Last Updated : 09 May, 2017 09:39 AM

 

Published : 09 May 2017 09:39 AM
Last Updated : 09 May 2017 09:39 AM

உறவைப் புதுப்பிக்காத வருகை!

தலைவர்களுக்கு இடையில் தனிப்பட்ட ஒற்றுமைகள் இருந்தாலும் உறவு பலமடைய வாய்ப்பு குறைவு

துருக்கி அதிபர் ரிசெப் தயிப் எர்டோகன் கடந்த வாரம் இந்தியா வந்தார். அவரது வருகை இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் புதிய அத்தியாயத்தைத் திறந்துவைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரது வருகை வெறுமனே சம்பிரதாயமான ஒன்றாகிப்போனது. பரஸ்பர விஷயங்களில் இரு நாடுகளும் உரிய அக்கறை செலுத்தாததுதான் காரணம்.

காஷ்மீர் விஷயத்தில் துருக்கியின் நிலைப்பாடு, பாகிஸ்தானுடனான அதன் நெருங்கிய உறவைப் பிரதிபலித்தது. துருக்கி, பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளின் ராணுவ அமைப்புகளுக்கு இடையிலான தொடர்பு ஒரு காரணம். கம்யூனிஸ எதிர்ப்பு ராணுவக் கூட்டணி, பாக்தாத் ஒப்பந்தம் (பின்னாளில் மத்திய ஒப்பந்த அமைப்பு சென்டோ) ஆகியவற்றில் இரண்டு நாடுகளும் பங்கேற்றிருந்தன. இஸ்லாமிய ஒத்துழைப்பு நிறுவனத்திலும் இரண்டு நாடுகளும் இடம்பெற்றிருக்கின்றன. ஐநா பாதுகாப்பு கவுன்சில் விரிவாக்க விஷயத்தில், புதிய நிரந்தர உறுப்பினர்களைச் சேர்ப்பதை எதிர்க்கும் கருத்தொற்றுமைக்கான கூட்டமைப்பிலும் இந்த இரு நாடுகளும் உறுப்பினர்கள்.

அணு விநியோகக் குழுவில் இந்தியா உறுப்பினராகும் விஷயத்தில் சீனாவின் நிலைப்பாட்டைத்தான் துருக்கி ஆதரித்தது.

தேநீர், எலுமிச்சைச் சாறு

இத்தனை எதிர்மறை விஷயங்கள் இருந்தாலும், ஜி-20 மாநாட்டுக்குப் பிறகு, துருக்கி அதிபர் எர்டோகனும் பிரதமர் நரேந்திர மோடியும் தனிப்பட்ட ரீதியிலான நட்பை வளர்த்திருந்தனர். மேற்கத்திய நாடு களை மையமாகக் கொண்ட வெளி யுறவுக் கொள்கையை மாற்றுவதற்கு எர்டோகன் எடுத்துக்கொண்ட முயற்சிகள் இந்தியாவு டனான உறவை வளர்த்துக்கொள்வதற்கு உதவின. அதைப் பயன்படுத்திக்கொள்வதில் மோடியும் தெளிவாக இருந்தார்.

எர்டோகனுக்கும் மோடிக்கும் இடையிலான ஒற்றுமைகள் அவர்களது நெருக்கத்துக்கு வழிவகுத்தன. இரு தலைவர்களையும் ஒப்பிட்டு ‘பேரலல் ஜர்னீஸ்’ எனும் கட்டுரையை அமிதவ் கோஷ் 2014-ல் எழுதியிருந்தார். அதில் இருவரும் இளம் வயதில் பொருளாதார ரீதியாகக் கஷ்டப்பட்டதைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். மோடி ரயில் நிலையத்தில் தேநீர் விற்றதைப் போல், எர்டோகனும் துருக்கியில் தெருமுனையில் எலுமிச்சைச் சாறு விற்றவர். இருவரும் பெரும் போராட்டங்களுக்குப் பின்னர், தங்கள் கட்சியின் உயர் பொறுப்புகளுக்கு வந்தவர்கள். இருவருக்கும் ஆழமான மதநம்பிக்கை உண்டு. இருவரும் பேச்சாற்றலில் சிறந்தவர்கள்.

2014 மக்களவைத் தேர்தலில் மோடி பெற்ற வெற்றி, 2002-ல் நீதி மற்றும் வளர்ச்சி கட்சி (ஏ.கே.பி.) சார்பில் துருக்கி பிரதமராக எர்டோகன் வெற்றி பெற்றதை நினைவூட்டுவதாக அமிதவ் கோஷ் குறிப்பிட்டிருந்தார். இருவரது கட்சிகளும் மத அமைப்புகளுடன் தொடர்புடையவை; இரண்டுமே நீண்டகாலம் ஆட்சியிலிருந்த மதச்சார்பின்மை கொண்ட தேசியவாத உயர் சக்திகளை வென்று ஆட்சியைப் பிடித்தவை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்தியாவும் துருக்கியும் பல்வேறு இனக் குழுக்கள், பல்வேறு மதங்கள் கொண்ட உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடுகள் என்று ‘எ கொஸ்டின் ஆஃப் ஆர்டர் இந்தியா, துருக்கி அண்ட் தி ரிட்டர்ன் ஆஃப் ஸ்ட்ராங்மென்’ எனும் தனது சமீபத்திய நூலில் பத்திரிகையாளர் பஷாரத் பீர் குறிப்பிட்டிருக்கிறார். இரு நாடுகளின் நிறுவனத் தந்தைகளும் (முஸ்தஃபா கமால் ஆடர்டக், நேரு) செல்வாக்கு பெற்ற தலைவர்கள். சுதந்திரமான, நேர்மையான தேர்தல், மதச் சுதந்திரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட மேற்கத்திய நவீனத்தை நோக்கித் தத்தமது நாடுகளைக் கொண்டுசெல்ல விரும்பியவர்கள்.

எர்டோகன், மோடி ஆகிய இரண்டு தலைவர்களுக்கும் இடையிலான ஆளுமை அடிப்படையிலான அரசியல் தொடர்புகளை பஷாரத் பீர் பொருத்திப் பார்க்கிறார். தேசப் பெருமையைப் புதுப்பிப்பதற்கான வாக்குறுதி, தேசியவாதத்தை ஆதரிக்கும் குழுக்களைப் போஷிப்பது, விமர்சனங்களையும் மக்கள் சமூகத்தையும் பொறுத்துக்கொள்ளாதது, தனிப்பட்ட ரீதியிலான செல்வாக்கு என்று இரு தலைவர்களுக்கும் இடையிலான தொடர்புகளைக் குறிப்பிடுகிறார். முஸ்லிம் பெண்களுக்குப் பெரிய அளவிலான உரிமைகள் வழங்கும் நோக்கில் ‘முத்தலாக்’கை ஒழிக்க மோடி விரும்பும் சூழலில், எர்டோகனோ துருக்கிப் பெண்கள் தலையில் முக்காடு இடும் வழக்கத்தை மீண்டும் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

எர்டோகனின் இந்திய வருகைக்கு முன்னதாக நிகழ்ந்த குடியரசுத் துணைத் தலைவர் அமீது அன்சாரியின் அர்மீனியா பயணம், சைப்ரஸ் அதிபர் நிகோலஸ் அனஸ்டாசயடேஸின் இந்திய வருகை போன்றவை அத்தனை நல்ல சகுனங்களாக இல்லை. பதிலுக்கு எர்டோகனும் காஷ்மீர் விஷயத்திலும் அணு விநியோகக் குழு விஷயத்திலும் பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டையே வெளிப்படுத்தினார்.

வெளியுறவுக் குழப்பம்

துருக்கியின் 350 பில்லியன் டாலர் வெளிநாட்டு வர்த்தகத்தில் பாதி ஐரோப்பாவுடனானது. இந்தியாவுடனான துருக்கியின் ஆறு பில்லியன் டாலர் வர்த்தகம் 2020-வாக்கில் 10 பில்லியன் டாலராக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதார அளவில் இது பெரிய மாற்றத்துக்கு வழிவகுத்துவிடாது. துருக்கியில் பத்தாண்டுகளுக்கு முன்னர் பொருளாதாரச் சூழல் நன்றாக இருந்தது.

மிதவாத, முற்போக்கான முஸ்லிம் நாடாகவே துருக்கி இருந்தது. ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராகும் வாய்ப்பும் துருக்கிக்குப் பிரகாசமாக இருந்தது. ஆனால், அரபுப் புரட்சிக்குப் பின்னர் துருக்கி முழுக்கவும் இஸ்லாமிய நாடாகவே மாறத் தொடங்கியது.

சிரியாவில் அஸாத் அரசுக்கு ஆதரவாக, ஐஎஸ் படைகள் மீது ரஷ்யர்கள் தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கும்போது மறுபக்கம், துருக்கிய விமானத் தளங்களைப் பயன்படுத்திக்கொண்ட அமெரிக்கா, சிரிய குர்து இனப் போராளிகளை அதற்குப் பயன்படுத்திக்கொண்டது. ரஷ்யப் போர் விமானத்தின் விமானியைத் துருக்கிப் படையினர் சுட்டுக் கொன்ற சம்பவத்துக்குப் பின்னர் அந்நாட்டுடனான உறவு மோசமடைந்தது. ஆறு மாதங்களுக்குப் பிறகு துருக்கி மீது ரஷ்யா விதித்திருந்த பொருளாதாரத் தடைகளை நீக்க அந்தச் சம்பவத்துக்காக எர்டோகன் மன்னிப்பு கேட்க வேண்டிவந்தது.

வானளாவிய அதிகாரம்

இப்படி வெளியுறவுக் கொள்கை விஷயத்தில் திணறிக்கொண்டிருந்தாலும், கடந்த ஜூலை மாதம் துருக்கியில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியைப் பயன்படுத்திக்கொண்டு தனது அதிகாரத்தை மேலும் தக்கவைத்துக்கொண்டார் எர்டோகன். அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் வசிக்கும் முஸ்லிம் மதகுரு ஃபெதுல்லா குலென்தான் இந்தப் புரட்சியைத் தூண்டிவிட்டார் என்று குற்றம்சாட்டிய எர்டோகன், அவரது ஆதரவாளர்கள் எனும் சந்தேகத்தின் பேரில் 1,20,000 அரசு ஊழியர்கள், குறிப்பாக நீதித் துறை, கல்வித் துறையைச் சேர்ந்தவர்களை இடைநீக்கம், பணிநீக்கம் செய்திருக்கிறார். ஊடகங்களுக்கும் கடும் கட்டுப்பாடு!

இவற்றுடன், அரசியல் சட்டத்தில் 18 சட்டத் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பாக எர்டோகன் நடத்திய வாக்கெடுப்பில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் அவருக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. இந்தச் சட்டத்திருத்தங்களின்படி, 2019 தேர்தலுக்குப் பின்னர், இரண்டு முறை அடுத்தடுத்த ஐந்தாண்டுகளுக்கும் அவர் பதவியில் நீடிப்பார். தனக்கு வேண்டியவர்களைத் துணை அதிபராக்க முடியும்; பிரதமர் பதவி ஒழிக்கப்படுகிறது. இப்படி வானளாவிய அதிகாரத்தைத் தன்வசப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்.

இன்னும் இரண்டு ஆண்டுகளில் அந்தப் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருப்பார். இந்தச் சூழலில், இந்தியா துருக்கி உறவின் புதிய அத்தியாயம் தொடங்குவதற்கு உகந்த தருணத்துக்காக நீண்ட காலம் காத்திருக்க வேண்டும் என்பது நிச்சயம்.

� ‘தி இந்து’ (ஆங்கிலம்) | தமிழில் சுருக்கமாக: வெ.சந்திரமோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x