Published : 04 Jul 2016 09:26 AM
Last Updated : 04 Jul 2016 09:26 AM

சாதக அம்சங்கள் தொடர தொடர் கவனம் தேவை!

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது என்று பிரிட்டன் எடுத்த முடிவால் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து இந்திய நிதிச் சந்தை மீண்டிருக்கிறது. கடந்த ஜூன் 24 அன்று 2.2% அளவுக்கு மாற்று நடவடிக்கைகளை எடுத்ததுமே சந்தை நிலைப்பட ஆரம்பித்தது. ஐரோப்பாவிலும் ஜப்பானிலும் 7% முதல் 10% வரையில் சந்தை மதிப்பில் மாற்றம் ஏற்பட்டது. அமெரிக்கச் சந்தை 3% முதல் 4% வரையில் மாறியது. உள்நாட்டுக் கடன் பத்திர வருமானமும் நிலைப்பட்டது. இந்தியப் பங்குகளும் சுதாரித்தன. ஜூன் 27 முதல் பிற ஆசியச் சந்தைகளுடன் சேர்ந்து இந்தியச் சந்தையும் வர்த்தகத்தைத் தொடர்ந்தது. அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு 1.4% மட்டுமே குறைந்தது. பவுண்ட் 11%, ஈரோ 4%, சீன யுவான் 2% அளவுக்குக் குறைந்தன. கடந்த காலங்களைப் போல அல்லாமல், ஒரு முக்கியமான நிகழ்வின்போது இந்தியச் சந்தைகள் சரிந்துவிழாமல் எதிர்த்து நின்றுள்ளன.

இந்தியாவின் பொருளாதாரப் பிரச்சினைகள் தீர்ந்துவிடவில்லை என்றாலும், அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியப் பொருளாதாரம் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதையே இது காட்டுகிறது. இது போன்ற தருணங்களில் அந்நிய நேரடி முதலீட்டாளர்களும் நிறுவன முதலீட்டாளர்களும் உடனே முதலீட்டை விலக்கிக்கொண்டு, பாதுகாப்பான பிற இனங்களில் முதலீடுசெய்ய விரைவார்கள். இந்தியாவிலிருந்து அவசரப்பட்டு வெளியேற வேண்டிய அவசியம் இல்லாமல் இந்தியாவின் பேரியல் பொருளாதார அம்சங்கள் நம்பிக்கை ஊட்டுகின்றன. சாதாரணப் பங்கு முதலீட்டாளருக்கு நம்பிக்கை அளிக்கும் நிகழ்ச்சி நடந்திருக்கிறது.

பிரிட்டன் வெளியேறுவதால் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 0.5% குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நிகழ்ந்தால், இந்தியாவுக்கு அது உதவியாக இருக்கும். இந்தியாவின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி வீதம் 7.6% ஆக இருக்கிறது. இந்தியப் பொருளாதாரம் பெரும்பாலும் இறக்குமதிகளைச் சார்ந்துதான் இருக்கிறது. இந்த நிலையில், கச்சா பெட்ரோலியத்தின் விலை மேலும் குறையும் அறிகுறி தெரிகிறது. அத்துடன் பண்டங்களின் விலையும் குறையும் வாய்ப்பு இருக்கிறது. இவை இந்தியாவுக்குச் சாதகமான அம்சங்கள். இறக்குமதிச் செலவும் உற்பத்திச் செலவும் இதனால் குறையும். மோட்டார் வாகன உதிரி பாகங்கள், ஆடை ஏற்றுமதி, தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகள் பிரிட்டன், ஐரோப்பிய நாடுகளைச் சார்ந்துள்ளன. எனவே, வர்த்தகம் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால், பெரும்பாலான இந்தியப் பெருநிறுவனங்கள் தங்களுடைய விற்பனைக்கு உள்நாட்டுச் சந்தையையே நம்பியிருக்கின்றன. பருவமழை நன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் மத்திய அரசின் செலவுகள் அதிகரிக்கும் போக்கும் அவற்றுக்குச் சாதகமாகவே இருக்கும்.

எனினும், நம்முடைய ஆட்சியாளர்கள் இவற்றின் நிமித்தம் மெத்தனமாக இருந்துவிடக் கூடாது. அந்நியச் செலாவணியின் மாற்று மதிப்பைப் பொருத்துதான் பங்குச்சந்தைக்கும் கடன் பத்திரச் சந்தைக்கும் முதலீடுகள் வரும். அரசு விழிப்புடன் இருந்து ரூபாயின் மாற்று மதிப்பு சரிந்துவிடாமல், அவ்வப்போது தலையிடுவது அவசியம். இந்தச் சூழலில் பொருளாதார வளர்ச்சியையும் அந்நிய முதலீட்டையும் உயர் அளவில் பராமரிக்க வேண்டியது அரசின் சாமர்த்தியம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x