Published : 06 Nov 2014 09:08 AM
Last Updated : 06 Nov 2014 09:08 AM

மெல்லத் தமிழன் இனி... 21 - இங்கே குழந்தைகளுக்குப் பொறுப்புகள் அதிகம்

குழந்தைகளை எப்போதுமே சாதாரணமாக எடை போட்டுவிட வேண்டாம். அவர்கள் நம்மைவிடப் புத்திசாலிகள். நம்மைவிட நுட்பமானவர்கள். நம்மைவிட நல்லவர்கள். நம்மிடம் அவர்கள் ஏமாறுவதுகூட நம் மீதான நம்பிக்கையால்தான். சமீபத்தில் திரைப்படம் ஒன்றில் சீனியரான எதிராளி, நாயகனிடம் ஆணவத்துடன் தனக்கு அனுபவம் அதிகம் என்ற ரீதியில் சவால் விடுவார். பதிலுக்கு நாயகன், “இல்லை, நீங்கள் என்னைவிட இருபது வருஷம் பழசு” என்பார்.

குழந்தைகள் விஷயத்தில் அதுதான் உண்மை. உங்கள் மூளையில் அனுபவமும் புத்திசாலித்தனமும் நிரம்பி வழியலாம். உங்கள் கைபேசியின், மடிக்கணினியின் கொள்ளுமிடம் நிரம்பி வழிவதைப் போலத்தான் அதுவும். ஆனால், குழந்தைகளின் மூளை செல்கள் புத்தம் புதியவை. அவை கொள்ளும் பரப்பும், கிரகித்துக்கொள்ளும் திறனும் நம்மைவிட மிகவும் அதிகம். அதனால்தான் சூழலுக்கு ஏற்ப அவர்கள் “பேசாதே, நம்பாதே, உணர்ச்சியைக் காட்டாதே” என்று மூன்று வகைகளில் தங்களைத் தாங்களே தகவமைத்துக்கொள்கிறார்கள். இப்படியாக வளரும் குழந்தைகள், மனரீதியாக நான்கு வகையாக மாற்றம் அடைகிறார்கள் என்கிறது குடிநோய் சார்ந்த மனநல மருத்துவம். பொறுப்புள்ள குழந்தைகள், அனுசரித்துப்போகும் குழந்தைகள், கோமாளிக் குழந்தைகள், முரட்டுக் குழந்தைகள் - இவர்களே அந்த நான்கு வகையினர்.

நசுக்கப்படும் குழந்தைமை!

இன்று பல குடிநோயாளிகளின் வீடுகளில் பெண் பிள்ளைகள் படு பொறுப்பாக இருக்கிறார்கள். திருவேற் காட்டில் 14 வயதுச் சிறுமி வேலையை முடித்து, இரவு 9 மணிக்கு வீட்டுக்கு வந்து தனது தங்கைகளுக்குச் சமைத்துப்போட்டதைச் சில அத்தியாயங்களுக்கு முன்பு படித்திருப்பீர்கள். இன்று அநேகக் குடிநோயாளிகளின் வீடுகளில் இதுதான் நிலைமை. ‘பொறுப்பானவர்களாக மாறுவது’- மேலோட்டமாகப் பார்த்தால் நல்ல விஷயமாகத் தோன்றலாம். உண்மையில், எவ்வளவு பெரிய கொடுமை அது! அங்கே குழந்தைகளின் இயல்பு சிதைக்கப்படுகிறது. குழந்தைமை நசுக்கப்படுகிறது. அவர்களின் மனமுதிர்ச்சி என்பது போன்சாய் மரங்கள்போலதான்!

தாயைப் பராமரித்த குழந்தைகள்!

இதோ காயத்ரியையும் ஷாலினியையும் எடுத்துக்கொள் வோம். பொறுப்புள்ள குழந்தைகள். காயத்ரி பிளஸ்-2 படிக்கிறார். ஷாலினி பத்தாவது படிக்கிறார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் காயத்ரி வாங்கிய மதிப்பெண்கள் 454. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவிருக்கும் ஷாலினி வகுப்பின் முன்னணி மாணவிகளில் ஒருவர். கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறதுதானே. ஆனால், அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லை அவர்களின் வாழ்க்கை.

கொஞ்சம் பின்னோக்கிச் செல்வோம். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகில் இருக்கும் சிறு கிராமம் அது. அந்தத் தம்பதியருக்கு இரு பெண் குழந்தைகள். அவர்கள்தான் காயத்ரியும் ஷாலினியும். தந்தைக்குக் குடிநோய். குடிநோய் அவரைக் கூடாத தொடர்புகளுக்குக் கூட்டிச்சென்றது. பாலியல் நோயும் பற்றிக்கொண்டது. வீட்டில் தினமும் ரணகளம். குடும்ப நோயாளியாக இருந்த அவரது மனைவி தீவிர மனச்சிதைவுக்கு உள்ளானார். வீட்டை விட்டு ஓடிவிட்டார் கணவர்.

குழந்தைகளின் படிப்பு பறிபோனது. இருவரும் தெருத் தெருவாகக் காகிதம் பொறுக்கினார்கள். கிடைத்த காசை வைத்து உணவு சமைத்தார்கள். அம்மாவுக்கு ஊட்டிவிட்டார்கள். தாய் கழிப்பறை செல்ல உதவினார்கள், குளிப்பாட்டினார்கள், உடை

மாற்றிவிட்டார்கள். எட்டும் ஐந்தும் வயதுமான பிஞ்சுகள் இதையெல்லாம் செய்தார்கள் என்பதை நம்ப முடிகிறதா? ஒரு குழந்தைக்குத் தாய் செய்ய வேண்டிய எல்லா வற்றையும் தாய்க்குச் செய்தன இந்தப் பிஞ்சுகள்!

ஒரு கட்டத்தில் இவர்களைக் கண்டு இரக்கப்பட்ட அக்கம்பக்கத்தினர், தேனியில் இருக்கும் இவர்களின் தாய்வழிப் பாட்டி வீட்டுக்குக் கொண்டுசென்று விட்டனர். அங்கு பாட்டிக்கே சோற்றுக்குக் கஷ்டம். பாட்டியுடன் சேர்ந்து வயல் வேலைக்குச் சென்றன பிள்ளைகள். அம்மாவுக்கு அரற்றல் அதிகமானது. இரும்புச் சங்கிலி போட்டுக் கட்டி வைத்தார்கள். கூடவே, கணவன் கொடுத்து விட்டுப்போன நோயும் சேர்ந்து அவரைக் கொடுமைப்படுத்தியது.

இந்தச் சமயத்தில்தான் நல்ல மனிதர்கள் சிலரின் கண்ணில் பட்டார்கள் அந்தக் குழந்தைகள். அவர்கள் குழந்தையையும் அந்தத் தாயையும் ஓர் இல்லத்தில் சேர்த்தார்கள். டுடோரியல் பள்ளி மூலம் மூன்றாவது வகுப்பில் இருந்து நேரடியாக எட்டாவது படித்துத் தேறினார் காயத்ரி. ஷாலினியும் அப்படியே. அம்மாவால் இல்லத்தில் இருக்க முடியவில்லை. வீட்டுக்கு ஓடிவிட்டார். படுத்த படுக்கையானார். வாரம் ஒருமுறை சென்று பார்த்துவந்தன பிள்ளைகள்.

பிள்ளைக்காகக் காத்திருந்த உயிர்!

இப்படியான சூழலில் படித்துதான் பத்தாம் வகுப்பில் காயத்ரி 454 மதிப்பெண்கள் எடுத்தார். தேனி மாவட்ட ஆட்சியர் பழனிசாமி நேரில் அழைத்துப் பாராட்டினார். காவல்துறை கண்காணிப்பாளர் பிரேம்குமார் பரிசளித் தார். செய்தித்தாள்கள் கொண்டாடின. மறுநாள் அதிகாலை மதிப்பெண்சான்றிதழையும் செய்தித்தாள்

களையும் எடுத்துக்கொண்டு தாயைக் காணச்சென்றன குழந்தைகள். அவற்றைப் பார்த்தவர் என்ன புரிந்து

கொண்டாரோ தெரிய வில்லை, பொலபொலவெனக் கண்ணீர் வழிந்தது. தன் குழந்தை சாதித்துவிட்டாள் என்கிற செய்தியைக் கேட்பதற்காகவே காத்திருந்தது போல அவரது உயிர் அந்தத் தருணத்தில் பிரிந்தது. இடுகாட்டில் தாயின் சிதைக்குக் கொள்ளி வைத்துவிட்டுத் திரும்பினார்கள் குழந்தைகள். இப்போது சொல்லுங்கள், இங்கே குழந்தைகளுக்குப் பொறுப்புகள் அதிகம்தானே!

(தெளிவோம்)

- டி.எல். சஞ்சீவிகுமார், தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in

பின்குறிப்பு: குழந்தைகளின் பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x