Last Updated : 06 Jun, 2017 09:35 AM

 

Published : 06 Jun 2017 09:35 AM
Last Updated : 06 Jun 2017 09:35 AM

அறிவியலில் சாதிக்க அமைப்புகள் மட்டும் போதாது!

இந்தியாவில் மேற்கொள்ளப்படும் அறிவியல் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்துப் பயன்பெற, ‘ஸ்பார்க்’ (SPARK) என்றொரு அமைப்பை உருவாக்க உத்தேசிக்கப் பட்டிருக்கிறது. அறிவியல் மேலாண்மைக்குத் திறமையான வழியைக் காண்பது வரவேற்கப்பட வேண்டியதே; ஆனால் அப்படியொரு நடவடிக்கையை எடுப்பதற்கு முன்னால் ஆழ்ந்து சிந்திப்பது அவசியம்.

இப்போதுள்ள அறிவியல் மேலாண்மை அமைப்புகளில் அந்தந்தத் துறைகள் அமைச்சர்களுக்கும், அமைச்சர்கள் மத்திய அமைச்சரவைக்கும் ஆய்வு முடிவுகளையும் புதிய ஆய்வுத் திட்டங் களையும் அறிவிக்கின்றனர் இந்தத் துறைகளில் ஆலோசனை அமைப்பு களுக்கும் குழுக்களுக்கும் பஞ்சமே இல்லை. தலைமை வகிப்பது அல்லது ஒருங்கிணைப்பதற்கு பிரதமருக்கென்று அறிவியல் ஆலோசனைக் குழுவும், மத்திய அரசுக்கு முதன்மை அறிவியல் ஆலோசகர் பதவியும் இருக்கின்றன. எதற்காக ஒரே வேலைக்கு இரண்டு குழுக்கள்? கடைசியில் இரண்டுமே பல்லில்லா சிங்கங்களாகத்தான் இருக்கின்றன. இந்நிலையில் மூன்றாவது ஒன்று (ஸ்பார்க்) அவசியம்தானா?

ஸ்பார்க் போன்ற ஒரு அமைப்பின் வரம்பில் வருவதற்குப் பொருத்தமானவை அல்ல அறிவியல் துறைகள். அவை ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான அமைப்பையும் நோக்கையும் கொண்டவை. அறிவியல், தொழில்நுட்பத் துறையும் உயிரித்தொழில்நுட்பத் துறையும் நிதி அளிப்பதுடன் தேவைப்படும் உதவிகளை அளிப்பவை. ‘அறிவியல், தொழிலக ஆய்வுக் கவுன்சில்’ (சி.எஸ்.ஐ.ஆர்.) என்ற அமைப்போ நுட்பமான பணிக்கானது. தொழில்துறையுடன் நெருங்கிப் பணியாற்றி, தேவைப்படும் தொழில்நுட்பத்தை அடையாளம் காட்டுவது. அணுவிசைத் துறை, ராணுவ ஆராய்ச்சி - வளர்ச்சி அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.), விண்வெளித் துறை போன்றவை குறிப்பிட்ட திட்டங்களை மேற்கொள்வதற்காக உருவான துறைகள். அறிவியல் தொடர்பில்லாத மத்தியத் துறைகளோ அமைச்சகமோ இல்லை.

இந்திய அறிவியலின் எதார்த்தம்

நிதி ஆயோக்குடன் ஒத்திசைந்து செயல்படுவதுதான் ‘ஸ்பார்க்’ அமைப்பின் இலக்கு. தொழில் நிறுவனங்கள், அமைச்சகங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றிடமிருந்து தகவல்களைப் பெற்று ஸ்பார்க் செயல்பட வேண்டும். இதனால் சில பெரிய திட்டங்களுக்கும் ஆய்வுகளுக்கும் இது வழிகாட்டக்கூடும். நம்முடைய நாட்டுக்குச் சவாலாக இருக்கும் பிரச்சினைகளுக்கு அறிவியல் ரீதியில் தீர்வு என்ன என்று கணித்து, உரிய துறையுடன் இணைத்து பிரச்சினையைத் தீர்ப்பதுதான் இந்த அமைப்புக்குத் தேவைப்படும் மேலாண்மை நுட்பமாகும்.

இதற்காக நமக்குப் புதிய அறிவியல் மேலாண்மை அவசியம் இல்லை. உண்மை என்னவென்றால், மேலாண்மை செய்யும் அளவுக்கு நாம் அறிவியல் தொழில்நுட்பத்தை நிறையப் பிரச்சினைகளுக்குப் பயன்படுத்துவதே இல்லை! இந்திய அறிவியல் துறையானது முற்காலத்தில் இருந்ததைப் போல இல்லாமல் இளைத்துவிட்டது என்பதால் இப்படியொரு அமைப்பு தேவை என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பரிந்துரையில் தவறே இல்லை. நமக்குத் தேவையானதை விட்டுவிட்டு தேவைப்படாததை அறிவியல் தொழில்நுட்பத் துறை கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறது என்றும் சொல்லிவிட முடியாது. உண்மை என்னவென்றால், எல்லா நிலைகளிலும் திறமையான அறிவியல், தொழில்நுட்ப நிபுணர்கள் நம் நாட்டில் இல்லை. இந் நாட்டில் பிறந்து, படித்து, பயிற்சி பெற்ற நல்ல அறிவியலாளர்களையும் தொழில்நுட்பவியலாளர்களையும் இந்நாட்டிலேயே தக்கவைத்து பயன்படுத்திக்கொள்ளத் தவறி வருகிறோம்.

ஸ்பார்க் போன்ற புதிய முயற்சிகளை ஒரு நிர்வாகக் குழு பரிந்துரைக்கிறது என்பதால் அரசுத் துறைக்குள்ளேயே பேசி முடிவெடுத்துவிடக் கூடாது. இதை நாடுவோர், பலனடைவோர், இதில் பணியாற்றுவோர் என்று அனைத்துத் தரப்பினருடனும் விரிவான ஆலோசனை கலக்கப்பட வேண்டும். அந்த அமைப்புக்கு சுயேச்சையான நிதி வசதியும் அவசியம். ஓரளவுக்குத் திருப்தி அளிக்கும் விதத்தில் செயல்படும் பெரிய அறிவியல் தொழில்நுட்ப அமைப்புகளை, தேவைக்கும் அதிகமாக வெட்டியும் ஒட்டியும் மாற்றிக் கொண்டிருக்கக்கூடாது. அது நாம் விரும்பாத முடிவுகளுக்கு இட்டுச் செல்லும்.

(கௌதம் ஆர். தேசிராஜு, பெங்களூரு இந்திய அறிவியல் கழகப் பேராசிரியர்.)

சுருக்கமாகத் தமிழில்: ஜுரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x