Last Updated : 03 Jan, 2017 08:32 AM

 

Published : 03 Jan 2017 08:32 AM
Last Updated : 03 Jan 2017 08:32 AM

முதல்வர் டீக்கடையில் ஒரு நாள்!

மதுரையில இருந்து வர்றவுக அப்பிடியே ஆரப்பாளையம் போய், பெரியகுளம் பஸ்ஸைப் பிடிச்சி ஏறி இறங்குனா பஸ் ஸ்டாண்டு. அப்பிடியே கால்நடையா வராக நதிப் பாலத்தைத் தாண்டி, தென்கரைக்குப் போய், கம்பம் ரோட்டுல நடந்தா தேவர் சிலை வரும். அதுக்கும் காளியம்மன் கோயிலுக்கும் வடக்குப்புறம் இருக்கு பி.வி.கேன்டீன். நம்ம முதலமைச்சர் பன்னீர்செல்வத்தோட கடை. இப்ப அவர் தம்பி ஓ.ராஜா (உள்ளூர்ல ஓ.ஆர்.னு கூப்பிடுறாக) நடத்துறாரு. பி.வி.கேன்டீன்ங்கிறது பழைய பேரு, இன்னைக்குத் தேதிக்கு அதோட பேரு ஓ.ரோஸி கேன்டீன். ராஜாவோட மறைந்த மக பேருதான் ரோஸி.

பேருதான் பன்னீர் கடையே தவிர, அவுக குடும்பத்து ஆட்க யாரும் கல்லாப்பெட்டியிலகூட உக்கார்றது இல்ல. எல்லாம் ஊர் நாட்ல உண்டானதுதான். மொதமொதல்ல வசதி வாய்ப்பைக் கண்ணுல காட்டுன கடையில்லையா? எம்புட்டு வசதிவாய்ப்பு வந்தாலும், இன்னும் அதை விடாமத் தக்கவெச்சிருக்காக. கடைக்குப் போர்டுகூடக் கெடையாது. தொழிலை விருத்தி பண்ணாட்டியும், யாவாரத்துக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல. மாஸ்டர் நாலு பேரு, கையாளுக ரெண்டு பேரு, கல்லாப்பெட்டிக்கு ரெண்டு பேரு, வடைக் கடைக்கு ரெண்டு பேருன்னு 10 பேருக்கு மேல வேலை பாக்குறாக. அதிகாலை 4 மணிக்குக் கடையைத் தொறந்தா, அதுக்கு முன்னாடியே ஆளுக நிக்குது கடை முன்னாடி. நம்மோட கூட நின்னதுல ஒருத்தரு அய்யப்ப சாமி. சில பேரு கையில கட்ட பீடி. மீதிப் பேரு தலையில காதை மறைக்கிறாப்ல உருமாக்கட்டு. ஒருத்தர் பாய்லர் பக்கமா ஒண்டி, அந்த வெக்கையில குளிர்காஞ்சாரு.

மொத டீக்கு டோக்கன் கேட்டு ஒரு கை நீளுது, கல்லாப்பெட்டியைப் பாத்து. பொறுமையா, சாமிக்குப் பத்தியைக் கொளுத்தி வெச்சிட்டு, அப்புறமா காசு வாங்குறாரு கேஷியர். கல்லாப்பெட்டி பக்கத்துல ஒரு தட்சிணாமூர்த்தி படம். அதுக்குக் கீழ பாத்திகன்னா, ‘உண்மை கசக்கும்.. உணர்ந்தால் இனிக்கும்’னு சொல்லி ஏழெட்டு வாசகம் இருக்கு. ‘கோபமாய்ப் பேசினால் குணத்தை இழப்பாய், அதிகமாய்ப் பேசினால் அமைதியை இழப்பாய், வெட்டியாய்ப் பேசினால் வேலையை இழப்பாய்...’ இப்படி கால்வாசியப் படிக்கும்போதே, ‘அடடா! பன்னீர் அண்ணன் இதத்தான் கடைப்பிடிக்காருபோல’ன்னு தோணும்.

கடைக்குள்ள வலது பக்கச் சுவர்ல எம்ஜிஆர், ஜெயலலிதா படம் தொங்குது. கடைக்கு எதிர்ல 20 அடி தள்ளி, 60 அடி நீளத்துல பிரம்மாண்டமா ஒரு பேனர் இருக்குது. அது ஓ.பி.எஸ். அடிச்சதுதானான்னு தெரியல. ஆனா, அவரோட பேர்தான் முதல்ல இருக்கு. ‘அ.இ.அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராகப் பதவியேற்க உள்ள சின்ன அம்மா அவர்களை வணங்கி வாழ்த்துகிறோம்’ங்கிற வாசகத்துக்குக் கீழ மொதப் பேரே ஓ.பன்னீர்செல்வம் தாம். கூடவே, கழகப் பொருளாளர், தமிழக முதல்வர் மற்றும் நிதியமைச்சர்ங்கிற பின்னொட்டும். பிறகு, மாவட்டச் செயலாளர் தங்கத் தமிழ்செல்வன், நகராட்சித் தலைவர் ஓ.ராஜா, பன்னீரின் மகன் ப.ரவீந்திரநாத்குமார் பேருன்னு பதவி வரிசைப்படி ‘ஃபான்ட் சைஸ்’ குறைஞ்சிக்கிட்டே வருது. பொதுச்செயலாளர் ஆகுங்க, அப்பிடியே முதல்வர் ஆகுங்கன்னு ஊர் பூராம் சின்னம்மாவக் கெஞ்சுதுக பேனர்க.

சலூன் கடையிலயும் டீக்கடையிலயும் ஒரு பழக்கம்.. வந்தவுடனே பேப்பரைத் தேடுறது. இன்னைக்கு ஃபேஸ்புக்ல கமெண்ட் அடிக்கிறவங்களோட ‘முன்னோடிகள்’ல ஒருத்தரு, ஒவ்வொரு செய்தியைப் படிக்கும்போதும் ஒரு கமெண்ட்டை உதிர்த்துக்கிட்டே இருந்தாரு. முலாயம் சிங் பதவி பறிப்பு செய்தியைப் படிச்சிட்டு, “பாத்தீங்களாய்யா.. கருணாநிதி எதுக்கு ஸ்டாலினை அடக்கியே வெச்சிருக்காருன்னு?” என்றவர், வைகோ பேட்டியை வாசிச்சிட்டு, “இந்தாளு இன்னும் என்னென்ன கூத்து நடத்தப்போறாரோ?”ன்னு சொன்னாரு. ஜெயலலிதா மாதிரி சேலை கட்டி, அவரோட கார்லயே வந்த சசிகலா செய்தியைப் படிச்சிட்டு, “தேவர் மகன் கமலு மாரில்ல இந்தம்மா பண்ணுது. கட்சியே அவுகதுன்னு ஆயிடுச்சி, காரென்ன காரு?” என்றார்.

நேரம் ஆக ஆகக் கூட்டம் கும்முது. குறிப்பா, அய்யப்ப சாமிக கூட்டம். சபரிமலை சீசன் இல்லியா? அப்புறம் வண்டி வாகனத்துல வந்திறங்குன வெளியூர் ஆளுக. ஏழரை மணிக்குக் கூட்டம் கொஞ்சம் பெருசாகுது. வாசலையொட்டிக் கிடக்கிற டேபிள்ல ஒரு கண்ணாடிப் பெட்டி இருக்கு. அதுதான் வடைக் கடை. அதுக்கான ஆளுக ரெண்டு பேரு வந்து, காரை வடை, உளுந்த வடை, சமோசா, அதிரசம், போளி எல்லாம் கண்ணாடிப் பொட்டிக்குள்ள வைக்காக. இந்தக் கடையில உரைப்பு சீயம், வெல்லச்சீயம் (இனிப்பு) தான் ஸ்பெஷல். டீ வாங்குற இடத்துலயே வடைக்குக் காசு குடுக்க முடியாது. வடைக் கடை கல்லா தனி.

டீ குடிச்ச அய்யப்ப சாமி சரவணகுமார்கிட்ட பேசுனேன். “நான் பொறக்க முன்னாடியே கடை இருக்கு. சொந்தமா பால் பண்ணை வெச்சிருந்தவரு ஓபிஎஸ். அதனால பால்ல அதிகம் தண்ணி சேக்காம டீ போடுவாய்ங்க. கப்புல காவாசி நுரையா இருக்கும்னாலும் ருசியில அடிச்சிக்க முடியாது. காபியும் அப்படித்தான். வடையோட சைஸைப் பாத்தீங்களா? 5 ரூபாய்க்கு இம்புட்டுப் பெரிய வடை எந்தக் கடையில குடுப்பாய்ங்க? ரெண்டே வடையில வயித்தை நெறச்சிப்புடலாம். என்ன, முன்னாடி இங்கயே அடுப்பு வெச்சி எண்ணெய்ச் சட்டியில போட்டுக் குடுப்பாக. ஆனா, இப்ப எங்கிட்டோ போட்டுக்கொண்டாரதால, ஆறிப்போய்க் கிடக்கு”ன்னாரு.

“அண்ணே! உங்களுக்குத்தான் இது சி.எம். கேன்டீனு. எங்களுக்குப் பழைய பி.வி.கேன்டீனுதான். டீ நல்லாயிருந்தா குடிப்போம். இல்லன்னா போய்க்கிட்டே இருப்போம். டீதாண்ணே நம்மளை இங்க இழுத்துக்கிட்டு வருது” அப்படின்னாரு சுப்பையா.

இப்படி நாங்க பேசிக்கிட்டு இருக்கும்போதே, உள்ளூர்க்காரரு ஒருத்தர் கர்நாடகாலேர்ந்து வந்த இளந்தாரிப் பசங்ககிட்ட, ‘இதுதான் சி.எம். ஓ.பி.எஸ்.ஸோட டீக் கடை’ன்னு சொல்லிக்கிட்டு இருந்தார்.

“இந்தாளு வேலையே இதுதான். எப்படியாச்சும் ஒரு ஓ.சி. டீ தேத்திடுவாரு பாருங்க” என்றார் சுப்பையா. சொன்ன மாதிரியே அந்தாளு டீ குடிச்சிட்டு வடையும் கையுமா நகர்ந்தாரு. அந்தப் பசங்க செல்ஃபி எடுத்துக்கிட்டாங்க. கூடவே, டீ ஆத்துறவரைப் பார்த்து “நீங்க சி.எம்.மோட தம்பியா”ன்னும், கல்லாப்பெட்டியில் இருக்கும் இளைஞரைப் பார்த்து, “நீங்க சி.எம்.மோட மகனா?”ன்னும் கேட்டு, வெட்கப்பட வெச்சாய்ங்க. கடை டி.வி.யில ‘தென்றல்’ லோக்கல் சேனல்ல உதயநிதி ஸ்டாலினோட காமெடி ஓடிக்கிட்டிருந்தது.

மகாராஷ்டிராவுல இருந்து குடும்பத்தைக் கொடைக்கானல், மூணாறு டூர் கூட்டிட்டுவந்த ஒருத்தர், “கார்டு சலேகா?” என்று இந்தியில கேக்க, ‘நஹி நஹி’யென்று வேகமாத் தலையாட்டினாரு கல்லாப்பெட்டி. “டீக் கடையில வந்து, ஏடிஎம் கார்டை நீட்டுறாய்ங்க பாரு”ன்னு அவர் முணுமுணுக்க, வேற வழியில்லாம அந்த மராட்டியர் ‘ரிசர்வ்’ல வெச்சிருந்த நூறு ரூபா நோட்டை அரை மனசா நீட்டுனாரு. ஒரே ஒரு வடையைத் தின்னுட்டு, நாலஞ்சி டம்ளர் தண்ணியைக் குடிச்சி வயித்தை நெப்புற ஆளுகளும் இடையில வந்து போனாங்க. கொடைக்கால் பேரிஜம் ஏரித் தண்ணிதான் பெரியகுளத்துக்கு வருதுங்கிறதும், அது சும்மாத் தேங்காத்தண்ணி மாதிரி இருக்குங்கிறதும் வெளியூர்க்காரவுக தெரிஞ்சிக்க வேண்டிய சேதி.

“இது கூரைக் கடையா இருக்கும்போதே இங்க வந்துக்கிட்டு இருக்கேன் தம்பி. ஒருநாள் கல்லாவுல ஓ.பி.எஸ். அண்ணே இருந்தா, இன்னொரு நாளு ஓ.ஆர்.அண்ணே இருப்பாரு. ஆக ஓனரைக்கூட ஒரு நாவிட்டு ஒருநா தான் பாக்க முடியும். ஆனா, நான் தினமும் கடைக்கு வருவேன். அதிகாலையில பாய்லரை ரெடி பண்றதுல ஆரம்பிச்சி, மொத டீ ஆத்துற வரைக்குமான காட்சிகளப் பாக்கவே அவ்ளோ அழகா இருக்கும். இப்பிடியே வேடிக்கை பாத்துதானோ என்னவோ, வளந்ததும் டீ மாஸ்டராவே ஆயிட்டேன். இப்பக்கூட மதுரை ரோட்ல இருக்கிற ஒரு கேன்டீன்ல டீ மாஸ்டரா இருக்கேன். ஆனாலும், நல்ல டீ குடிக்கணும்னு தோணுச்சின்னா இங்கிட்டு வந்திடுவேன்”ன்னு சிரிக்காமச் சொன்னாரு போஸ். 52 வயசுக்காரரான இவரு, 10 வயசுல இருந்தே இங்க டீ குடிக்காராம்.

இடையில் ஒரு மினி லாரி வர, அதில் உக்கார்ந்தபடியே ஏழெட்டுப் பொம்பளையாளுக டீ குடிச்சாக. எந்த விவசாய வருமானத்துல வண்டி வாங்குனாங்களோ அந்தப் பொருளைக் கவுரத பண்றது விவசாயிங்க பழக்கம். ‘மாம்பழச் செல்வம்’, ‘கரும்புச் செல்வம்’ங்கிற மாதிரி, இந்த லாரியோட முதுகுல ‘சப்போட்டா செல்வம்’னு எழுதியிருந்துச்சி.

முக்கியமான விஷயத்தைச் சொல்ல வுட்டுப்புட்டேனே.. கடைப் பக்கத்துல பாதுகாப்புக்கு போலீஸ் நிற்கிறதப் பாத்து, எதுக்கு வம்பு.. சொல்லிட்டே போட்டோ எடுப்போம்னு நம்ம போட்டோகிராபர் கிருஷ்ணமூர்த்தி அண்ணே, கல்லாப்பெட்டியில இருந்தவர்கிட்ட சொன்னாரு. என்னமோ ஏடிஎம் மெஷின்ல பணம் நொப்புறதப் படம் எடுக்கக் கேட்ட மாதிரி, ‘முடியவே முடியாது’ன்னு கறாராச் சொல்லிட்டாரு கேஷியரு. அய்யப்ப சாமிக வந்த பஸ்ல ஒளிஞ்சி உக்காந்துகிட்டே படம் எடுக்க முயற்சி பண்ணுனாரு அண்ணன். அதுக்குள்ள 1.30 மணியில இருந்து 3 மணி வரைக்கும் கடைக்கு மதிய இடைவேள வுட்டுட்டாக.

காலைலேந்து நாலஞ்சு டீ, ஏழெட்டு வடை உள்ள போயிடுச்சி. மறுபடியும் நாளைக்கெல்லாம் வர முடியாதுன்னு, மதியம் கடை தொறந்ததும் உள்ளே பூந்துட்டாரு அண்ணன். கேஷியர் உட்பட பலர் ஷிப்ட் மாறிட்டதால, பிரச்சினையில்லாமப் போச்சு.

காலையில பேப்பர் படிச்சி கமென்ட் அடிச்துதே ஒரு பெருசு, மாலைப் பத்திரிகைகளையும் பாக்கிறதுக்காக மறுபடியும் கடைக்கு வந்திட்டாரு. பேச்சுத் தொணைக்கு நான் சிக்கிட்டேன். “மத்தியில நாட்டாமை பண்ற பிரதமர் மோடியும், மாநிலத்துல நாட்டாம பண்ற பன்னீர் அண்ணனும் டீக் கடைக்காரங்க. தொழில் பாசம், இப்ப பதவிப் பாசமா ஆயிருச்சிபோலத் தம்பி. இந்த ஊரு மாறிப் போச்சு, ஆறு (வராகநதி) மாறிப் போச்சு, பக்கத்துல ஒரு தியேட்டரே காணாமப் போச்சு. ஆனா, இந்த டீக் கடை மட்டும் கால ஓட்டத்தத் தாண்டியும் அப்பிடியே இருக்கு பாத்தீங்கள்ல. அது மாதிரிதான் பன்னீர் அண்ணனும். எம்ஜிஆர் மேல வெச்ச விசுவாசத்தை, அதுக்குப் பிறகு ஜானகி மேல வெச்சாரு. ஜெயலலிதா கை ஓங்கியதும் அந்தம்மாவுக்கு விசுவாசமா இருந்தாரு. இப்ப சசிகலா விசுவாசி மாதிரி தெரிஞ்சாலும், மோடி விசுவாசியாவும் இருக்காரு. யாருக்கு விசுவாசமா இருக்காருங்கிறது முக்கியம் இல்ல. அவர் கடை பாட்டுக்கு ஓடிக்கிட்டே இருக்குது புரியுதா?” என்றவர், ‘புரிஞ்சவன் புரிஞ்சிக்கோ’ன்னு தீப்பொறி ஆறுமுகம் ஸ்டைல்ல சொல்லிச் சிரிச்சாரு.

கே.கே.மகேஷ், தொடர்புக்கு: magesh.kk@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x