Last Updated : 11 Apr, 2017 08:56 AM

 

Published : 11 Apr 2017 08:56 AM
Last Updated : 11 Apr 2017 08:56 AM

கருப்பர்கள் நாங்கள் செய்த பாவம் என்ன?

வீதியில் எங்களைப் பார்க்கும்போதே அடிக்க வேண்டும் என்ற வெறி ஏன் ஏற்படுகிறது?



இந்தியாவில் நிறவெறி சில பகுதிகளில், சில இந்தியர்களால் கடைப்பிடிக்கப்படுகிறது. தங்கியிருக்க விசா காலத்தை நீட்டிக்குமாறு கோரும்போதும், வாடகைக்கு வீடு தேடும்போதும், வீதியிலும் பொது இடங்களிலும், எங்களைச் சந்தேகக் கண்கொண்டு பார்க்கும்போது இது வெளிப்படையாகத் தெரிகிறது.

எங்களுக்கு எதிரான வெறுப்புணர்வும், ஆப்பிரிக்கர்கள் என்றால் இப்படித்தான் என்று ஏற்கெனவே அவர்களுடைய மனங் களில் பதிந்துவிட்ட எண்ணங்களும் இவ்வா றாக வெளிப்படுகின்றன. குடியிருக்க வீடு கேட்டால், காரணம் கூறாமல் ‘வீடு இல்லை’ என்று முகத்தில் அடித்தாற்போலச் சொல்லி விடுகிறார்கள். எனவே, கிடைக்கும் வீடுகளில் வசதிகள் குறைவாக இருந்தாலும் வாழ நேரிடு கிறது. ஏதாவது அவசரம் என்றால்கூட பக்கத்து வீட்டுக்காரர்களை உதவிக்கு அழைக்க முடிவதில்லை. இப்படித் தயக்கங் களும் சந்தேகங்களும் இருந்தால் எப்படிப் பேசிக்கொள்வது? எங்கள் மீது அடுக்கடுக்காகக் களங்கங்களைச் சுமத் தினால் எப்படிப் பேச முடியும்? எங்களுக்கு எதிரான செயல்கள் சரியல்ல என்பதைக்கூட எப்படி எங்களால் புரியவைக்க முடியும்?

சாதியமைப்பால் வந்த பாரபட்சம்

ஆப்பிரிக்கர்களைப் பார்த்தால் ஏற்படுகிற வெறுப்புணர்வுக்குக் காரணம், ஏற்கெனவே இந்தியாவில் இருக்கும் சாதி உணர்வுகள்தான். பட்டியல் இனத்தவரைத் தீண்டத்தகாதோராக காலங்காலமாகக் கடைப்பிடித்துவரும் அதே அணுகுமுறையைத்தான், கருப்பாக இருக்கும் ஆப்பிரிக்கர்களுக்கு எதிராகவும் கடைப்பிடிக் கின்றனர். சாதியம் என்பது மிகப் பலரைத் தாழ்த்தியும், ஒரு சிலரை உயர்த்தியும் நடத்து வது. எளியவர்களைத் தங்களுடன் சேர்த்துக் கொள்ளாமல் விலக்கி வைப்பது. பொது இடங்களில் இந்தியச் சிறுவர்களும் புகைபிடிக்கின்றனர்; நாங்களும் அப்படிப் புகைத்தால், அது கஞ்சா அல்லது மரிஜுவானா தான் என்று முடிவுகட்டுகின்றனர் ஒலியை அதிகப்படுத்திப் பாட்டு கேட்டால் காவல்துறையிடம் புகார் செய்கின்றனர், அல்லது வீடு புகுந்து அடிக்கின்றனர். அதே அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் செய்யும்போது கேட்டு ரசிக்கின்றனர்.

கருப்பின இளைஞர்களில் சிலர் கஞ்சாவையோ வேறு போதைப் பொருட்களையோ உட்கொள்வதில்லை என்று வாதாடாவில்லை. ஆனால், இந்தத் தவறுகளுக்காக கருப்பின இளைஞர்களை மட்டும் குற்றஞ்சாட்டுவது ஏன் என்றுதான் கேட்கிறோம். வீதியில் எங்களைப் பார்க்கும்போதே அடிக்க வேண்டும் என்ற வெறி ஏன் ஏற்படுகிறது? வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களையும் டெல்லியில் இப்படித்தான் நடத்துகின்றனர்.

பஞ்சாபில் போதைப் பொருள் பழக்கம் அதிகரித்ததற்கு நாங்களா காரணம்? பஞ்சாபில் ஏராளமான இளைஞர்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமைகளாகி விட்டார்கள். கோவாவில் போதைப் பொருள் பழக்கம் அதிகரிக்கக் காரணம், ஐரோப்பியர் களும் ரஷ்யர்களும் தான். அவர்கள் உள்ளூர் ஆட்களுடன் சேர்ந்து போதைப் பொருட்களை விற்கின்றனர். ஆனால், அவர்கள் பிடிக்கப்படுவதுமில்லை, அடிக்கப் படுவதுமில்லை. சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு அவர்கள் நிதியளிப்பதால், யாரும் அவர்களை எதிர்த்துப் பேசக்கூடத் தயங்குகிறார்கள்.

ஆப்பிரிக்கர்கள் முழு அடிமைகள்

சமீபத்தில், கிரேட்டர் நொய்டா பகுதியில் 12-வது வகுப்பு மாணவர், அளவுக்கு அதிகமாக கஞ்சா நுகர்ந்ததால் மயங்கிவிழுந்து இறந்தார். அவர் அந்தப் பழக்கத்துக்கு அடிமையானவர். இந்தியாவில் பள்ளிக்கூட மாணவர்கள் புகைபிடிப்பது வியப்பாக இருக்கிறது.

நாங்கள் மிகவும் பின்தங்கிய கண்டத்திலிருந்து வந்திருக்கிறோம் என்று நினைக்கின்றனர்.. அது உண்மையல்ல. மனித வளக் குறியீட்டெண்ணில் இந்தியாவைவிடச் சிறந்து விளங்கும் ஆப்பிரிக்க நாடுகளும் இருக்கின்றன. ஆப்பிரிக்க நாடுகளிலும் இந்தியாவைவிட வலுவான ஜனநாயகம் நிலவுகிறது. ஆப்பிரிக்கக் கண்டத்துக்கும் பிற கண்டங் களுக்கும் கொத்தடிமைகளாக இந்தியர்கள் சென்ற வரலாறும் இருக்கிறது. உண்மைகள் இப்படியிருக்க, நிறவெறியுடன் எங்களை மட்டமாக நடத்துவது ஏன்? இந்தியர்களைக் கொத்தடிமைகளாக அழைத்துச் சென்றதைப் போல, ஆப்பிரிக்கர்களை முழு அடிமை களாகப் பிற கண்டங்களுக்கு அழைத்துச் சென்றனர். நம் இரு கண்டமுமே இப்படி மற்றவர் களால் சுரண்டப்பட்டிருக்கும் பொதுவான நிலையில், ஆப்பிரிக்கர்களைத் தாழ்ந்தவர் களாக இந்தியர்கள் ஏன் கருத வேண்டும்?

தவறான நிறமா எங்களுடையது?

நாங்கள் இந்த நாட்டுக்கு வந்து இறங்கியது முதல் எங்களுடைய நிறத்தைப் பார்த்து, ஓரவஞ்சனையுடன் நடத்துகின்றனர். விசா வைப் புதுப்பிக்க விண்ணப்பித்தால் ஒரு வாரத்துக்குள் புதுப்பிக்க வேண்டியதை 3 மாதங்களுக்குப் பிறகே புதுப்பிக்கின்றனர். அடையாளம் சரிபார்ப்பு என்ற போர்வையில் போலீஸ்காரர்கள் எங்களிடம் பணம் பறிக்கிறார்கள். இரவில் அகாலத்தில் எங்கள் வீடுகளுக்கு வந்து கதவைத் தட்டுகின்றனர்.

எங்கள் மீதான தாக்குதலை இந்திய அரசு கண்டிக்கவில்லை என்பது எங்களை புண்படுத்தியிருக்கிறது. இப்படியெல்லாம் நடந்துகொள்வது தவறானது, இப்படிச் செய் பவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப் படும் என்று அரசு அறிவிக்க வேண்டும். ஆப்பிரிக்கர்களுக்கு எதிராக இந்தியர்களுக்கு வெறுப்புணர்வு இருக்கிறது என்பதை அரசு முதலில் ஒப்புக்கொள்ள வேண்டும். இதை நீங்கள் முதலில் ஏற்றுக்கொண்டால்தான் தவறுகளைக் களைய நடவடிக்கை எடுக்க முடியும். அரசோ மூடி மறைக்கவே பார்க்கிறது. ஆப்பிரிக்க மாணவர்களை இப்படி மூர்க்கத் தனமாக நடத்தினால், இந்தியாவுக்கு அவர்கள் படிக்க வருவது குறைந்துவிடும்.

- சாமுவேல் ஜாக், இந்திய - ஆப்பிரிக்க மாணவர்கள் சங்கத் தலைவர்.

ஆங்கில எழுத்தாக்கம்: அனுராதா ராமன்

சுருக்கமாகத் தமிழில்: சாரி © `தி இந்து’ ஆங்கிலம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x