் பெருமளவு சரியானது.

கணிப்புகள்...

தேர்தல்கள்பற்றி 'தி இந்து' ஏட்டில் 27.10.2013-ல் நான் எழுதிய முன்னோட்டத்தில், டெல்லி, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகியவற்றில் மூன்றில் (டெல்லி, ராஜஸ்தான், மிசோரம்) இப்போது காங்கிரஸும், மீதி இரண்டில் பா.ஜ.க-வும் ஆளுங்கட்சிகள். தேர்தலுக்குப் பின் இந்தக் கணக்கு, பா.ஜ.க. மூன்றாகவும் காங்கிரஸ் இரண்டாகவும் மாறும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்று குறிப்பிட்டேன். நாளை வாக்கு எண்ணிக்கை நடக்கும் மிசோரமில் காங்கிரஸே வெல்லும் வாய்ப்பு உள்ள நிலையில் ( அங்கே பா.ஜ.க-வே இல்லை ) காங்கிரஸ் ஒரு மாநிலத்திலும் பா.ஜ.க. நான்கு மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கவுள்ளன. டெல்லியில் தொங்கு சட்டமன்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டேன். இப்போது ஏறத்தாழ அதுதான் நிலைமை. ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை இழக்கும் வாய்ப்பும் மத்தியப் பிரதேசத்திலும் சத்தீஸ்கரிலும் பா.ஜ.க. ஆட்சியைத் தக்கவைக்கும் வாய்ப்புமே அதிகம் என்றும் குறிப்பிட்டதும் சரியாகவே அமைந்துள்ளன.

இந்தத் தேர்தல்களும் கருத்துக் கணிப்புகளும் உணர்த்தும் உண்மைகள் இரண்டு. 1. கருத்துக் கணிப்புகள் பெரும்பாலும் சரியானவைதான். அவற்றைத் தடைசெய்வது அர்த்தமற்றது.

2. சில அரசியல் சூழல்கள் கருத்துக் கணிப்புகளுக்கும் அப்பாற்பட்டவையாக இருக்க முடியும். டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் பிரம்மாண்ட வெற்றியைப் போல.

எந்தக் கருத்துக் கணிப்பும் சொல்லாத, ஆனால், தமிழகம் தொடர்பான தேர்தல் செய்தி ஒன்று: டெல்லியில் விஜயகாந்தின் தே.மு.தி.க., அது போட்டியிட்ட 11 தொகுதிகளிலும் காப்புத்தொகையை (டெபாசிட்) இழக்கிறது. ஒரு கருத்துக் கணிப்பு இந்தக் கட்சி மூன்று இடங்கள் வரை வெல்லும் என்று சொல்லியிருந்ததுதான் கருத்துக் கணிப்புகளின் உச்சமான நகைச்சுவை.

ஞாநி, மூத்த பத்திரிகையாளர், சமூக-அரசியல் விமர்சகர், தொடர்புக்கு: gnanisankaran@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x