Last Updated : 11 Apr, 2017 09:10 AM

 

Published : 11 Apr 2017 09:10 AM
Last Updated : 11 Apr 2017 09:10 AM

வங்கதேசம் - இந்தியா நட்பு ஓடும் நதியைப் போன்றது!

அண்டை அயலாருடன் நல்ல உறவைப் பேணுவது, அனைவருடனும் நட்பு பாராட்டுவது, யாரிடமும் வெறுப்பு காட்டாமல் இருப்பது ஆகியவை என் வாழ்நாள் முழுவதும் நான் கடைப்பிடித்துவரும் கொள்கைகள். ஏழ்மையின் சாபத்தால் யாரும் துன்புறக் கூடாது; மக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும். அப்படியான ஒரு சமூகத்தை உருவாக்குவதுதான் என் அரசியல் சிந்தனையின் ஒரே ஆசை.

இதுபோன்ற ஒரு தியாகத்தின் பாடத்தை என் தந்தையிடமிருந்து பெற்றேன். மக்களின் வாழ்க்கையை மாற்றிக்காட்டும் கொள்கையுடன் தேசத் தந்தை, ‘வங்கபந்து’ வங்காளிகளின் நண்பன் என்று அழைக்கப்படும் எனது தந்தை ஷேக் முஹிபுர் ரஹ்மான் தனது அரசியலை மேற்கொண்டார். அநீதி எங்கு நடந்தாலும் அதை அவர் எதிர்ப்பார். அதுதான் அவரது கொள்கை. மக்களின் உரிமைகளை நிறுவுவதற்காக எப்போதும் குரல்கொடுத்தவர் அவர். அதற்காகப் பல முறை அவர் சிறை செல்ல நேர்ந்தது, துன்புறுத்தல்களை எதிர்கொள்ள நேர்ந்தது. எனினும், தனது கொள்கையில் அவர் உறுதியாக நின்றார். அவரது தலைமையில்தான் வங்கதேசம் சுதந்திரமடைந்தது.

அண்டை நாடுகள், நட்பு நாடுகள் தந்த ஆதரவும் ஒத்துழைப்பும் வங்கதேச விடுதலையை நோக்கிய எங்கள் லட்சியத்தை முடுக்கிவிட்டன. அதில் இந்தியா பிரதானப் பங்கை வகித்தது. 1971 மார்ச் 25-ல் அப்பாவி வங்காளிகள் மீது ஆயுதம் தாங்கிய தாக்குதல்கள் நடத்தி, இனஅழிப்பைத் தொடங்கியது பாகிஸ்தான் ராணுவ அரசு.

விடுதலைப் போர்

1970 பொதுத் தேர்தல்களில் வங்கதேச மக்கள் ‘வங்கதேச அவாமி லீக்’ கட்சிக்கு வாக்களித்து, அதைப் பெரும்பான்மை கொண்ட கட்சியாக்கினர். வங்காளிகள் பாகிஸ்தானை ஆட்சிசெய்ய முதன்முறையாகப் பெரும்பான்மை பெற்றது அப்போதுதான். கிழக்கு வங்காளத்தைச் சேர்ந்த மக்கள் பாகிஸ்தானில் பெரும்பான்மை பெற்றிருந்தாலும், வங்காளிகள் வசித்த பிரதேசம் எப்போதும் அடக்குமுறைக்கு ஆளானதுடன், அதன் உரிமைகளும் மறுக்கப்பட்டன. தனது தாய்மொழியில் பேசும் உரிமையையே இழக்க வேண்டிய சூழல் வங்காளிகளுக்கு ஏற்பட்டது. ஆட்சி அதிகாரத்துக்கு வங்காளிகள் வருவது பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர்களால் பொறுத்துக்கொள்ள முடியாததாக இருந்தது. மக்களின் பெரும்பான்மையுடன் வங்கதேசத்தின் விடுதலையை அறிவித்த தேசத்தந்தை, விடுதலைப் போரில் ஈடுபடுமாறு மக்களை வழிநடத்தினார். அவரது அழைப்பை ஏற்றுக்கொண்ட வங்கதேச மக்கள், கைகளில் ஆயுதம் ஏந்தி விடுதலைப் போரைத் தொடங்கினார்கள். பாகிஸ்தான் ஆட்சியாளர்களும் அவர்களது கூட்டாளிகளும் இணைந்து இனப்படுகொலை, பாலியல் பலாத்காரம், கொள்ளை, தீவைப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டதுடன் வங்கதேசத்தின் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

அடக்குமுறைக்கு ஆளான வங்கதேசத்தவர்கள் பக்கம் இந்திய அரசும் இந்திய மக்களும் நின்றனர். சுமார் ஒரு கோடி வங்கதேச அகதிகளுக்கு உணவும் உறைவிடமும் வழங்கினர். வங்கதேச விடுதலைப் போருக்கு ஒத்துழைப்பு வழங்கியதுடன், உலக அளவில் வங்கதேசத்துக்கு ஆதரவான பார்வையை உருவாக்குவதிலும் முக்கியப் பங்கை இந்தியர்கள் வகித்தனர்.

நட்புமிக்க இந்திய மக்களுக்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். பாகிஸ்தான் சிறையிலிருந்து தேசத்தந்தை வெளிவருவதற்கும் இந்தியா முக்கியப் பங்காற்றியது. வங்கதேசம் விடுதலை பெற்றதிலும், வங்கபந்து சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதிலும், அவரது நேசத்துக்குரிய மக்களிடம் அவரை மீட்டுக் கொடுத்ததிலும் இந்திரா காந்தி முக்கியப் பங்காற்றினார். எங்கள் சோதனைக் காலத்தில் இந்திரா காந்தியின் அரசு, இந்தியாவின் அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது இந்திய மக்களும் எங்களுக்குத் துணை நின்றனர்.

தேசத் தந்தையின் கனவு

1975 ஆகஸ்ட் 15-ல் தேசத் தந்தையைக் கொலைகாரர்கள் கொடூரமாகப் படுகொலை செய்தனர். என் தாய், மூன்று சகோதரர்கள் உள்ளிட்ட எனது உறவினர்கள் 18 பேரை இழந்தேன். நானும் எனது தங்கை ரெஹானாவும் வெளிநாட்டில் இருந்ததால் உயிர் பிழைத்தோம். எங்களுடைய சோதனைக் காலத்தில் மீண்டும் எங்கள் பக்கம் நின்றது இந்தியா. தொடர்ந்து ஆறு ஆண்டுகளுக்கு என்னால் நாடு திரும்ப முடியவில்லை. நான் இல்லாமலேயே வங்கதேச அவாமி லீக் கட்சி என்னைக் கட்சித் தலைவராக்கியது. மக்களின் ஆதரவுடன் நான் நாடு திரும்பினேன்.

நான் நாடு திரும்பிய பின்னர், மக்களின் அடிப்படை உரிமைகளையும் ஜனநாயகத்தையும் மறுகட்டமைக்கும் இயக்கத்தைத் தொடங்கினேன். 21 ஆண்டுகளுக்குப் பிறகு, 1996-ல் நாங்கள் ஆட்சியமைத்தோம். மக்களுக்காகப் பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. எனது நாட்டு மக்களின் நலனுக்கான பணியில் ஒரு ஆட்சியாளராக அல்லாமல், ஒரு சேவகியாக என்னை அர்ப்பணித்துக்கொண்டேன்.

வங்கதேசம் முன்னேற்றப் பாதையில் செல்கிறது. நாங்கள் 7.1% மொத்த உள்நாட்டு உற்பத்தியை அடைந்திருக்கிறோம். பணவீக்கம் 5.28%-க்குள் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. வறுமை விகிதம் 22% ஆகக் குறைக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தருணத்தில், பல்வேறு சமூக பொருளாதாரக் குறிகாட்டிகளின் அடிப்படையில், தெற்காசியாவின் பிற நாடுகளை விடச் சிறந்த இடத்தில் வங்கதேசம் இருக்கிறது. பட்டினி இல்லாத, வறுமையற்ற தங்கமான வங்கதேசத்தை உருவாக்குவதன் மூலம், வங்கபந்துவின் கனவைப் பூர்த்திசெய்வதுதான் எனது லட்சியம். அதற்கு, விடுதலைப் போரின் ஆன்மா எங்களுக்கு ஊக்கமளிக்கும்.

அமைதியும் ஒற்றுமையும்

நான் அமைதியில் நம்பிக்கை கொண்டிருக்கிறேன். அமைதியான முறையில் நடந்துகொள்வதுதான் அமைதியை உறுதிசெய்யும். நமக்கு இடையில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கலாம். ஆனால், எந்தப் பிரச்சினைக்கும் அமைதியான முறையில் தீர்வுகாண முடியும். நிலத்திட்டுப் பரிமாற்ற ஒப்பந்தத்தை அமல்படுத்துவதில் நாம் மனஉறுதியை வெளிப்படுத்தியிருக்கிறோம். பொது நதிகளின் நீரைப் பகிர்ந்துகொள்வது உள்ளிட்ட வேறு சில பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டியிருக்கின்றன. தீஸ்தா நதி தொடர்பான பிரச்சினை தற்போது விவாதிக்கப்பட்டுவருகிறது. நான் நம்பிக்கை நிறைந்தவள். எங்கள் அண்டை நாட்டின் (இந்தியா) சிறந்த தலைவர்கள், மக்களின் நல்லெண்ணத்தில் மீது நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன். இருக்கும் வளங்களில் பற்றாக்குறை உள்ளதை நான் அறிவேன். எனினும், இரு நாட்டு மக்களின் நலனுக்காக நாம் அவற்றைப் பகிர்ந்துகொள்ள முடியும்.

இரண்டு நாடுகளும் ஒரே மாதிரியான கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் கொண்டிருக்கின்றன. இரு நாடுகளுக்கும் பொதுவான, குறைந்தபட்சம் வங்க தேசத்துக்கும் மேற்கு வங்கத்துக்கும் பொதுவான பல ஆளுமைகள் உண்டு. சிந்தனையாளர் லாலன், ரவீந்திரநாத் தாகூர், காஸி நஸ்ருல், ஜீவானந்த தாஸ் என்று பலரைச் சொல்ல முடியும். நமது மொழிகள் ஒரே மாதிரியானவை. இரு நாடுகளுமே பத்மா, பிரம்மபுத்ரா, தீஸ்தா உள்ளிட்ட நதிகள் மூலம் வளம் பெறுகின்றோம். சுந்தரவனக் காடுகள் நம் இரு நாடுகளுக்கும் பொதுவான, பெருமைக்குரிய வனப் பகுதி. சுந்தரவனம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையில் எந்தச் சச்சரவும் இல்லை. பிறகு, பொது நதிகள் விஷயத்தில் மட்டும் கருத்து வேறுபாடு எதற்கு?

நட்பின் ஆழம்

கடந்த சில ஆண்டுகளாக, குறிப்பாக 2009-ல் நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, வங்கதேசம், இந்தியா இடையிலான கூட்டுறவு பன்மடங்கு வலுவடைந்திருக்கிறது. ரயில் பாதைகள், சாலைகள், நீர்வழித் தடங்களின் இணைப்புகள் மேம்பட்டிருக்கின்றன. வணிகம், முதலீடு போன்றவை அதிகரித்திருக்கின்றன. இரு நாடுகளின் மக்களுக்கு இடையிலான தொடர்பும் அதிகரித்திருக்கிறது. இந்தப் பரஸ்பர ஒத்துழைப்பு இரு நாடுகளின் மக்களுக்கு நிச்சயம் பலனளிக்கிறது.

இருதரப்பிலும் தனிப்பட்டரீதியிலும் தேசிய அளவிலுமான உறவுகள், கொடுக்கல் வாங்கல் முறையையே பெரிதும் சார்ந்திருக்கின்றன. ‘நட்பு என்பது ஒரு நதி’ என்றார் நோபல் பரிசு பெற்ற மெக்ஸிகோ கவிஞர் ஓக்டாவியோ பாஸ். வங்கதேசத்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நட்பும் பெருந்தன்மை நிறைந்த, ஓடும் நதியைப் போன்றதுதான்.

இரண்டு அண்டை நாட்டு மக்களின் சிறப்பியல்பு இதுதான். நம் இரு நாடுகளின் கடமைகளும் நேர்மையானவை என்று நினைக்கிறேன். நமது மக்களுக்கு நன்மை அளிக்கும் பல விஷயங்களை நம்மால் சாதிக்க முடியும். எனது இந்தியப் பயணத்தையொட்டி, என் சார்பிலும், எனது நாட்டு மக்களின் சார்பிலும் இந்திய மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிக்க விரும்புகிறேன். எனது பயணத்தின் மூலம் வங்கதேசத்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கூட்டுறவு ஒரு புதிய உயரத்தைத் தொடும் என்று நம்புகிறேன்.

- ஷேக் ஹசீனா, வங்கதேசப் பிரதமர்.

© ‘தி இந்து’ ஆங்கிலம்

தமிழில் சுருக்கமாக: வெ.சந்திரமோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x