Last Updated : 22 Oct, 2013 02:46 PM

 

Published : 22 Oct 2013 02:46 PM
Last Updated : 22 Oct 2013 02:46 PM

பேரூட் டு வாஷிங்டன்

இதுவரை பெரும்பாலான நாள்களை மத்தியக் கிழக்கு நாடுகளின் அரசியலை எழுதுவதிலேயே செலவிட்டிருக்கிறேன். அது தனிக்களம். கடந்த சில வாரங்களாகவே எனக்குள் ஓர் எண்ணம் வலுத்துவருகிறது. மத்தியக் கிழக்கு நாடுகளின் அரசியல் நிலவரத்தைப் போலவே அமெரிக்காவிலும் நடக்க ஆரம்பித்துவிட்டதே என்பதுதான் அது. மத்தியக் கிழக்கு அரசியலை ஆராய்ந்ததன் அனுபவத்தால், அமெரிக்காவில் இப்போது நிலவும் அரசியலுக்கு விளக்கம் காண்பது எனக்கு எளிது.

ஷியாக்கள், சன்னிகள், இஸ்ரேலியர், பாலஸ்தீனர், பழங்குடிகளின் மோதல், கடவுள் கட்சிக்காரர்களின் அரசியல் சிந்தனைகள் ஆகியவற்றைப் பற்றி எழுதியிருக்கிறேன். அமெரிக்க அரசியலில் குறிப்பாக, பழமை வாய்ந்த குடியரசுக் கட்சியின் ‘தேநீர் விருந்து’ எம்.பி-க்களின் சிந்தனை, செயல்பாடுகள் குறித்து என்னால் எழுத முடியும்.

அமெரிக்க அரசியலைப் புரிந்துகொள்ள - அந்நாட்டு வரலாற்றை அல்ல ‘லாரன்ஸ் ஆஃப் அரேபியா’ படித்தால் போதும்!

கான்சாஸ் நகரிலிருந்து சமீபத்தில் நான் எழுதிய அரசியல் விமர்சனக் கட்டுரையை நினைவுகூர்கிறேன். இயற்கையில் காணப்படும் ஒற்றைப் பயிர் சாகுபடி, பல பயிர் சாகுபடி முறையை ஒப்பிட்டு எழுதியிருந்தேன். அது இன்றைய அமெரிக்க அரசியலுக்கும் பொருந்துகிறது.

‘தி லேண்ட் இன்ஸ்டிட்யூட்’ என்ற அமைப்பின் தலைவர் விஞ்ஞானி வெஸ் ஜாக்சன், அமெரிக்காவில் குடியேறிய வர்கள் இயற்கைக்குச் செய்த தீமைகளைக் கூறியிருந்தார். ஐரோப்பியர்கள் அமெரிக்கா வில் குடியேறுவதற்கு முன்னால் பெரும்பாலான பகுதிகள் இயற்கை வளங்களோடு பல்லுயிர்ப் பெருக்கத்துடன் திகழ்ந்தன. தாவரங்களும் உயிரினங்களும் பலதரப்பட்டவையாக இருந்தன.

மிகப் பெரிய பண்ணை விவசாயத்தை மேற்கொள்வதற்காக ஐரோப்பியர்கள் தாங்கள் குடியேறிய பகுதிகளில் இருந்த இயற்கை வளங்களை அழித்து விளைநிலங்களாக்கினர். அத்துடன் அதிக பணத்தை உடனே ஈட்டித்தர வல்ல கோதுமை, சோளம், சோயா போன்ற வற்றையே அடுத்தடுத்து ஆண்டுக்கணக்கில் பயிரிட்டனர். முதலில் அபரிமிதமாக விளைந்த இந்தப் பயிர்கள் நாளடைவில் மண்ணின் சாரத்தை உறிஞ்சியதால் குறைந்த விளைச்சலைத் தரத் தொடங்கின. டீசல் டிராக்டர்களையும் உழவுக் கருவிகளையும் பயன்படுத்தி சுற்றுச் சூழலைக் கெடுக்க ஆரம்பித்த அவர்கள், உரங்களைப் பயன்படுத்தி விளைச்சலைப் பெருக்கினர். பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை அழிக்க ரசாயன பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தினர். இவற்றால் விளைநிலங்கள் மேலும் சத்தை இழந்தன. திரும்பத்திரும்ப ஒற்றைப் பயிர் சாகுபடியே மேற்கொள்ளப்பட்டதால் நிலங்களின் மேல் மண், சாரத்தை அடியோடு இழந்தது. 1930-களில் அடியோடு பயிர்கள் பொய்த்தன. நிலம் மட்டுமே மிஞ்சியது.

இதேதான் அரபு நாடுகளிலும் நடந்தது; இப்போது அமெரிக்காவிலும் தொடர்கி றது. அரபு நாடுகளில் காணப்படும் மோதல் களுக்கெல்லாம் காரணம், அவற்றின் எண்ணெய் வளம்தான். பல்வேறு குழுக்க ளைச் சேர்ந்த மக்களையெல்லாம் ஒழித்துவிட்டு, தங்களுடைய இனத்தைச் சேர்ந்த ஒற்றைக் கலாசாரம் இருந்தால், எல்லாம் அமைதியாகிவிடும் என்று எல்லா தரப்பினரும் முயல்கின்றனர். முஸ்லிம்களின் இருபெரும் பிரிவான ஷியா, சன்னி ஆகிய இருவருக்குமே எண்ணெய் வளங்களால் பொருளாதார பலம் இருக்கிறது. இவர்கள் ஒருவர் மற்றவரைப் போட்டியாளராகப் பார்க்கின்றனர். எனவே இராக், சிரியா, லெபனான் ஆகிய மூன்று நாடுகளிலுமே ஒருவர் மற்றவரை அழித்துவிட முற்படுகின்றனர். அப்படியே இவர்கள் ஒருவர் மற்றவரை வெளியேற்றிவிட்டுத் தனிச் சமூகமானாலும் அமைதி ஏற்படாது. தங்களை மற்றவர்கள் ஒழிப்பதற்குக் காத்திருக்கிறார்கள் என்ற அச்ச உணர்வே மிஞ்சும். விளைவு, ஓயாமல் மற்றவர்களுடன் போரிடவும் அழிக்கத் திட்டமிடவுமே நேரம் சரியாக இருக்கும். இதனால் அமைதியும் போய்விடும் வளமும் சேராது.

அரபு முஸ்லிம் நாடுகளின் பொற்காலம் என்றால், அது 8-வது நூற்றாண்டு முதல் 13-வது நூற்றாண்டு வரையிலான காலமாகும். அப்போது முஸ்லிம்கள் தங்களுக்குள் மட்டுமல்ல பிற சமுதாயத்தினருடனும் ஒற்றுமையாக இருந்தார்கள். இணக்கமாக வாழ்ந்தார்கள். பல்வேறு கலாசாரங்கள் அப்போது அங்கே வளர்ந்தன.

அரபு நாடுகளில் காணப்படும் அதே எண்ணங்கள் அதாவது, ஒற்றை இன எண்ணங்கள், இப்போது அமெரிக்காவிலும் குறிப்பாக, குடியரசுக் கட்சியிலும் பரவிவரு கிறது. தாங்கள் மட்டும் வாழ்ந்தால்போதும் என்று குடியரசுக் கட்சியின் ‘தேநீர் விருந்து’ நாடாளுமன்ற உறுப்பினர்கள் நினைக்கின்றனர். இவர்களை கோச் சகோதரர்களும் அமெரிக்க எண்ணெய் நிறுவன அதிபர்களும்தான் ஆதரிக்கின்றனர்.

குடியரசுக் கட்சி பலதரப்பட்ட கலா சாரத்தை வளர்க்க நினைத்தபோது, அந்தக் கட்சியின் தலைவர்கள் அமெரிக்க சமூகம் முழுவதும் பயனடையும் பல நல்ல திட்டங்களைக் கொண்டுவந்து நிறை வேற்றினர். ரிச்சர்டு நிக்சன் காலத்தில் தூய்மையான காற்றுச் சட்டம், ரொனால்டு ரேகன் காலத்தில் அணு ஆயுதக் கட்டுப்பாட்டுச் சட்டம், ஜார்ஜ் டபிள்யு. புஷ் காலத்தில் - அமில மழை ஏற்படாமல் தடுக்க அமிலத் தயாரிப்பு, பயன்பாடு, விற்பனை ஆகியவற்றுக்கு உச்சவரம்பும் தடையும் விதிக்கும் சட்டம், மசாசுசெட்ஸ் மாகாணத்தில் ரோம்னி கவர்னராக இருந்தபோது கொண்டுவந்த சுகாதாரக் காப்புச் சட்டம் ஆகியவை பலதரப்பட்ட கலாசாரத்தின் விளைவாக ஏற்பட்டவையே. எண்ணெய் வள நிறுவனங்களின் ஆதரவில் செயல்படும் குடியரசுக் கட்சியின் சில உறுப்பினர்கள் தங்களுடைய போக்கை இப்படியே தொடர்ந்தால் கட்சியே செல்வாக்கை இழந்துவிடும்.

மத்தியக் கிழக்கில் என்ன நடந்தது? தீவிரவாதிகள் அடிவேர் வரை போகத் தயாரானார்கள், மிதவாதிகள் (நல்லவர்கள்) பாதுகாப்பு கருதி தலைமறைவானார்கள்.

அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபைத் தலைவர் ஜான் போனர், பெரும்பான்மைக் கட்சித் தலைவர் எரிக் கான்டர் விடுத்த வேண்டுகோள்களையெல்லாம் ‘தேநீர் விருந்து’ எம்.பி-க்கள் சிறிதும் லட்சியம் செய்யாமல் உச்சாணிக் கொம்புவரை ஏறினர். அப்படி ஏறிய சமயத்தில் நாட்டையே திகிலில் ஆழ்த்தினர்.

மத்தியக் கிழக்கில் நான் அறிந்த ஒரு பாடத்தை இங்கே கூற விரும்புகிறேன். தீவிரவாதிகளைத் தடுத்து நிறுத்தினால் மட்டும் போதாது, அவர்களை எதிர்கொண்டு அவர்களுடைய கருத்துகள் சரியில்லை என்பதை விளக்கி, அவர்களிடமிருந்து அந்த எண்ணத்தையே அகற்ற வேண்டும்.

லெபனானைச் சேர்ந்த ஷியா பிரிவு எழுத்தாளர் ஹனின் கத்தர் ஒருமுறை பேசும்போது சொன்னார், “நாங்கள் வெற்றிபெற்றால் நாங்கள்தான் ஆட்சி செய்வோம். நீங்கள் வெற்றிபெற்றால், ஆட்சி செய்ய முடியாதபடி தடங்கல்களை ஏற்படுத்திக்கொண்டே இருப்போம் என்பதுதான் ஹெஸ்புல்லா அமைப்பின் சித்தாந்தம்” என்று. அமெரிக்கக் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ‘தேநீர் விருந்து’ எம்.பி-க்கள் பயங்கரவாதிகள் அல்லர்தான். அமெரிக்க நாட்டின் கடன், வேலையில்லாத் திண்டாட்டம், ஒபாமா கொண்டுவந்த சுகாதார இன்சூரன்ஸ் திட்டம் ஆகியவை குறித்து, அவர்களுக்கு அக்கறை இருக்கிறது. அதற்காக அவற்றை வலியுறுத்த எல்லை தாண்டிச் சென்றுவிட்டனர்.

தன்னுடைய கவலை நியாயமானது, தான் சொல்லும் கொள்கை சரியானது என்று அமெரிக்க மக்களிடம் பிரசாரம் செய்து, தேர்தலில் வெற்றிபெற்று, அதை அமல்படுத்துவதற்குத்தான் முயன்றிருக்க வேண்டும். ஜனநாயகத்தின் ஆணிவேரே அதுதான். மாறாக, தாங்கள் விதிக்கும் நிபந்தனைகளை ஜனநாயகக் கட்சி ஏற்காவிட்டால், பட்ஜெட்டையே நிறைவேற்ற விட மாட்டோம் என்று அச்சுறுத்தி, நாட்டின் நாணயத் தன்மையையே உலகம் சந்தேகப்படும் அளவுக்குச் சென்றுவிட்டனர். அவர்களுடைய கோரிக்கைகள் மட்டும் ஏற்கப்பட்டிருந்தால், அமெரிக்கத் தலைநகரில் லெபனானே குடிவந்ததைப்போல ஆகியிருக்கும்.

இதற்கு இணையான வரலாற்றுச் சம்பவம் ஒன்று இருக்கிறது. 2006-ல் இஸ்ரேலுக்கு எதிராக ஹெஸ்புல்லா போரைத் தொடங்கிவிட்டது. போரை நடத்தவும் முடியவில்லை, நிறுத்தவும் தெரியவில்லை. போரில் வெற்றி பெற்றோமோ, தோல்வி பெற்றோமோ என்பது முக்கியமில்லை. இஸ்ரேலியர்களை எதிர்த்துக்கொண்டிருக்கிறோம் என்பதே போதுமானது என்று அதன் தலைமை நினைத்தது. எதிர்ப்பதாலேயே தான் பெரிய வன் என்ற நினைப்பு அதன் தலைவருக்கு இருந்தது. ராணுவ ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும் வெற்றி பெற்றுவிட்டதாகவே ஹெஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா அறிவித்தார். போர் ஓய்ந்தது. அதற்குள் இஸ்ரேல் ஹெஸ்புல்லாவின் அண்டை, அயல் அனைத்துக்கும் பலத்த சேதத்தை விளைவித்துவிட்டது. அதுமட்டுமல்ல; லெபனானின் அடித்தளக் கட்டமைப்பையும் அடியோடு அழித்துவிட்டது. எல்லாம் முடிந்த பிறகு, தான் செய்தது தவறுதான் என்று நஸ்ரல்லா ஒப்புக்கொண்டார்.

வெற்றி பெறுவதற்கான சாத்தியமே இல்லாமல் ஒபாமாவுக்கு எதிராக இந்தப் போரை ‘தேநீர் விருந்து’ எம்.பி-க்கள் தொடர்ந்தனர். இதை எப்படி நிறுத்துவது என்றும் அவர்களுக்குத் தெரிய வில்லை. நஸ்ரல்லாவைப் போலவே அவர்களும், அரசை எதிர்க்கிறோம் என்ற வரலாற்று உணர்வோடு செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

‘ஹெஸ்புல்லா மேற்கொண்டதைப் போன்ற வழிமுறை அரசியலில் வெற்றி பெறாது’ என்பது உணரப்பட்டாலே, கடந்த சில வாரங்களாக நாம் அடைந்த வேதனைக்கு மருந்தாகிவிடும்.

@நியூயார்க் டைம்ஸ், தமிழில்: சாரி



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x