Published : 06 Jun 2017 09:24 am

Updated : 06 Jun 2017 09:24 am

 

Published : 06 Jun 2017 09:24 AM
Last Updated : 06 Jun 2017 09:24 AM

பாடம் சொல்லும் புதிய பிரெஞ்சுப் புரட்சி

தீவிர அரசியல்வாதி அல்லாத புதியவர் ஒருவர் தொடங்கிய கட்சிக்கு அமோக ஆதரவு அளித்திருப்பதன் மூலம், கட்சி அரசியல் அமைப்பு என்ற முறை தேவையற்றதாகிவிட்டது என்று உணர்த்தியிருக்கிறார்கள் பிரான்ஸ் மக்கள். பிரதான அரசியல் கட்சிகள் மக்களுடைய ஆதரவை இழப்பது இது முதல் முறையல்ல; அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் 1960-கள், 1970-களில் களத்தில் இருந்த போட்டிக் கட்சிகளிடையே பல அம்சங்களில் வித்தியாசமே இல்லாமல் போனது. இதனால் மாற்றத்தை விரும்பிய வாக்காளர் களால் தெளிவான முடிவுக்கு வர முடியாமல் போனது. இந்தியாவிலும் 1960-களில், மிகவும் குறிப்பாக நெருக்கடி நிலை அமல் நடந்த 1975-77-க்குப் பிறகு காங்கிரஸ் மீதான மக்களுடைய நம்பிக்கை குறையத் தொடங்கியது. 1990-களில் இந் நிலையை, ‘பிரதிநிதித்துவ நெருக்கடி’ என்றே உலக அறிஞர்கள் அழைத்தனர்.

மக்களுடைய பிரச்சினைகளை அடை யாளம் கண்டு தீர்க்க இப்போதுள்ள அரசியல் கட்சிகள் தவறினால், மக்கள் தாங்களாகவே ஜனநாயக சாயலுடன் தென்படும், சாதாரண மக்கள் இயக்க அமைப்புகளைக்கூட ஏற்று ஆதரித்து விடுவார்கள் என்று அவர்கள் எச்சரித்தனர்.


அதே தசாப்தத்தில் கோலோச்சிய, உலகமயமாதல் என்ற கொள்கை புதிய உலக முறைமைக்கு வழிகோலியது. ‘தடையற்ற வர்த்தகத்தை உலக அளவில் ஏற்பதன் மூலம் பொருளாதார எல்லைகள் மறைந்துவிடும், மூலதனமும் சரக்குகளும் எல்லா திசைகளிலும் பயணிக்கும், தேசிய அரசுகள் மறைந்து உலக சமூகம் ஏற்பட்டுவிடும், உலக அளவிலான நிர்வாக அமைப்புகூட ஏற்பட்டுவிடும்’ என்றார்கள். பொருளாதாரத் துறையில் உலகமயமாதல் கொள்கை கவலைகளையே பெருக்கியது. வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை, ஊதியத்திலும் செல்வ வளத்திலும் கடுமையான ஏற்றத்தாழ்வு ஆகியவற்றுக்கு வழிவகுத்தது. வேலையில்லாத் திண்டாட்டம் ஐரோப்பாவில் கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தியது.

அதுவரை பிரபலமாக இருந்த அரசியல் கட்சிகளைச் சாராத, சமூகத்தில் ஓரளவுக்கு அறிமுகமான தனி நபர்களைத் தேர்ந்தெடுக்க மக்கள் தயாரானார்கள். அவர்கள் அரசியல் கட்சிகளையோ, இயக்கங்களையோ சாராதவர்கள் என்றாலும் ஏற்பது என்று முடிவு செய்தார்கள். இப்போதுள்ள அரசியல்வாதிகள் மோசடிப் பேர்வழிகள், அரசியல் கட்சிகள் சுயநலவாதிகளின் புகலிடங்கள் என்று பிரபலஸ்தர்கள் பேசும்போது மக்கள் அதை ஏற்றார்கள். ஊழல் நிறைந்த, திறமையற்ற நிர்வாகத்தை அளிக்கும் இவர்களைத் தூக்கி எறியுங்கள் என்று அறைகூவல் விடுத்தபோது மக்கள் அதைச் செயல்படுத்தினார்கள். மக்களின் உண்மையான பிரதிநிதிகள் தாங்கள்தான் என்று அவர்களால் எளிதில் நம்பவைக்க முடிந்தது.

மோடி, கேஜ்ரிவால், ட்ரம்ப்

அமெரிக்கர்களின் அதிருப்தியைச் சரியாகப் புரிந்து கொண்ட டொனால்ட் ட்ரம்பால், குடியரசுக் கட்சிக்கும் அப்பால் குவிமையமாக முடிந்தது. அமெரிக்காவின் பிரச்சினைகள் என்று பலவற்றை அடையாளம் கண்டு, அதற்கான தீர்வுகளையும் அவர் கூறியபோது மக்கள் ஏற்றுக் கொண்டனர். 2015-ல் டெல்லி வாக்காளர்கள் காங்கிரஸ், பாஜக அல்லாத வெளியாளான அர்விந்த் கேஜ்ரிவாலை முதலமைச்சராக ஏற்றுக்கொண்டார்கள். அதற்கும் முன்னால், பாரதிய ஜனதா கட்சியைவிட குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடியிடம் செயல் துடிப்பு இருப்பதாக நம்பி, பிரதமர் பதவிக்கு அவரை ஆதரித்தனர். இதே கதைதான் துருக்கியில் ரெகப் தய்யீப் எர்டோகன், பிலிப்பின்ஸின் ராட்ரிகோ டுடார்டி, எகிப்தின் அப்துல் ஃபட்டா எல்-சிசி, ரஷியாவின் விளாதிமிர் புடின் ஆகியோரின் வெற்றிக்குப் பின்னாலும். இப்போது பிரான்ஸில் அதிபர் இம்மானுவேல் மெக்ரான்.

அரசியல் கட்சிகளைவிட தனி நபர்களைத் தேர்வு செய்வது ஜன நாயகத்தில் ஏற்புடையதாக இருந்த தில்லை. ஜனநாயகம் வலுவற்ற நாடுகளில் மக்களின் அமோக ஆதரவில் ஆட்சிக்கு வரும் தலைவர்கள் சட்ட மன்றங்கள், சட்டப்படியான ஆட்சி, மனித உரிமைகள், மக்கள் அமைப்புகள், நீதித் துறை என்று அனைத்தையுமே தங் களுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்துவிடுவார்கள். எந்த நாட்டிலுமே இது ஜனநாயகத்துக்கு வலு சேர்க்காது. அதே வேளையில் இத்தலைவர்களை நாம் ஜனநாயகமற்றவர்கள் என்றும் முடிவுகட்டிவிட முடியாது. தேர்தலில் கிடைத்த வெற்றி அவர்களுக்கு அதிகாரத்தைத் தந்திருக்கிறது, அந்த அதிகாரத்தைச் செயல்படுத்துவதற்கு அவர்களுக்கு ஆதரவு இருக்கிறது.

ஜனநாயகத்தின் வினோத முரண் என்று இந்நிலையை வர்ணிக்கலாம். 1989-ல் சோஷலிச சமூகங்கள் சிதையத் தொடங்கியதும், உலகின் பிற பகுதிகளை ஜனநாயகப்படுத்தும் பொறுப்புகளை மேற்கத்திய நாடுகளின் தாராளச் சிந்தனையாளர்கள் ஏற்றனர். சுதந்திரமாகவும் நேர்மையாகவும் பொதுத் தேர்தல் நடப்பதையே அவர்கள் ஜனநாயகத்தின் உரைகல்லாக நிர்ணயித்தனர். உலகின் பல்வேறு நாடுகளில் தேர்தல்கள் தொடர்ந்து நடை பெறுகின்றன. ஜனநாயக அமைப்புகளை சிதைக்காவிட்டாலும் சட்டப்படி அவற்றைச் செயல்படவிடாமல் தடுத்தவர்கள், அதிகாரத்தைச் சொந்த ஆதாயத்துக்குப் பயன்படுத்தியவர்கள், வரம்பற்ற அதிகாரங்களைக் கையில் எடுத்தவர்கள் கூட மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் என்பது ஜனநாயக முரணாகும்.

உடனடிப் பிரச்சினைகளுக்கு அரசியல் கட்சிகளால் தீர்வு காண முடியாது என்பதாலும் வெவ்வேறு தரப்பு மக்களுக்கு கட்சிகளைவிட தனி நபர்களால் ஏதேனும் நன்மைகளைச் செய்ய முடியும் என்பதாலும் கட்சிகளைவிட தனி நபர்களை அல்லது செல்வாக்கு பெற்ற தலைவர்களை மக்கள் ஆதரிக்கின்றனர். ஜனநாயகத்தின் வலிமையை அதில் உள்ள சில அம்சங்களே குன்றச் செய்து விடுகின்றன.

தவறைத் திருத்தும் நேரம்

ஜனநாயகம் என்பது இப்போது, அதிகாரத்தைக் கைமாற்றித் தருவது என்றாகிவிட்டது. கட்சி அரசியல் என்பது நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது. இதற்குத் தீர்வு, மக்கள் செல்வாக்குள்ள தலைவர்கள் அரசியல் கட்சிகளுக்குத் தலைமை தாங்குவதுதான். தேர்தலில் வெற்றி பெறுவதை மட்டுமே இலக்காக வைத்துச் செயல்படாமல் மக்களிடையே கட்சிக்கு வலுவான அடித்தளத்தை ஏற்படுத்த வேண்டும். தனியொரு தலைவரை மட்டுமே நம்பியிருப்பது கற்பனைகளைத் துண்டாடும், ஒற்றுமையைச் சிதைக் கும். கட்சிச் செயல்பாடுகளில் பங்கேற்பு, மக்களுடைய ஜனநாயக உரிமை களை மதிப்பது, சிறுபான்மைச் சமூகத் தவர்களின் உரிமைகளைக் காப்பது, சமூக உறவுகளில் ஜனநாயகத் தன்மையைப் புகுத்துவது, விவாதம் - கலந்துரையாடல்கள் மூலம் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வது போன்றவற்றின் மூலம் ஜனநாயக உணர்வுகளைத் தூண்ட முடியும், அரசியல் கட்சிகளுக்குப் புதுவாழ்வு அளிக்க முடியும். இப்படிச் செய்வது கட்சி அரசியலைக் காப்பாற்றுவதற்காக மட்டுமல்ல, ஜனநாயகத்தையே காப்பாற்றுவதற் காகவும் அவசியம்தான்.

நீரா சந்தோக், டெல்லி பல்கலைக்கழக அரசியல் அறிவியல் துறை முன்னாள் பேராசிரியர்.

சுருக்கமாகத் தமிழில்: சாரி

©தி இந்து ஆங்கிலம்.


பிரெஞ்சுப் புரட்சிஜனநாயகம்சுதந்திரம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x