Published : 21 Apr 2017 08:57 AM
Last Updated : 21 Apr 2017 08:57 AM

சாலை விபத்துகளைக் குறைக்க வேண்டும்!

மோட்டார் வாகன (திருத்த) மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல் தந்துவிட்டது, இனி மாநிலங் களவை ஒப்புதல் தர வேண்டும். 1988-ம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டத்துக்குப் புதிதாகக் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. இம்முறை சீர்திருத்தக் கடமையை மத்திய அரசு நேரடியாக ஏற்றுக்கொண்டிருக்கிறது. அதன் வழிகாட்டு நெறிகள் அனைத்து மாநிலங்களாலும் இனி பின்பற்றப்பட வேண்டும். டாக்சி வாகனங்களை ஒன்றுசேர்த்துப் பெருநிறுவனமாக நடத்து வோருக்கான விதிகள் குறிப்பிடத்தக்கவை. சாலை விபத்தில் காயம் அடைவோருக்குச் சிகிச்சை அளிக்க இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மூலம் பணம் தருவது, விபத்தை ஏற்படுத்திய பிறகு எவர் கண்ணிலும் சிக்காமல் வாகனம் தப்பி ஓடிவிட்டாலும் உயிரிழக்கும் நபரின் குடும்பத்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவது, நெடுஞ்சாலைகளை மின்னணுச் சாதனங்களின் துணைகொண்டு கண்காணிப்பது, நகர்ப்புறச் சாலைகளைப் போக்குவரத்துக்கு ஏற்றவாறு பராமரிப்பது, ஓட்டுநர் உரிமங்களை வழங்குவதில் நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது என்று பல்வேறு அம்சங்கள் இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளன.

போக்குவரத்து விதிகள் தெளிவாகவும் அனைவரும் மதித்து நடக்கும் வகையிலும் இருப்பது அவசியம். விதிகளை இயற்றி விட்டால் மட்டும் போதாது, அது மீறப்படாமல் பார்த்துக் கொள்ளப்பட வேண்டும். அதற்குப் போதிய போக்குவரத்துக் காவலர்களும், வட்டாரப் போக்குவரத்துத் துறை அதிகாரிகளும் நியமிக்கப்பட வேண்டும். மோட்டார் வாகனச் சட்டம் தொடர்பான நிர்வாகம் அனைத்தும் வெளிப்படையாக நடைபெற வேண்டும். பொருளாதாரம் வளரும்போது போக்குவரத்து வாகனங்களின் எண்ணிக்கையும் அதற்கேற்ப வளர்வதால் அது தொடர்பாக ஏற்படக்கூடிய பிரச்சினைகள் அனைத்தையும் தீர்ப்பதாக நிர்வாகம் அமைய வேண்டும். இந்தச் சட்டத் திருத்தம், மாநிலங் களின் நிர்வாக அதிகாரங்களை மத்திய அரசுக்கு மாற்றுவதில்தான் கவனம் செலுத்துகிறது என்ற கருத்து பலரிடம் இருக்கிறது.

மது அருந்திவிட்டு போதையில் வாகனம் ஓட்டுவது, வேகமாக ஓட்டுவது, சிவப்பு விளக்கை மதிக்காமல் ஓட்டிச் செல்வது போன்றவற்றுக்கு அபராதத்தைப் பல மடங்கு உயர்த்தி யிருக்கிறது புதிய மசோதா. 2015-ல் மட்டும் போக்குவரத்து விபத்துகளில் இந்தியாவில் 1,46,133 பேர் இறந்துள்ளனர். காய மடைந்தவர்கள், செயலிழந்து முடங்கியவர்கள் கணக்கெல்லாம் இதில் இல்லை. மாநில அரசுகளும் தங்கள் பங்குக்கு போக்கு வரத்துத் துறை நிர்வாகத்தைச் சீரமைப்பதில் அக்கறையோடு செயல்பட வேண்டும். லஞ்சம் ஒழிக்கப்பட வேண்டும். வாகனங் களின் போக்குவரத்துத் தகுதி முறையாக ஆய்வுசெய்யப்பட வேண்டும். பழைய வாகனங்கள் உரிய காலத்தில் பயன்பாட்டி லிருந்து நீக்கப்பட வேண்டும்.

வாகன ஓட்டிகளுக்கான பழகுநர் உரிமம், உரிமம் புதுப்பிப்பு, முகவரி மாறுதல் போன்றவற்றை இணையதளம் மூலமே விண்ணப்பித்துப் பெறும் நடைமுறை எல்லா மாநிலங்களிலும் கொண்டுவரப்பட வேண்டும். சாலை விபத்துகளில் சிக்கி காயம்படுவோரை உடனடியாக மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கும் நல்ல மனிதர்களை காவல் துறையின் கெடுபிடி விசாரணையிலிருந்து விடுவிக்கும் சட்டத் திருத்தமும் இதில் இடம்பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x