Last Updated : 19 Jun, 2017 09:07 AM

 

Published : 19 Jun 2017 09:07 AM
Last Updated : 19 Jun 2017 09:07 AM

விலையும் வீழ்ச்சி, விளைச்சலும் வீழ்ச்சி!

கரும்பு உற்பத்தியில் பிரேசிலுக்கு அடுத்து இரண்டாமிடத்தில் இருக்கிற இந்தியா, சர்க்கரை நுகர்வில் முதலிடத்தில் இருக்கிறது. இதுவரை, உள்நாட்டுத் தேவையைத் தாண்டி உற்பத்திசெய்த இந்தியா, இந்த ஆண்டு தன் தேவையையே பூர்த்திசெய்ய முடியாமல் தவிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய வீழ்ச்சி இது. 2016 -17ம் ஆண்டுக்கான 245 லட்சம் டன்னையே பூர்த்திசெய்ய முடியாத நிலையில், 2020-ல் நம் உள்நாட்டு நுகர்வுக்கு ஐந்து கோடி டன் சர்க்கரை தேவைப்படும் என்று கணக்கிட்டுள்ளனர்.

உள்நாட்டுத் தேவைக்கு ஏற்ப கரும்பும் சர்க்கரை உற்பத்தியும் அதிகரிக்கவில்லை எனில், பெரும் தொகை செலவழித்து வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும். தேவை அதிகமாகும் காலத்தில் உற்பத்தி குறைவதற்கு, அரசின் அணுகுமுறையே காரணம்.

மத்திய அரசின் சட்டத் திருத்தம்

21.10.2009-ல் அத்தியாவசியப் பொருட்கள் பாதுகாப்புச் சட்டம் -1955ஐ மத்திய அரசு திருத்தி, சர்க்கரைக் கொள்கையில் மாற்றங்களைக் கொண்டுவந்தது. இதைத் தொடர்ந்து கரும்பு விவசாயிகளுக்குப் பாதுகாப்பாக இருந்த கரும்புக் கட்டுப்பாட்டுச் சட்டம் -1966ல் தனியார் சர்க்கரை ஆலை முதலாளிகளுக்குச் சாதகமாகப் பல திருத்தங்களையும் செய்தனர். கரும்புக்கு விலை நிர்ணயம் செய்வதில் 40 ஆண்டுகளாக மத்திய அரசு அமல்படுத்திவந்த சட்டபூர்வமான, குறைந்தபட்ச விலை என்ற முறையை, நியாயமான - கட்டுப்படியாகிற விலை என்று 2009-ல் மாற்றி அமைத்தனர்.

இந்த மாற்றம், மத்திய அரசு அறிவிக்கும் கரும்புக்கான பரிந்துரை விலையைவிட அதிகமான விலையை அறிவிக்கும் மாநில அரசின் அதிகாரத்தைப் பாதித்தது. இந்த மாற்றம் மத்திய அரசின் விலையைவிட கரும்புக்குக் கூடுதல் விலை அறிவிக்கும் மாநில அரசின் அதிகாரத்தை உறுதிப்படுத்திய 5.5.2004 உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் சாரத்துக்கு முரணானது.

ரங்கராஜன் குழு பரிந்துரை

பின்னர், மத்திய அரசால் அமைக்கப்பட்ட டாக்டர் ரங்கராஜன் தலைமையிலான குழு, சர்க்கரைத் தொழிலில் கட்டுப்பாடுகளை முற்றிலும் நீக்கப் பரிந்துரைத்தது. “ரங்கராஜன் குழுவின் பரிந்துரைகள் தனியார் ஆலை முதலாளிகளுக்குத் தடையற்ற லாபத்தை அனுமதிப்பதாகவே அமையும்” என்று எச்சரித்தோம். இன்று அதுதான் நடக்கிறது. 2009-ல் மத்திய அரசு மாற்றி அமைத்த, கரும்புக்கு விலை அறிவிக்கும் முறை (FRP) அடிப்படை ஆதாரமற்றதாக உள்ளது. கரும்பின் உற்பத்தி செலவைக் கூட ஈடுசெய்வதாக இல்லை. உதாரணத்துக்கு, CACP கணக்குப்படி 2015-16ல் சராசரியாக ஒரு டன் கரும்பு உற்பத்திச் செலவு ரூ. 2,240 என்றிருந்த நிலையில், மத்திய அரசு ஒரு டன் கரும்புக்கு வாகன வாடகை போக ரூ. 2,200 என்று விலையை அறிவித்தது. 2016 -17ல் உற்பத்திச் செலவு உயர்ந்தபோதிலும் மத்திய அரசு ஒரு டன் கரும்புக்கு அதே ரூ. 2,200 மட்டுமே விலையாக அறிவித்தது.

இந்நிலையில்தான், மாநில அரசு பரிந்துரை விலையை அறிவிப்பது கரும்பு விவசாயிகளுக்குச் சற்று ஆறுதலாக இருந்தது. அது அவசியமும்கூட. ரங்கராஜன் குழு சர்க்கரைத் துறையில் சீர்திருத்தத்துக்கான பரிந்துரையை 2012 அக்டோபர் மாதத்தில் மத்திய அரசுக்கு அளித்த பிறகு, 2013-14 முதல் தனியார் ஆலை முதலாளிகள் மாநில அரசின் பரிந்துரை விலையைக் கடந்த நான்கு ஆண்டுகளாகத் தரவில்லை. 2013-14ல் 270.66 கோடி, 2014-15ல் 235.59 கோடி, 2015-16ல் 497.01 கோடி, 2016-17ல் 420.92 கோடி என்று மொத்தம் ரூ. 1,418 கோடியைத் தனியார் ஆலைகள் பாக்கியாக வைத்துள்ளன.

நிலைமை இப்படியிருக்க, ‘சர்க்கரை விலை குறைந்து தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுவிட்டதால் மாநில அரசு அறிவித்த விலையைத் தர முடியவில்லை’ என்று கூறிவிட்டு, ‘மாநில அரசுக்கு விலை அறிவிக்கும் அதிகாரம் இல்லை. எனவே, அறிவித்த விலையைத் தரச் சொல்லி எங்களை நிர்ப்பந்திக்கக் கூடாது’என்று தனியார் ஆலை முதலாளிகள் சங்கம் உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது.

அலைக்கழிப்பு

ரங்கராஜன் குழுவின் பரிந்துரையில், விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் பாதகமான அம்சங்கள் உள்ளன. எனவே, இதே வடிவத்தில் குழுவின் பரிந்துரையை ஏற்க இயலாது என்று தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் 2013 மார்ச்சில் கடிதம் எழுதினோம். இதற்கான பதிலை மத்திய உணவு அமைச்சகம் அனுப்பியது. மாநில சர்க்கரைத் துறை ஆணையத்துக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இக்கடிதத்தில், ‘ஆலைகளுக்குக் கரும்புப் பகுதியைப் பங்கீடுசெய்வது, மாநில அரசு கரும்புக்குப் பரிந்துரை விலை அறிவிப்பது தொடர்பான முடிவுகளை மாநில அரசிடமே விட்டுவிடுகிறோம். மாநில அரசே தீர்மானித்துக்கொள்ளலாம்’என்று கூறப்பட்டுள்ளது. இதன் பிறகே தமிழ்நாடு அரசு கரும்புக்குப் பரிந்துரை விலையை தொடர்ந்து அறிவித்துவருகிறது. கடுமையான வறட்சி சூழலிலும், வங்கிகளிலும் தனியாரிடமும் விவசாயிகள் கடன் பெற்று ஆண்டு முழுவதும் பாடுபட்டு ஆலைக்கு அனுப்பிய கரும்புக்கு அரசு அறிவித்த விலையைப் பெற முடியவில்லை. வாங்கிய கடனைத் திருப்பித்தர முடியாமல் திருமணம், மருத்துவம், கல்விக் கட்டணம் உள்ளிட்ட குடும்பச் செலவுகளுக்குப் பணம் இன்றித் தவிக்கும் கரும்பு விவசாயிகளைத் தனியார் ஆலைகள் தொடர்ந்து அலைக்கழிக்கின்றன. கூட்டுறவு மற்றும் பொதுத் துறை ஆலைகளிலும் சுமார் 265 கோடி ரூபாய் வரை பாக்கி வைத்துள்ளனர். அதே நேரத்தில், லாபத்தில் இயங்கும் ஐந்து கூட்டுறவு ஆலைகள் கரும்புக்கான கொள்முதல் விலை முழுவதையும் விவசாயிகளுக்குக் கொடுத்துள்ளன.

தனியார் ஆலைகள் சர்க்கரை விலை உயர்ந்து நல்ல லாபம் ஈட்டுகிற நிலையிலும், கொள்முதல் செய்த கரும்புக்குப் பணம் தரவில்லை.

கரும்பு கட்டுப்பாட்டுச் சட்டம் 1966 - பிரிவு 5A படி, ஒவ்வொரு சர்க்கரை ஆலையும் லாபத்தில் கரும்பு விவசாயிகளுக்குப் பங்கு தர வேண்டும். இந்த உட்பிரிவை 2009 இறுதியில் மத்திய அரசு நீக்கிவிட்டது. இச்சட்டம் நடைமுறையில் இருந்த காலத்தில், தமிழ்நாட்டில் 2004 முதல் 2009 வரை விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய லாபப் பங்கைப் பெற சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் வழக்குத் தொடுத்து உத்தரவைப் பெற்றது. உத்தரவுப்படி, கூட்டுறவு மற்றும் பொதுத் துறை ஆலைகள் லாபப் பங்கை விவசாயிகளுக்கு ரூ. 70 கோடி வரை கொடுத்துவிட்டன. ஆனால் தனியார் சர்க்கரை ஆலைகள், தர வேண்டிய லாபப் பங்குத் தொகை ரூ. 300 கோடி 5A சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்டுவிட்டதால் தர மாட்டோம் என்று கூறுகின்றன. அப்பிரிவு நடைமுறையிலிருந்த காலத்தில் கொடுக்க வேண்டிய பணத்தைத்தான் கேட்கிறோம் என்று நீதிமன்றத்தில் போராடிவருகிறோம்.

மத்திய அரசு தனியார் ஆலைகளுக்குச் சாதகமாக கரும்பு கட்டுப்பாடு சட்டத்தில் பல திருத்தங்களைச் செய்துள்ளது. 8.5 சதம் பிழிதிறனுக்குக் கரும்பு விலை நிர்ணயிக்கப்பட்டு வந்ததை 9.5 சதம் பிழிதிறனுக்கு என மாற்றி அமைத்தனர். உற்பத்திச் செலவில் பொது விநியோக முறைக்கு ஆலைகள் வழங்கிவந்த 10% லெவி சர்க்கரையை ரத்துசெய்தனர். சர்க்கரை விற்பனைக்கு இருந்த கட்டுப்பாடுகளை நீக்கினர். கொள்முதல் பாக்கியைத் தருவதற்கு என்று சொல்லி சர்க்கரை ஆலைகளுக்கு ரூ.17,000 கோடியை வட்டி இல்லாமல் கடன் கொடுத்தனர். கச்சா சர்க்கரை ஏற்றுமதிக்கான மானியத்தை டன்னுக்கு ரூ.4,000 ஆக உயர்த்தி வழங்கினர். இவை ஆலைகளுக்கு ஆதாயத்தையும் கரும்பு விவசாயிகளுக்குப் பாதிப்புகளையும் ஏற்படுத்தின. இதற்குப் பின்பும் மாநில அரசு அறிவித்த விலையைத் தனியார் ஆலைகள் தர மறுக்கின்றன.

உரிய காலத்தில் கரும்புக்குப் பணம் கிடைக்காததாலும், வறட்சியினாலும் கரும்புச் சாகுபடி பரப்பு வெகுவாக குறைந்துவருகிறது. தமிழ்நாட்டில் 2006-07ல் 25.45 லட்சம் டன்களாகவும், 2011-12ல் 21 லட்சம் டன்களாகவும் இருந்த சர்க்கரை உற்பத்தி 2016-17ல் 9.5லட்சம் டன்களாகக் குறைந்துவிட்டது. 2017-18ல் இது மேலும் குறையும்.தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை ஆலைகள், ஒரு நாளைக்கு 1.25 லட்சம் டன் கரும்பை அரைக்கும் அரவைத் திறனைப் பெற்றுள்ளன. சர்க்கரைத் தொழில், கரும்புச் சாகுபடி குறையும்போது நெருக்கடிக்கு உள்ளாகும். நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்றுள்ள 50 ஆயிரம் பேர் பாதிக்கப்படுவார்கள். 2020-ல் உள்நாட்டில் சர்க்கரை நுகர்வுக்கு ஐந்து கோடி டன் தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டில் சர்க்கரை உற்பத்தி குறைகிறது. ஆக, இது விவசாயிகளின் பிரச்சினை மட்டுமல்ல என்பதை அரசு உணர வேண்டும்.!

டி.ரவீந்திரன், பொதுச் செயலாளர், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x