Last Updated : 16 Feb, 2017 09:50 AM

 

Published : 16 Feb 2017 09:50 AM
Last Updated : 16 Feb 2017 09:50 AM

சட்டத்தைக் கடுமையாக்குங்கள்!

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கது. என்றாலும், இது போதுமா என்று கேட்டால் போதவே போதாது! சசிகலாவையும் அவருடைய உறவினர்களையும் சிறைக்கு அனுப்பிவிட்டதாலேயே இந்திய நாட்டு மக்கள் சந்தோஷம் அடைந்துவிட முடியாது. இன்னும் பல வழக்குகள் நம் நீதிமன்றங்களில் தூங்கிக்கொண்டிருக்கின்றன. அந்த வழக்குகளில் எல்லாம் தீர்ப்பு வர வேண்டும். அதற்கேற்ப நம்முடைய சட்டத்திலும் நீதித் துறையில் பல சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

இந்த வழக்கையே ஒரு உதாரணத்துக்கு எடுத்துக்கொள்வோம். இதே போன்ற ஒரு வழக்கு அமெரிக்காவிலோ, பிரிட்டனிலோ, ஜெர்மனியிலோ நடந்திருந்தால், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வந்ததும் என்ன நடந்திருக்கும்? தீர்ப்புக்கு முன்பே, தண்டனை விதிக்கப்பட்டால் என்னென்ன நடைமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமோ, அவையெல்லாம் முன்பே மேற்கொள்ளப்பட்டிருக்கும். குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் வீடுகள் அருகே காவல் துறையினர் காத்துக்கொண்டிருந்திருப்பார்கள். சிறைத் தண்டனை அறிவிக்கப்பட்ட மாத்திரத்தில், நீதிமன்ற அலுவலகத்திலிருந்து காவல் துறைக்கு அதிகாரபூர்வத் தகவல் வந்திருக்கும். அடுத்த நிமிஷம் குற்றவாளிகளின் இரண்டு கைகளிலும் விலங்குகளை மாட்டி சிறைக்கு அழைத்துச் சென்றிருப்பார்கள். பொதுவாகவே, உலகின் வளர்ச்சி பெற்ற ஜனநாயக நாடுகளில் நீதியின் மாண்பை நிலைநாட்டும் வழிமுறைகள் தீவிரமானவை. குற்றஞ்சாட்டப்பட்டவர் எத்தனை செல்வாக்குடையவராக இருந்தாலும் அவற்றை அவர்கள் பொருட்படுத்துவதில்லை.

அமெரிக்க அதிபராக ரிச்சார்ட் நிக்ஸன் இருந்தபோது, அவருடைய அட்டர்னி ஜெனெரல் மிட்சல் பொய் சாட்சியத்திற்காகக் குற்றஞ்சாட்டப்பட்டு காவல் துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டது நினைவுக்கு வருகிறது. சமீபத்திய உதாரணம், பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான உலக நாணயக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் கைதுசெய்யப்பட்டது. அவர் தங்கியிருந்த விடுதியின் பெண் ஊழியரின் புகாரின்பேரில் அங்கு வந்த போலீஸார் அவர் கையில் விலங்கு மாட்டிதான் அழைத்துச் சென்றார்கள். இந்த மாதிரி ஊரைக் கூட்டி அலப்பறை செய்து, படம் காட்டிவிட்டு எல்லாம் அழைத்துச்செல்லப்பட அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

சசிகலா, சுதாகரன், இளவரசி மூவரும் அமெரிக்காவில் இதே மாதிரியான குற்றத்தில் ஈடுபட்டிருந்தால், குறைந்தது 30-40 வருஷக் கடுங்காவல் தண்டனை கிடைத்திருக்கும். இந்தியாவில் நான்காண்டுகளோடு சிறைத் தண்டனை முடிவது மட்டும் அல்ல; இன்னும் நிறைய வசதிகளும் அவர்களுக்குக் காத்திருக்கின்றன. ஆமாம், பரப்பன அக்ரகார சிறையின் விஐபி அறைகள் சமீபத்தில் மெருகூட்டப்பட்டிருக்கின்றன. நல்ல சௌகரியமான, விசாலமான அறை, மெத்தை, தலையணைகளுடன் கூடிய கட்டில், பிரத்யேகமான குளியலறை, எல்சிடி டிவி, குளிர் சாதன வசதியும்கூடக் கிடைக்கும். ஒருவேளை அவர் ஊழல் வழக்கில் சிறை செல்ல வேண்டியிருக்கலாம் என்ற முன்யோசனையிலோ என்னவோ எடியூரப்பா காலம் தொட்டு மேற்கொள்ளப்பட்ட வசதிகள் இவை. சிறைக்குள்ளேயே மருத்துவ வசதியும் உண்டு. தேவைப்பட்டால், தினந்தோறும் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகளுக்கும் வாய்ப்புண்டு.

நம்முடைய சீர்திருத்தங்கள் குற்றவாளிகளைக் குறைக்க மேற்கொள்ளப்படுகின்றனவா, அதிகரிக்க மேற்கொள்ளப்படுகின்றனவா என்று நாம் யோசிக்க வேண்டும்!

- ப.ஸ்ரீ.ராகவன், ஓய்வு பெற்ற தலைமைச் செயலர். மத்திய உளவு, புலனாய்வு, பாதுகாப்புப் பிரிவுகளின் இயக்குநராகப் பணியாற்றியவர். தொடர்புக்கு: bahukutumbi@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x