Published : 02 Mar 2017 09:12 AM
Last Updated : 02 Mar 2017 09:12 AM

வங்கதேச உறவு அடுத்த கட்டத்தை எட்டட்டும்!

சிட்டகாங் மலைப் பகுதியில் எல்லையோரக் காவல் சாவடிகளைக் கட்டிக்கொள்வதற்கு மிசோரம், திரிபுரா மாநிலச் சாலைகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று வங்கதேச ராணுவத்துக்கு இந்திய அரசு அனுமதி தந்திருக்கிறது. இருதரப்பு உறவு நெருங்கிவருவதற்கு மேலும் ஒரு சமிக்ஞை இது.

இந்தியாவின் வெளியுறவுத் துறைச் செயலாளர் எஸ். ஜெய்சங்கர் வங்கதேசத் தலைநகர் டாக்காவுக்குக் கடந்த வாரம் சென்றிருந்தார். வரும் ஏப்ரலில் வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா மேற்கொள்ளவிருக்கும் இந்தியப் பயணத்துக்கான முன்னேற்பாட்டுப் பயணம் இது. இரு நாடுகளுக்கும் இடையிலான நில எல்லைப் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்வது தொடர்பான வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தம் பிரதமர் மோடி, பிரதமர் ஷேக் ஹசீனா இடையில் 2015-ல் கையெழுத்தானது. இரு தரப்பிலும் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் அடிப்படையில் கணிசமான பலன்கள் ஏற்பட்டால் மட்டுமே இந்தியா வருவேன் என்று ஹசீனா கூறியிருந்தார். சுமார் ஆறு ஆண்டுகளுக்குப் பின் இப்போது வரும் ஏப்ரலில் அவர் இந்தியா வரத் திட்டமிட்டிருப்பது வங்கதேசத்தின் திருப்தியின் விளைவே என்று கருதலாம்.

ஹசீனாவின் வருகைக்குப் பின் இரு பிரதமர்களும் மீண்டும் சந்தித்துப் பேசிய பிறகு மேலும் சில முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும், அவை தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கலாம். இரு நாடுகளுக்கும் இடையில் ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம், தீஸ்தா நதிநீர் பகிர்வுத் திட்டம், கங்கை தடுப்பணைத் திட்டம், மின்னுற்பத்தித் திட்டம், புதிய போக்குவரத்துத் திட்டங்கள் ஒப்பந்தமாவதற்கான காத்திருப்பில் இருக்கின்றன.

இரு நாடுகளுக்கும் இடையில் உரசல்களோ பிரச்சினைகளோ அறவே இல்லாமலும் இல்லை. தீஸ்தா நதிநீர்ப் பகிர்வினால் தங்களுடைய தண்ணீர் பங்கு குறைந்துவிடுமோ என்று வங்க முதல்வர் மம்தாவுக்கு ஒரு அச்சம் இருக்கிறது; ஃபராக்கா தடுப்பணை தொடர்பாக பிஹார் முதல்வர் நிதீஷ் சில ஆட்சேபங்களை எழுப்பியிருக்கிறார். இவையெல்லாம் பேசி முடிக்கப்பட வேண்டும். சீனா சமீப காலமாக வங்கதேசத்தைத் தன் பக்கம் இழுப்பதற்கான நகர்வுகளை அதிகரித்திருத்திருக்கிறது. வங்கதேசத்தில் அடித்தளக் கட்டமைப்புப் பணிகளில் 3800 கோடி டாலர்களை முதலீடு செய்வதாக அது உறுதியளித்திருக்கிறது. 2018-ல் வங்கதேசத்தில் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் ஹசீனா, எதிர்க்கட்சிகளின் “இந்தியா சார்பாளர்” பிரச்சாரத்தை எதிர்கொள்கிறார். “இந்தியா நல்ல நட்பு நாடு. அதோடான உறவு நமக்கு நன்மை” என்று தன் நாட்டு மக்களுக்கு உணர்த்த வேண்டிய இடத்தில் ஹசீனா இருக்கிறார். டெல்லிக்கு வந்துவிட்டு வெறுங்கையுடன் டாக்கா திரும்ப அவர் விரும்பவில்லை.

ஆக, சர்வதேசக் கணக்குகளின் பின்னணியில் வங்கதேசத்துடனான இந்தியாவின் உறவு அமைய வேண்டும். அதேசமயம், மாநிலங்களின் அக்கறைகளும் பிரதமர் முடிவில் பிரதிபலிக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x