Published : 07 Jun 2017 09:31 AM
Last Updated : 07 Jun 2017 09:31 AM

சர்வதேச உறவைச் சரியாகக் கையாள வேண்டும்!

ஜெர்மனி, ஸ்பெயின், ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி சமீபத்தில் மேற்கொண்ட சுற்றுப் பயணம், உலக நாடுகளிடையே நிலவும் தயக்கத்தையும் குழப்பத்தையும் பகிர்ந்துகொள்ள வாய்ப்பாக அமைந்திருக்கிறது. பல்வேறு விஷயங்களில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் நிலைப்பாடு ஜி-7, நேட்டோ கூட்டமைப்பு முதல் இந்தியா உள்ளிட்ட நாடுகள் வரை பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில், ஜெர்மன் பிரதமர் ஏஞ்செலா மெர்கெல், ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜாய், பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மெக்ரான் ஆகியோரைத் தனித்தனியாகச் சந்தித்து இருதரப்பு விஷயங்களையும் பொதுப் பிரச்சினைகளையும் பேசியிருக்கிறார் மோடி. பயங்கரவாதத் தடுப்பு, வர்த்தகம், பருவநிலை மாறுதல் தொடர்பாகப் பல்வேறு நாடுகளும் எப்படி ஒத்துழைக்கலாம் என்று ஆலோசனை கலந்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இந்தியாவுக்கும் இடையில் தடையற்ற வர்த்தகம் தொடர்பாக, நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் பேச்சு விரைவிலேயே விரிவான ஒப்பந்தப் பேச்சுகளாகத் தொடரும் என்ற உறுதிமொழியை பெர்லின் நகரில் அளித்திருக்கிறார். டெல்லியில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐரோப்பிய ஒன்றியம் - இந்தியா உச்சி மாநாட்டுக்கு முன்னதாக இந்தப் பேச்சு நடைபெறும் என்ற நம்பிக்கையை இது ஏற்படுத்தியிருக்கிறது.

அதேசமயம், சீனப் பிரதமர் லீ கெகியாங் கடந்த வாரம் பெர்லின், பிரஸல்ஸ் நகரங்களுக்குச் சென்றபோது, அதிக உற்சாகத்துடன் வரவேற்கப்பட்டார் என்பதை அலட்சியப்படுத்திவிட முடியாது. ஐரோப்பியத் தலைவர்கள் பருவநிலை மாறுதல் தொடர்பாக சீன அதிபர் ஜி ஜின்பிங் கொண்டிருக்கும் உறுதியான நிலையைப் புகழ்ந்திருக்கின்றனர். தங்களுக்கு ஆபத்து மாஸ்கோவிடமிருந்துதான், பெய்ஜிங்கிடமிருந்து அல்ல என்று நினைக்கின்றன ஐரோப்பிய நாடுகள்.

ரஷ்யா சென்ற பிரதமர் மோடி 21-வது நூற்றாண்டில் இரு நாடுகளுக்கும் இடையில் நிலவ வேண்டிய ஒத்துழைப்பு குறித்துத் தெரிவித்த தொலைநோக்குத் திட்டங்கள், ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுக்கு அதிருப்தியையே ஏற்படுத்தியிருக்கும்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியாவின் உறுப்பினர் பதவியை உறுதிசெய்வதற்காக கஜகிஸ்தான் நாட்டுக்கு மோடி செல்லும்போது, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மேலும் கவலையடையும். நேட்டோ அமைப்புக்கு மாற்றுதான் இந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு என்று ஐரோப்பாவில் கருதுகின்றனர். தன்னுடைய தற்காலப் பரிவர்த்தனைத் தேவைகளுக்காக வெளியுறவுக் கொள்கையையே ட்ரம்ப் மாற்றிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில், யாருடன் கூட்டுசேருவது என்பதில் இந்தியா நிதானமாகச் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். இந்தியாவின் முன்னுரிமைகள் எவை, நலன்கள் எவை என்று தீர்மானித்துக்கொண்டு ட்ரம்பை வாஷிங்டனில் சென்று சந்திப்பது பலன் தரும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x