Last Updated : 08 Mar, 2017 07:55 AM

 

Published : 08 Mar 2017 07:55 AM
Last Updated : 08 Mar 2017 07:55 AM

சுசிலீக்ஸ் தொடர்பாக நான் என்ன நினைக்கிறேன்...

பெண் ஏன் அவமானம் கொள்ளத் தள்ளப்படுகிறாள்?

சென்ற வருடம் தமிழகக் காட்டுப் பகுதி ஒன்றுக்குச் சில நண்பர்களோடு சென்றிருந்தேன். அற்புதமான நீரோடையில் பெண்களும் ஆண்களும் குளித்துக்கொண்டிருந்தோம். மர வளங்கள், ஆளரவமற்ற சூழல்களில் லயிக்க முடிந்த தருணம். ஈர ஆடையோடு ஒரு பாறாங்கல்லில் சாய்ந்தபடி கண்களை உயர்த்தி நீல வானத்தைப் பேசக் கூப்பிட்டுக்கொண்டிருந்தபோது ஓர் இடையூறு: எதிரே பாலத்தில் பேருந்து ஒன்று போய்க்கொண்டிருந்தது. ஒரு கணம் மனம் பதைத்தது. பயணிகள் யாரும் எங்களை மொபைலில் புகைப்படம் / காணொலி எடுத்திருந்தால், அதை இணையத்தில் பரப்பினால் என்ன செய்வது?

ஊடகம், குறிப்பாக சமூக வலைதளங்கள் தங்கள் பார்வையை எங்கும் நிர்மாணித்திருக்கிற நிலையில், இத்தகைய கேள்வி எழாவிட்டால்தான் ஆச்சரியம். ஆனால், இந்தக் கேள்விக்கு என்ன பெறுமதி உள்ளது, இதை ஏன் கேட்கத் தள்ளப்படுகிறேன் என்ற கேள்விகளும் தோன்றின.

காட்சிப் பிம்பங்களின் காலம்

முன்னெப்போதும்போல அல்லாமல், காட்சிப் பிம்பங்களின் காலத்தில் நாம் வாழ்கிறோம். திரைப்படம் தாண்டி, வீட்டு முன் அறைக்குள் தொலைக்காட்சி வந்தடைந்த காலத்துக்கு அடுத்த கட்டம் இது. ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களால் முன்னெப் போதும் இல்லாத வகையில், அதிக எண்ணிக் கையிலும் சரி, வகைகளிலும் சரி, எளிதாகக் கிடைப்பதிலும் சரி, காட்சிப் பிம்பங்கள் அன்றாடத்தில் ஊடுருவியிருக்கின்றன. ஆனால், தொலைக்காட்சிக்கும் சமூக வலைதளங் களுக்கும் இடையே சில வேறுபாடுகள் உள்ளன.

முதலாவது, பார்வையாளர்களுக்கும் திரைக்குமான தூரம், தொலைக்காட்சியைப் போல மின்திரையில் இல்லை. யார் வேண்டுமானாலும் தன்னைக் காணப்படுகிற ‘உடனடி’ பிம்பமாக இப்போது மாற்றிக்கொள்ள முடியும். ஃபேஸ்புக், ட்விட்டரில், வாட்ஸ் அப்பில் எத்தனை சுயபடங்களை, காணொளி களை, சுயமிகளைக் காண்கிறோம்? இரண்டாவது, இது மிக முக்கியமானது. எவருமே பிம்பங்களைப் பரப்புபவராக ஆகிவிட முடியும். சொல்லப்போனால், சமூக வலைதளத்தில் ஒவ்வொருவருமே ஒரு குட்டி ஊடகமாக இருக்கிறோம். ஒரு வகையில், தகவல்களைப் பொறுத்தவரை ஜனநாயக உச்சத்தை நாம் தொட்டிருப்பதுபோல ஒரு பிரமை. அதே நேரத்தில், இந்தக் குட்டி ஊடகங்கள் பரப்பும் காட்சிகள் பல சமயம் சில மக்கள் தொகுதியினரை, குறிப்பாகப் பெண்களை, குழந்தைகளை வன்முறைக்கு ஆளாக்குகின்றன. சேலம் வினுப்ரியாவை யார்தான் மறக்க முடியும்?

கேட்க வராத கேள்வி

அந்த சின்னப் பெண்ணின் தந்தை வாட்ஸ் அப்பில் வைத்திருந்த அவரது முகப்புப் படம், ஒரு அயோக்கியனால் பிம்ப உருமாற்றங்கள் (image morphing) செய்யப்பட்டது. பிறகு, பிம்ப உருமாற்றம் செய்யப்பட்ட படங்கள் ஃபேஸ்புக்கில் பரப்பப்பட்டன. அவர் குடும்பம் புகார் செய்து, காவல் துறை ஆமை வேகத்தில் செயல்பட ஆரம்பித்தபோது, அந்தப் பெண் தற்கொலை செய்துகொண்டு இறந்திருந்தார்.

காட்சிப் பிம்பத்தின் முக்கியத்துவம், அது சமூகத் தளத்தில் எப்படிப் பொருள் கொள்ளப் படுகிறது என்பதிலும் சேர்ந்தே உள்ளது. இங்கேதான் பால், பாலியல் போன்றவற்றைப் பற்றிய சமூக, பண்பாட்டு மதிப்பீடுகளும் கட்டமைப்புகளும் பெரும் பங்காற்றுகின்றன. வினுப்ரியா தனது ‘ஆபாச’ப் படங்கள் ஃபேஸ்புக்கில் பரவியதால், அவமானத்தால் தற்கொலை செய்துகொண்டார் என்கிறது செய்தி. அவரது படத்தைப் பரப்பியவர் வசைபாடப்படுகிறார், கைது செய்யப்படுகிறார், வழக்கைச் சந்திக்கிறார்.

ஆனால், கேட்க விடுபட்ட, அல்லது நமக்குக் கேட்க வராத ஒரு கேள்வி: நாகரிகமற்ற வகையில், ஒரு பெண்ணின் புகைப்படங்கள் என்று சில பரப்பப்படுகின்றன. இதற்கு ஏன் அந்தப் பெண் அவமானம் கொள்ளத் தள்ளப் படுகிறாள் என்பதே. ஏனெனில் ‘பெண்’ என்கிற பண்பாட்டு, சமூகக் கட்டமைப்பு அத்தகையது. தூய்மையாக, புனிதமாக, திறந்து பார்க்கப்படா திருக்கும் பெண் (புத்தம் புதிய புத்தகத்தை அவளை உரிமையாக்கிக்கொள்ளும் புலவன் தான் திறந்து பார்க்க முடியும்:-).

கருத்தியல் கருவி

இந்தச் சமூகம், ஆண்வழி வம்சாவளி அமைப்பைத் தன் அடிப்படையாகக் கொண்டி ருக்கிறது. அதற்கு இந்தத் தூய்மைக் கட்டமைப்பு அவசியம். பெண்ணுடலை ஒழுங்குபடுத்தும் கருத்தியல் கருவி இது. ‘ஒருவனுக்கான’ பெண்ணுடல், பொதுவெளியில் எல்லாருக்குமான பொது உடலாகத் திறந்து காட்டப்படும்போது, ஆண்வழி வம்சாவளிக்கு அச்சுறுத்தல் வருகிறது. ஆனால், இந்த அச்சுறுத்தல், சம்பந்தப்பட்ட பெண்ணுடலுக்கு அவமானமாக மடைமாற்றப்படுகிறது. வினுப்ரியாவின் தற்கொலை உண்மையில் தற்கொலையே அல்ல. ஆண்வழி வம்சாவளிச் சமூகத்தில் அவளுக்குத் தரப்பட்ட தண்டனை அது.

பெண்ணுடலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வகையில், இப்படியான தண்டனைகள் அவ்வப்போது சமூகத்தில் தரப்படும். நமது கவனமும் அடிப்படைக் கேள்விகளிலிருந்து விலகி, ஓர் அயோக்கியனின் செயல்பாடுகளை வசைபாடுவதாக இருக்கும். வினுப்ரியா பாதிக்கப்பட்ட அபலை என்கிற உணர்வுப் புள்ளியில் நம் கரிசனத்தின் பாதை அப்படியே முடிந்துவிடும்.

யாருக்கும் நடக்கலாம்

சமூக வலைதளங்களில் பெண்கள் பாது காப்பாக இருக்க வேண்டும், புகைப்படங் களைப் பகிரக் கூடாது போன்ற அறிவுரைகள், மேற்கூறிய எளிமையான ‘பெண் - அபலை’ புரிதலின் பாற்பட்டவை. மேலே விவாதித்தபடி, பெண் என்கிற அடிப்படைக் கட்டமைப்பை இந்த அறிவுரைகள் கண்டு கொள்வதில்லை. இன்னொரு புறம், சமூக வலைதளங்களில் காட்சிப் பிம்பங்களின் தாக்கம் எவ்வாறு வலுத்துவருகிறது என்பதை விட்டுவிடுகிறோம். வினுப்ரியாவுக்கு நடந்தது போன்ற அநியாயம் நமக்கு நடக்காது என்பதற்குச் சூழலில் எந்த உத்தரவாதமும் இல்லை. இன்றைக்குப் பாடகர் சுசித்ராவின் ட்விட்டர் கணக்கிலிருந்து வெளியிடப்பட்ட பிரபல நடிக - நடிகைகளின் அந்தரங்கப் படங்களைப் பற்றிப் பேசுகையில், எதைவிடவும் நாம் அதிகம் விவாதிக்க வேண்டிய விஷயம் இதுதான்!

மாறிவரும் இந்தியச் சூழல்

மீயதார்த்த (hyper-real), இணை யத்தின் மின்திரையைப் பற்றி தத்துவச் சிந்தனை யாளர் போத்ரியார் நிறைய எழுதியிருக்கிறார். குறிப்பாக, போர்னோகிராஃபி பற்றி எழுதும் போது, “நம் உடல் சார்ந்த இச்சை என்பது பிம்பத்தைத் தொடரும் வேகமாக, பிம்பத்துக்கு ஆட்படும் வேகமாக, வெறியாக எப்படி மாறியி ருக்கிறது” என அவர் விரிவாகவே எழுதுகிறார். “காமத்துக்கான இலக்குப் பொருளாக உடல் இருந்தது மாறிப்போய், இன்று காட்சிப் பிம்பங்கள் அந்த இடத்தில் இருக்கின்றன” என்கிறார் அவர்.

அவர் முன்வைக்கிற இன்னொரு கருத்து இன்றியமையாதது. முதலீடும் இச்சையும் பின்னிப் பிணையும் யதார்த்தம் கடந்த சூழலில் போர்னோகிராஃபியின் இடத்தைப் பற்றி அவர் விவாதிக்கிறார். இதுபோன்ற சூழலில் போர்னோகிராஃபி போன்ற காட்சிப் பிம்பங்களின் ஊடாக, தங்குதடையின்றிப் பாலியல் சார் பண்டங்கள் அபரிமிதமாகக் கிடைக்கும் சமுதாயத்தின் வருகையைப் பற்றி அவர் சொல்கிறார். அவரது கருத்து, மேற்கத்திய சமுதாயங்களைப் பற்றியது என்றாலும், இந்தியச் சூழலிலும் இத்தகைய சமுதாயம் வந்துவிட்டிருக்கிறது போலத்தான் தோன்றுகிறது. சமூக வலைதளத்தில் பரவிய படியும், விவாதத்துக்குள்ளாகியும் இருக்கும் சுசிலீக்ஸ் விவகாரம் போன்றவை இதையே நமக்கு உணர்த்துகின்றன!

- பெருந்தேவி, எழுத்தாளர்.
sperundevi@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x