Last Updated : 17 Aug, 2016 09:35 AM

 

Published : 17 Aug 2016 09:35 AM
Last Updated : 17 Aug 2016 09:35 AM

பாகிஸ்தானின் நீர் போர்

சிந்து நதிநீர்ப் பகிர்வு ஒப்பந்தத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு பாகிஸ்தானுக்குத்தான்

ஆசியக் கண்டத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக் கிடையே பாயும் 57 ஆறுகள் தொடர்பாக நதிநீர்ப் பகிர்வு ஒப்பந்தமோ, அது போன்ற ஒத்துழைப்பு ஏற்பாடுகளோ கிடையவே கிடையாது. இந்தியா மட்டுமே தனக்குப் பக்கத்தில் இருக்கும் பாகிஸ்தானுடனும் வங்கதேசத்துடனும் விரிவாகவும் தெளிவாகவும் விட்டுக்கொடுத்தும் நதிநீர் உடன்படிக்கையைச் செய்துகொண்டிருக்கிறது. இந்தியாவின் மிகப் பெரிய வற்றாத ஜீவநதிகளான சிந்து, கங்கை ஆகியவற்றின் நீரைப் பகிர்ந்துகொள்ள இப்படி உடன்படிக்கைகள் செய்துகொள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு நேர் மாறாக, உலக வல்லரசுகளில் ஒன்றாகக் கருதப்படும் சீனா, தனது நாட்டிலிருந்து புறப்படும் ஆறுகள் 12-க்கும் மேற்பட்ட நாடுகளில் பாய்ந்தாலும்கூட அவற்றில் ஒன்றுடன்கூட நதிநீர்ப் பகிர்வுக்கு ஒப்பந்தம் செய்துகொள்ளவில்லை.

ஆசியாவில் பாகிஸ்தான், வங்கதேசத்துடன் இந்தியா செய்துகொண்டுள்ள உடன்படிக்கைகள்தான் எல்லா வகையிலும் அறுதியிடப்பட்டவையாகும். சர்வதேசத் தண்ணீர் பகிர்வுச் சட்டத்துக்கு ஒரு வழிகாட்டியைப் போல இந்த உடன்படிக்கைகள் அமைந்துள்ளன. 1996-ல் கங்கை நதிநீர் தொடர்பாகச் செய்துகொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தமானது ஆற்றில் நீர்வரத்து மிகவும் குறைவாக இருந்து, நதியே காய்ந்துபோகும் நிலையில்கூட கடைமடை நாட்டுக்கு எவ்வளவு தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டும் என்பதை வரையறுத்து நிர்ணயிப்பதாக இருக்கிறது.

சிந்து நதியைப் பகிர்ந்துகொள்ளச் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம்தான் உலகிலேயே மிகவும் தாராள மனதுடன் வரையப்பட்டதாகும். சிந்து நதியில் திரளும் தண்ணீரில் 80.52% பாகிஸ்தானுக்காக என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. வடிநிலப் பகுதியில் திரளும் நீர் முழுக்க பாகிஸ்தானுக்கே. 1944 உடன்பாட்டில் மெக்ஸிகோ நாட்டுக்கு அமெரிக்கா வழங்க ஒப்புக்கொண்ட தண்ணீர் அளவைப் போல கிட்டத்தட்ட 90 மடங்கு (9,000%)பாகிஸ்தானுக்குத் தரப்படுகிறது. தண்ணீர்ப் பகிர்வுடன் நிற்காமல் நதியைப் பாகம் பிரிப்பதிலும் ஒப்பந்தம் முன்னிலை வகிக்கிறது. சிந்து நதியின் வடிநிலப் பகுதியை மேல், கீழ் என்று பிரித்து வரைபடத்தில் குறுக்காக ஒரு மெய்நிகர் கோடு வரைந்தேகாட்டப்பட்டிருக்கிறது. இந்தியாவின் இறையாண்மை கீழ்ப் பகுதி மீது மட்டுமே என்றும்ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாயும் நதிகளின் நீர் (மேற்கு ஆறுகள் என்று அவைகுறிப்பிடப்படுகின்றன) பாகிஸ்தானுக்காகவே ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது.’

திருத்தப்பட வேண்டிய ஒப்பந்தம்

நதி மீதான இறையாண்மை உரிமையை கீழ் ஆயக்கட்டு நாட்டுக்கு ஆதரவாக மேல் ஆயக்கட்டு நாடு (இந்தியா) கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று உலகிலேயே இதுவரை இருந்திராத வகையில் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. பாகிஸ்தானை நோக்கிப் பாயும் ஆறுகளின் நீர் அளவையோ, நேரத்தையோ இந்தியா கட்டுப்படுத்தக் கூடாது என்றே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானதும் இயற்கை நீராதாரமுமான ஆற்று நீரை இப்படி பாகிஸ்தானுக்குத் தாரை வார்க்கிறீர்களே என்பது காஷ்மீர் மக்களுடைய நீண்ட நாள் குற்றச்சாட்டாக இருக்கிறது. சிந்து நதிநீர்ப் பகிர்வு ஒப்பந்தத்தைத் திருத்த வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும் என்று காஷ்மீர் சட்டப்பேரவையில் 2003-ல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

காஷ்மீரின் பின்தங்கிய நிலை, பாகிஸ்தானின் உதவியுடன் நிகழ்த்தப்படும் ஊடுருவல்கள், நாச வேலைகளால் மேலும் மோசமாகிக்கொண்டே இருக்கிறது. இதனாலேயே காஷ்மீரில் ஓடும் அந்த மேற்கு ஆறுகளின் குறுக்காக அணை ஏதும் கட்டாமல், ஓடும் நீரைக் கொண்டே மின்சாரம் தயாரிக்கும் சிறு மின் உற்பத்தி நிலையங்களை அரசு அமைத்துள்ளது.

பாகிஸ்தானின் தடங்கல் உத்திகள்

சிந்து நதி மீது அணை ஏதும் கட்டாமல் இந்திய எல்லைக்குள் நீர் மின்சாரம் தயாரித்துக்கொள்ளலாம் என்று அந்த ஒப்பந்தத்தில் எழுதப்பட்டிருக்கிறது. மேற்கு ஆறுகள் மீது இந்தியா நீர்மின் திட்டம் எதையும் மேற்கொள்ளக் கூடாது. இந்தப் பூசலைத் தீர்க்க சர்வதேச நடுவர் மன்றம் தலையிட வேண்டும் என்று பாகிஸ்தான் முறையிட்டுள்ளது. இந்த உரிமையைக்கூட அதற்கு வழங்கி, இந்தியா அந்த ஒப்பந்தத்தைச்செய்துகொண்டிருப்பதுதான் வேடிக்கை! (இரு நாடுகளுக்கும் பொதுவான மத்தியஸ்த நிபுணர் தலைமையில், 7 உறுப்பினர் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு, ஒப்பந்தப்படி இந்தியா நடந்துகொள்கிறதா என்று விசாரிக்கப்பட ஒப்பந்தத்திலேயே வழிசெய்யப்பட்டிருக்கிறது.)

காஷ்மீருக்கு மின்சாரம் அளிக்கத்தான் அந்த நீர்மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படுகின்றன என்பது பாகிஸ்தானுக்கு நன்றாகவே தெரியும். அந்த மின்சாரத்தையும் கிடைக்கவிடாமல் தடுத்துவிட்டால், காஷ்மீரில் அதிருப்தியும் வன்செயல்களும் அதிகரிக்கும் (அதிகரிக்க வேண்டும்) என்ற நோக்கிலேயே பாகிஸ்தான் செயல்படுகிறது.

சிந்து நதியின் சிறிய கிளை நதியான கிருஷ்ணகங்கை மீது 330 மெகாவாட் மின் உற்பத்தித் திறனுள்ள நீர்மின் நிலையத் திட்டத்தை அமைக்க இந்தியா பணிகளைத் தொடங்கியது. இந்த நதியை பாகிஸ்தானில் ‘நீலம் என்று அழைக்கின்றனர். சர்வதேச நடுவர் மன்றத்திடம் முறையிட்டு, அந்த திட்டப் பணிகளை 2011-ல் வெற்றிகரமாக நிறுத்தியது பாகிஸ்தான். நிறுத்திய கையோடு, கிருஷ்ணகங்கை நீர்மின் திட்டத்தைப் போல மூன்று மடங்கு பெரிதான நீர்மின் உற்பத்தித் திட்டத்தை அதே நதி மீது, தன் நாட்டு எல்லையில் சீன உதவியோடு தொடங்கிவிட்டது. இப்போது இந்தியா கிளை நதியில் நீரைத் தேக்க முற்பட்டால்கூட, கீழ் ஆயக்கட்டு நாடான தனக்குத் தண்ணீர் குறையக் கூடாது என்று சர்வதேச நடுவர் மன்றத்திடம் மீண்டும் முறையிட அதற்கு வாய்ப்பாகிவிட்டது.

2013-ல் நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பானது, இந்தியாவுக்குப் பின்னடைவாகவே மாறிவிட்டது. கிருஷ்ணகங்கை மீது இந்தியா நீர்மின் திட்டப் பணிகளைத் தொடங்கலாம். ஆனால், பாகிஸ்தானுக்கு வினாடிக்கு ஒன்பது கன மீட்டர் தண்ணீர் குறையாமல் பாய்ந்துகொண்டிருக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்திருக்கிறது. இந்த நிபந்தனை சிந்து நதி ஒப்பந்த விதிகளுக்கும் சர்வதேச சட்டத்துக்கும் முரணானது.

இந்தியாவுக்கு எதிரான போர்

கிருஷ்ணகங்கை மற்றும் ராட்லே திட்டங்களுக்கு எதிராக சர்வதேச நடுவர் மன்றத்திடம் மீண்டும் முறையிடப்போவதாக பாகிஸ்தான் கருவுவது, பரந்த மனதுடன் பாகிஸ்தானுடன் ஒப்பந்தம் செய்துகொண்டது எவ்வளவு பெரிய தவறு என்று சுட்டிக்காட்டுகிறது. இதனாலேயே இந்தியா இப்போது பெரும் சிக்கலில் ஆழ்ந்திருக்கிறது. சிந்து நதிநீரைத் தாராளமாக வழங்கி, பாகிஸ்தானிடம் சமாதானத்தைப் பெற்றுவிடலாம் என்று 1960-ல்இந்தியா நினைத்தது. அந்த ஒப்பந்தம் முடிந்து ஐந்து ஆண்டுகள் கழித்து, 1965-ல் இந்தியா வசமிருந்த எஞ்சிய காஷ்மீரப் பகுதியையும் கைப்பற்றிவிட வேண்டும் என்று மூர்க்கத்தனமாகப் போர் தொடுத்தது பாகிஸ்தான்.

தன்னால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரத்தில், சீன உதவியுடன் அணைகளைக் கட்டிவருவதால், இந்தியாவுடன் நதிநீர்ப் பகிர்வு தொடர்பான உறவை மேலும் மேலும் கசப்பானதாக்கிக்கொண்டுவருகிறது பாகிஸ்தான். காஷ்மீர மக்களுக்காக இந்தியா கட்ட முயலும் சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு எதிராக உலக அரங்கில் புகார்செய்துகொண்டே அதைவிட மிகப் பெரிய நீர்மின் திட்டங்களைத் தன் பகுதியில் மேற்கொண்டுவருகிறது. புஞ்சி அணை மூலம் 7,000 மெகாவாட் மின் உற்பத்தியும் பாஷா அணை மூலம் 4,500 மெகாவாட் மின் உற்பத்தியும் செய்யத் திட்டங்களை நிறைவேற்றிவருகிறது. பாகிஸ்தானின் இந்த நீர்மின் திட்டங்களுடன் ஒப்பிட வேண்டும் என்றாலும்கூட, சமீபத்தில் இந்தியா நிறைவேற்றிய மிகப் பெரிய நீர்மின் திட்டம் தேஹ்ரி மீது கட்டப்பட்ட2,000 மெகாவாட் நீர் மின் உற்பத்தித் திட்டம்தான்.

இனி பாகிஸ்தானுக்கே பொறுப்பு

சிந்து நதிநீர்ப் பகிர்வு ஒப்பந்தத்தை இனி காப்பாற்ற வேண்டிய பொறுப்பு பாகிஸ்தானுக்குத்தான். தென் சீனக் கடல் பகுதி யாருக்குச் சொந்தம் என்ற பிரச்சினையில் சர்வதேச நடுவர் மன்றத் தீர்ப்பை மதிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்று சீனா வழிகாட்டிவிட்டது. சிந்து நதி ஒப்பந்தம் தொடர்பாக பாகிஸ்தான் தொடர்ந்து புகார்களைக் கூறிக்கொண்டிருக்கிறது. இந்த ஒப்பந்தத்தைப் பெருந்தன்மையுடன் செய்துகொண்டதோடு அல்லாமல் அப்படியே பின்பற்றியதால் இந்தியாவுக்குப் பலன் ஏதும்இல்லை. எதிர்மறைப் பலன்கள்தான் அதிகம். நடுவர் மன்றத் தீர்ப்புகள் பாதகமாக இருந்தாலும், அவற்றை அமல் செய்ய அமைப்பு ஏதும் கிடையாது. இந்த நடுவர் மன்றத் தீர்ப்புகளை எந்த அளவுக்கு ‘மதிக்க வேண்டும்’ என்பதில் சீனா போன்ற நாடுகள் முன்னுதாரணமாகத் திகழ்கின்றன. அவற்றை இந்தியா பின்பற்ற எந்தத் தடையும் இல்லை.

பிற நாடுகளுடனான ஒப்பந்த விஷயத்தில் வியன்னா மாநாட்டில் ஏற்கப்பட்ட பிரிவு 62-ன்படி, பாகிஸ்தானுடனான சிந்து நதிநீர்ப் பகிர்வு ஒப்பந்தத்தை இந்தியா முறித்துக்கொண்டு வெளியேறலாம். ஒப்பந்தம் செய்துகொண்ட சூழ்நிலை மாறிவிட்டால்,ஒப்பந்தத்தை ரத்து செய்துவிடலாம் என்று சர்வதேச நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்துள்ளது. இந்திய நலனுக்கு எதிராக பாகிஸ்தான் தொடர்ந்துசெயல்பட்டுவருவதால் அதனுடன் நட்புரீதியிலான ஒப்பந்தங்களை நீட்டிப்பதில் அர்த்தமே இல்லை!

- பிரம்ம சலானி, சர்வதேசத் தண்ணீர் நெருக்கடி தொடர்பான விவகாரங்களில் நிபுணர், நூலாசிரியர்; கொள்கை ஆய்வுக்கான மையத்தைச் சேர்ந்தவர்.

தமிழில்: சாரி, ‘தி இந்து’ (ஆங்கிலம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x