Last Updated : 18 Aug, 2016 09:02 AM

 

Published : 18 Aug 2016 09:02 AM
Last Updated : 18 Aug 2016 09:02 AM

மதுவிலக்கால் புதிய உயரம் தொடும் நிதீஷ்!

மதுவிலக்கைக் கொண்டுவந்தாலும் கொண்டு வந்தார்... முதல்வர் நிதீஷைக் கொண்டாடுகிறார்கள் பிஹார் பெண்கள்!

தேர்தலின்போது வாக்குறுதி கொடுத்தது போல, பிஹாரில் ஏப்ரல் மாதம் மதுவிலக்கைக் கொண்டுவந்தார் நிதீஷ். பிஹாரின் ஏழ்மைக்கான முக்கியக் காரணங்களில் ஒன்று மது. பெண்களிடம் அப்போதே இதற்கான பெரும் ஆதரவு வெளிப்பட்டது. வழக்கமாக, மதுவிலக்கை அறிவித்துவிட்டு, சடங்குபோல அதை முறையாக அமல்படுத்தாமல் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பது நம்மூர் அரசியல்வாதிகளின் மரபு. நிதீஷோ பூரண மதுவிலக்கைக் கொண்டுவர தீவிரமாக உழைக்கிறார். விமர்சனங்களும் வராமல் இல்லை. மிகக் கடுமையான சட்டப் பிரிவுகள் இருப்பதால், எந்தத் தவறும் செய்யாதவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் வாய்ப்பிருக்கிறது எனும் குரல்களும் எழுகின்றன.

பிஹாரில் மதுப் புட்டிகள் பறிமுதல் செய்யாத நாட்களே இல்லை என்கிற அளவுக்குக் காவல் துறை ஜரூராகச் செயல்பட்டுவருகிறது. கடந்த நான்கு மாதங்களில், லட்சக்கணக்கான மதுப் புட்டிக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 3,719 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, 4,707 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து பலமுறை மதுவிலக்கை மீறியதாக, பிஹாரின் இரு கிராமங்களின் அனைத்துக் குடும்பத்தினர் மீதும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளில் சுணக்கம் காட்டும் போலீஸார் மீது முதல்வரே நேரடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுப்பதால், போலீஸார் திகிலடித்துக் கிடக்கிறார்கள். இதுவரை அலட்சியமாகச் செயல்பட்ட 11 போலீஸாரைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்திருக்கிறது பிஹார் அரசு. ‘‘மதுவிலக்கைத் தீவிரமாக அமல்படுத்தாதவர்கள் பணியிலிருந்து 10 வருடம் வரை ஒதுக்கிவைக்கப்படுவார்கள்’’ என்று கூறிவிட்டார் நிதீஷ்.

ஆதிக்கக் கலாச்சாரத்துக்குப் பேர் போன பிஹார் கிராமங்களில் மதுவிலக்கைக் கறாராகக் கொண்டுவருவது காவல் துறையினருக்கும் ஒன்றும் எளிதான காரியம் அல்ல. கடந்த வாரம் டெஹரி கிராமத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாகக் கேள்விப்பட்டு 40 பேர் கொண்ட படையுடன் காவல் துறையினர் சென்றிருந்தனர். ஊருக்குள் அவர்களைச் சுற்றி வளைத்த உள்ளூரைச் சேர்ந்த நாசகார சக்திகள் கற்களை வீசித் தாக்க ஆரம்பித்தனர். காவல் ஆய்வாளர் உட்பட ஐந்து போலீஸார் இத்தாக்குதலில் படுகாயம் அடைந்தனர். இவர்களுடைய பணியைப் பாராட்டி, ரொக்கப் பரிசுகளை நிதீஷ் அளித்தாலும், போலீஸார் இந்த விஷயத்தில் கலக்கமாகவே உள்ளனர். மதுவிலக்குக் கண்காணிப்புக்கு ஒதுக்கப்படும் காவலர்கள் வெளியூருக்கோ, வேறு பணிகளுக்கோ மாறுதல் கேட்பது அதிகரித்துவருகிறது. நாட்டிலேயே பிஹாரில் காவல் துறையினருக்குச் சங்கம் உண்டு. அந்தச் சங்கம் இப்போது இது தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபடலாமா என்றுகூட யோசித்துவருகிறது.

மதுவிலக்கால் பிஹார் அரசுக்கு வருடம் ஒன்றுக்குச் சுமார் ரூ. 4,500 கோடி இழப்பு ஏற்படும் என்று கணக்கிடுகிறார்கள். மக்களின் ஆரோக்கியம், குடும்பங்களின் மன நிம்மதி ஆகியவற்றோடு ஒப்பிடுகையில் இதெல்லாம் ஒரு இழப்பே இல்லை என்கிறார் நிதீஷ். தாய்க்குலத்தின் ஆதரவு அவருக்கு இருக்கிறது. அடுத்த பிரதமர் வேட்பாளர் அவர்தான் என்கிறார்கள் கட்சிக்காரர்கள். அரசியலில் எதுவும் நடக்கலாம்!

-தொடர்புக்கு: shaffimunna.r@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x