Last Updated : 06 Dec, 2013 12:00 AM

Published : 06 Dec 2013 12:00 AM
Last Updated : 06 Dec 2013 12:00 AM

எல்லோருடைய நன்மைக்குமான வளர்ச்சி

நாடு சுதந்திரமடைந்த பிறகு மத்திய திட்ட கமிஷனின் தொடக்கக் காலத்தில் ஜே.சி. குமரப்பா என்ற காந்தியப் பொருளியல் அறிஞர் அதில் பணியாற்றினார். “தொழில்மயத்தைக் கொண்டுவரலாம் ஆனால், அதனுடைய லட்சியம் வன்முறை சார்ந்த பொருளாதாரமாக இருக்கக் கூடாது” என்று வலியுறுத்தினார்.

கேரளத்தின் மேற்கு மலைத்தொடர்ப் பகுதியில் தண்ணீர்வளம், கனிமங்கள், வனவளம், உயிரிப்பல்வகைமை (பயோடைவர்சிட்டி) ஆகியவற்றை யார் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, அதன் எதிர்காலம் என்ன என்பவை தொடர்பாக சமீபகாலமாக ஏற்பட்டுவரும் மோதல்களைப் பார்க்கும் போது, ஒரு சார்பான வளர்ச்சி தொடர்பாக குமரப்பா எச்சரித்தது உண்மையாகிவிட்டது என்றே தோன்றுகிறது.

நோபல் பரிசு பெற்ற பொருளியல் அறிஞர் ஜோசப் ஸ்டிக்ளிஸ் ‘தி பிரைஸ் ஆஃப் இன் ஈகுவாலிடி’ என்கிற தன்னுடைய சமீபத்திய நூலில், “எந்த ஒரு நாடும் தன்னுடைய நான்கு வகை மூலதனங்களுக்கிடையே மோதல்கள் ஏற்படாமல் ஒற்றுமையான வளர்ச்சிக்கு வழிகாண வேண்டும்” என்கிறார். நாடுகளின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு (ஜி.டி.பி.) முக்கியத்துவம் தரும் பண மூலதனம் மட்டுமின்றி, இயற்கை மூலதனம், மனித மூலதனம், சமூக மூலதனம் ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் தேவை என்கிறார்.

செம்பன்முடி குவாரிகள்

கேரளத்தின் பத்தனம்திட்டை மாவட்டத்து செம்பன்முடி குன்றில் உள்ள கல்உடைப்பு குவாரிகளால் சர்ச்சை நிலவுகிறது. பாறைகளை உடைப்பதாலும் பிறகு அரைப்பதாலும் அன்றாடம் நூற்றுக் கணக்கான லாரிகள் இடைவிடாமல் மலைப்பகுதியில் இந்தக் கற்களை எடுத்துச் செல்வதாலும் அந்தப் பகுதி மக்களுக்கு சுவாசக்கோளாறுகள், புற்றுநோய் போன்றவை ஏற்பட்டு, அந்த மருந்துகள் இப்போது அமோகமாக விற்பனையாகின்றன. இதையும் வளர்ச்சியில் சேர்க்கலாம்!

இந்தக் கல்உடைப்புக் குவாரிகள் வந்த பிறகு, இந்தப் பகுதியில் விவசாய நிலங்கள் எப்படி தூசு படிந்து சாரம் இழந்தன, விளைச்சல் எப்படிப் பாதிக்கப்பட்டது, விவசாயத் தொழிலாளர்கள் எப்படி வேலை இழந்து பரிதவிக்கிறார்கள், மரம்-செடி-கொடிகள் எப்படிப் பட்டுப்போயின என்பனவற்றையும் கணக்கெடுத்து, நஷ்டக் கணக்கில் எழுதியிருக்க வேண்டும். ஆனால், உரிய தகவல்கள் சேகரிக்கப்படாததாலும் ஆவணப்படுத்தப்படாததாலும் அந்த இழப்பு எவ்வளவு என்ற புள்ளிவிவரங்கள் யாருக்கும் தெரிவதில்லை.

கல் உடைப்புப் பணி தீவிரமடைந்த பிறகு, லாரி போக்குவரத்தாலும் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட சேதங்களாலும் ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டன, ஓடைகளில் மண் விழுந்து அடைப்புகள் ஏற்பட்டன. இதனால் நிலம், நீர், வனம், பல்லுயிரிகள் மாசடைந்தன. கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு ஆகிய மூன்றும் மனித மூலதனத்துக்கு முக்கியமானவை. செம்பன்முடியில் சுகாதாரம் கெட்டது, சிறு குழந்தைகளுக்கும் நுரையீரல் புற்றுநோய் ஏற்பட்டிருக்கிறது. அடிக்கடி அசுர வேகத்தில் செல்லும் லாரிகளால் குழந்தைகளால் படிப்பில் கவனம் செலுத்த முடிவதில்லை என்று தாய்மார்கள் புலம்புகின்றனர். வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை, உள்ளூர் மக்களுக்கு அதிக வேலைகள் இல்லை.

இந்தக் குவாரிகளில் வேலையில் ஈடுபடுத்தப்படும் சிறிய எண்ணிக்கையிலான தொழிலாளர்களும் ஒடிசா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலத்தவர்கள். தங்களுடைய சொந்த மாவட்டங்களிலேயே இத்தகைய கனிமத் தொழில்களால் வாழ்வாதாரத்தை இழந்தவர்கள். இங்கு வேலையில் இருக்கும்போது அடிபட்டாலோ, ஏன் உயிரிழந்தாலோகூட நஷ்ட ஈடு இல்லாமல் இவர்கள் எப்படி விரட்டப்படுகிறார்கள், எப்படிக் கசக்கிப் பிழியப்படுகிறார்கள் என்ற கதைகளைக் கேட்டால் கல்லும் கரையும்.

இந்தியாவின் விரைவான பொருளாதார வளர்ச்சியால் வேலைவாய்ப்பு பெருகிவருகிறது என்பதே ஏமாற்றுதான். நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி (ஜி.டி.பி.) 3% ஆக இருக்கும்போது, அமைப்புரீதியாகத் திரட்டப்பட்ட தொழில்பிரிவுகளில் வேலைவாய்ப்பு வளர்ச்சி வெறும் 2%தான். அதே ஜி.டி.பி. 7% ஆக உயர்ந்தபோது, இந்த வேலைவாய்ப்பு உயர்வு வெறும் 1%தான். வேலைவாய்ப்பே உயராத பொருளாதார வளர்ச்சியைத்தான் நாம் பார்க்கிறோம். அதே சமயம், மனித மூலதனத்திலும் சமூக மூலதனத்திலும் பெரும் சரிவைச் சந்தித்துவருகிறோம்.

சமூக மூலதனம் என்பது சமூகத்தில் மக்களிடையே ஒற்றுமை, ஒத்துழைப்பு, நம்பிக்கை போன்றவையாகும். இப்போதைய வன்மம் மிகுந்த பொருளாதாரத்தில் இவையும் பாதிப்படைந்துள்ளன. நிலம், நீர், கனிமவளம், வனவளம் ஆகியவற்றைச் செல்வாக்கு மிக்கவர்கள் கைப்பற்றுவதையும் கெடுப்பதையும்தான் இப்போதைய பொருளாதார வளர்ச்சி ஊக்குவிக்கிறது. சட்டம்-ஒழுங்கைக் கெடுத்தும் சமூகத்தில் அநீதியை ஏற்படுத்தியும் இந்த வளர்ச்சி மேற்கொள்ளப்படுகிறது. கேரளத்தில் செயல்படும் 2,700 குவாரிகளில் சுமார் 1,700 குவாரிகள் சட்டவிரோதமானவையாம்.

எதிர்ப் பிரச்சாரம்

எனது தலைமையிலான ‘மேற்குத் தொடர்ச்சி மலை சுற்றுச்சூழல் நிபுணர்கள் குழு’ (டபுள்யு.ஜி.ஈ.ஈ.பி.) அறிக்கைகுறித்துத் தவறாகப் பிரச்சாரம் செய்கின்றனர். அடுத்து, கஸ்தூரி ரங்கன் அறிக்கைகுறித்தும் அப்படியே அவர்களுடைய நோக்கத்துக்கு ஏற்பப் பிரச்சாரம் செய்கின்றனர். இந்தப் பிரச்சாரங்களுக்குப் பிறகு, கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறையைப் பார்க்கும்போது, சமூக ஒற்றுமைச் சிதைவுதான் இனி சமூகத்தின் அங்கமாக இருக்கும் என்று தெரிகிறது.

இயற்கை வளங்களைப் பாதுகாத்து, அனைத்துத் தரப்பினரையும் மகிழ்ச்சியோடு வைத்திருக்கக்கூடிய வளர்ச்சித் திட்டங்களை இப்போதைய கொள்கை வகுப்போர் விரும்புவதில்லை. நமது நாட்டில் ஜனநாயகமும், அரசியல் சட்டப்படியான அமைப்புகளும், சுற்றுச்சூழலைக் காக்கப் பலவிதச் சட்டங்களும், மக்கள் விரும்புவது என்ன என்பதைத் தெரிந்துகொள்ள வசதிகளும் இருந்தும் மக்களுடைய விருப்பங்களுக்கும் நலன்களுக்கும் எதிரான முடிவுகள் எடுக்கப்பட்டு மூர்க்கத்தனமாக அமல்படுத்தப்படுகின்றன.

கேரள முன்னுதாரணம்

ஒரு காலத்தில் மக்கள் சக்தி என்ன என்பதை ஜனநாயகரீதியில் இந்தியாவுக்கே உணர்த்திய மாநிலம் கேரளம். வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்துவதிலும் சுற்றுச்சூழலையும் வாழ்வாதாரங்களையும் காப்பதிலும் முன்னோடியாக இருந்ததும் கேரளமே. பாலக்காடு மாவட்டத்தில் பிளாச்சிமடா என்ற இடத்தில் கோகாகோலா நிறுவனம் நிலத்தடி நீரை உறிஞ்சியதுடன் சுற்றுச்சூழலையும் மாசுபடுத்தத் தொடங்கியது. ராட்சத பம்புசெட்டுகள் மூலம் நிலத்தடி நீரை அதிக உளவில் வேகமாக உறிஞ்சத் தொடங்கியதால் சுற்றுவட்டாரக் கிணறுகள் வறண்டன. விவசாயத்தில் உற்பத்தி சரிந்தது. மக்களுடைய வாழ்வாதாரமும் இருண்டது. பிளாச்சிமடா மக்கள் கொதித்தெழுந்தனர். தங்களுடைய இழப்பு எவ்வளவு என்று அறிவியல்பூர்வமாகக் கணக்கிட்டு, தங்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்று போராடினர். அவர்களுடைய இழப்பு 260 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டது.

இதன் அடிப்படையில் கோகாகோலா நிறுவனத்துக்கு அளிக்கப்பட்ட தொழில் உரிமம் ரத்துசெய்யப்பட்டது. ஆரம்பத்தில் மக்களுடைய கோரிக்கைகளை ஏற்று அவர்களுக்காகப் போராட எந்த அரசியல் கட்சியும் முன்வரவில்லை. பிறகு, மக்களுடைய எழுச்சியையும் ஆதரவையும் பார்த்துவிட்டு, வேறு வழியில்லாமல் மக்களுடன் சேர்ந்துகொண்டன. பிளாச்சிமடா உள்ளாட்சி மன்றம், அரசியல் சட்டம் தனக்களித்துள்ள ‘உள்ளூர் மக்களைக் காக்க வேண்டும் என்ற உரிமையின் அடிப்படையில்’கோகாகோலா நிறுவனத்தின் உரிமத்தை ரத்துசெய்தது.

“இந்த இடத்தில் தொழில்நடத்த அனுமதி வழங்கியது கேரள மாநில அரசு. மாநில அரசுக்குக் கட்டுப்பட்டதுதான் பஞ்சாயத்து. மாநில அரசு அளித்த அனுமதியை ரத்துசெய்யும் உரிமை பஞ்சாயத்துக்கு இல்லை” என்று கோகாகோலா நிறுவனம் கேரள உயர் நீதிமன்றத்தில் வாதிட்டது. உயர் நீதிமன்றமோ நிறுவனத்தின் வாதத்தை நிராகரித்தது. “உள்ளூர் மக்களின் நலனைக் காக்க வேண்டிய கடமையும் உரிமையும் பஞ்சாயத்துக்கு இருக்கிறது. பஞ்சாயத்து எடுத்த நடவடிக்கை செல்லும்” என்று தீர்ப்பு வழங்கியது.

உள்ளூர் மக்களின் பங்கு

இப்போதைய ஆட்சியாளர்கள், மக்களுக்கும் உள்ளாட்சி மன்றங்களுக்கும் அரசியல் சட்டம் வழங்கியுள்ள இந்த உரிமைகளையெல்லாம் ரத்துசெய்ய வேண்டும் என்றே விரும்புகிறார்கள். “மக்கள் எக்கேடு கெட்டால் என்ன, சமூகம் எப்படிப் போனால் என்ன, ஜி.டி.பி-யை உயர்த்தும் திட்டம் என்றால் என்னவானாலும் அனுமதிக்க வேண்டும்” என்பதே அவர்களுடைய நோக்கமாக இருக்கிறது.

“பொருளாதாரம் சார்ந்த முடிவுகள் எடுப்பதில் உள்ளூர் மக்களுக்கு என்ன பங்கு இருக்க முடியும்?” என்று கஸ்தூரி ரங்கன் குழு கேள்வி எழுப்புவதே இதை எதிரொலிக்கிறது. ஆளை விழுங்கும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கவே கஸ்தூரிரங்கன் குழு விரும்புகிறது. அதே சமயம், இயற்கை வளங்களைக் காப்பதற்கு ஒரு சில பரிந்துரைகளைச் செய்யும் பொறுப்பையும் அது மேற்கொண்டிருக்கிறது. இந்தப் பாதுகாப்பும் மேலிருந்து திணிக்கப்பட்டதுதானே தவிர, ஜனநாயகரீதியாக மக்களிடமிருந்து எழுந்தவையல்ல.

இந்தக் குறைந்தபட்சப் பாதுகாப்பும் சுரங்கத்தொழில் முகவர்களுக்கு உடன்பாடானதல்ல என்பதைத்தான் அவர்கள் கட்டவிழ்த்துவிட்ட வன்முறை காட்டுகிறது. தகவல் தெரிவிப்பது கடமை ஒரு சிலர் மட்டும் பயன் அனுபவிக்கும் வளர்ச்சித் திட்டங்கள் தேசிய நலனுக்கு எதிரானவை. இயற்கை வளம், மனித வளம், சமூக மூலதனம் ஆகியவற்றுக்கு இந்த திட்டங்கள் என்ன தீமைகளைச் செய்கின்றன என்பதை நன்கு அறிந்தவர்கள் அடித்தட்டு மக்களே. அவர்களுடைய கருத்துக்கள்தான் முக்கியத்துவம் பெற வேண்டும். அவர்களுடைய கருத்துக்களின் அடிப்படையில் திட்டங்களை உருவாக்குவதே சரி.

அரசின் திட்டங்களை வகுப்போர், தாங்கள் வகுத்துள்ள திட்டங்கள் குறித்தும் இயற்கை வளங்களைக் காக்க தாங்கள் உத்தேசித்துள்ள நடைமுறைகள் குறித்தும் மக்களிடம் விளக்க வேண்டும். வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை எடுக்கும்போது வளங்களைக் காப்பதற்கான நடவடிக்கைகளையும் முழு வீச்சில் மேற்கொள்ள வேண்டும். முதலில் வளர்ச்சிக்கு மட்டும் முக்கியத்துவம் தருவோம். பிறகு, வளங்களைக் காக்க நடவடிக்கை எடுப்போம் என்ற தவறான அணுகுமுறை கூடாது. புதிய அணுகுமுறைக்கு உள்ளூர் சமூகங்களின் பங்கேற்பு அவசியம்.

சுற்றுச்சூழல்ரீதியாக மிகவும் நுட்பமான பகுதிகளைப் பாதுகாக்க அரசு முகமைகளை மட்டுமே நம்பியிருப்பது முறையாக இருக்காது. உள்ளூர் மக்கள், உள்ளூர் உள்ளாட்சி மன்ற அமைப்புகளிடமிருந்து பெறும் கருத்துக்கள், யோசனைகள் அடிப்படையிலேயே வளர்ச்சி, காப்புத் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.

ஜெர்மனியிலும் ஸ்கான்டினேவியன் நாடுகளிலும் தொழில்வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டபோது, உள்ளூர் மக்களிடம் விவரங்கள் தெரிவிக்கப்பட்டு அவர்களுடைய உதவிகளோடு இயற்கை வளங்களும் அழியாமல் பாதுகாக்கப்பட்டன. கேரளத்திலும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளும்போது மக்களுடைய கருத்துக்களைக் கேட்டு, அவர்களுடைய வழிகாட்டுதல்படி செயல்பட்டாலே இயற்கை வளங்களைப் பாதுகாக்க முடியும்.

இந்தியாவின் இயற்கை வளங்களை அழிக்காமல், சேதப்படுத்தாமல் பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பங்களையே நாட வேண்டும். அரிதிலும் அரிதான, இந்தியத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கக்கூடிய திட்டங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். மனிதர்கள், இயற்கை வளங்கள், உயிரிப் பல்வகைமை ஆகிய அனைத்தையும் வாழ வைக்கவல்ல, பரஸ்பரம் உதவிக்கொள்ளக்கூடிய பொருளாதாரத்தையே நாம் தேர்வுசெய்ய வேண்டும். இதுதான் சமநிலையுள்ள, ஒற்றுமையான, சமூக வளர்ச்சிக்கான பொருளாதாரத் திட்டமாக இருக்க முடியும்.

தமிழில்: சாரி

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x