Published : 19 Jul 2016 08:47 AM
Last Updated : 19 Jul 2016 08:47 AM

சீனா மறு பரிசீலனை செய்ய வேண்டும்!

தென் சீனக் கடல் மீது உரிமை கோர சீனத்துக்கு சட்டபூர்வ ஆதாரம் ஏதும் இல்லை என்று ‘தி ஹேக்’ நகரில் உள்ள சர்வதேச நடுவர் மன்றம் ஒருமனதாகத் தீர்ப்பளித்ததை ஏற்க முடியாது என்று சீனா நிராகரித்துவிட்டது. இது எதிர்பார்த்ததுதான். தான் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்தும் அதிகாரமோ, நிர்வாக அமைப்புகளோ சர்வதேச நடுவர் மன்றத்திடம் இல்லாததால், இது தொடர்பாக புகார் அளித்த பிலிப்பைன்ஸுக்கும் சீனத்துக்கும் இடையே சமரசத் தீர்வு ஏற்பட சர்வதேச நாடுகள் ராஜதந்திர நடவடிக்கைகளைத்தான் எடுத்தாக வேண்டும்.

இந்த வழக்கை சர்வதேச நடுவர் மன்றத்துக்கு 2013-ல் கொண்டுவந்தது பிலிப்பைன்ஸ். தென் சீனக் கடலில் ஸ்கார்பாரோ பகுதி தொடர்பாக இந்த வழக்கை அது தொடுத்தது. பொதுவாக, ஒரு நாட்டின் இறையாண்மை தொடர்பான விவகாரங்களில் இம்மாதிரி தீர்ப்பு வரும்போது, அந்த நாட்டில் தேசிய உணர்வு பொங்கி எழுவது வழக்கம். அது சில பின் விளைவுகளையும் ஏற்படுத்தும். மிக விரிவான பொருளாதார நலன்களை மனதில் கொண்டுதான் சீனம் தனது வரைபடத்தில் தென் சீனக் கடலில் தனக்கு உரிமையுள்ள இடமாக, பெரும் பகுதியை ‘9 சிறு கோடுகளால்’ இணைத்து அடையாளப்படுத்திக் காட்டியிருக்கிறது. இத்தகைய உரிமை கோரல், கடல் சட்டம் தொடர்பாக பெரும்பாலான நாடுகளால் ஒப்புக்கொள்ளப்பட்ட ஐநா மாநாட்டு முடிவுக்கு எதிராக இருக்கிறது என்று நடுவர் மன்றம் சுட்டிக்காட்டியிருக்கிறது.

இதுவரை எடுத்துவந்த நிலையை சீனம் பரிசீலித்தே தீர வேண்டிய நேரம் வந்துவிட்டது. உலக அளவில் பொருளாதார ரீதியாக வளர்ந்த நாடாக அங்கீகாரம் பெற விரும்புகிறது சீனம். உலக வர்த்தக அமைப்பு தன்னை ‘சந்தைப் பொருளாதார நாடாக’ அங்கீகரிக்க வேண்டும் என்று சீனா விரும்புகிறது. அப்படி அங்கீகரிக்கப்பட்டால் சீனா விலை மலிவாகக் கொண்டுவந்து விற்கும் சரக்குகள் மீது ‘பொருள் குவிப்புத் தடை வரி’ விதிக்க முடியாது. ஒரு பண்டம் அதனுடைய உற்பத்தி மதிப்பைவிடவோ, உள்நாட்டில் விற்கப்படும் விலையைவிடவோ குறைவாக விற்கப்படும்போது, அதைத் தடை செய்ய இறக்குமதி செய்யும் நாட்டுக்கு உரிமை இருக்கிறது. உலக வர்த்தக அமைப்பில் சீனா உறுப்பு நாடல்ல. ஆனால், விற்றுக்கொள்ளும் உரிமையைப் பெற்றிருக்கிறது. சந்தைப் பொருளாதார நாடு என்ற அந்தஸ்து அதற்குக் கிடைத்துவிட்டால், அது விற்கும் பண்டங்கள் மீது பொருள் குவிப்புத் தடை வரி விதிக்க முடியாது. சீனத்தைச் சேர்த்துக்கொள்வது தொடர்பாக அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டாம், தாமதப்படுத்துவோம் என்று ஐரோப்பிய நாடுகளின் நாடாளுமன்றம் கருதுகிறது. அவ்வாறே தீர்மானமும் நிறைவேற்றியிருக்கிறது. சீனத்தின் இறக்குமதியால் பாதிக்கப்படும் ஐரோப்பிய நாடுகளில் இறக்குமதித் தடுப்பு வரி விதிக்கப்படுகிறது. எனவே, தென் சீனக் கடல் விவகாரத்தில் சீனா முரண்டுபிடித்தால், சீனத்தின் பொருட்களுக்குப் பல நாடுகள் தடை விதிக்கும் வாய்ப்பு இருக்கிறது. அப்படி நடந்தால், ஏற்கெனவே தேங்கிப்போயிருக்கும் சீனப் பொருளாதாரம் மேலும் படுத்துவிடும்.

சீனா தன்னுடைய வர்த்தகத்தை மேலும் அதிகமாக்கவே விரும்புகிறது. நாடுகளுக்கு இடையில் இவ்விதம் பொருள் குவிப்பு விவகாரங்களால் முட்டுக்கட்டை ஏற்படும்போது, பேச்சுகள்தான் அவற்றைத் தீர்த்துள்ளன என்பது வரலாறு. எனவே, சீனம் இப்போது செயல்பட்டாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x